புதன், 30 ஆகஸ்ட், 2017

முட்டக்கண்ணும் சரபோஜியும்

உணவுநேரமானாலும் காபி இடைவேளையானாலும் உப்பு சப்பற்ற பேச்சுகளையே விவாதிக்க பழகியிருக்கிறோம். அடுத்தவரின் அந்தரங்ககங்களையே பேசித்தீர்ப்பது எப்போது தீருமோ என எண்ணுமளவு நடிகர்கள் அரசியல்வாதிகள் தவிர்த்து பேசுவதற்கு எதுவுமற்றே உலாவுகிறோம் ஒரே குட்டைக்குள் உழல்கிறோம். இவர்கள் யாருக்கும் தாம் விவாதிப்பதாக நினைத்து அரட்டை அடிக்கும் பொழுதில் அப்பொருள் அல்லது அதன் தொழில்நுட்பம் சார்ந்து ஆழமான அறிவோ பார்வையோ இருப்பதில்லை கூட்டத்தில் ஒருவன் கொஞ்சம் விளக்க முற்பட்டால் வார்த்தைகளை தடம் புரட்டி வேறு தேவையற்ற பொருள் நோக்கி இயல்பாக நகர்த்திவிடும் ஆட்களுமுண்டு.

சில சமயங்களில் யாருக்கும் பேச வார்த்தைகளின்றி காஃபியை விழுங்கிக் கொண்டிருக்கும் போது தெறிப்பான ஒரு கேள்வியை உதிர்த்து விட்டால் போதும், பற்றிக்கொள்ளும். இத்தருணங்களில் சிலர் இதுவரை அக்கூட்டத்தில் பேசவே பேசாத தகவல்களை அள்ளிவிடுவார்கள். அதுவன்றோ விவாதத்தளம் என்ற நிலை உணரும் இடம்.

புத்தர் எப்படி இறந்தார் எனத்தெரியுமா என்ற கேள்வியை புதிதாக பௌத்தம் அறிந்து கொண்டிருப்பவரிடம் கேட்டதில் தொடங்கியது தாவித்தாவி சரபோஜி மன்னரிடம் வந்தடைந்தது எந்த இடத்தில் தடம் புரண்டு இவரை அடைந்தோம் என நினைவில்லை. மராட்டிய மன்னர்கள் தமிழகத்து பகுதிகளை ஆட்சி செய்த போது இசை ஓவியம் போன்ற கலைகளில் நாட்டம் கொண்டளவு கட்டிடக்கலையில் சிறப்பு செய்யவில்லை மேலும் தமிழ் மொழியிலும் தமிழ் தொன்மக்கலைகளிலும் எவ்வித வளப்படுத்துதலையும் நிகழ்த்தவில்லை, குறிப்பாக சரபோஜி ஆங்கிலேயரை அரவணைத்தே ஆட்சி நடத்தினார் என நீண்ட வார்த்தைகளின் இடையே அந்த புதுக்கோட்டைப்பெண் உற்சாகமான குரலில் "ஏன் இல்லை... இருக்கிறது... மனோரா கோட்டை... சரபோஜி இரண்டாவது மன்னர் கட்டியது" இதோ பாருங்கள் என கூகுளில் காண்பித்தாள். இதுவரை அறியாத தகவல் அது, அலெக்ஸாண்டரிடம் வாட்டர்லூ போரில் மோதி வெற்றிபெற்ற ஆங்கிலேய நண்பனுக்காக நினைவுச்சின்னமாக கட்டப்பட்டிருக்கிறது இக்கட்டிடம். இரண்டு நாள் முன்பு வாஸகோடகாமா பற்றி கேட்டபோது முட்டக்கண்ணை உருட்டியவளின் உணர்விலிருந்து வந்த வரலாற்று தகவல் வாசிப்பிற்கான தளத்தை விரிவாக்கியிருக்கிறது.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

தென்காசி சாரல்

இரண்டு நாட்களாக குளிர்ந்த காற்றும் சாரலும் சூழலை நிசப்தமாக்கி வைத்திருந்தது கீழப்பாவூரில். பொதுவாக குற்றால சாரலை ரசிப்பதற்கெல்லாம் அப்பா அழைத்துச் சென்றதில்லை "சீசன்" தவிர்த்த அருவியில் நீர் விழும் இல்லை கொட்டும் நாள்தான் செல்வது வழக்கம். சீசன்களுக்கு அப்பா தரும் விளக்கம் "அய்யப்பசாமிகள் பேண்டு போட்டுருக்கும்" என்பதும் "வெளியூராளுவளுக்கு நேந்து விட்டுருக்கும்" என்பதும் தான்.

