ஞாயிறு, 17 நவம்பர், 2019

மின்னூல் வெளிவந்து விட்டது

இந்த வலைப்பூவில் எழுதிய சில கட்டுரைகளையும் கதை போன்ற கட்டுரைகளையும் தொகுத்து சின்னதொரு நூலாக வெளியிட விருப்பப் பட்டு இன்று அது நிசமாக கண்முன் மின்னூலாக கண் சிமிட்டி நின்று கொண்டு உங்கள் வாசிப்பைக் கோரி நிற்கிறது.

நாளை திங்கள் மதியம் இந்திய நேரப்படி 1:30 மணி வரை அமேசான் இணையதளத்தில் விலையின்றிக் கிடைக்கிறது. நண்பர்கள் கிண்டில் செயலி வழியே பதிவிறக்கம் செய்து வாசித்த பின் தங்களின் விமர்சனத்தை பகிரக் கேட்கிறேன். தங்களுடைய நண்பர்களுக்கும் இதனை செய்தியாக கொண்டு சேர்ப்பீர்கள் என எண்ணுகின்றேன்.

அன்பின் நண்பர்களுக்கு நன்றி!!

https://www.amazon.in/dp/B081L47Z1F


சனி, 9 நவம்பர், 2019

மின்னூல் உருவாக்கம்

இந்த புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதில் பேராசையொன்றை கிளர்த்திவிட்டது.

அவ்வப்போது எனது வலைப்பூவில்(BLOG - https://pandianinpakkangal.blogspot.com/?m=1) எழுதிய சில பக்கங்களை மின்னூலாக மாற்றலாம் என்ற எண்ணத்தை இச்சையெனக் கடந்து போகாமல் திட்டமிடத் தொடங்கியிருக்கிறேன். விரைவில் வெளிவருமென நம்பலாம்!

நன்றி Vimaladhitha Maamallan அமேசானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி



https://www.amazon.in/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-publish-ebook/dp/B07XWD47FT/ref=sr_1_1?crid=1O59BZLJDU1D0&keywords=vimaladhitha+maamallan&qid=1573312906&sprefix=vimaladhith%2Caps%2C292&sr=8-1

முத்து - ஓவியம் - காணொளி

சனி, 5 அக்டோபர், 2019

ஜெபா Jeba - "யூ ட்யூப்" அலைவரிசையில் விழியம்

ஓவியங்களை காட்சிப் படுத்துவதில் விழியங்கள் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது. கோடுகளை அதன் போக்கில் வளைத்து சுருக்கி வரையும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் ஆவலில் எனது "யூட்யூப்" அலைவரிசையில் இந்த விழியத்தை பதிவு செய்திருக்கிறேன், இனி உங்கள் பார்வைக்கு.
நிச்சயமாக உங்கள் கருத்துகளுக்கான எதிர்பார்ப்புகளோடு.....


https://www.youtube.com/watch?v=5gDFsPiCB0Q

திங்கள், 20 மே, 2019

ஓவியம் பழகுதல்


சித்திரமும் கைப்பழக்கம் என சும்மா திண்ணையில் உக்காந்து யாரும் சொல்லிவிடவில்லை என்பது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. ஏனோ தானோவென கோடுகளை வளைத்தும் குறுக்கியும், நிழல் பொருத்தி முப்பரிமாணத்தை முகத்தில் கொண்டுவர முயன்று கொண்டிருக்கும் போதுதான் முகநூலில் எனது படங்களை கவனித்து வந்த ஓவியர் பார்த்திபன் தொலைபேசியில் அழைத்து, ஒரு படம் வரைய முதற்கோடுகள் எவ்வளவு முக்கியமென விவரித்து பயிற்சிக்கான முதல் முறையையும் புரிய வைத்தார். 

