வியாழன், 25 ஜூன், 2015

இரத்த வேட்டை

6:30 மணியை கடந்தும் சூரியன் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தது, நான் அருகம்புல்லுக்காக கண்களை சாலையோரம் அலையவிட்டு விட்டு நகர்ந்து கொண்டிருந்தேன். மனித விலங்கு நிலத்தை வேட்டையாடியதில் அருகம்புல்லும் அரிதாகிப் போனது கண்களுக்கு, ஆனாலும் சிறு நம்பிக்கை இருந்தது கிடைத்துவிடுமென்று.

வீல்…வீல்.. என்ற பன்றிகளின் சத்தம், அத்தனையும் குட்டிப் பன்றிகள். நான்கு நாய்கள் சாலையின் வலது பக்கத்திலிருந்து துரத்திக் கொண்டிருந்தன. இடது பக்கம் கோரைப்புல் தரை அதில் சின்னதாக ஒரு
கருவேல மரம். கூட்டமாக வரும்போது பழுப்பு நிறத்தில் இருந்த பன்றியை தான் நாய்கள் குறிவைத்தது போல் தெரிந்தது, சாலையை கடக்கும் போது சிதறிச்செல்ல முயன்றதில் ஒரேயொரு கருப்புப் பன்றி மட்டும் தனிமைப்பட்டு விட்டது, நாய்கள் இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டன.

முடிந்தளவு முயற்சி செய்த பன்றி, சிறிது தூரத்தில் சிக்கிக் கொண்டது, நாய்கள் அதன் உடலை கவ்விக்கொண்டு நாலாபுறமும் இழுத்தன. வீல்……வீல்….என்ற சத்தம் பெருங்குரலெடுத்தது. கல்லெடுத்து எறிந்து நாய்களை விரட்ட முயற்சி செய்தேன், அருகே கடையிலிருந்த பாட்டி ஓடிவந்து “எறிப்பா…எறிப்பா..விரட்டிவிடேன்” என்றார். கல்லையெல்லாம் அவை சட்டை செய்ததாகத் தெரியவில்லை, அதுகளுக்கு புரிந்திருக்கும் மனிதன் எவனும் அருகில் வரமாட்டான், எதையாவது எடுத்து எறிவான் இல்லை வேடிக்கை பார்ப்பான் என்று. என் கண்கள் அருகம்புல்லை தேடத்தொடங்கியது.

சிறிது தூரம் நகர்ந்ததும் திரும்பிப்பார்த்தேன், ஐந்து பேர் நின்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஏதோ பேசுவதுபோல் தெரிந்தது. சிவப்பு பனியன் போட்ட ஒருவன் மட்டும் கற்களை எறிந்து கொண்டிருந்தான். அடுத்த இரண்டு நிமிடத்தில் சத்தம் அடங்கி விட்டது. வேப்பமரத்தின் அருகில் அருகம்புல் காணக் கிடைத்தது, புடுங்கிக் கொண்டிருந்தேன். நாய்கள் நான்கும் வாயில் இரத்தம் பூசிக்கொண்டு வந்தது திகிலாகத்தானிருந்தது.

இன்னொரு பன்றிக்கூட்டம் தாயோடு சேயாக நான்கு எண்ணிக்கை, துரத்த முற்பட்டது ஒரு நாய் ஆனால் அது அந்த சிறு பன்றியிடமிருந்து எதிர்ப்பை எதிர்பார்த்திருக்காது. இப்படி பன்றி எதிர்ப்பதை பார்ப்பதே ரசனைதான். “மூக்குக்கு மேல கோவம் வருது” என பொதுவாகக் கூறும் வழக்கு இருக்கிறது. அதுபோல பன்றிக்கு முதுகுக்கு மேல் கோவம் வரும் போல. ஆமாம் அதற்கு கோவம் வந்தால் அதன் முதுகிலுள்ள முடி அனைத்தும் ஊசிபோல் நிமிர்ந்து நிற்கும். சிறுவயதில் பீங்காட்டில் பார்த்து சிலிர்த்தது நினைவில் வந்து போனது, நாயின் பல்லில் இல்லாத திகில் அந்த கருத்த முடியில் இருக்கும்.

கிடைத்த அளவு அருகம்புல்லை ஆய்ந்து கொண்டேன் வந்த சாலையிலே கால் செல்லத் தொடங்கியது. புதிதாக முளைத்திருக்கும் ஒவ்வொரு அடுக்குமாடியின் அருகேயும் எஞ்சியிருக்கும் நிலத்தில் மனிதனின் கழிவு நீர் தேங்கிக் கிடந்தது, நாயின் வாயிலிருந்த இரத்த்திற்கும் இதற்கும் அதிக வேறுபாடு தெரியவில்லை.


தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன், கருத்த சிறிய உருவம் ஒன்று பின் தொடர்வதுபோல் உணர்ந்து கண்ணை பக்கவாட்டில் திருப்பிப் பார்த்தேன், எனது நிழல் என்னொடு நகர்ந்து கொண்டிருந்தது.

10 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை! கதையா அல்லது நிகழ்வா?

Pandiaraj Jebarathinam சொன்னது…

நிகழ்வுதான் தோழரே, கதையல்ல

பெயரில்லா சொன்னது…

கதை சொல்லும் நேர்த்தி அருமை!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

நிகழ்வை அழகிய கதையாய் நகர்த்தியிருக்கிறீர்கள்.. அருமை.

ஊமைக்கனவுகள் சொன்னது…

கவிதை போல் நகரும் வார்த்தைச் சித்திரம்.

மீண்டும் படித்தேன்.

நன்றி

ஊமைக்கனவுகள் சொன்னது…

கவிதை போல் நகரும் வார்த்தைச் சித்திரம்.

மீண்டும் படித்தேன்.

நன்றி

Pandiaraj Jebarathinam சொன்னது…

மீண்டும் படித்து கருத்தளித்தற்கு நன்றி.

Pandiaraj Jebarathinam சொன்னது…

நன்றி தோழரே

”தளிர் சுரேஷ்” சொன்னது…

உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்! நன்றி!

Pandiaraj Jebarathinam சொன்னது…

அறிமுகம் கொடுத்ததற்கு நன்றிகள்.