இப்பொழுதும் நல்ல சீசன் ஊரெல்லாம் சாரல் என்றால் குற்றாலம் எப்படியிருக்குமென உணர முடியும். சில முறை நண்பர்களுடன் சென்று வந்ததுண்டு. நான்கு நாட்கள் ஊரிலிருந்தும் போய்வர இயலாமல் போனது. மாலை தென்காசியில் பேருந்து ஏற வரும் பொழுது இன்னும் குளுமை அதோடு சூடாக இரண்டு உளுந்தவடையும் வாழைக்காய் பஜ்ஜியும் தேங்காய் சட்னியோடு உள் தள்ள இதமானது பொழுது. அதன்முன் லயன் காமிக்ஸ் புத்தகங்கள் நான்கையும் "காக்கைச் சிறகினிலே" இலக்கிய மாத இதழையும் வாங்கி பைக்குள் சொருகிக்கொண்டதை சொல்லாமல் விட முடியுமா.

செங்கோட்டையிலிருந்து ஐந்து மணிக்கு கிளம்பி தென்காசிக்கு ஐந்து இருபதுக்கு வரும் அரசுப் பேருந்தில் ஏறுவது மூன்று வகையில் சிறந்தது. முதலாவது இருக்கைகள் மற்றும் இன்னபிற அம்சங்கள் மற்ற நேரத்து வண்டிகளைவிட அம்சமானது.

இரண்டாவது மதுரை சுங்கச்சாவடி அருகே "ஹரி" என்றவொரு உணவகத்தில் நிறுத்துவது, நான் இதுவரையிலான பயணத்தில் இங்கு உண்டதில்லை, உண்ணுமளவுக்கு பையில் தெம்பில்லை. ஆனால் ஒண்ணுக்கு இரண்டுக்கு போக(கட்டணமில்லாமல்) மற்ற இடங்கள் போல ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டு மூச்சைப்பிடித்துக்கொண்டு வெளிவரவேண்டியதில்லை என்பது சிறப்பென்றால் அங்கிருக்கும் புத்தகக்கடை வெகுசிறப்பு.

மூன்றாவது காலையில் ஏழுமணிக்கு வீடடைந்து விடலாம். இதைவிட அரசுப்பேருந்தில் வேறென்ன வேண்டும், மற்றைய வண்டிகளையும் இதுபோல் வழங்கலாம் பராமரிக்கலாம்.

இரண்டாவது மகள் "இயல்"

ராஜபாளையத்தில் தேனீர் குடித்த பின் பேருந்து கிளம்பியதும் அம்மா கேட்டாள் "பிள்ளைக்கி என்னபேர் வைக்க" என்று "இயல்" எனச் சொன்னதும் "எய்யல்... இதென்ன பேரு ஒரு எழுத்தா" என்றதும் இ ய ல் மூன்றெழுத்து என பிரித்துச்சொன்ன பின்னும் அவளால் சரியாக உச்சரிக்க இயலவில்லை. வேறு ஏதேனும் பெயர் வைக்கலாம்லா என்றும் அது வாயில் வரவில்லை எனவும் கூறினாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது இயல் என்ற பெயர் எப்படி அன்னியமானதாகிப் போனதென்று. ஊருக்கு வந்ததும் பெரியம்மா மற்றும் பக்கத்து வீட்டு அக்காவும் உச்சரிக்க சங்கடப்பட்டார்கள். எனக்குள் ஒரு விவாதத்தை கிளப்பிவிட்டிருக்கிறது இவ்வுச்சரிப்புகள்.

அதன்பின் உறவுகள் மற்றும் நண்பர்களிடத்தில் பெயரை கூறியதும் அதற்கான விளக்கத்தை வைக்கவேண்டியிருந்தது. தங்கை ஒருத்தி "இயல் இசை நாடகம்"னு வருமே அதுவா என்றாள் அதேதான் என்றேன், இன்னொருத்தி அப்படின்னா என்னண்ணேன் என்றாள் "எழுத்துத்தமிழ் முத்தமிழில் ஓர் தமிழ்" என்றேன். நல்லாருக்கு அதையே வைங்க. பின் யாரிடமும் பெயரை கூறியபின் முத்தமிழில் ஓர் தமிழ் என்று சொல்லவேண்டியிருந்தது சிலருக்கு அது தேவையில்லாமலிருந்தது.