கட்டங்கள் அமைத்து அதனுள் படத்தினை வரைந்து பழகுவதில் எனக்கு விருப்பமில்லாமலேயே இருந்து வந்தது. பள்ளியில் படிக்கும் காலத்தில் பத்திரிக்கையில் வரும் ஓவிய பயிற்று முறைகளில் ஒன்றான இந்த கட்டம் அமைத்து வரைதல் மூலம் சிவாஜி கணேசனையும் (அப்பாவுக்கு பிடித்தமான நடிகர்) நாட்காட்டியிலிருந்த முருகன் படத்தையும் வரைந்தது நினைவில் வந்தது. இவர் வரையச் சொன்ன முறையும் அதே போன்றதுதான் என்றாலும், இத்தனை ஆண்டுக்குப் பின்னர் அதனை முயற்சித்துப் பார்க்கலாமென்ற எண்ணம் உருவானது. காகிதத்தில் கரிக்கோலும் அளவுகோலும் கொண்டு கட்டம் வரைந்து விடலாம். கணினியிலும் திறன்பேசியிலுமுள்ள ஒளிப்படத்தின் மீது எப்படி கட்டங்கள் இடுவது என சிந்தித்தபோது நாகா எனும் ஓவியர் முகநூலில் பரிந்துரைத்த “Artist Grid” எனும் செயலியை தரவிறக்கம் செய்து, கட்டங்களை படங்கள் மீது உருவாக்க முடிந்தது.

இந்த கட்டங்கள் அமைத்து முதற்கோடுகள் எளிதாக வரைய முடிந்தாலும், அடுத்தகட்டமாக அதற்குள் நிழல் உருவாக்குவதில்தான் சிக்கல் எழுந்தது, எனக்கிருக்கும் பொறுமை காணாது என உணர வைத்தது அத்தருணங்களே. ஒரே நாளில் வரைந்து முடிக்க வேண்டுமென எண்ணினால் நாம் எதிர்பார்க்கக் கூடிய அளவு திறன் வெளிப்படாது, மெல்ல மெல்ல செதுக்கிக் கொண்டு வரவேண்டும், மேலும் கணினியிலோ திறன்பேசியிலோ பார்த்து வரைவதை விட, காகிதத்தில் படத்தினை அச்சிட்டு, அதில் கட்டங்கள் அமைத்து வரையப் பழகினால் இன்னும் படத்தில்அழகு கூடும் என முதல் மூன்று படங்களைப் பார்த்து விமர்சித்த ஓவியர் பார்த்திபன் கூறிய அடுத்த நாள்.  

டாலியின் மிகத்தெளிவான படம் ஒன்றை அச்செடுத்து கட்டமிட்டு வரையத் தொடங்கினேன், மூன்றாவதாக வரைந்த இப்படம்தான் என்னிடமிருந்த உழைப்பையும் பொறுமையையும் பெற்றுக் கொண்டு சிறப்பாக வெளிப்பட்டது, ஒவ்வொரு நாளும் கிடைக்கும் பொழுதில் கொஞ்சம் கொஞ்சமாக கீற்றுகளால் பட்டை தீட்டினேன். டாலி ஒளிர்ந்தார். வரைதல் முற்று பெற்றதும் ஒளிப்படத்துக்கும் ஓவியத்துக்குமான வேறுபாட்டை உணர்ந்து கொள்ள முடியாமல், ஒளிப்படத்தை கரிக்கோலால் காகிதத்தில் அச்செடுப்பதா ஓவியனுக்கான முறை என எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதில் இக்குறிப்பு (https://pandianinpakkangal.blogspot.com/2017/11/Art-Speaks.html) மனதில் ஊடறுத்தது.

----தொடருவோம்.

வியாழன், 21 பிப்ரவரி, 2019

பொதுத்தேர்வு எனும் வதை

பன்னிரண்டாம் வகுப்பு தொடங்கிய மூன்றாம் நாள் வகுப்பறைக்குள் எங்கள் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் ஒரு கையில் கொத்துச்சாவியும் கம்பும் மறு கையில் சில கோப்புகளுடனும் வந்து நின்றார், பேரமைதி.

கோப்பினை விரித்து "எவம்ல அது" என்று குரல் தெறிக்க இருவரின் பெயரை உச்சரிக்கவும் அம்மாணவர் இருவரும் எழுந்து நின்றார்கள். "ரெண்டுவேரையுந் தவிர மத்த எல்லா பயலும் ஒண்ணு ரெண்டு பாடத்துல ஃபெயிலாயிருக்கிய, ஆனாலும் பன்னெண்டாப்புக்கு தள்ளிருக்கோம், ஒழுங்கா படிக்க வழியப் பாருங்கல" என்றபடி ஒவ்வொரு பெயராக வாசித்து நாங்கள் எந்தெந்த பாடத்தில் தோல்வியுற்றோம் என விவரித்து தனித்தனி எச்சரிப்புகளோடு அந்நாள் தொடங்கியது. பின் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரும்பாலானோர் தேர்வு பெற்றது அதன் கிளைக் கதை.

இன்று ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்ற செய்தியைக் கண்டதும் எண்ணங்கள் இந்நிகழ்வையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தன பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அறிவித்த நாட்களைப் போல. மேலும் வீட்டிற்கு வரும் செய்தித் தாள் நான் வாசிப்பதற்கு முன் கிழிபடுவது வழக்கம் இன்றைய தாள் கிழிந்திருந்த விதம் எண்ணங்களை மேலும் ஊடறுத்தது.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

தாய்மொழி தவிர்க்கும் மழலைக் கல்வி ஏன்


தமிழக அரசு மழலைக் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் ஏன் ஆங்கில வழிக் கல்வி என்பதை எப்படிப் புரிந்து கொள்வது. சோதனை அடிப்படையில் இரண்டு வருடம் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் செயல்படுமெனத் தெரிவித்திருக்கிறது. தனியார் பள்ளியை நாடிச் செல்லும் பெற்றோர்களை அரசுப் பள்ளி நோக்கி வரவழைக்கும் நோக்கம் என்றெல்லாம் பல காரணங்கள் இருந்தாலும், ஆங்கில மோகத்தை அதிகரிக்கும் செயலிலேயே அரசு களமிறங்கியிருப்பதாக தெரிகின்றது

கல்வி பற்றிய புரிதலை ஆளும் தலைமைகள் ஒருபோதும் விளங்கிக் கொள்ள விரும்புவதில்லை. அரசு நடத்தும் அங்கன்வாடி மையங்களுக்கே குழந்தைகளை அனுப்பத் தயங்கும் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்தால் மட்டும் வந்து விடுவார்களா என்ன.
ஆசிரியர்களுக்கே தாய் மொழிக்கல்வி பற்றிய அறிதலோ புரிதலோ கிஞ்சித்தும் இல்லாதபோது சாமானிய மக்களை எங்கு நிறுத்திக் கேள்வி கேட்பது. பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றாலே மெட்ரிகுலேசனையோ, சிபிஎஸ்சி-யையோ நாடித்தான் போக வேண்டுமென நம் மக்கள் ஆழ்மனதில் இத்தனை ஆழமாக படிந்திருப்பதை எப்படி அகற்றுவது என எண்ணி மனம் உழன்று தவிக்கிறது.

