வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

தாய்மொழி தவிர்க்கும் மழலைக் கல்வி ஏன்


தமிழக அரசு மழலைக் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் ஏன் ஆங்கில வழிக் கல்வி என்பதை எப்படிப் புரிந்து கொள்வது. சோதனை அடிப்படையில் இரண்டு வருடம் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் செயல்படுமெனத் தெரிவித்திருக்கிறது. தனியார் பள்ளியை நாடிச் செல்லும் பெற்றோர்களை அரசுப் பள்ளி நோக்கி வரவழைக்கும் நோக்கம் என்றெல்லாம் பல காரணங்கள் இருந்தாலும், ஆங்கில மோகத்தை அதிகரிக்கும் செயலிலேயே அரசு களமிறங்கியிருப்பதாக தெரிகின்றது

கல்வி பற்றிய புரிதலை ஆளும் தலைமைகள் ஒருபோதும் விளங்கிக் கொள்ள விரும்புவதில்லை. அரசு நடத்தும் அங்கன்வாடி மையங்களுக்கே குழந்தைகளை அனுப்பத் தயங்கும் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்தால் மட்டும் வந்து விடுவார்களா என்ன.
ஆசிரியர்களுக்கே தாய் மொழிக்கல்வி பற்றிய அறிதலோ புரிதலோ கிஞ்சித்தும் இல்லாதபோது சாமானிய மக்களை எங்கு நிறுத்திக் கேள்வி கேட்பது. பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றாலே மெட்ரிகுலேசனையோ, சிபிஎஸ்சி-யையோ நாடித்தான் போக வேண்டுமென நம் மக்கள் ஆழ்மனதில் இத்தனை ஆழமாக படிந்திருப்பதை எப்படி அகற்றுவது என எண்ணி மனம் உழன்று தவிக்கிறது.

என் மகள் அருகிலிருக்கும் அங்கன்வாடிக்கு கடந்த ஒன்றரை வருடமாக சென்று வந்தாள், வீடு திரும்பியதும் எங்களிடம் ஏபிசிடி சொல்லச் சொல்லி மகிழ்கிறாள். மொழி என்றால் என்னவென்றே அறியாத அவளின் மழலைப் பேச்சின் உச்சரிப்பில் புன்னகை மேலிடத்தான் செய்கிறது, ஆனால் ஏன் தமிழ் எழுத்துக்களை உச்சரிக்க சொல்லிக் கொடுக்காமல் நேரடியாக அந்நியச் சொற்களுக்குள் துள்ளிக் குதிக்கிறார்கள் இந்த அங்கன்வாடி அம்மாக்கள். பிள்ளையை ஆங்கிலவழிப் பள்ளியில் சேர்த்தால்தான் வளர்ந்த பின் வாழ்க்கை நன்கு அமையும் என்றெல்லாம் இவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது யார், இல்லை இன்றைய தொழில்நுட்பம் உருவாக்கியிருக்கும் வேலைவாய்ப்பிற்கும் கிடைக்கும் தற்காலிக பொருளாதர உயர்வுக்கும்  ஆங்கிலமே ஆங்கிலம் மட்டுமே காரணம் என எண்ணுகிறார்களா, தமிழில் படித்தவர்களும்தான் வேலை பெறுகிறார்கள். அலுவலகத்திலும் குழந்தையை தமிழ்வழியில் படிக்க வைக்கிறேன் என்றதும், அவளை வேலைக்கு அனுப்ப மாட்டீர்களா என்ற கேள்வியும், எதிர்காலம் சிரமமானதாக அமையும் என்றெல்லாம் உழற்றுகிறார்கள். கற்றல் என்பது வேலைக்கானது மட்டும் தானா, ஆங்கில வழிக்கல்வி மட்டும் தான் வேலை கொடுக்கும் என்றெல்லாம் இவர்கள் அறைகுறை மனதில் யார் பதியச் செய்தார்கள்.

ஆங்கில இலக்கணத்தை கற்க வேண்டுமென்றும் அதற்கான புத்தகத்தை தேடிக்கொண்டிருப்பதாகவும் உறவினரொருவர் கூறினார், தாய்மொழியை சரிவரத் தெரிந்துகொள்ளாமல் அதன் மீதுள்ள அவநம்பிக்கை வேறுமொழி நோக்கித் தள்ளும், உங்கள் மொழியில் தடுமாறும் நீங்கள் வேற்றுமொழியில் தோற்றுப்போவீர்கள், தமிழை தெளிவாக ஆழமாக வாசியுங்கள் அது உங்களை உங்களின் தேவை நோக்கி உந்தித் தள்ளும். நாம் தேவை அறியாமலேயே இயங்கிக் கொண்டிருக்கிறோம். மிகச்சாதாரணமாக குறைந்த பொருள் செலவில் அல்லது செலவே இல்லாமலும் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் மொழியை விட்டுவிட்டு, இயல்புக்கு அதிகமாக செலவு செய்து குழம்பித் தவித்து ஒரு மொழியை ஏன் அறிந்துகொள்ள வேண்டும், அது யாருக்கான பயனை அறுவடை செய்யும்?

1 கருத்து:

ஸ்ரீராம். சொன்னது…

முதலில் இந்த ஆங்கிலக்கல்வி மோகத்தினால் தனியார் பள்ளிகளிடம் தஞ்சமடைந்திருக்கும் பெற்றோரை இங்கு இழுக்கவேண்டும். அப்புறம் மாறுதல்கள் செய்யலாம். இரண்டு மொழிகளும் முக்கியம்தானே? நிறைய வீடுகளில் அப்பா, அம்மா என்று அழைக்கப்படுவதைவிட டாடி மம்மி என்றழைக்கப்படுவதையே விரும்புகிறார்களே...