சனி, 31 டிசம்பர், 2016

அடையாளத்திற்கு முன் சில கேள்விகள்

பெயரில்லா அழைப்பு வந்தது மனைவியின் கைப்பேசியில், "புது நம்பரா இருக்கு" என்று தொடர்ந்தவளிடமிருந்து புரிந்துகொள்ள முடிந்தது பேசுவது அவளது அப்பாவென்று. அனைத்து அழைப்புகளுக்கும் பத்து பைசா எனக் கூவி விற்றதால் வாங்கியிருக்கிறார், இதுபோல் அவர் வாங்கி பயன்படுத்தி தூக்கியெறிந்த சிம்கார்டுகளின் எண்ணிக்கை கணக்கிலடங்கக் கூடியதுதான் என்றாலும் நினைவில் இல்லை. மோடியின் ஆதரவாளர், பேசத்தொடங்கினால் கொட்டாவி விட்டபின்னரே நம்மை விடுதலை செய்வார்.

ரிலையன்ஸ் ஒரு ஆதார் அட்டைக்கு மூன்று சிம் கொடுப்பதாக தகவல் உலாவுகிறது, வெளிப்படையாக மூன்று என்றால் மறைமுகமாக எத்தனையோ. இதேபோல் மற்ற நிறுவனங்கள் அதனதன் தகுதிக்கு ஏற்றதுபோல் கொடுக்கலாம். கொடுக்கிறது. தெருவுக்குத் தெரு நிறுத்தத்திற்கு நிறுத்தம் குடை விரித்து, ஆதார் அட்டை மட்டும் போது "No Photo, No Proof" என கூவிக்கூவி விற்கிறார்கள், வாங்கிய 05 நிமிடத்தில் "சிம்" பயன்படுத்தலாம், எவ்வளவு வேகம்!.

உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டையினை பயன்படுத்த மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறது, மறுபக்கம் மத்தியரசு வலிய வலிய அரசுத்திட்டங்களில் இதனை உள்ளீடு செய்ய பணிக்கிறது. அத்தனை திட்டங்களையும் முறைப்படுத்த முனைவதாக அரசை எண்ணும் பொழுதில் மேற்கொண்ட சிறு உதாரணம் வழியாக மாபெரும் சீரழிவிற்கு விதை போடுவதாகவே கருதவேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஒன்றரை வருடப் போராட்டத்திற்குப் பிறகு (குடும்ப அட்டையை வாங்க பட்ட பாட்டினை சொன்னால் அது பெருங்கதை), கிடைத்ததை பதிவு செய்ய ஆதார் கட்டாயம் வேண்டுமாம். இப்போ நீ எடுத்துத்தானே ஆகணும் என்ற ரீதியில் சிலர் சிரிப்பது போல தோன்றியது. நிச்சயமாக பிரம்மையோ பிசாசோ அல்ல. இணையத்தில் விண்ணப்பிக்கலாமென்று துளாவியபோது படிவம் மட்டுமே சிக்கியது. இணையமாக்கலை இங்கிருந்தே தொடங்கியிருக்கலாம், இதிலேதும் சிக்கலிருக்குமானால் ஆதாரும் பெருஞ்சிக்கலாகவே இருக்க முடியும்?

நேற்று பல்லாவரம் அல்லது பல்லவபுரம் நகராட்சிக்கு சென்றபோது, குறுக்குமறுக்காக சிலர் நடமாடுகிறார்கள் நம் காதுகளுக்கு கேட்குமட்டும் "ஆதார் அப்ளையா....ஆதார் அப்ளையா...." என்று ஆட்டோ வேணுமா எனக் கேட்பவரைப் போல விசாரிக்கிறார்கள். அவர்களில் ஒருவரிடம் சென்று கேட்டதும் "ஐ.டி புரூப்லாம் வச்சிருக்கியா.... மூணுமாசத்துல வாங்குறியா உடனே வேணுமா" என்றார். உடனே என்றால் எப்படி என வினாவவும் சிரித்தார் அருகிலிருப்பவரைப் பார்த்து. அங்கிருந்து விலகி வெளியிலிருந்த கடையில் படிவம் இருபது ரூபாய்க்கு வாங்கும்போது, ஒருவர் ஒரு பெண்ணை அழைத்துவந்து "இவங்ககிட்ட எரணூறு ரூவாக்குடு நாளைக்கே முடிச்சிவிடும்" என்றார். (அவரின் சிரிப்பிற்கான பதில் வெளிப்படையாக இங்கே) இணையமயமாக்கலின் அடிப்படையே ஊழலில்தான் துவக்கம் கொள்கிறது.

இப்பொழுது சில கேள்விகள். தீவிரவாதமில்லா இந்தியா? இணையமயமான இந்தியா? பணமற்ற பரிவர்த்தனை பொருளாதாரம்?
ஊழலற்ற இந்தியா?

