திங்கள், 22 மே, 2017

தூக்கத்தை தேடுகிறவள்

அவள் தூக்கத்தை தேடி அலைகிறாள்... அழுகிறாள்... நானொரு கதைசொல்லியாகி அதற்கான பாதையை வடிவமைக்க எத்தனிக்கிறேன்.

வியாழன், 18 மே, 2017

அசையும்

அனலுக்கு அப்பாலும்
அசையத்தான் செய்கின்றன
மரக்கிளைகள்

புதன், 17 மே, 2017

காவலர் நண்பனாகியவர்களுக்கு

மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் (2002-2004) போது காவலர் நண்பன் (FRIENDS OF POLICE) எனும் பதவி அல்லது வெற்று வார்த்தை வெகு பிரபலமாக இருந்தது. ஊர்பக்கம் இந்த பட்டத்துடன் திரிபவனுக்கு பள்ளியில் சக மாணவர்களிடையே தன்னை தெனாவட்டாக காட்டும் எண்ணமிருக்கும், அதேபோல் அக்குழுவில் அங்கம் வகிப்பது சிலருக்கு ஏக்கமாக மாறி மனதில் தேங்கி நிற்கும். காவலர்களோடு நண்பர்களாக உலாவுவது எம்மாதிரியான அனுபவத்தை அவர்களுக்கு வழங்கியிருக்கும் என்றெல்லாம் தெரியவில்லை (ஒருவேளை அவர்களில் யாரேனும் இந்த பதிவை வாசிக்க நேர்ந்தால் அனுபவங்களை பகிரலாம்), ஆனால் வென்னிமலை முருகன் கோவில் திருவிழாவுக்கு குடும்பத்தோடு கூட்டத்தினிடையே ஊர்ந்து போகும் பொழுதில் சாலை நடுவே நின்று "இப்படிப்போ ...அப்படிப்போ" என்று கையில் சிறு கம்புடன் பாதசாரிகளுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் அவர்களின் இரவுப்பணி மற்றும் குடும்பத்திலிருந்து விட்டு விடுதலையாகி நிற்கும் அனுபவம் தனக்கு இல்லையேயென்று காவலர் நண்பனாக இல்லாதவனுக்கு ஏற்படும் தாகம் கச்சேரியில் பாடும் குத்துப்பாட்டோடு அடங்கிப்போகும் என்பது தனி. ஒருமுறை நண்பன் ஒருவனை காவலர் ஒருவர் "படிக்கும்போது இங்கலாம் யாம்ல வாரிய" என திட்டியதாக யாரோ ஒரு நண்பன் கூறியதாக நினைவு.

நண்பனொருவன் தனது அக்காவின் திருமண வாழ்த்துச் சுவரொட்டியில் பெயருக்கு பின்னால் "FRIENDS OF POLICE" என ஆங்கிலத்தில் போட்டுக் கொண்டபின் பலரும் அதுபோன்ற நிகழ்வை கற்பனை செய்யத் தொடங்கியது உச்சபட்சம்.

சென்னையிலும் இதுபோன்ற சிலரை காவலர்களோடு இரவிலும் பகலிலும் பார்க்கலாம். இரவில் பணிமுடிந்து பன்னிரண்டு மணிக்கு வீடுதிரும்பும் போது அனகாபுத்தூரையும் குன்றத்தூரையும் இணைக்கும் அடையாற்று பாலத்தில் ஒரு ஓரமாக காவல்துறை வாகனமொன்று நாள் தவராமல் காவல்!? நிற்பதை காணயியலும், அவர்களோடு காவல் உடையில்லாமல் அதிகபட்சம் இரண்டு பேர் கையில் லத்தியோடு பாலத்தின் நடுவே முன்னும் பின்னும் நகர்ந்து வாகன கண்காணிப்பில் இருப்பதுண்டு. சரக்கு வாகனங்கள் அதிகமாக போகவரயிருக்கும் சாலையது.

சரக்கு லாரியொன்றை வழிமறித்து லத்தி வைத்திருக்கும் காவல் நண்பன்?! அவ்வோட்டுனரிடமிருந்து இருபது ரூபாய் தாளை வாங்குவது எங்களுக்கு தெளிவான காட்சியாகியது அன்று இரவு. நாங்கள் வந்த வாகன ஓட்டுனரிடம் கேட்டபோது "பிச்சக்கார நாயிங்க, ஆனா நல்ல துட்டுண்ணா இவனுங்களுக்கு, எத்துன லாரி போவும் வரும்... லாரிகாரங்க இவனுங்களுக்கு பிச்ச போடவை பத்து பத்தா மாத்தி வச்சிக்கறது, இருவதுக்குமேல எவனும் குடுக்கமாட்டான்" என்றார்.

இன்று சர்தார் பட்டேல் சாலையோரம் வேளச்சேரி பிரதான சாலையருகில் சென்றபோது அப்படியொரு நண்பர்/ன் போர்வெல் லாரியொன்றை ஓரமாக ஒதுக்கி பின் நகர்ந்துசெல்ல கட்டளையிட்டுவிட்டு சற்றே தொலைவில் நின்ற போக்குவரத்து காவலரிடம் சென்றபோது, அவர் "இந்த நேரத்துல அந்த வண்டிக்கு அனுமதி கிடையாது, ஃபைன் போடனும்டா" என்று அவன் தோளில் தட்டினார். கையை அவர்கையில் திணித்தான் சுருட்டிய நூறுக்கும் குறைவில்லாத தாள்கள் கைமாறின, பார்த்துக்கொண்டே கடந்து வந்தேன். வேறென்ன. உங்கள் நண்பன்.

