வாசிப்பு ஏற்படுத்தும் நினைவூட்டலும் அறிவூட்டலும் கலை சார்ந்த பரிணாமத்திற்கு ஒரு படியாக உருவகம் கொள்கிறது. சமூகத்தையும் மனித அகவுணர்வையும் தான் சார்ந்த உலகின் வெளியில் முன்வைக்கவே ஒவ்வொரு கலைஞனும் முயற்சி செய்வதுண்டு. ஓவியங்களை பற்றி கற்றுக்கொள்ள முற்படும் போது முளைக்கும் சிறகுகள் காட்சிகளின் நீள அகலங்களை அளந்தும் வண்ணங்களின் செழுமையை குழைத்தும் எந்தவித தயக்கமுமற்ற கற்பனையில் பறக்கவிடுகின்றது.
கதை வாசிப்பின் பின்னணியில் உயிர்த்தெழும் நினைவுகள் நமக்கான கதைகளை உருவாக்கியே நகரும். புனைவு மனிதர்களின் அரூபம் நாம் சந்தித்த உருவங்களோடு ஒத்துப்போகும் காட்சிநிலை உருவாகி நிற்கும். ஆசுவாசப்படுத்தும். எழுத்துக்கள் வழி பேசியிருக்கும் ஓவியர்களும் ஏதோவொரு வகையில் நம் வாழ்வின் ஓவியங்களுக்கான சிற்பங்களுக்கான இடங்களை மறைமுகமாகவோ நேரடியாகவோ சுட்டிக்காட்டுதல் மூலம் கடந்து போகின்றார்கள்.
இதுவரை ஒரேயொரு ஓவியக் கண்காட்சிக்கு சென்றுவந்திருக்கிறேன், அந்த அனுபவத்தை எழுதியும் உள்ளேன். அதன்பின்னரே ஓவியங்களில் பென்சிலையும், நீர்வண்ண, தைல ஓவியம் தவிர்த்தும் பல வகைகள் உண்டென்பதை அறிந்துகொள்ள நேர்ந்தது. இந்த எழுத்துக்கள் பல வடிவங்களை வகைகளை இப்பொழுது அறிமுகம் செய்திருக்கிறது. ஓவியங்கள் பற்றிய வரலாற்றை அறிந்துகொள்ளும் எண்ணத்திற்கு இந்த வாசிப்பு உத்வேகம் கொடுத்திருக்கிறது.
மெட்டீரியல் ஆர்ட் பற்றி கூறிய போது, பொருட்களின் நிழலை பயன்படுத்தி இளைஞர் ஒருவர் வரைந்த ஒளி ஓவியம் பற்றி செய்தித்தாளில் வந்த தகவல் நினைவில் வந்தது.
இங்கே பேசியிருக்கும் அத்தனை ஓவியர்களும் ஓவியக் கல்லூரியில் படித்து முறையாக பயிற்சி பெற்றவர்கள். ஓவியக் கல்லூரியின் சுவாசம் பெறாமல் பல ஓவியர்கள் உருவாகியிருக்கக்கூடும் அவர்களில் ஒன்றிரண்டு பேரை பேச வைத்திருக்கலாம். மேலும் அத்தனைபேரும் அரூப, அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்களை வியந்து பேசும் பக்கங்களில் ஓவியர் மாரிமுத்து (யூமா வாசுகி) மட்டும் அப்ஸ்ட்ராக்ட் என்ற பெயரில் ஏமாற்றம் நடப்பதாக ஆதங்கம் கொள்கிறார். கலையில் விற்பன்னனாக இருக்கலாம் கலையை விற்பவனாக இருத்தல் கூடாது என்கிறார்.
இயற்கையோடு வாழ்வதும் அதனை வரைந்து பார்த்தலும் மனத்திற்கு செழுமையான வாழ்வியலல்லவா.
வண்ணங்களின் வாழ்க்கை -- சுந்தரபுத்தன்
தோழமை வெளியீடு.
தோழமை வெளியீடு.