பதில் உங்களிடம்.

வியாழன், 29 டிசம்பர், 2016

பைத்தியம் என்றுகூட சொல்லலாம்

கடந்த சனிக்கிழமை பெரியப்பா ஊரிலிருந்து வந்திருந்தார். அதிமுக தீவிரத்தொண்டர். அக்காள் வீட்டில் நடந்த நிகழ்வை முடித்துவிட்டு மாலையில் மெரினாவை நோக்கி சென்றிருக்கிறார், என் மனைவி, அம்மா, இரண்டு அக்காள்கள் மற்றும் அத்தான்களோடு. அன்று எனக்கு பிறந்தநாளாகையால் என்னைப்பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

மனைவியிடம் அக்கா கேட்டிருக்கிறாள் "தம்பி பிறந்தநாளுக்கு என்ன வாங்கிக்குடுத்தடே" உடனே இவள் "ஒங்க தம்பிக்கு புத்தகந்தான் வாங்கிக்கொடுக்கணும்".

"அவன் புத்தகத்த வாசிச்சா பரவாயில்ல, ஆனா அடிமையாயிட்டான்" என்றிருக்கிறாள் அக்கா.

ஜெயலலிதா சமாதியில் கொடுத்த சப்பாத்தியையும் பொங்கலையும் விழுங்கி தண்ணீர் குடித்துவிட்டு இரவில் வீடு திரும்பியிருக்கிறார்கள்.

அடுத்தவருடம் என்னை பைத்தியம் என்றுகூட சொல்லலாம், ஆனால் யார் சமாதியை பார்க்கப்போவார்கள் என்று என்னால் கூற இயலாது.

செவ்வாய், 27 டிசம்பர், 2016

குறைகளின் பின்னே

தீர்வை நோக்கி
செல்வதற்கல்லாமல்
குறைகளின் பின்னே
தேங்கி நிற்கிறோம்

வியாழன், 22 டிசம்பர், 2016

மன்றோவின் உயர்ந்த சிலை

தீவுத்திடலை எட்டி நின்றுகூட பார்த்ததில்லை சென்னை வந்த நான்கரை வருடத்தில், இந்த வருடம் ஜூலை மாதம் நிகழ்ந்த புத்தகத்திருவிழா அதற்கான வழியினை திறந்துவிட்டது. திடலுக்கும் அதன் மற்றொரு பகுதியிலுமிருந்த மரப்பாலம் உடைந்து போனது ஒருபக்கம். முதலில் போகும் பொழுது மெரினா வழியாக சென்று இருட்டியபின்னர் அதே பாதையில் சென்றுவிட்டேன் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கூட்டத்தின் இடையிலேயே எழுந்துகொண்டு. மற்றொரு பக்கமான அண்ணாசாலை நோக்கி வரவில்லை.

அன்று பார்த்த மரப்பாச்சி பொம்மையை வாங்கவேண்டுமென்று மற்றொரு ஞாயிறு மதியத்தில் செல்ல நேர்ந்தது. பெரியார் பாலத்தருகே இறங்கி நடந்தபோது அந்த சாலையின் அமைதி, அதாவது வாகனங்களில் மக்கள் போகவும் வரவும் செய்கிறார்கள் ஆனால் நடைபாதையில் யாருமில்லா அமைதி. சாலையின் நடுவே பிரமாண்டமான குதிரையின் மீதமர்ந்த மனித உருவச்சிலை. நீச்சயம் ஏதோவொரு ஆங்கிலேயன் என எண்ணிக்கொண்டு சற்று முன் சென்று கவனித்தேன் அல்லது அதன் உயரத்தில் வியந்து நின்றேன்.

சர் தாமஸ் மன்றோ. இதென்ன நகரின் மையச்சாலையில் ஒரு ஆங்கிலேயனின் சிலை என ஏளனப் பெருமூச்சில் நகர்ந்துகொண்டிருந்தவன் அப்படியென்ன இந்த ஆள் செய்தான், கொள்ளையடித்தவனுக்கு கோபுர உயர சிலையா. அதுவும் பராமரிப்பில் காந்தி நேரு காமராசர்களெல்லாம் ஒன்றுமில்லை என எண்ணியதோடு மன்றோவை அறிந்துகொள்ள வேண்டுமெனவும் புழுங்கியது, வாசிப்பிற்கு பின் புழுக்கம் குறையவும் மிகவும் செய்யலாம்.