என் மகள் அருகிலிருக்கும் அங்கன்வாடிக்கு கடந்த ஒன்றரை வருடமாக சென்று வந்தாள், வீடு திரும்பியதும் எங்களிடம் ஏபிசிடி சொல்லச் சொல்லி மகிழ்கிறாள். மொழி என்றால் என்னவென்றே அறியாத அவளின் மழலைப் பேச்சின் உச்சரிப்பில் புன்னகை மேலிடத்தான் செய்கிறது, ஆனால் ஏன் தமிழ் எழுத்துக்களை உச்சரிக்க சொல்லிக் கொடுக்காமல் நேரடியாக அந்நியச் சொற்களுக்குள் துள்ளிக் குதிக்கிறார்கள் இந்த அங்கன்வாடி அம்மாக்கள். பிள்ளையை ஆங்கிலவழிப் பள்ளியில் சேர்த்தால்தான் வளர்ந்த பின் வாழ்க்கை நன்கு அமையும் என்றெல்லாம் இவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது யார், இல்லை இன்றைய தொழில்நுட்பம் உருவாக்கியிருக்கும் வேலைவாய்ப்பிற்கும் கிடைக்கும் தற்காலிக பொருளாதர உயர்வுக்கும்  ஆங்கிலமே ஆங்கிலம் மட்டுமே காரணம் என எண்ணுகிறார்களா, தமிழில் படித்தவர்களும்தான் வேலை பெறுகிறார்கள். அலுவலகத்திலும் குழந்தையை தமிழ்வழியில் படிக்க வைக்கிறேன் என்றதும், அவளை வேலைக்கு அனுப்ப மாட்டீர்களா என்ற கேள்வியும், எதிர்காலம் சிரமமானதாக அமையும் என்றெல்லாம் உழற்றுகிறார்கள். கற்றல் என்பது வேலைக்கானது மட்டும் தானா, ஆங்கில வழிக்கல்வி மட்டும் தான் வேலை கொடுக்கும் என்றெல்லாம் இவர்கள் அறைகுறை மனதில் யார் பதியச் செய்தார்கள்.

ஆங்கில இலக்கணத்தை கற்க வேண்டுமென்றும் அதற்கான புத்தகத்தை தேடிக்கொண்டிருப்பதாகவும் உறவினரொருவர் கூறினார், தாய்மொழியை சரிவரத் தெரிந்துகொள்ளாமல் அதன் மீதுள்ள அவநம்பிக்கை வேறுமொழி நோக்கித் தள்ளும், உங்கள் மொழியில் தடுமாறும் நீங்கள் வேற்றுமொழியில் தோற்றுப்போவீர்கள், தமிழை தெளிவாக ஆழமாக வாசியுங்கள் அது உங்களை உங்களின் தேவை நோக்கி உந்தித் தள்ளும். நாம் தேவை அறியாமலேயே இயங்கிக் கொண்டிருக்கிறோம். மிகச்சாதாரணமாக குறைந்த பொருள் செலவில் அல்லது செலவே இல்லாமலும் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் மொழியை விட்டுவிட்டு, இயல்புக்கு அதிகமாக செலவு செய்து குழம்பித் தவித்து ஒரு மொழியை ஏன் அறிந்துகொள்ள வேண்டும், அது யாருக்கான பயனை அறுவடை செய்யும்?

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

ஓவியமெனும் பெருங்கனவு


கடந்த சில வருடமாக ஓவியங்கள் வரைந்து பழகுவதில் நாட்டம் அதிகரித்திருக்கிறது, இதை ஓர் சுய இச்சை எனக் கூறலாமா எனத் தெரியவில்லை. எனக்கென்னவோ அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. தொடர்ச்சியற்ற பயிற்சி முறையில் தேடித் தேடி நுணுக்கங்களை கண்டடைந்து கொண்டிருந்தேன். இச்சோதனை முறையின் இடையிடையே இச்செயலை ஏன் செய்கிறேன் எங்கிருந்து இது தொடங்கியது என எண்ணும் பொழுதில் நினைவுகளில் ஆழ்ந்து போவதுண்டு. அப்படியான சூழலில் எனக்குள் ஓர் பெருங்கனவு என்னை அறியாமல் தொடர்ந்து கொண்டிருப்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. இக்கனவை செம்மை செய்யாமல் வெகு சுலபமாக அலட்சியம் செய்திருப்பதை எண்ணி மனம் வெதும்புகிறது. நினைவில் உலாவும் ஒவ்வொரு நிகழ்வையும் எழுத்தாக மாற்றிவிட எண்ணமிருந்தாலும் அதற்கான மொழியை அடைவதற்கான முயற்சியும் வேண்டியுள்ளது.

தற்போது பயிற்சிக்கான புத்தகங்களாக “ஓவியர் புகழேந்தி” எழுதியிருக்கும் “ஓவியம் கூறுகளும் கொள்கைகளும்” – தோழமை பதிப்பகம், “ஓவிய நுண்கலை- ஓவியக்கலை மாணவர்களுக்கான கையேடு- சீ.வி.வடிவேலு- சந்தியா பதிப்பகம் மற்றும் அஜந்தா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ்-ன் பயிற்சிக் கையேடு, இந்த ஒவியப் பள்ளியும் இப்பெருங்கனவின் அங்கம்.

