ஞாயிறு, 20 ஜனவரி, 2019

ஓவியமெனும் பெருங்கனவு


கடந்த சில வருடமாக ஓவியங்கள் வரைந்து பழகுவதில் நாட்டம் அதிகரித்திருக்கிறது, இதை ஓர் சுய இச்சை எனக் கூறலாமா எனத் தெரியவில்லை. எனக்கென்னவோ அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. தொடர்ச்சியற்ற பயிற்சி முறையில் தேடித் தேடி நுணுக்கங்களை கண்டடைந்து கொண்டிருந்தேன். இச்சோதனை முறையின் இடையிடையே இச்செயலை ஏன் செய்கிறேன் எங்கிருந்து இது தொடங்கியது என எண்ணும் பொழுதில் நினைவுகளில் ஆழ்ந்து போவதுண்டு. அப்படியான சூழலில் எனக்குள் ஓர் பெருங்கனவு என்னை அறியாமல் தொடர்ந்து கொண்டிருப்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. இக்கனவை செம்மை செய்யாமல் வெகு சுலபமாக அலட்சியம் செய்திருப்பதை எண்ணி மனம் வெதும்புகிறது. நினைவில் உலாவும் ஒவ்வொரு நிகழ்வையும் எழுத்தாக மாற்றிவிட எண்ணமிருந்தாலும் அதற்கான மொழியை அடைவதற்கான முயற்சியும் வேண்டியுள்ளது.

தற்போது பயிற்சிக்கான புத்தகங்களாக “ஓவியர் புகழேந்தி” எழுதியிருக்கும் “ஓவியம் கூறுகளும் கொள்கைகளும்” – தோழமை பதிப்பகம், “ஓவிய நுண்கலை- ஓவியக்கலை மாணவர்களுக்கான கையேடு- சீ.வி.வடிவேலு- சந்தியா பதிப்பகம் மற்றும் அஜந்தா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ்-ன் பயிற்சிக் கையேடு, இந்த ஒவியப் பள்ளியும் இப்பெருங்கனவின் அங்கம்.

இப்படங்களுக்கு முன்னதாக வரைந்தவை வெகு சொற்பமேயானலும் அவை தற்போது இல்லை.
ஓவியம் 1- பெரும் இடைவெளிக்குப் பின் துவக்கத்தை உருவாக்கிய படம். ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் படத்தை பயிற்சிக்காக செய்து பார்த்தது.
ஓவியம் 2 - உருவப்பட முயற்சி - புதுமைப்பித்தன்
ஓவியம் 3 - பெரும் தயக்கத்திலிருந்து விடுபட முயற்சித்தது. நண்பன் விஷ்ணு

ஓவியம் 4 - மையினால் ஆன கோடுகள் - தாய்மாமன் தமிழழகன்.


ஒருசில புத்தகங்கள் நாம் எவ்வளவு தேடினாலும் கிடைக்காமல் ஆனால் தேவையான நேரத்தில் கையில் சிக்கிக் கொண்டு நம்மை நமக்கான பாதையில் அழைத்துச் செல்லும். உருவங்களை வரைவது, நிலக் காட்சிகளை வரைவது என சில பக்கங்களை புரட்டியும், காணொளிகளை கண்டும் அறிந்திருக்கிறேன் ஆனால் அவையெதுவும் சொல்லித்தராததை காட்டியிராத பாதையை மேற்ச்சொன்ன புத்தகங்கள் கண்டுகொள்ளவும் அறிந்து கொள்ளவும் உதவிக் கொண்டிருக்கின்றன. அறியாத கோடுகளை வண்ணங்களை புகுத்தத் தொடங்கிவிட்டன, அவை இழுத்துச் செல்லும் பாதையில் பயணித்துவிட்டால் போதுமென எண்ணுகிறேன்.


புதன், 16 ஜனவரி, 2019

புனைவிலிருந்து விலகலான வாசிப்பு

இந்த வருட சென்னை புத்தகத் திருவிழாவிலிருந்து (இந்நாளை வாசிப்பிற்காக வருடத்தின் தொடக்கநாளாகக் கொள்வதால் இப்படி) அபுனைவுக்குள் மனத்தினை துழாவ விடலாம் என்றொரு பெரும் உவகை.

இரண்டாம் நாள் சென்று ஓவியம் மற்றும் கலை சார்ந்த புத்தகங்களோடு ஒரு மானுடவியல் சார்ந்த நூல் ஒன்றும் சிக்கியது, ஒரு வீட்டிலிருக்கும் பத்து பேருக்கு உள்ள முக வேறுபாட்டிற்கும், வேறு வேறு இனக்குழு அல்லது நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உள்ள முக வேறுபாடுகளுக்கும் இடைவெளி உண்டல்லவா, அதைப் பற்றி அறிய உதவும் நூல்.

இன்னொரு முறை சென்று சில கட்டுரை நூல்களை அள்ளி வர வேண்டுமென உள்ளம் உழன்று கிடக்கிறது வாய்ப்பிற்காக, வரும் ஞாயிறு அதற்கான நாளாக அமைய எண்ணுகிறேன். ஓவிய பயிற்சிக்காகவும் நிறைய வாசிக்க இருப்பதால் இம்முறை புனைவிலிருந்து சிறு விலகல். புனைவெழுதுவது எளிதாகிவிட்டதோ என்னவோ மலை போல் அடுக்குகிறார்கள் கதைகளை, சமகாலம் பெருங்கனவாக நம்முன் விரிந்து நிற்கிறது. தற்போதைக்கு அதை வேடிக்கை பார்க்கவும், நெடிய இடைவெளிக்குப் பின் இத்தளத்தில் கொஞ்சம் எழுதலாம் என்றொரு எண்ணமும். பயணிப்போம்..