அட இன்று எதேச்சையாக பாவண்ணனின் பக்கங்களை புரட்டினால் வந்து நிற்கிறது கீழுள்ள இணைப்பு. வாசித்துப்பாருங்கள். ஒரு புத்தக அறிமுகம் காத்திருக்கிறது.

http://writerpaavannan.blogspot.in/2016/11/blog-post_20.html?m=1

செவ்வாய், 20 டிசம்பர், 2016

ஒழுகும் கோடுகள்

எங்கள் இருவருக்குமிடையிலிருந்த இடைவெளியில் மௌனம் நிரம்பி, வெளியேற வழியின்றி ஒழுகிக்கொண்டிருந்தது. அவள் இத்தனை அமைதியாக இருக்கவேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை எனக்கு புரியாமல்கூட இருக்கலாம்.
குறிப்பெடுத்துவந்து யாரேனும் பேசுவார்களா என்ன, படைப்பாளிகள் மற்றவர்களோடு உரையாடும் பொழுதில் தன்னுள் வடிவம் பெரும் வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்வார்கள் என அ.முத்துலிங்கம் எழுதியதை வாசித்திருக்கிறேன், அதுவும் மேலை நாட்டவர்கள் மட்டுமே இப்படியான செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். இவளும் நானும் அளவளாவும் போது அப்படியெதற்கும் அவசியமில்லை. அவளது தற்போதைய அமைதியைப்போல.
இந்நிலையை அமைதியென்று கொள்வதா சிந்தை செய்யும் மனம் இப்படி அமர்ந்துவிடுமோ. இருக்கலாம். ஆனால் இவள் அவ்வப்போது சிரிக்கிறாள் எதற்காக என்பதை ஊகிக்க இயலவில்லை. "கேட்டுவிடலாம்தான், ஆனால் இப்போது வேண்டாம்".

உனக்கு கோடுகளை பிடிக்குமா வண்ணங்களை பிடிக்குமா என்று கேட்டதும் வண்ணங்களை பிடிக்குமென்று பொய் சொல்வதை அவள் அறிந்து கொள்ளவில்லை. இருந்தும் கோடுகளை பற்றியே உரையாடத்துவங்கினாள்.
கோடுகளுக்கும் நவீனத்திற்கும் நெருக்கம் அதிகம் என கூறும் பொழுதில் மாலதியின் இமைகளோடும் புருவங்களுடனும் புதிர் பேசத்துவங்கினேன். நவீனம் என்பதே ஒன்றை புதைத்தும் மறைத்தும் வெளிப்படுத்துவது தானே, பெண்களின் ஆடைகள் போல தற்போது ஆண்களும் இங்கே விதிவிலக்கல்ல.

நவீனத்தை தோற்றுவித்தவன் ஓவியனாகவே இருக்க முடியும் அதுவும் மங்கையின் கூந்தலிலிருந்தே கோடு நீட்டி நீட்சியடைந்திருக்க வேண்டும். இதற்கு பதிலாக அவள் கூறியதில் வியப்பேதும் இல்லை. மாலதி தனக்கு நவீன ஓவியத்தை புரிந்துகொள்வதில் சிக்கலிருப்பதாகவும் காண்கையில் களைப்படைந்து போவதாகவும் சொன்னபோது, கோடுகளுக்கும் நவீனத்திற்கும் நெருக்கம் இருப்பதாக அவள் கூறியதை நினைவுபடுத்தவில்லை. மாறாக இருட்டில் நடந்துபோக பிடிக்குமா எனக்கேட்டதற்கு ம்ஹும் என இசைத்தாள்.
உறக்கத்தில் கோர்வையற்ற கனவுகள் கண்டிருக்கிறாயா அப்படியெதுவும் நினைவிலிருக்கிறதா, ஒருவேளை உன்னால் எழுத்தாகவோ வண்ணமாகவோ கோடுகளாகவோ அதனை வெளிப்படுத்த முடியுமானால் அதை என்னால் புரிந்துகொள்ள முடியுமா, இதற்கு பதிலுண்டா. அவளிடம் மௌனம் மட்டுமே எஞ்சியிருந்தது.

திங்கள், 19 டிசம்பர், 2016

இவ்வருடத்தின் வாசிப்பில்

இந்த வருட வாசிப்பின் சில புத்தக முத்துக்கள். வாசிப்போம் பகிர்வோம்.

காடோடி - நக்கீரன் - காட்டினை அறிமுகம் செய்து அது கொலையுண்டு போகும்வரையிலான அதிர்வுகளை ஏற்படுத்தும் பயணம்தான் புதினத்தின் மையச்சரடு.

வண்ணங்களின் வாழ்க்கை - சுந்தரபுத்திரன் - ஓவியர்களோடு கலந்துரையாடும் கட்டுரைகளின் தொகுப்பு

ஆயிரம் வண்ணங்கள் - எஸ்.ராமகிருஷ்ணன் - ஓவியங்களையும் ஓவிய ஆளுமைகளையும் கண்டடைய உதவும் கட்டுரைகள்.

குற்றப்பரம்பரை - வேலராமமூர்த்தி - வரலாற்றுப்புதினம்.

பறவை வேட்டை - அசோகமித்திரன் - சிறுகதைத்தொகுப்பு.

கதவு - கி.ராஜநாராயணன் - சிறுகதைத்தொகுப்பு.