இப்படங்களுக்கு முன்னதாக வரைந்தவை வெகு சொற்பமேயானலும் அவை தற்போது இல்லை.
ஓவியம் 1- பெரும் இடைவெளிக்குப் பின் துவக்கத்தை உருவாக்கிய படம். ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் படத்தை பயிற்சிக்காக செய்து பார்த்தது.
ஓவியம் 2 - உருவப்பட முயற்சி - புதுமைப்பித்தன்
ஓவியம் 3 - பெரும் தயக்கத்திலிருந்து விடுபட முயற்சித்தது. நண்பன் விஷ்ணு

ஓவியம் 4 - மையினால் ஆன கோடுகள் - தாய்மாமன் தமிழழகன்.


ஒருசில புத்தகங்கள் நாம் எவ்வளவு தேடினாலும் கிடைக்காமல் ஆனால் தேவையான நேரத்தில் கையில் சிக்கிக் கொண்டு நம்மை நமக்கான பாதையில் அழைத்துச் செல்லும். உருவங்களை வரைவது, நிலக் காட்சிகளை வரைவது என சில பக்கங்களை புரட்டியும், காணொளிகளை கண்டும் அறிந்திருக்கிறேன் ஆனால் அவையெதுவும் சொல்லித்தராததை காட்டியிராத பாதையை மேற்ச்சொன்ன புத்தகங்கள் கண்டுகொள்ளவும் அறிந்து கொள்ளவும் உதவிக் கொண்டிருக்கின்றன. அறியாத கோடுகளை வண்ணங்களை புகுத்தத் தொடங்கிவிட்டன, அவை இழுத்துச் செல்லும் பாதையில் பயணித்துவிட்டால் போதுமென எண்ணுகிறேன்.


புதன், 16 ஜனவரி, 2019

புனைவிலிருந்து விலகலான வாசிப்பு

இந்த வருட சென்னை புத்தகத் திருவிழாவிலிருந்து (இந்நாளை வாசிப்பிற்காக வருடத்தின் தொடக்கநாளாகக் கொள்வதால் இப்படி) அபுனைவுக்குள் மனத்தினை துழாவ விடலாம் என்றொரு பெரும் உவகை.

இரண்டாம் நாள் சென்று ஓவியம் மற்றும் கலை சார்ந்த புத்தகங்களோடு ஒரு மானுடவியல் சார்ந்த நூல் ஒன்றும் சிக்கியது, ஒரு வீட்டிலிருக்கும் பத்து பேருக்கு உள்ள முக வேறுபாட்டிற்கும், வேறு வேறு இனக்குழு அல்லது நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உள்ள முக வேறுபாடுகளுக்கும் இடைவெளி உண்டல்லவா, அதைப் பற்றி அறிய உதவும் நூல்.

இன்னொரு முறை சென்று சில கட்டுரை நூல்களை அள்ளி வர வேண்டுமென உள்ளம் உழன்று கிடக்கிறது வாய்ப்பிற்காக, வரும் ஞாயிறு அதற்கான நாளாக அமைய எண்ணுகிறேன். ஓவிய பயிற்சிக்காகவும் நிறைய வாசிக்க இருப்பதால் இம்முறை புனைவிலிருந்து சிறு விலகல். புனைவெழுதுவது எளிதாகிவிட்டதோ என்னவோ மலை போல் அடுக்குகிறார்கள் கதைகளை, சமகாலம் பெருங்கனவாக நம்முன் விரிந்து நிற்கிறது. தற்போதைக்கு அதை வேடிக்கை பார்க்கவும், நெடிய இடைவெளிக்குப் பின் இத்தளத்தில் கொஞ்சம் எழுதலாம் என்றொரு எண்ணமும். பயணிப்போம்..