செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

கத்தரிப்பூ சட்டைக்காரர்


கரையாஞ்சாவடியில் இறங்கி கத்தரிப்பூ நிறச் சட்டையணிந்தவரையும் அவருக்குப் பின்னாலிருந்த இனிப்பகத்தையும் (அக்கடையை இனிப்பகம் என்றுரைப்பதா பேக்கரி என்றுரைப்பதா என என் தமிழ் மனம் ஒரு கேள்வி கேட்கிறது, அது என்ன தமிழ் மனம் என நீங்கள் கேட்கலாம். ஆம் இங்கே தமிழகத்தில் அலுவலுக்கொரு மொழி வாழ்வுக்கொரு மொழி அகம் சார்ந்து ஒரு மொழி என ஒன்றே பலவகையில் சிதைந்து அல்லது கலந்து கிடப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது அதுதான் யதார்த்தம் எனவும் மொழி பற்றிய சிந்தனையே இல்லாமலும் இருக்கலாம், அது உங்கள் பாடு.) கடந்த பிறகும் ஆவடியிலிருந்து கரையாஞ்சாவடிக்கு மிதவைப் பேருந்துக் (அரசுப் பேருந்து எல்லாமே ஒன்றுதான் என்றாலும் வடிவத்திலும் பெயர் பலகையின் நிறத்திலும் வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது, அதற்காகவேனும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வெவ்வேறு விலையில் காசு கொடுத்தாக வேண்டியுள்ளது (இவ்விடம் காசு என்று எழுதும் போது தான் பழைய பயணச்சீட்டுகளை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை என்பது நினைவில் வருகிறது, புதிய விலையில் அச்சடிக்க வருத்தப்பட்டு அனைத்து நடத்துனரின் கழுத்திலும் மின்னணு எந்திரத்தை தொங்கவிட்டுவிட்டதோ என்னவோ) இப்பொழுது ஐம்பது ரூபாய் ஒருநாள் பயணச்சீட்டும் கிடையாது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது, ஏனென்றால் இரு மற்றும் நான்கு சக்கர உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் இது என்ன தமாசு என போய்விடக் கூடாதல்லவா) கட்டணம் பத்தொன்பது ரூபாய் என்பது குறைவு எனப்பட்டது.      (கம்பெனி (குன்றத்தூர்) நிறுத்தத்திலிருந்து கரையாஞ்சாவடிக்கு ஏன் பூந்தமல்லிக்கும் இருபத்தி மூன்று என்பதனால், இதெல்லாம் இங்கு தேவையற்றதுதான் என்றாலும் சொல்லவேண்டிய கட்டாயம் காலத்திற்கு உண்டு என்பது போல எழுத்துக்குமுண்டு, மேலும் இது ஒரு உள் மன ஓட்டம் என்பதனால் இதனை தவிர்த்து விட்டு செல்ல உங்களுக்கு முழு விடுதலையும் உண்டு) கண்ணாடிக்கு பின்னாலிருந்த ரொட்டியின் மேலுள்ள பாலேடுகளைக் கண்டதும் தன் விரல்களால் தொட்டு சப்பிச் சப்பி சிரித்துச் சுவைக்கும் இரண்டு வயதுக்குள் சொத்தையான பற்களையுடைய என் மகளின் நினைவு வந்ததும் கடையை நோக்கித் திரும்பினேன்.

