செவ்வாய், 9 செப்டம்பர், 2014

என்ன செய்ய முடியும்..... இந்த நினைவுகளை..

என்ன செய்ய முடியும்..... இந்த நினைவுகளை..

பெயருக்குப் பின்
எழுத்தாகவோ எண்ணாகவோ
உருமாற்றிக் கொள்ள முடியும்..

நாட்குறிப்பில் எழுதி
பின்
அடையாளத்தோடு கிழித்தெறிய முடியும்..

கண் துஞ்சும் நேரம்
கனவுகள் செய்ய முடியும்..

தேவையற்ற மின்னஞ்சல் முகவரிக்கு
கடவுச் சொல்லாக்கி மறக்க முடியும்..

புனைக்கதைகளில் மாந்தராக்கி
நடமாட விட முடியும்..

கவிதையின் மென் வார்த்தைகளில்
நுழைத்திட முடியும்..

மதுப்புட்டியில் போடப்படும்
பனிக்கட்டியில்
உருக்கிவிட முடியும்...

காலையில் கண்புரை
கழுவும்  நீரில்
கரைத்து விட முடியும்...

கசங்கிய காகிதத்தில் நிரப்பி
குப்பையிலும் எரிந்துவிட முடியும்...

திங்கள், 1 செப்டம்பர், 2014

சுயநல வார்த்தைகள்

அகமகிழ்ந்து
நெகிழ்ச்சியிலிருக்கும் பொழுதில்
நிறைந்திருக்கும்
மதுக் கோப்பை
கோடை குற்றால அருவிபோல்
நெஞ்சப்பாறையில்
ஒழுகும் வேளையில்
மேலெழும்பும் சிலிர்ப்பான
சிரிப்பை தகர்த்தெழும்
வார்த்தைகள்
யாழ்பாணத்தில் புள்ளிவைத்து
நீளும் கோட்டில்
சரிந்துவிழும் அரசியல்
தலைகளுக்குப் பின்
கனடாவிற்கு நீண்டு ஆசுவாசமடைந்து
புலம் திரும்புகையில்
தான் தானாக மட்டுமே
இருப்பதை யெண்ணி
கதறியழுகிறது