வீட்டில் என்னோட அலமாரிக்கு மட்டும் நேற்றே போகி கொண்டாடப்பட்டது, ஆம் அதுவும் அம்மாவின் வற்புறுத்தலால்.
மதிய உணவுக்கு பிறகு அலமாரியில் இருந்த (என் கண்களுக்கு ஒழுங்காகத்தான் இருந்தது) துணிகளையும் இதர பொருள்களையும் கீழே எடுத்து வைத்ததும், தூக்க கலக்கத்தில் இருந்த நான் ஒருமனதோடு ஒழுங்கு படுத்த தொடங்கினேன். (இரவு வேலை என்பதால் பகல் தூக்கம்).
"இந்த பேங்குத் தாளெல்லாத்தயும் இங்க கொண்டாந்து வச்சிருக்கான், குப்ப மாதிரி கிடக்கு.. ஒழுங்கு மருவாதையா வேண்டாததத் தூர எடுத்துப்போடு" எனக் கூறியவள். மளிகை, புத்தகம் வாங்கிய ரசீதுகளை தரையில் வைத்துவிட்டு, மறுபடியும் "ஒரே குப்பையாத்தான் கிடக்கு" எனக் கூறினாள்.
அடியில் கிடந்த மற்ற தூசிகளை வெளித்தள்ளிவிட்டு பென்சில்களை பார்த்தவள் "இதுயென்ன சின்ன பிள்ளிய மாதிரி பென்சில வாங்கி வச்சிருக்க" என்றாள்.
"படம் வரைததுக்காவ வாங்கி வச்சிருக்கேன், சின்ன பிள்ளிய மட்டுந்தான் வாங்கி வைக்குமோ? " என்று அமைதியானேன்.
" வர வர இந்த புத்தகம் மட்டும் கூடிக்கிட்டே போவுது" என்று அமர்ந்தவளை.
வம்புக்கு இழுக்கும் விதமாக
"நாளைக்கு ரெண்டு புத்தகம் வாங்கிட்டு வருவேன்" என்றேன்
"ஆஆ..ங்...புத்தகம் வாங்குவானாம்லா புத்தகம்" என்றாள்
"புத்தகத் திருவிழா நடக்குதுலா, போய் வாங்கணும்"
"அது எங்க நடக்கு"
அம்மாவுக்கு சென்னைல அண்ணன் அக்கா வீட்டை தவிர வேறு இடம் தெரியாது, நான் வேறு எங்கும் அவளை கூட்டிச் சென்றதில்லை என்பதுதான் உண்மை. எப்படி இடத்தை பற்றி விளக்குவது என்று யோசித்து விட்டு "அண்ணா சாலையில நடக்கு, நீயும் வேணும்னா வா" என்றேன்.
"வேணும்னா வா.. வாம் "லா ", கூட்டிகிட்டு போனா வருவேன்" என்றாள்
"உன்னைய ஞாயிற்றி கிழம கூட்டிகிட்டு போறேன்" என்றதும் எதுவும் கூறாமல் நகர்ந்து விட்டாள்.
மாலையில் இந்த பதிவை எழுதும் போது அருகில் நின்று பார்த்தவள்
" என்னத்த எழுதுத" என்றாள்
"கத எழுதுதேன்"
"விளக்குமாறு.... கத எழுதுதானாம் லா கத " விளக்குமாறை மட்டும் அழுத்திக் கூறிவிட்டு சமையலறைக்கு போய் விட்டாள்.
சில நிமிடம் கழித்து வந்தவள் அனுசரணையோடு " யாருக்கு அனுப்புவ" என்றாள்.
நான் சிரித்துக்கொண்டே மனதுக்குள் நினைத்தேன், நிச்சயமாக அம்மாவை புத்தகத் திருவிழாவுக்கு கூட்டிச்செல்ல வேண்டுமென்று.