மயான காண்டம் - லஷ்மி சரவணக்குமார் - சிறுகதைத் தொகுப்பு.

இண்டமுள்ளு - அரசன் - சிறுகதைத் தொகுப்பு.

எம்.எஃப்.உசேன் - ஓவியர் புகழேந்தி - இந்திய சமகாலோவிய ஆளுமையின் வரலாறு.

இந்திய ஓவியம் - சி.சிவராமமூர்த்தி, தமிழில் மே.சு.இராமசுவாமி - கி.மு விலிருந்து சமகாலம் வரையிலான ஓவிய வரலாறு.

இப்போது வாசிப்பில் மௌனியின் படைப்புகள் மற்றும் சத்திய சோதனை (காந்தியின் சுயசரிதை).

திங்கள், 5 டிசம்பர், 2016

இறந்தவன்

இறந்தவன்
பேசுகிறேன்
நாளையேனும் கூறுங்கள்
நான்
இறந்துவிட்டேனென்று...

ஞாயிறு, 27 நவம்பர், 2016

கியூபா சோசலிச நாடா?

கியூபாவை புகழ்ந்து உச்சி முகர்கிறார்கள். பிடல் காஸ்ட்ரோவையோ கியூபாவையோ பற்றி அதிகமாக வாசித்து எதையும் அறிந்துகொள்ளவில்லை, ஆனால் சோசலிசம் என்றவொரு கோட்பாடு மனிதத்தன்மைகளை உள்வாங்கியதாகவே இருக்குமென்ற பொதுவான கருத்தை ஏற்றுக்கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இலங்கைக்கு ஆதரவாக கியூபா உலகநாடுகளுக்கு முன்னிலையில் வாக்களித்தபோது வெங்கட் சாமிநாதன் கூறுயதுபோல சோசலிசம் கம்யூனிசம் என்பதை எண்ணும்போது சிரிப்புத்தான் வருகின்றது. நன்றாக உச்சி முகருங்கள் பக்கம் பக்கமாக எழுதுங்கள்.

புதன், 23 நவம்பர், 2016

ஓவியங்களை வாசித்தல்

எம்.எஃப்.உசேனின் வரலாற்று நூல் (ஓவியர் புகழேந்தி எழுதியது) வாசித்த போது அவரது பிறப்பு முதல் இறுதிவரையில் அவரின் படைப்புகள் உருவானதன் பின்னணியையும் எவ்விதமான விளைவுகள் அவரது ஓவியங்களில் வெளிப்பட்டன என்பதனையும் விரிவாகச் சொல்லியிருந்தார். இங்கு மேற்கத்திய ஓவிய பாணியை பின்பற்றி பெரும்பாலானோர் வரைகையில், இந்திய ஓவியங்கள் உருவமற்று இருக்கவே முடியாது என்ற வரையறைக்குள் ஓவியத்தினை வரைந்ததாக படித்த ஞாபகம்.

இன்று சி.சிவராமமூர்த்தி எழுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்திய ஓவியம் என்ற புத்தகம் வாசித்து முடித்துவிட்டேன் ஒருவழியாக!.

ஓவிய நூல்கள், ஓவியன், காட்சிக்கூடங்கள், திறனாய்வு விதிகளென துவங்கியவர் தொடர்ந்து கி.மு2-ம் நூற்றாண்டிலிருந்து சமகாலத்துவரையிலான ஓவியக்கலையின் வளர்ச்சி ஆட்சிகள் மாற மாற ஒன்றிலிருந்து மற்றொன்று கலையை உள்வாங்கி பரிணாமம் பெற்றதை குறிப்பிட்ட காலகட்டத்தை வைத்து விளக்கியிருக்கிறார் சாதவாகனாரில் துவங்கி சமகாலம் வரை.

மேற்கத்திய கலைப்பண்புகளான பதிவு நவிற்சி (Impressionist), எதிர்மறை நவிற்சி (Futurist), கோணவடிவு நவிற்சி (Cubist), அடிமன கனவு இயல்பு நவிற்சி (Surrealist) ஆகியவற்றால் ஓவியர்கள் மரபிலிருந்து விலகி பிழைப்புவாதிகளாகிவிட்டதாக கவலையுறுகிறார்.

இன்னும் ஓவியம் பற்றிய நூல்களை தேடிக்கொண்டிருக்கிறேன், நூல்கள் பரிந்துரை செய்யுங்கள் அன்பர்களே.