அவரைக் கடக்கவும்சார்என்ற குரல் கேட்டது, கத்தரிப்பூ நிறச் சட்டைக்காரர் பேசத் தொடங்கினார், அதோ இருக்கிறதே மஞ்சள் வண்ணக் கட்டிடம் அங்குதான் உடல் ஆரோக்கியத்துக்கு வழி சொல்லும் எங்கள் அலுவலகம் உள்ளது என்றதும் பின்னால் திரும்பி மஞ்சள் நிறம் தெரிகிறதா என நோக்கி காணக்கிடைத்ததும் (இரவில் அது தூய மஞ்சளாக இல்லை, ஆனால் பகலில் பார்த்தால் மஞ்சளாகத்தானிருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கியது, ரஜினியும் கமலும் வந்தால் தமிழகம் சரியாகிவிடும் என்பது போன்ற போலித்தன்மை அதில் இல்லை என தாராளமாகச் சொல்லலாம்) என்னை நோக்கி நீட்டப்பட்டிருந்த அம்மெல்லிய இளம் மஞ்சள் நிறத்திலான அட்டையில் கிளிப்பச்சை நிறப்பட்டைக்குள் கருப்பு எழுத்துக்கள் வெகு சொற்பமாகவே பொறிக்கப் பட்டிருந்தன, அதைப் பெற்றுக்கொள்ள விரல்களால் தொட்டதும் அது மிக அழுத்தமாகப் பிடிக்கப்பட்டு எதையோ (எதையோ என்று எழுதிவிட்டுப் போவது அவ்வளவு இனிமையாய் இருக்காது என்பதால் அவ்வழுத்தம் அக்கணத்தில் குற்றவுணர்வுக்கு ஆட்படுத்தியது என்பதை சொல்ல விரும்புகிறேன், யாருக்குத் தெரியும் அது அவர்களது மேலாண்மை தத்துவமாக அல்லது கற்றுக்கொடுக்கப்பட்ட பாடமாகக் கூட இருக்கலாம்) குறிப்புணர்த்துவது போல் இருந்ததும் விரல்களின் பிடியை விடுவித்து அவரின் முகம் பார்த்தேன் நன்றாக மழித்து சவரம் செய்யப்பட்ட தாடை, நேர்த்தி செய்யப்பட்ட மீசை, உள்சொருகப்பட்ட சட்டை, சட்டையின் நிறம் உங்களுக்கு பரிச்சயமானதுதான். சத்தான உணவுகளைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமுள்ளதா என வினவினார். ஆமாம் என்றதும் எப்படி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது, அதன் மூலம் கொழுப்பு சேராமல் தடுக்கலாம் என்று எனது தொப்பையை கண்டு சொன்ன போது அவருக்கு தொப்பை இல்லை என்பதை கண்டு கொண்டேன் (பசியில் வாடிய வயிறாகக் கூட இருக்கலாம், மேலும் அவரிடம் கொஞ்சம் உண்மையைச் சொல்லலாம் என்று கூட எண்ணம் எழுந்தது), இதைப் பற்றி அறிய ஆவலுள்ளதா என்றார். தற்போது உடற்பயிற்சி செய்து வருகிறேன் அது போதும், எவ்வளவு நாளாக செய்கிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள் என்று மீண்டுமொரு முறை தொப்பையோடு முழு உடலையும் ஒட்டு மொத்தமாக பார்த்துவிட்டு கேட்ட போது அவரது வலது நெஞ்சுக்கு சற்று மேல் குத்தப்பட்டிருந்த வட்ட வடிவிலான எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அடையாளத்தினைக் கண்டேன், “எடையை குறைக்க வேண்டுமா என்னிடம் கேளுங்கள்” என்ற வாசகம் வெள்ளை நிறப் பின்னணியில் சிவப்பு எழுத்துக்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இருக்கட்டும் என்ன வகை உணவு சாப்பிடுகிறீர்கள், நான் சாப்பிடாத காய்கறிகளை பழ வகைகளை கூறியதும், வேறுவகை உணவு பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா, இல்லை சிறுதானியமெல்லாம் உண்ணுகிறேன் அதனால் போதுமென்று நினைக்கிறேன் என்றதும், இன்னொரு முறையும் அதே கேள்வியை தொடுத்தார், தேவையில்லை என்றேன். சரி என்ற சொல்லோடு முகத்தைத் திருப்பினார், இனிப்பகத்தில் இனிப்பு ரொட்டியும் (பாலேடு இல்லாத) பூண்டு முருக்கும் வாங்கிக் கொண்டு மறுபடியும் அவரைக் கடந்து பின் பேருந்தில் மாங்காடு வரையிலும் வந்த பின்னர் ஒரு எண்ணம் அவரிடம் இன்னும் பேசியிருக்க வேண்டும், என்ன வகை உணவை பரிந்துரைக்கிறார் என அறியக் கிடைத்தால் அது யாருக்கான வியாபாரம் என ஓரளவு புரிந்து கொண்டிருக்க முடியும். அதே வேளை அவர் கையிலிருந்த மஞ்சள் நிறத்தை பிரதிபலித்த வெள்ளை முகவரி அட்டையினை கையில் வைத்துக்கொண்டு பயணித்தால் நகரத்து இரவின் ஒளிகள் அதோடு கலந்து செய்யும் ஒளியின் சாகசங்களை அனுபவிக்கலாம் என்றெண்ணிய பொழுதில் சாலையின் ஒரு மருங்கில் ஒளிர்ந்து கொண்டிருந்த சிவனும் பார்வதியும் கண் வழியே மூளை வரை வலிக்குமளவு ஒரு கோடு கிழித்தது போன்ற உணர்வு.

திங்கள், 19 பிப்ரவரி, 2018

வெண்ணிற இரவுகள் - வாசிப்பு

முன்பொரு முறை நூலகத்திலிருந்து சூதாடி புதினத்தை எடுத்து வந்து வாசிக்கும் பொழுது அதன் தொடர்ச்சியான எழுத்து ஓட்டம் மலைப்பை ஏற்படுத்தி திருப்பி கொடுக்கச் செய்தது, அது வெற்றுப்புலம்பலாகப் பட்டது எனக்கு, அதுபோலவே இருந்தது வெண்ணிற இரவுகள் ஆனாலும் கதை உள்ளத்தின் ஒட்டடைகளை விலக்கி பல நினைவுகளையும் நிகழ்வுகளையும் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது, ஒருவேளை இப்போது சூதாடியை வாசித்தால் ஏதாவது புலப்படுமோ என்னவோ. இப்படியான தொடர் உரைநடையின் வடிவில் எழுதப்பட்ட "பாகீரதியின் மதியம்" தமிழ் புதினம் பெரும் கிளர்ச்சியை உருவாக்கியது.

நாஸ்தென்காவிடம் தன்னைப்பற்றிய கடந்த காலத்தை விளக்குவதை நாடக பாணி என ஒப்புக்கொண்டே சன்னதம் வந்தது போல இடைவிடாது சொற்கள் பனியாய் கொட்டத்தொடங்குகிறது அவனிடமிருந்து, ஆனால் நாஸ்தென்கா அவளைப் பற்றி கூறுமிடம் உரைநடையில் மாற்றம் தெரிகிறது,  அவரவர் மனவோட்டத்திற்கேற்ப எழுத்தை கட்டமைப்பது கதையாசிரியனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைவிட வாசகருக்குள் அவ்வேறுபாட்டை உணரவைப்பது மிக முக்கியம்.

இருவருக்குள் நடைபெறும் பெரும் உரையாடலை அல்லது புலம்பலை இறுதியில் கதையின் மையமான பாத்திரமொன்று வெகு இயல்பாக முடித்து வைக்கிறது, அவனது தனிமை அங்கிருந்து மீளத்தொடங்குகிறது.