சனி, 6 டிசம்பர், 2025

கடவுளின் பேழை

நம்முடைய தொலைபேசி அலைபேசி திறன்பேசி வங்கி இணையச் சேவைகள் அட்டைகள் போன்றவைகளின் கடவுச்சொல்லை நம்முடைய நினைவில் ஏந்திக் கொள்வது வழக்கம். ஒருசிலர் மட்டுமே நாட்குறிப்பிலோ வேறேதேனும் இடத்திலோ குறித்து வைத்துக் கொள்ளும் செயலைச் செய்வார்கள். இப்படி எழுதி வைப்பது ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும். தொடர்ந்து பயன்படுத்தாத எதுவும் மறந்தோ மறைந்தோ போவது இயற்கை, அதனால் எழுதி வைத்துக் கொள்வது நல்லது.

மேற்சொன்ன கருவிகள் பிழையின்றி இயங்குவதில் கணினியின் பங்கு அளப்பரியது. இந்த கணினிகளுக்கும் கடவுச்சொல் கட்டாயம் உண்டு என்பதை அறிவோம் அதிலும் பல வகைப்பட்டவை இருக்கின்றது. பயனர் தேவைக்கானவை தவிர்த்து கணினிக்கு முக்கியமான கடவுச்சொல்லாக நிர்வாகத்திற்கான கணக்கு உள்ளது. இந்தப் பொறுப்பாளர்கள் கணக்கிற்கான கடவுச்சொல்லை ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு கருதி புதுப்பிப்பது நடைமுறை. இந்தச் சூழலில் பொறுப்பாளர் எப்போதும் ஒரே ஆளாக இருப்பதில்லை என்பதால்  கடவுச்சொல்லை எல்லோரும் தேவையான பொழுதில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக பொதுவான ஒரு செயலியில் சேமித்து வைக்கப்படும். இந்தச் செயலியும் அதன் பயன்பாடும் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். 

இன்று குன்றத்தூர் தெருக்களில் நடந்து கொண்டிருந்த போது ஒரு வீட்டின் வாசலில் "God's Ark" என்று கல்வெட்டில் எழுதியிருந்தது என்னடா இது Ark என்று உடனடியாக பொருள் தேடியதும் பேழை அல்லது பெட்டி என்று அறிந்துகொண்டேன். "CyberArk"  என்ற செயலியை கடவுச்சொல் சேமிப்பிற்கு பணி நோக்கில் பயன்படுத்தியிருந்தாலும் Ark என்ற சொல்லின் பொருள் அறிந்து கொள்ள இதற்கு முன் முயன்றதில்லை. கடவுளின் பேழைக்குள் வாழ்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: