ஞாயிறு, 25 ஜூன், 2017
வியாழன், 15 ஜூன், 2017
இரண்டு ஓவியங்கள்
செவ்வாய், 13 ஜூன், 2017
காகித மனிதர்கள்
புதினங்களை வாழ்கையை தோண்டிப்பார்க்கும் மண்வெட்டி எனலாம். அதேபோல் மனிதர்களுடனான உரையாடல்கள் கலைந்துகிடக்கும் வாசிப்பின் பக்கங்களை அடுக்கிவைக்கும் அலமாரியாகக் கொள்ளலாமா?
"காகித மனிதர்கள்" பிரபஞ்சன் எழுத்தாக்கத்தில் வாசித்த முதல் புதினம், கதை. பல்கலைக்கழகங்களில் நடைபெறும் அரசியல் ஊழல்களையும் பெண்களை சீரழிக்கும் ஆசிரியர்களையும் பற்றிய கதையாடல். இதை வாசித்து மூன்று வருடங்களிருக்கும். மறக்கவியலாத மனித உருவங்களைப்பற்றியதும் அண்ணா நூலகம் செல்ல ஆரம்பித்த நாட்களில் வாசித்ததிலும் முக்கியமான புதினங்களில் இதுவுமொன்று, அதனாலேயே அலுவலக நண்பர் ஒருவரோடு உரையாடிய ("இத்தனை வருட அனுபவமிருந்தும் ஏன் ஒரு பட்டப்படிப்பை கற்காமல் திரிகிறாய், பதவி உயர்வுக்கு அது தேவையென யாருமே உன்னிடம் இதுவரை கூறியதில்லையா." "யாராவது கூறியும் கூறாமலும் அதைப்பற்றிய எண்ணங்கள் தீவிரமடையும் பொழுது மட்டும் இணையத்தில் சில பல்கலையின் பக்கங்களை படித்துவிட்டு கைவிடுவது வழக்கமாகிவிட்டது." "எனக்குத்தெரிந்த ஆளொருவர் இருக்கிறார் தேர்வு நாளன்று சென்று திரும்பினால் போதும் மற்றவை அவரது கைகளில் (பணமும் பரீட்சைத்தாளும்), மற்றொரு நண்பரிடம் "நாம பணங்குடுக்க போல பொண்ணுங்கல்லாம் படு உசாரு" என்றார்) பின் அக்கதையின் பக்கங்கள் எழுத்துக்கள் அல்லாத காட்சி உருவங்களாக வந்து போயின.
புதினம் வெளிவந்தது எண்பதுகளில் என்று நினைக்கிறேன். காலமும் கல்வியும் நம்மை எந்த அளவீட்டில் மாற்றியிருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது, இன்றைய உண்மை நிலை என்னவாக இருக்குமோ (ஒரு மனிதனின் உரையாடலில் முடிவுக்கு வரவியலாதல்லவா, அது அவரின் புனைவுப் பேச்சாகக்கூட இருக்கலாம்)இப்படித்தான் இருக்குமென்றால் யாரை குறை கூறுவது.
படைப்பாக்கத்தில் எதிர்குரல்
திங்கள், 12 ஜூன், 2017
நாய்களோடு
ஞாயிறு, 11 ஜூன், 2017
திங்கள், 5 ஜூன், 2017
சனி, 3 ஜூன், 2017
பாகீரதியின் மதியம் - வாசிப்பு
கடந்த சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கி வந்ததிலிருந்து தினமும் புத்தக அலமாரியை திறக்கும் பொழுதெல்லாம் இந்த புத்தகத்தை எப்படி வாசிக்கப்போகிறோம் என்ற பேரச்சம் மனதில் உருண்டோடும் அதற்கு அதன் தடித்த உருவமே காரணம். அதிலிருந்து சில வாரங்களுக்குப்பின் ஒரு பின்மதியத்தின் புழுக்கம் அடங்காத வேளையில் (முந்தைய இரவுதான் யோசனை எழுந்தது இப்புத்தகத்தை முதல் பக்கத்திலிருந்து வாசிக்கத் துவங்கக்கூடாதென்று) புரட்டியபோது சிக்கியவொரு பக்கத்திலிருந்து தொடங்கினேன், எதிர்பாராதவிதமாக பாகீரதி வாசுதேவனின் நண்பனிடம் ஜெமினியின் மூன்று ஓவியங்களையும் அதன் வண்ணங்களையும் பற்றிய விவரணைகளை அடுக்கும் காட்சி வாசிக்கக்கிடைத்தது.
வெகுநாட்களுக்குப் பிறகே அதனை முதலிலிருந்தே வாசித்துவிடுவது என்ற முடிவுக்கு வந்து தொடங்கி இன்று முடிக்கும்வரை வேறொரு புத்தகத்தை (பத்திரிக்கைகள் தவிர்த்து) கையிலெடுக்கவில்லை. காரணம் கனவு, அதற்குள் மிதக்கும் காட்சிகள். என்மகளும் இப்பொழுது அத்தையென்ற சொல்லை அழுத்தமாக உச்சரிக்கத்தொடங்கியிருப்பதனால் அட்டைப்பட ஓவியப்பெண் அவளுக்கு அத்தையாகிவிட்டாள் (அப்பழுக்கற்ற அம்முகம் வாஞ்சையோடு வாசிக்க அழைப்பதுபோன்றதொரு தொனி), படத்தை தொடுவதும் அப்பாவை பார்ப்பதும் மெல்லச்சிரித்து "அத்த" என்பதும்.
புதினத்துக்குள் வரலாறும் சமூகநீதிக்கான விவாதங்களும் வாசிப்பிற்கான தூண்டுதலும் ஓவியத்திற்கான பரந்த வெளியும் மிதந்து கொண்டிருக்கிறது.
துரையின் அறைக்குள்ளிருக்கும் ஓவியநூல்களை வாசிக்க ஜெமினிக்கு அனுமதி கிடைத்தபோது ஏற்பட்ட கிளுகிளுப்பு , ஓவியம் பற்றி பாகீரதி அவளின் மனவோட்டத்திற்கேற்ப வெவ்வேறு தருணங்களில் விவரணைகள் செய்வதெல்லாம் கிளர்த்திவிட்டிருக்கும் எண்ணவோட்டங்களை எப்படி விவரிப்பதெனத் தெரியவில்லை.
பாகீரதியை கதைசொல்லி எங்கே செல்ல அனுமதித்திருக்கிறாரென்று தெரியவில்லை ஆனால் ஜெமினியின் சித்திரங்கள் மதுரையில் ஒட்டடை விழுந்த பூட்டிய அவளின் வீட்டினுள்தான் இருக்கிறது.