திங்கள், 8 மே, 2017

குழம்பிய வண்ணம்

நவீன ஓவியத்தை புரிந்துகொள்ள இருக்கும் வேட்கை அவ்வகை சித்திரங்களை காண்கையில் மனம் களைத்து இதுவென்னடா? என்ற சலிப்பான எண்ணம் உருவாகிவிடுவது தவிர்க்கயியலாதது. பழைய பாணி சித்திரங்களை எளிதாக புரிந்துகொள்வாயோ என்று கேட்டால் இல்லை. ஆனால் நமது பழைய வகைகள் ஒருவகையில் புராணக்கதைகளின் தொடர்புடனேயே இயங்கி வந்திருப்பதால் ஓரளவு அனுமானிக்க இயலும் என்றே கருதவேண்டியுள்ளது. தமிழக ஓவியங்கள் ஓர் வரலாறு புத்தகம் வாசிக்கத்தொடங்கிய பொழுதில் தோன்றியதென்னவோ நமக்கருகிலிருக்கும் ஓவியங்களை வெறுமனே வாசிப்பில் கடப்பதால் அறிகிறேன் என்று பிழை செய்வதே சரியாகிப்போகும். கொஞ்சம் அதிகமாகவே பயணப்பட வேண்டும்.

இதற்கிடையில்தான் மேற்கத்திய ஓவியங்களையும் ஓவியர்களையும் அறிந்து கொண்டாலென்ன என எண்ணம் மெல்ல சிதறுகிறது. அங்கே போனால் இசங்களை சுமந்துகொண்டு மேதைகள் பல மேற்கிலேயிருக்கிறோம் என்ற தொனியில் வரலாறு வெகு பின்னாலிருந்து முன்னோக்கு நகர்கிறது. இருந்தும் எம்.எஃப்.உசைன் பற்றி வாசிக்கையில் அறிமுகமான ரெம்ப்ராண்ட் நோக்கி கவனம் போனது. அவரது டைட்டஸின் உருவப்பட ஓவியத்தை பார்த்தபோது வண்ணங்களும் உணர்ச்சியும் எதையோ கிளரிவிட்டது. அதைப்பற்றி ஓரிரு வரிகள் எழுதிப் பதிவு போட்டிருக்கிறேன்.

இதெல்லாம் வேண்டாம் தமிழக ஓவியர்களை பற்றி தேடலாமென்று பெருக்கெடுத்த அவாவில், இணையத்தில் தஞ்சமடைந்தபோது விக்கிபீடியா கொஞ்சம் தகவலை கொடுக்கிறது (ஆங்கிலத்தில் தமிழக ஓவியர்கள் பற்றி விக்கி பக்கமே இல்லை எனத்தெரிகிறது! தெரிந்தால் பகிரவும்), "நவீன ஓவியம்" தமிழிலேயே தேடினால் கிடைத்தது யாவரும்.காம் இணையதளத்தில் ஜிவ.கரிகாலன் எழுதும் ஓவியம் பற்றிய தொடர். அதே போல் சில நாட்களுக்கு முன்பிருந்து ஓவிங்கள் பற்றி எழுதத் தொடங்கியிருக்கிறார் ஓவியர்.கணபதி சுப்ரமணியம்.

ஓவியம் பற்றிய தேடலுக்கு சரியான பாதையொன்று அமையப்பெறும் என நம்புவோம்.

கொஞ்சம் குழப்பமான பதிவுதான் என்பதை ஒத்துக்கிடுதேன்.

வெள்ளி, 5 மே, 2017

சாப்டீங்களா பாண்டியன்

பாண்டியன் எப்படி இருக்கீங்க, சாப்டீங்களா!, நான் சாப்பிடவேயில்லங்க, வாய் "ஸ்மெல்லடிக்குதா" என்று வழக்கம்போல கேட்டுவிட்டு அருகிலமர்ந்தார். உங்க அணியில (Team) வேறயாருமே உதவி பண்ணமாட்டேங்காங்க பாண்டியன், நீங்க ரொம்ப சூப்பர்ங்க (Super). சரி வேறென்ன என்பதுபோல மெல்ல புன்னகைத்து மின்னஞ்சலொன்றை உற்றுநோக்கினேன்.

நீங்க கிறிஸ்டியனா பாண்டியன் என்றார், எத்தனையாவது தடவையாக இப்படி கேட்கிறார் என்பது ஞாபகத்திலில்லை. இல்லை என்றபின்னும் சர்ச்செல்லாம் போவிங்களா என்றொரு கேள்வி.

எப்பவாச்சும் நண்பர்களோடு போனதுண்டு.

உங்க அப்பா பேரு எப்பேர்பட்டது தெரியுமா பாண்டியன். எனக்கோ ஆச்சரியம், அடடா என்பதுபோல உள்மனம் உரைப்பது கண்களில் தெரிந்ததோ என்னவோ. தெரிந்திருக்கும். அவரது கதையை சொல்லத் தொடங்கிய இரண்டாவது காட்சியில் பின்னிருந்து ஒரு குரல் உரக்கச் சிரித்து, "நல்லா படம் ஓட்றீங்களே" என்றதும் எனக்குள்ளும் சிரிப்பு. உடனே அவர் ரத்தினம்னா என்னன்னு தெரியுமாங்க ரத்தினம்ங்க என தொடரும் முன்னர் எங்களணித் தலைவர் அவரை தேனீர் சாப்பிட அழைத்தார், மனது இவரை நோக்கி புன்னகைத்தது.