திங்கள், 7 நவம்பர், 2016

கி.ரா தாத்தா

தாத்தா வீட்டில் கோயில் திருவிழாவென்றால் பெரியம்மை, சித்தி மகன்களெல்லாம் ஒன்றுகூடி களித்திருக்க கிடைக்கும் அனேக நாட்களில் ஒன்று. எனக்கு விவரம் தெரிந்தபின் தாத்தாவோ வளத்தம்மையோ அப்பாம்மையோ கதைசொல்லியதாக நினைவில் இல்லை அதற்காக குறைபட்டுக்கொள்ளவில்லை. அதேபோல் பெரும்பாலான வாசகர்கள் எழுத்தாளர்கள் கூறுவதுபோல சாம்புவையோ அம்புலிமாமாவையோ வாசித்ததுமில்லை இவர்களையெல்லாம் என் நண்பன் பாலாவும் அருணும் சொல்லக்கேட்டிருக்கிறேன், அதன்பின் தான் அறிந்தும் கொண்டேன். அப்போதெல்லாம் எண்ணிக்கொள்வதுண்டு கீழப்பாவூரைவிட குறும்பலாப்பேரியில் இலக்கிய பரிச்சயம் அதிகம் என்று, என்னை வாசிப்பிற்குள் உசுப்பி விட்டதும் இவர்கள்தாம்.

ஆனால் பாருங்கள் வீட்டிலுள்ள பெண்களின் பேச்சிலிருக்கும் இலக்கியத்தை தெரு இலக்கியம் ஆக கருதிக்கொள்ளலாம். ஆமாம் உலக இலக்கியமிருக்கும் போது இது கூடாதா. இவர்கள் பேசுவதை காதுகொடுத்தால் போதும் துக்கம் துயரம், காமம் களவு, பிறப்பு இறப்பு என பலவகைப்பட்ட கதைகள் கைகளில் உருளும் பீடியிலைக்குள் சுருட்டி வைக்கப்படும் எஞ்சியது நம் காதுகளுக்கு.

திருவிழா இரவின் பொழுதில் நாங்கள் கதை பகிர்ந்துகொள்வோம் கதைமுடியுமுன் தூங்கிப்போவது வேறு. கி.ரா வின் சிறுவர்களுக்கான நாடோடிக்கதைகள் வாசித்தபோது எனக்கு இந்த இரவுகள்தான் நிழலாடியது. சுண்டைக்கா கதையெல்லாம் பேசிப்பேசிச் சிரித்த கதை. அத்தொகுப்பிலுள்ள கதைகள் பெரும்பாலானவை எங்கள் சிறுவயதில் புழக்கத்திலிருந்தவை. போன வாரம் நூலகத்தில் கிடைத்த கி.ராவின் நாள்குறிப்பிலிருந்து தொகுப்பை வாசித்து முடித்தேன். எத்தனை கதைகள் அதன் மனிதர்கள், இலக்கிய நிகழ்வுகள். சிற்சில விமர்சனங்கள் என ஒரு தாத்தாவைப்போல பகிர்ந்து பேசுகிறார். ஆமாம் எனக்கு அவர் கதைசொல்லி தாத்தாவாகவே தெரிகிறார்.

வியாழன், 3 நவம்பர், 2016

கொசுவோடு வாழ்வு

அன்று காலையில் எழுந்ததுமே குழந்தையை காண்பித்து "இங்க பாருங்க பிள்ள மூஞ்சி கை காலெல்லாம் திட்டுத்திட்டா ரத்தம் பூத்துக் கெடக்கு, இதுக்கு எதாவது செய்யுங்களேன்" என்றாள். நான் மட்டும் என்ன செய்துவிட முடியும். டிஸ்கவரி தொலைக்காட்சிக் காரனே முடிவு செய்து காட்சிப்படம் வெளியிட்டுவிட்டான். உலகத்து மனிதர்களுக்கு கொசு தான் முதல் எதிரியென்று.


கடைகளில் கிடைக்கக்கூடிய ரசாயன கொசுவிரட்டி மீது பத்தாம் வகுப்பு படிக்கும் போதே நம்பிக்கையிழக்கச் செய்துவிட்டார் அய்யாத்துரை வாத்தியார். அதையும் மீறி மின் கொசுவிரட்டி பற்றவைத்து மூச்சுத்திணறியபின் விட்டெறிந்ததுதான், அத்தோடு முழுக்கு.

வேப்பிலையெண்ணைய் விளக்கும் போட்டுப்பாத்தாச்சி, சாளரம் வலைகளால் சூழப்பட்டுவிட்டது. இருந்தும் என்ன பயன். இனி ரியல் எஸ்டேட் காரன் கொசுத்தொல்லையில்லாத வீடு என்று விற்பனை செய்ய வாய்ப்பு உண்டு. இல்லையென்றால் வீடளவுக்கு கொசுவலை வாங்கி போர்த்திவிட வேண்டியதுதான். அறையை குளிரூட்டும் சாதனமிருந்தால் கொசு வராது என்கிறார்கள், அது மென் விசம்.


