ஆரோக்கியத்திடமிருந்து
தான் கதை தொடக்கம் கொள்கிறது, அவளே மைய்யமாகயிருந்து கதையை நகர்த்துகிறாள். வண்ணாரின்
குடும்ப வாழ்வை வேறு யாரேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. கீழ்சாதிக்கும்
கீழ்சாதியாக அல்லல் படும் இவர்களின் கதை நெஞ்சை அழுத்துகிறது. பிழைத்துக் கிடக்கும்
அவ்வூரிலுள்ள மற்றய மனிதர்களைப் போலல்லாமல் சோற்றுக்கும் போக்குக்கும் சார்ந்திருத்தலும்
அண்டிப் பிழைத்தலுமென ஒவ்வொரு பொழுதும் கசந்து கழிகிறது அவர்களுக்கு. ஆரோக்கியத்தின்
ஓட்டத்திலேயே, உரையாடல் வழி நாம் அறியாத அவர்களின் வாழ்வை வலியை இழப்பை வாசிக்கையில்
உள்ளம் கனக்கின்றது.
ஒட்டுமொத்த
காலனிக்கும் ஒரேயொரு குடும்பம் அடிமையாகி பிழைப்பு நடத்தும் வகையில் இச்சமூக அமைப்பை
கட்டமைத்தது யார் என்ற பெருங்கேள்வியை இப்புதினம் அல்லது இவர்களின் வாழ்வு தொடக்கத்திலேயே
எழுப்பிவிடுகின்றது. தானியத்தை பிரித்தெடுத்து வேலை இறுதி கட்டத்தை நெருங்கும் பொழுதில்,
ஆகாத நைந்து போன முறத்தை எடுத்து தூற்றச் சொல்வதும், மூன்று முறம் தானியம் கூலியாக கொடுக்க வேண்டிய
இடத்தில் இரண்டு முறம் கொடுத்து உழைப்பைச் சுரண்டுவது என நீளும் வரியெங்கும் அடக்குமுறைகள்.
வசைச் சொல்லையும் வாங்கிக் கொண்டு கொடுப்பதை மட்டும எடுத்துக் கொண்டு மௌனித்திருக்க
எழுதாத சட்டத்தை இயற்றியவர்கள் யார் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.
கிறித்தவர்களாக
இருந்தும் சாதியின் பிடியிலிருந்து அகல இயலாமலிருப்பது சாதியமைப்பை மத மாற்றம் எதுவும் செய்துவிட
முடியாது என்பதைக் குறிப்பதாகவுள்ளது. அடிக்கடி வந்தால் தான் இறைவன் கண் திறப்பான்
எனச் சொல்லும் சாமியாரான பாதிரியாருக்கு, இல்லாதவனுக்கு இறைவன் இல்லை எனும் சவுரியின்
சொல்லையே பதிலாகக் கொடுக்கலாம். ஒரு நாள் ஊரிலிருந்து வெளி சென்றுவர காலனியிலுள்ள மொத்த
வீட்டு வாசலிலும் அனுமதி வேண்டி நிற்பதெல்லாம் அம்மனிதர்களுக்கு செய்யப்பட்டிருக்கும்
மிகப்பெரிய சதி. அந்தோணியார் இருக்கிறார் என்ற நம்பிக்கையிலேயே ஆரோக்கியம் வாழ்க்கையை
புலம்பல்களுக்கிடையே நகர்த்துகிறாள்.
சாவு
வீட்டில் பாடை கட்டுவது, திருமண வீட்டில் மணவறை கட்டுவது, கிழிந்த துணிகளை தைத்துக்
கொடுப்பது, பிரசவம் பார்ப்பது, பீத்துணி, மூத்திரத்துணி, உடுப்புத் துணிகளை வெளுப்பது
என பொழுதும் வேலைக்கிடையே வெந்து வாழும் வாழ்வு. சடையனால் வல்லுறவுக்கு ஆளாகும் போது
மேரிக்குள் எளும் இவ்வாழ்வு பற்றிய கேள்விக்கு பதில் தன் தாத்தனுக்கும் பாட்டிக்கும்
தெரிந்திருக்கூடுமென அக்கேள்வி மரித்துப் போகிறது.
ராணிக்கும்
மேரிக்குமிடையே உள்ள நட்புறவையும் ஊருக்கு பயந்து மறைமுகமாக சந்தித்துக்கொள்ளும் அவர்களின்
நிலை பற்றியும் மிகக் குறைவான வரிகளில் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படியொரு
வாழ்வினை இவர்கள், குறிப்பாக ஆரோக்கியம் அதிலிருந்து விலகாமல் இருப்பது உறுத்தலாக இருந்ததால்
வண்ணார்களின் வரலாறு என்னவாக சொல்கிறது எனத்தேடிப் பார்த்தால், மற்ற சமூகத்தைப் போலவே
இவர்களுக்கும் கதைப்பாடல்கள் உள்ளன. அக்காலத்தில் தெய்வத்துடன் தொடர்பு படுத்திக் கதையெழுதி
மக்களுக்கு உரைத்துவிட்டு, அத்தெய்வத்தின் பெயரில் தொழில் செய்து கிடப்பதும் அதை
பெருமையாக எண்ணும் எண்ணத்தினையும் விதைத்திருக்கிறார்கள். கி.ரா-வின் புதினமா கட்டுரையா
என நினைவில்லை அதில் ஒரு வரியுண்டு “ அவர்களோட மூன்னோர் செஞ்சி கொடுத்த சத்தியத்துக்கு
கட்டுப்பட்டு தான் இவங்க நமக்கு சேவகம் செய்துகிட்டு கெடக்காங்க” என்பது போல, அது நினைவில் வந்தது..
சலவைக்காரனும்,
தையல் கலைஞரும் ஊருக்குள் வரவும் ஆரோக்கியத்துக்குக்கான வெளுக்கும் வேலையில் தடங்கல்
ஏற்படுகிறது, காலனிக்காரர்கள் சோறும் தானியமும் கொடுப்பதில் விருப்பமில்லாமல் போகிறார்கள். கிடைக்கும் துணியை எடுத்துக்கொண்டு தொரப்பாட்டுக்கும் வீட்டுக்குமாகவும், குண்டானையும் போகணியையும் தூக்கிக்கொண்டு சோத்துக்கும் வீட்டுக்கும் நடையா நடக்கிறாள். அழுகையோடு
ஒப்பாரியும் பாடலும் வைக்கிறாள். அவளின் புலம்பல்கள் வாழ்வின் தத்துவார்த்தத்தை உதிர்த்துக்
கொண்டேயிருக்கின்றன.
அட்டைப் படத்திலுள்ள கோட்டோவியத்திலுள்ளது சவரி என்றே எண்ணுகிறேன் ஆனால் அவன் கையில் ஏன் அரிவாளை கொடுத்திருக்கிறார் ஓவியர் என யோசனையாக உள்ளது. அது அரிவாள்தானா என்ற எண்ணமும் மேலிடுகிறது.