எனது தம்பி முத்து "ரக்ஷிதா" என்ற பெயரை மனதில் வைத்திருந்திருக்கிறான். மூத்தவள் பெயர் ஜெபரத்திகா அதன் சாயலோடு இருக்க அப்படி எண்ணியிருப்பான் போல, பின் அவனும் இயல் என்றே அழைத்தான் இரண்டாவது மகளை.

புதன், 23 ஆகஸ்ட், 2017

ஒன்றாகி பின் விலகிய

அந்தச் சிறுகதையின் இரண்டாவது வரி அவனை இறுகப் பற்றிக்கொண்டதும், நேற்றைய இரவுக்கனவில் வந்த நண்பனின் பள்ளிப்பருவ காதலியும் முன்று நாள் முன்னர் வரைந்து பழகிய உடற்கூறு கோணல்களும் ஒரு புதினத்திற்கும் மற்றொரு புதினத்திற்குமான வாசிப்பு இடைவெளியும் கோட்பாடுகளின் விளங்காத் தன்மையும் கோடைகாலத்து வெய்யில் வியர்வையாக இறங்குவதுபோல மனதிற்குள் விலகி விலகி ஒன்றாகி பின் விலகின

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

கனவுகளை வரைந்தவன்


கனவுகளின் கீற்றினை ஓவியமாக்கிய மீயதார்த்தவாதி "சல்வோடார் டாலி"யை காகிதத்தில் கரிக்கோல் கொண்டு வடித்தது.

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

அப்படியாண்ணே

என்ன தம்பி பிள்ள நல்லா வளந்துட்டா போலுக்கு, பள்ளியோடத்துல கிள்ளியோடத்துல சேத்துவிடலாம்லா

இப்பதாம்ணே ஒன்றரை வயசாவுது

அது சரிப்பா இந்த "ஃப்ளே ஸ்கூல்"ங்கானுவள அதுல கிதுல

ஃப்ளே ஸ்கூல்னா என்னண்ணே

அதுவந்துடே ஏதோ "கலர் டே"வாம் அன்னைக்கி மாத்திரம் எல்லா பிள்ளியளும் ஒரே கலருல சட்ட போட்டுக்கிட்டு போறதும் கேக் வெட்டி பொறந்தநாள் கொண்டாடுததும் மாதிரி தெரியுதுப்பா.

ஓகோ அப்படியாண்ணேன்...

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

கனவுராட்டினம் - படைப்பாளிக்கொரு கடிதம்

வணக்கம் மாதவன்,

எனக்கு கனவுகளை பிடிக்கும் அதைக்கண்ட அன்றைய பொழுது எப்படி குதூகலமாக இருக்குமோ அப்படித்தான் உணர்ந்தேன் கனவுராட்டினம் வாசிக்கும் போதும். புதினம் தொடங்கியதும் எடுக்கும் வேகம் அது முடியும் வரை குறையவேயில்லாமல் ஊடாடுகிறது, வழுக்கிக்கொண்டோடுகிறது.
ஒரு புதினம் வாசிப்பவனின் உள்ளத்தையும் எண்ணத்தையும் என்ன செய்யவேண்டுமோ அதைத் தாராளமாக செய்கிறது.

இறுதியில் சுந்தர் என்பவன் அவனே அல்ல வேறொருவன் என நம்பவைக்கப்படும் பொழுதில் வாசிப்பின் இடையே புனைவை அசைபோட்டபோது தோன்றிய இரண்டு வரிகளை மீண்டும் ஒருமுறை உச்சரித்தேன். 

"இந்த இருக்கையில் நான் இல்லை எனது கனவு இருக்கிறது அதேயிருக்கையில் எதிரில் அவர் எனும் அவரது கனவு இங்கு இருக்கை என்பது யாருடைய கனவு."

வாழ்த்துகள் மாதவன் தொடர்ந்து எழுதுங்கள்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியில் "2o11" என அச்சாகியிருக்கிறது அது "2011" ஆக இருக்குமோ என்ற கற்பனையில் இரண்டுக்கும் அனுப்பியிருக்கிறேன் அது உங்களைச்சேருமா இல்லை நீங்களே ஒரு கற்பனை உருவமா என எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

அன்புடன்..... 
ஜெ.பாண்டியன்
PANDIANINPAKKANGAL.BLOGSPOT.COM

இதை பதிவிடும் பொழுதில் "2011" என முடியும் மின்னஞ்சல் தவறு என பதில் வந்துவிட்டது.