காலையில் இவள் இப்படிச் சொன்னதும், அம்மா சொல்வாள் "அஞ்சி மணிவாக்குல கதவ அடச்சிட்டு, ஏழுமணிக்கு பிறவு திறந்தா செத்தேங் கொசு வராமயிருக்கும், ஆனா நீயெங்க நாஞ்சொல்லுதத கேக்க". இது சோதனை செய்யப்பட்டிருக்கிறது எங்கள் வீட்டில். இந்த இரண்டு மணிநேரம்தான் கொசுக்கள் தொகுதி பங்கீடுகளுக்கு பிறகு அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் பதுங்கிக்கொள்ளும் போலும். என்ன மாயயதார்த்தமோ.!

சனி, 29 அக்டோபர், 2016

பசியோடு கசியும் நாள்

2012-ல் மணி பன்னிரண்டிருக்கும் அப்பொழுதுதான் கண் விழித்தோம். அறைக்கு வெளியேயுள்ள கட்டைச்சுவரில் உட்கார்ந்தும் சாய்ந்தும் பேசிக்கொண்டிருந்தோம். மாமல்லபுரம் போவதாக சில நிமிடங்களில் முடிவெடுக்கும் முன்னே பசி குடலைத் தின்னத்தொடங்கியிருந்தது. காஃபி குடிக்கலாமென்று சென்று குடிக்காமல் திரும்பி வந்தோம். குளியல் முடித்து வெளியே கிளம்ப மணி இரண்டாகிவிட்டது.

தெருக்களில் வெடிமருந்து கிழித்த காகிதங்கள், அரசாங்கமே கடையடைப்பு நடத்தினாலும் இப்படி அடைக்கமாட்டார்கள். அங்கங்கே வேட்டு சத்தங்கள் ஒலிக்க. நாங்கள் அவரவர் அலைபேசியில் உறவுகளோடு பொய் பேசிக்கொண்டே நகர்ந்துகொண்டிருந்தோம். "பொய்யா அதுவென்ன பொய் சாப்பிட்டோம் கறிசாப்பாடுதான் சாப்பிட்டோம் என்ற தோரணையில்."

கானகம் கடந்து திருவான்மியூரில் ஒரு கடை கிடைத்தது. தக்காளி, எலுமிச்சை சாதம் ஊறுகாயோடு உண்டு கழித்து கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள நிறுத்தத்தில் பேருந்து ஏறினோம். மாமல்லபுரத்தில் மக்காச்சோளம் சாப்பிட்டுவிட்டு இரவு அறை திரும்பினோம் மதியத்தில் திறந்திருந்த கடையும் அடைபட்டிருந்தது. தண்ணீரை விழுங்கிவிட்டு கணினியில் படம் ஓட்டினோம்.  ஓலமிட்டுச் சிரித்தோம், கண்ணயர்ந்தோம்.

காலையில் கறியெடுக்கச்சென்றபோது குடலின் நினைவுகளிலிருந்து.

வெள்ளி, 28 அக்டோபர், 2016

மௌனியின் கதைகள்

மௌனியின் படைப்புகளுக்குள் ஊர்ந்து கொண்டிருக்கிறேன். காலச்சுவடு வெளியிட்டிருக்கும் அவரின் முழுத்தொகுப்பு. காதல் சாலை என்றொரு சிறுகதை, மூன்று பொழுதுகளாக பிரிந்த கதை வடிவம்.

அன்றையதினம் அவன் இளைப்பாற ஆலமரத்து நிழல் ஒதுங்கும்போது அவள் தொங்கிக்கொண்டிருக்கும் பிம்பம் மனதை அலைக்கழிக்கவும் எழுந்து விழுதுகளை உதறித்தள்ளி நகர்கிறான்.

இரவு அவனுக்கு இரவாக கழிகிறது.

முந்தையதினம் காதலைத் தேடி அலைகிறான். வழியில் நாயும் குருவியும் ஏளனம் செய்கிறது செய்வதுபோல் ஓர் மனவோட்டம். முள் குத்துகிறது மீண்டும் குத்துகிறது நடக்கிறான். கூடைக்காரியிடமும் தண்ணீர் எடுக்கப்போகும் பெண்ணின் சிரிப்பிலும் தேடாமல் தேடுகிறான். காதல். இடையில்  சந்திக்கும் ஒருவனை அவளின் அழகை கூறிய பிற்பாடு சேர்த்துக்கொண்டு நகர்கிறார்கள் ஒரு வீட்டை அடைகிறார்கள். வீட்டுக்குள் எரியும் விளக்கு அவ்வீட்டின் ஏழ்மையை வெளிப்படுத்தும் விதமாக எறிகிறதென்கிறார் கதையாசிரியர். கவிதை அவ்விடம்.

இவனுக்கு காதல் வருகிறது. எப்படி? எங்கே? எதுபோல? இவனுக்கு புரியவில்லை.

அவள் நிற்பதுவும் தீப ஒளியில் நிழலை அளந்து சொல்வதும், ஓவியனின் கைவேலை. இவன் அவளோடு தங்குகிறான் தூங்குகிறான், இடையிடையே புலம்புகிறான் விழித்திருக்கும் அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை.

