நான் இரவுப் பணியிலிருக்கும்போது இவ்வளவு தொந்தரவு கொடுப்பதில்லை என்றே கூறுகிறாள். கடந்த ஒருவாரமாக காலையில் பணி என்பதனால் இரவில் தூக்கம் ஒருபக்கம் இழுக்க மகளின் கெஞ்சும், அழும் குரல் மற்றொரு பக்கம் இழுக்கும்.
இப்பொழுது யாரைக்கண்டாலும் "அம்ம..அம்மே..அம்மே" தான் அப்பாவும் அம்மாவும் அம்மையே.
அவளுக்கு முடியைக் கண்டால் ஏற்படும் உற்சாகம் வேறெப்பொழுதும் ஏற்படுவதில்லை, அம்மாவின் முடி மனைவியின் முடியென வாய்புக்கிடைக்கும் போதெல்லாம் தலைவலிக்க இழுத்துவிட்டு சிரிப்பாள். அரிசிப்பல்கள் அங்கலாய்க்கும். இப்பொழுது சில நாட்களாக கடிக்கத் தொடங்கியிருக்கிறாள். அவளுக்கு தெரிகிறது அம்மா, அப்பா, அப்பாம்மை, சித்தப்பாவை மட்டுமே கடிக்க வேண்டுமென்று, பக்கத்து வீட்டு ஆட்களை அப்படிச் செய்வதில்லை. கடித்தலும் இழுத்தலும் தொடர்ந்தால் எப்படி கண் அயர்வது, மனைவி கடுப்பாகி பிடரியில் இரண்டு அடி கொடுக்கவும் "ங்கே...ங்கே..ங்கே" தான், பிறகென்ன கையில் தூக்கிக்கொண்டதும் அமைதி. நமக்கென்ன தூக்கம் கெட்டால் வாசிப்பு.
ஆரம்பத்தில் (பத்தாவது மாதத்தில்) அதாவது இரண்டு மாதங்கள் முன்பு வரை கி.ரா-வின் "சிறுவர் நாடோடிக்கதைகளை" வாசிப்பதுண்டு. முதலில் வெறுமனே வாசித்துவிடும் பொழுது அவளிடம் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை, வழக்கம்போல் பார்த்தாள் கையிலிருக்கும் புத்தகத்தையும் முகத்தையும். பின்பக்க அட்டையிலிருந்த கோட்டோவிய யானையை காண்பித்து "டிங்..டிங்..டிங்.." என ராகமிழுக்கவும் மெல்ல சிரிப்பு. ஒவ்வொரு கதையின் இடையிடையே "யான வருது...டிங்..டிங்..டிங் யான வருது" என அதற்கு சம்பந்தமில்லாமல் கூறி யானை போல நடந்து காண்பித்தால் மீண்டும் சிரிப்பு.
கதையையே ஒரு சலனப்படம் போலவும் நாடகம் போலவும் நிகழ்த்திக்காட்டினால் என்னவென சிறு பொறி விழவும். மொச்சக்கொட்டை வயிறுமுட்ட சாப்பிட்டு வெடித்தகதை, சுண்டவத்தல் கதை, வாலுபோயி கத்தி வந்த கதைகளையெல்லாம் சின்னச்சின்ன முக பாவங்களோடு செய்து காட்டியதும் குலுங்கிக்குலுங்கி சிரித்தாள். அவ்வளவுதாள் இப்பொழுது தூங்குவதற்கு முன் கழனியூரன் தொகுத்திருக்கும் "தாத்தா பாட்டி சொன்ன கதைகள்" புத்தகத்தின் கதைகளை வாசித்தும் உடல் பாவனைகளோடு இயங்கியும் காண்பிப்பதில் உறக்கச்சிரித்து பின் உறங்கச்செல்கிறாள். அன்பு மகள்.
கதைகளை வாசித்து முடிப்பதை விட அனுபவிக்க பழக வேண்டும். பழகுவோம் பழக்குவோம்.
5 கருத்துகள்:
வணக்கம்
இப்படியானவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. மிக அற்புதம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி
அருமையான பதிவு... கதைகள் தொடரட்டும்.. மகிழ்ச்சி ததும்பட்டும்..
"கதைகளை வாசித்து முடிப்பதை விட அனுபவிக்க பழக வேண்டும். பழகுவோம் பழக்குவோம்." என்ற கருத்தை வரவேற்கிறேன்.
நல்ல பகிர்வு.
கதைகளை அனுபவித்து வாசிக்க வேண்டும்...
கருத்துரையிடுக