வெள்ளி, 29 ஜூலை, 2016

கசடதபற

நேற்றுவரை இவரின்
கவிதைகள் வாசிக்கவில்லை
கவிதைகளோடு ஒரு சம்காரத்தில்
பக்கங்கள் சிலவற்றை
கடந்து போனதுண்டு
இன்று சில கவிதைகள்
வாசித்தேன்
இழந்துவிட்டோமென்று ஓர் எண்ணம்
யாரென்று கேட்கிறீர்களா
ஞானக்கூத்தன்
வல்லின எழுத்துவாதி

புதன், 27 ஜூலை, 2016

பேசியது நானா?!

வார இதழ்களை ஆன்மீக புத்தகங்களை டைம்பாஸ் வகை புத்தகங்களை வாசித்துவிட்டு முகநூலில் மேய்ந்துகொண்டிருக்கும் வாசகன் ஒருவன் (அவர்களும் வாசிக்கத்தானே செய்கிறார்கள்) கேட்கிறான். "இலக்கியம் வாசிக்கிறேன் என்கிறீர்கள் என்னிடம் நீங்கள் கொடுத்த எஸ்.ராமகிருஷ்ணனோட புத்தகம் இருக்கு. அதில் அவர் இலக்கிய வகை எழுத்துக்களை எழுதிக்கொண்டிருப்பதாக கூறுகிறார். எது இலக்கியம் எது இலக்கியத்துக்கான எழுத்து? இலக்கண சுத்தமாக இருப்பதுதான் இலக்கியமா?".

லேசாக சிரித்துவிட்டு எனக்கு நேர்ந்த அதே குழப்பமென எண்ணி. "இன்று பலரும் எழுதலாம். சிறுகதை, கட்டுரை, புதினம், நாடோடிக்கதைகள், சிறுவர் இலக்கியம் என பலவகையான கூறுகள் இங்கே எழுதப்படுகின்றன. அத்தனை இலக்கியமும் இலக்கண சுத்தத்தோடு எழுதப்படுவதில்லை. எழுதுபவனின் முதற்கடமை வாசிப்பது. அதுவின்றி எழுத்து சாத்தியப்படாது. அதன் மூலம் அறிந்துகொள்ளப்படும் மொழியின் நுணுக்கங்கள் அவனறியாது இலக்கணங்களை புகுத்திவிடும். முறையான கற்றலுக்கு வித்திடும். இலக்கணம் அறிந்தபின் அதை உடைந்து பகுத்து வாழ்வியலை எழுதப்பழகுகிறான் அங்கே இலக்கியம் பொலிவுற்று மாசற்ற மொழியின் கூற்றை வாசகனின் முன் விவரிக்கித்தொடங்குகிறது. இலக்கணம் படித்தால் இலக்கியம் படைப்பார்களா என்பதை உறுதியாக கூறவியலாது ஆனால் இலக்கியம் படித்தால் இலக்கணம் அணி சேர்ந்துவிடும்".

அவன் முகத்தில் தெளிவற்றவொரு சிரிப்பு. என்மனதில் ஒரு ஆத்ம திருப்தி "பேசுவது நானா" என்ற பெருங்கேள்வியோடு. ஆக வாசிப்போம் பகிர்வோம்.

திங்கள், 25 ஜூலை, 2016

கனவு நீர்

களத்து வேலையா கணினி வேலையா என்ற நினைவெல்லாம் இல்லை, அந்த நொடிக்கு முன்சென்று அதைப்பற்றி ஆராய்ந்து சோர்ந்து போக விருப்பமில்லை. வயற்காட்டு ஓரமாக பொடி நடையாக நடந்து கொண்டிருக்கிறேன். குளத்துக்கரையோரம். மெல்ல தண்ணீர் திரண்டு வருகிறது, ஆடி மாசமாதலால் ஆடிப்பெருக்கு நினைவில் வந்து போன கணத்தில். வெள்ளம். கரை உடைத்து வயல் புகுந்தது. வெள்ளத்தில் சிக்காத நான் தத்தளித்து கரை சேர முயற்சிக்கும் இருவரை பார்க்கிறேன். பார்த்து திரும்பிய மறுநொடி வெள்ளம் வடிந்து போனது. கரை உடைப்பு மட்டும் குளத்துக்குள் செல்ல வழிபோல மாற்றம் கண்டுவிட்டது. என்னவென்று எட்டிப்பாக்கப்போனால் ஒரே கருவேலமரக் கூட்டம். மரக்கிளைகளை நகர்த்தி பாவாடையை கீழிறக்கி நகரும் பெண்கள். மேற்குப்பாதையில் தலைப்பாகையும் குடையுமாக ஆண்கள் வேட்டியை தூக்கிக்கொண்டு.

காலையில் ஆடிப்பெருக்கிற்கு நீர் திறந்துவிடுவது பற்றி செய்தி கேட்டபோது கனவும் நினைவில் வந்தது. அவ்வளவு தான்!

புதன், 20 ஜூலை, 2016

ஆயிரம் வண்ணங்கள் - வாசிப்பு

வண்ணங்களும் கோடுகளும் அதன் நிழல்களும் என்னுள் நிகழ்த்தும் பரவசத்தை தேடித் தேடி இன்புறுவதைத் தவிர வேறொன்றும் பெரிதாக இவ்வாழ்வில் இல்லை என்றே கருதுகிறேன். இரவிற்கும் பகலுக்குமான விளிம்பில் தேங்கி நிற்கும் கருமை படர்ந்த அதிகாலையில் சூரியனின் எழுச்சியை பிரதிபலிக்கும் செந்நிற கீற்றுகள் வரைந்து வைக்கும் கோலங்கள். சுட்டெரிக்கும் வெள்ளை வெயில். வெள்ளை மேகம். மழைக்காலத்து மாலைநேர இருள் என வானம் காட்டும் பேரழகை தூரிகையில் எழுத உள்ளத்தில் எழும் கிளர்ச்சி நிலை. இம்மனநிலையை எங்கேனும் தேங்கிப்போய்விடாது நகர்த்திக்கொண்டிருக்கும் எழுத்துக்களை வாசிக்க கிடைக்கும் பொழுதுகளின் இனிமை அளப்பரியது.

எஸ்.ராமகிருஷ்ணனின் கதைமொழியை வாசித்ததைவிட கட்டுரைகளை அதிகமாக உள்வாங்கியிருக்கிறேன். எனதருமை டால்ஸ்டாய், கூழாங்கற்கள் பேசுகின்றன, துணையெழுத்து இவற்றோடு அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருக்கிறது எனும் சிறுகதை தொகுப்பு. இப்பொழுது ஆயிரம் வண்ணங்கள் எனும் நுண்கலைகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பும் சேர்ந்திருக்கிறது.

ஓவியங்களை ஓவியர்களைப்பற்றின புத்தகங்கள் திரைப்படங்கள் வாசிக்க பார்க்க கிடைக்குமா என்ற பேராவலுடன் இணையத்தில் தேடும் பொழுதுகளில் வகை வகையாக அணிவகுத்து நிற்கும் இணைப்புகளில் குழம்பிப்போன தருணங்கள் பல. அதிலும் சில சமயம் வெற்றி பெற்று வான்காவின் ஆவணப்படம் இரண்டு பார்த்திருக்கிறேன். இக்கட்டுரைகளின் இடையிடையே இவர் சில நாவல்கள் மற்றும் திரைப்படம் பற்றியும் பேசியிருப்பது உவகை.