அவனும் இவனும் கிணற்றடியில் பேசிவிட்டு அவளை எதிர்பார்த்து வராமல் போக, கொல்லைப் பக்கம் போகிறார்கள். அவள் தற்கொலை செய்துகொண்டாள் என்று ஓரிரு வார்த்தையில் சொல்லிப்போவதில் என்ன இருக்கிறது. அதற்கான அடையாளங்களை வடித்திருக்கிறார் எழுத்துக்களில்.

உணர்ந்தானா காதலை பதிலாக ஆகாயம் நோக்கி இருகையும் நீள்கிறது. இரவுக்குப்பிறகு காலையில்லை அவனுக்கு.

சனி, 22 அக்டோபர், 2016

குற்றப் பரம்பரை - வாசிப்பு

வேயன்னா எனும் வேல்சாமி தன் பரிவாரங்களோடு வெள்ளையனுக்கு அஞ்சி ஓடுவதாக தொடக்கம் கொள்ளும் கதைக்களம் விடாமல் வாசிப்பவனையும் உடனிழுத்துச் செல்கின்றது.

தப்பித்தலின் இடையில் எஞ்சியிருக்கும் சனங்களோடு கொம்பூதியில் குடியேரும் வேயன்னாவின் பரிவாரங்கள் பிழைப்பு வழி தெரியாமல் களவை தொழிலாக ஏற்றுக்கொண்டு உயிர்வாழத் தொடங்குகிறார்கள். ரேகைச்சட்டம் என்பதே கதையின் மையக்கரு, இந்த வளையத்துக்குள் இவர்கள் எப்படி சிக்கி சிதைந்து போகிறார்கள் என்பதே நாவலின் சரடு.

கதையில் விரியும் காட்சிகள் சாதிய தீண்டாமைகளையும், அதன் மிகப்பெரும் அவலமாக நீளும் தண்ணீர் கிணற்றில் மலம் கொட்டி வெறுப்பை உமிழ்வது அங்கங்கே அழுத்தமாக உரைத்துச் சொல்லப்படுகிறது. வெள்ளையன் சதி ஊர்காரனை கொலைக்குத் தூண்டுகிறதென்றால் பக்கத்தூர்காரனின் சதி இவர்களை கொலை செய்துவிடுகிறது.

ஒரு புத்தகம் வாசிப்பவனின் தேடலுக்கு 'படி'யாக அமைந்து விட்டால் அதைவிட வேறெதுவும் தேவையில்லை, அந்நோக்கில் வரலாற்றின் சில பக்கங்களை ஆழ்ந்து நோக்க தளம் அமைக்கும் கதையுள்ள எழுத்து.

சனி, 1 அக்டோபர், 2016

அண்ணா ப்ராஜக்ட் வொர்க்

பள்ளியில் ப்ராஜக்ட் கொடுப்பதற்கு பள்ளிகள் தயாராக இருக்கின்றது ஆனால் மாணவர்கள் பூர்த்தி செய்து கொடுக்கும் கட்டுரைகளை ஓவியங்களை மதிப்பெண் போடுவதை தவிர்த்து அவர்களின் திறனை ஆராய எப்போது தயார் ஆவார்களோ. விருப்பமேயில்லாமல் மற்றோர் கைபட்டு எழுதிய வரைந்த கோடுகளை கொண்டு பள்ளியில் சேர்ப்பதை நிறுத்தலாம். மாறாக ஒருவார இடைவெளியில் அவர்களை விளையாட விடலாம்.

ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.சி மாணவனுக்காக வரைந்தவை இவையிரண்டும்.

சனி, 24 செப்டம்பர், 2016

இலையின் இயக்கம்

ஓவியங்களுக்கான
கூறுகள் பற்றிய வாசிப்பின்
இறுதியில்
காற்றில் அலையும்
இலைகளைக் கண்டேன்
அதன் இயக்கத்தினை
வரைய இயலுமா என்பதற்கு
பதிலில்லை - ஆனால்
வரையவேண்டும்

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

ஆசிரியருக்கு ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய என் ஆசிரியருக்கு, என்னை மதித்து அன்றிரவு தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டது மகிழ்வை அழித்தாலும் கோர்வையான கேள்விகள் தொடர்ந்து துரத்திக்கொண்டிருக்கிது. அதற்கான நன்றியோடும் கடமையோடும் என்னுள் கிடக்கும் பல கேள்விகளில் சிவற்றுக்கு உங்கள் மூலம் ஒரு தெளிவினை அடையும் முயற்சியாக இதை எழுதத் துவங்குகிறேன்.

