ஞாயிறு, 28 நவம்பர், 2021

வண்ணங்களை அப்பிக்கொள்ளுதல்

இந்த வருடத்தின் ஆரம்பம் தொட்டு ஆசானின் பயிற்சி போக நானாக தீட்டிய வண்ண ஓவியம் என்பது மிகக் குறைவு.

இருமுறை எண்ணெய் வண்ணங் கொண்டு வரையத் தொடங்கியதை முடிக்க இயலவில்லை. இதனாலோ என்னவோ மனம் அக்ரிலிக் பக்கம் தாவிச் சென்றது. வாரம் ஒரு வண்ண ஓவியமாவது வரைய வேண்டுமென முடிவெடுத்து ஒரிரு மாதங்கள் ஆனாலும், அதற்கான வேளை கிட்டியது கடந்த வாரத்தில் தான்.
ஒரு ஆரஞ்சுப் பழத்தை மேசையில் வைத்து நேரடியாக வரைந்து பார்க்கலாம் என்று தொடங்கினேன். அதிக நேரம் செல் அல்லது கணினியில் பார்த்து வரையும் போது இருக்கும் கண் சோர்வு நேரடி நோக்கு முறையில் இருப்பதில்லை, மேலும் ஓளி நிழல் வேறுபாட்டையும் நன்கு உணரமுடிகிறது. சில நாட்களுக்கு முன் இயல் அவளுடைய காலணியை வரைந்து தரும் படி கோரினாள். எதிர்பார்த்திராத அளவு வண்ணங்களும் வடிவமும் வெளிப்பட்ட விதம் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது, அனேகமாக அன்றுதான் வாரம் ஒருமுறையாவது நேரடியாக பொருளைப் பார்த்து வரையலாம் என்றொரு எண்ணம் என்னுள் விழுந்திருக்க வேண்டும்.
பின்னொரு நாள் நண்பர் ஓவியர் கோபி, ஓவிய வகுப்புக் குழுவில் நேரடியாக பொருள் ஒன்றை பார்த்து தூவல் (Pen) கொண்டு தினமும் வரையும் படங்களை பகிர்ந்திருந்தார். அவரோடு இணைந்து வரைந்ததை கடந்த பதிவில் (https://pandianinpakkangal.blogspot.com/2021/11/Oviyangal.html) பகிர்ந்திருக்கிறேன். இப்போது தினமும் ஒரு முழு மனித உருவப் படம் வரைந்து கொண்டிருக்கிறோம்.
நேற்று ஒரு மனித முகத்தை அக்ரிலிக் வண்ணத்தில் வரைய முயற்சி செய்து அதன் பின் கைவிட்டு விட்டேன், இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து தீட்டினால் சரியாக வந்திருக்க வாய்ப்பிருந்தது தான் என்றாலும் எனக்கு மனமில்லை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு. மூன்று நாள் முன் ஏற்கனவே கரிக்கோல் கொண்டு வரைந்த குழந்தையின் படத்தினில் வண்ணங்களை அப்பி விடலாம் என்று மதியம் ஆரம்பித்தேன். முகத்தின் சரியான தோல் நிறத்தை அடைவது அவ்வளவு எளிதானதில்லை என்பதே ஒரு சில வண்ணக் கலப்பில் சோர்வடையச் செய்துவிடுவதுண்டு. "எண்ணெய் வண்ணத்தை கையாள்வதே தனித்திறமை தான் அதற்கு நிறைய வண்ணங்கள் பற்றிய புரிதல் வேண்டுமென" ஆசான் சொன்னது அடிக்கடி வண்ணக்கலவை செய்யும் பொழுதில் நினைவுக்கு வரும், இதுவரை இரண்டு படங்களை முடிக்க இயலாமல் ஒதுக்கியிருக்கிறேன், அழிவிற்கு அப்பாலே ஆக்கங்கள் என்றொரு சொல்லடுகிறது மனதில்.
இந்த குழந்தையின் முகத்திலும் ஒளிப்படத்தில் உள்ளது போன்ற நிறத்தை தீட்ட இயலவில்லை, ஆனாலும் ஒளி நிழல் பிரித்து  வண்ணங்களை அப்பியிருந்தது ஓரளவு நிம்மதியையும் அடுத்த படத்திற்கான உற்சாகத்தையும் அளித்திருக்கிறது.

செவ்வாய், 23 நவம்பர், 2021

மீண்டும் நாளை மழை

வந்தாட்கொள்ளும் இசையே
உந்தன் காரணம் தான் நீயறிவாயோ
வெயில் காயும்
விளையாக் கோதுமை
வலி நிவாரணி வாசிப்பு
பசி அமிழ்ந்த வெள்ளைப் பசு 
மீண்டும் நாளை மழை

புதன், 17 நவம்பர், 2021

பென்சில், பேனா மற்றும் நீர்வண்ண ஓவியங்கள்

தினமும் எதையேனும் வரைந்து விடுவது என்பதை சவாலாக ஏற்று தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கிறேன். வரைந்த படங்களை இங்கு பதிவிடுகிறேன். இந்த அனுபவம் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணமிருக்கிறது.