சனி, 23 மார்ச், 2024

அறம் செய்ய விரும்பு

 அறம் செய்ய விரும்பு

என்றாள்


யாருக்கு எது அறம் 

யாருக்கு யார் சொல்வது

அறம் 


குயிலுக்கும் காக்கைக்கும்

எது அறம்


அறம் தேடியலைந்து

தொலைந்து போனத் தண்ணீரின்

வழித்தோன்றல்

சலசலத்துப் போனது


உருவிலியொன்று முணுமுணுத்தது 


அறம் செய்ய விரும்பு 

என்று 




வியாழன், 14 மார்ச், 2024

வலசைப் பறவை

கம்பிக் கதவுகளின் பின் 
பக்கம் நகராமல் 
தேங்கியப் புத்தகம்
எதிர்ச்சுவற்றில் புன்னகை சிந்தும் நினைவஞ்சலி சுவரொட்டிக் கிழவி 
பாத்திரம் உருட்டி 
எக்காளமிடும் 
புதுமனைப் புகா வீட்டில் 
புகுந்த 
வலசைப் பறவை

வியாழன், 7 மார்ச், 2024

அதனதன் போக்கில்

யாருக்காக
மழை

யாருக்காக
வேனல்

யாருக்காக
பனி

யாருக்காக
புழுதி

அதனதன் போக்கில்

பெய்கிறது
காய்கிறது
பொழிகிறது
பறக்கிறது 

அதன் போக்கில்

இந்தப் பிண்டம் 



வெள்ளி, 1 மார்ச், 2024

தொடரியிலிருந்து

தலைக்கு அடை கொடுத்த
கைக்குக் கீழே நகரும்
கரப்பான்.
சாளரத்திற்கு வெளியே
கரைந்து கொண்டிருக்கும்
நிலவு.
ஒன்றாம் இரண்டாம்
நடைமேடைக் கிடையில்
பெண் காவல்.
சாயாங் டீயாங்
ஒலி நடுவே
தும்மலிடும் பொடியிட்ட
மூக்கு.
காற்றுக்கு வழி காட்டும்
மூன்றாவது 
நடைமேடைத் தண்டவாளம்.
புரட்டிப் பார்க்க
சில பக்கங்கள் கைகளில்

***


இரும்புச் சக்கரத்திற்குப் பதில்
லாரி பைதாவை மாட்டி
சாலையில் ஓட விடலாமா
என்று தன் அப்பாவிடம் வினவியச் சிறுவனை
கடையநல்லூரில் தொலைத்துவிட்டேன்