கல்விக்கொள்கை பற்றி எண்ணும் பொழுது அது தவறானது என்ற முடிவில் நின்றுதான் எப்பொழுதும் சிந்தை செய்து வருகிறேன், அது நமக்கு கற்றுக்கொடுப்பது கூலி வாங்கும் தொழிலாளிகளை உருவாக்கத்தான் எனும் பொழுது அப்படித்தான் யோசனை செய்ய வேண்டியுள்ளது. காலத்திற்கேற்றவாறு உயர்கல்வியில் அரசு அதற்கேற்றாற்போல் இல்லை முதலாளி வர்க்கத்திற்கேற்றது போல மாற்றம் கண்டுகொள்கிறது.அதில் தப்பிப் பிழைத்தோர் சிலர். நீங்கள் கூறியது போல நம் கல்விக்கொள்கை மோசமானதுதான்.

மாணவர்கள் மற்றும் மாணவிகள் பள்ளியினுள் வரும் பொழுது அரசின், பெற்றோரின்  பிள்ளைகளாகவோ இல்லாமல் ஆசிரிய பெருமக்களின் மாணவர்களாக மட்டுமே இருக்க வேண்டும், அதற்கான சூழ்நிலையை அரசு ஏற்படுத்த தவறியிருக்கிறது என்பதை அறிவோம். இருந்தும் அவ்வப்போது பத்திரிக்கைகளில் இணையதளங்களில் வெளிவரும் அரசுப்பள்ளி ஆசிரிய முயற்சிகளை கவனித்தால், அதே போன்றதொரு நிகழ்வுகள் பிற பள்ளிகளில் இயலாத ஒன்றாக இருந்து வருகிறது என்ற கேள்வி எழுகிறது.

பாலியல் வன்முறை பற்றி பேசும் பொழுதில் நாம் வாழும் சூழ்நிலைகளை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டுமென நினைக்கிறேன். படிக்கும் பிள்ளைகள் தவறிழைக்கின்றன என்றால் அதற்கு அவன் மட்டுமே பொறுப்பா என்றால் அதற்கான பதில் அதுவல்ல. சமூகமும் அது உருவாக்கும் சூழ்நிலைகளும் அவனை தவறுகளை நோக்கி உந்துகின்றது என்பது உண்மைதானே. குறிப்பாக ஊடகம் கைபேசி, தொலைக்காட்சி, திரைப்படமும் அதிலுள்ள பாடல் காட்சிகள், வரிகள், இணையம் என அளவற்ற தகவல்களை மாணவர்களுக்கு பொதுவாக அனைத்து மனிதர்களுக்கும் கடத்துகின்றன. ஆனால் இவையெல்லாவற்றையும் தெரிந்துகொள்பவர்களுக்கு அதில் நல்லவை தீயவை பற்றி புரிந்துகொள்ள எவ்விதம் பயிற்சியளிக்கிறோம். இங்கொரு கேள்வி எழுகிறது.

இதுபோல் ஓரிரு கேள்விகளில் தேங்கி நிற்கிறோம். அதற்கான பதிலுரைகளை உங்களிடமிருந்தும் ஏனைய ஆசிரியர்களிடமிருந்தும் பெற விரும்புகிறேன்.

1) மாணவர்கள் படிப்பில் கவனமில்லாமல் ரவுடிசம் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக கவலை தெரிவித்தீர்கள், இவ்வெண்ணத்திலிருந்து அவர்களை மீட்டெடுக்க பள்ளியளவில் எவ்வித முயற்சிகள் செய்யப்படுகின்றன? (அடிப்பதும் கண்டிப்பதும் தீர்வாகாது என்பதை உணர்வேன்)

2) பாலியல் வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை எண்ணி வருத்தம் கொண்டீர்கள், அவர்களை இச்செயலிலிருந்து  வெளிக்கொண்டுவர பாலியல் கல்வி மிக அவசியம் எனக்கருதுகிறேன் ஆனால் அரசு அதை விடுத்து இலவசங்களால் மனதை பாழாக்குகிறது. இருந்தும் பள்ளியளவில் இதற்காக செய்யவேண்டியதென்ன?

3) பாடத்திட்டத்தை தவிர்த்து வெளியுலகை மொழியை புரிந்துகொள்ள தகுந்த நூலக அமைப்பு நம் பள்ளியில் உள்ளதா இல்லையெனில் பொது நூலகத்தை பயன்படுத்த வாசிப்பதற்கான வாய்ப்புகளை பழக்கங்களை ஏற்படுத்திக் கொடுக்கிறோமா?

நாம் சரியான தலைமுறைகளை உருவாக்கினால் போதும் அரசியல் மக்களுக்கானதாக மாறும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுள்ளது. தலைமுறை உருவாக்குதலில் பெரும்பங்கு ஆசிரியர்களான உங்களுக்கே உண்டு என்பதால் உங்களிடமிருந்து பதிலுரை அறிய விரும்பும். மேலும் எங்களாலான முயற்சிகளை மேற்கொள்ள காத்திருக்கும் உங்கள் மாணவர்கள்.