திங்கள், 16 மே, 2016

கோடுகளோடு

பழைய குற்றாலம். ஊருக்கு சென்றால் பெரும்பாலும் சென்று வரும் மலையும் காற்றின் குளுமையும் நிரம்பியிருக்கும் வனம். எழில்.


மேகங்களின் மீது பேரன்பும் அவற்றை கோடுகளாகவும் வண்ணங்களாகவும் வரைந்து மகிழ மிகையார்வமும் சோம்பலும் கொண்டவன். ஒருவழியில் மலைகளின் மேல் பரப்பிய மேகக்கோடுகள் அதற்கான தொடக்கமாகவும், சோம்பலின் முடிவாகவும் இருந்துவிட எண்ணுகிறேன்.


0 0 0 0


பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை கடக்கும் தினம்தோறும் இப்பறவை கண்ணில் தோன்றாமல் பறந்ததில்லை. வெடித்துப் பிளந்து கிடக்கும் சதுப்புநில தரையின் மறுபகுதி (கட்டிடங்களிருப்பதால்) சற்று நீரிருக்கும் பகுதியில் பார்க்கலாம். நண்பன் ஜெபராஜ் ஒளிப்படக்கருவியில் பதிவு செய்ததை காகிதத்தில் கரிக்கோல் கோடுகளாக தீட்டி ஆசுவாசம் அடைந்திருக்கிறேன் சிறகு விரித்து நிற்கும் அப்பறவை போலவே.

வெள்ளி, 13 மே, 2016

கபாடபுரமும் மானுடப் பண்ணையும் - வாசிப்பு

கபாடபுரம் இந்த சொல் அல்லது பெயருக்கு என்னுள் ஓர் இனம்புரிந்த ஈர்ப்புண்டு, வரலாற்றினை வாசிக்கும் தமிழன் கொற்கைக்கு அப்பால் இதைப்பற்றி எண்ணாமலிருந்தால்தான் வியப்பு. மிகச்சிறிய புதினம் நூற்றியைம்பது பக்கங்களுக்குள் அடங்கியது. பேராவலோடு வாசிக்கத்துவங்கினேன் எழுத்துச் சுவை மிகுந்த, அழகு மிளிர்ந்த, பிரம்மாண்டம் குறைந்ததொரு பாண்டியர்கள் பற்றிய வரலாற்றுப் புதினம்.


நாட்டையாளும் அநாகுலப் பாண்டியனைப் பற்றியோ நகரத்தின் ஆட்சியமைப்பையோ சுற்றி வராமல் எதிர்வரும் காலத்தின் அரசனாகப்போகும் சாரகுமாரனையும் மூத்த அரசன் கிழவர் வெண்தேர்ச் செழியரையும் காட்சிப்படுத்துகிறது. சுற்றியிருக்கும் சிறு குறு தீவுகளை பாண்டியரசாங்கத்தின் கீழ் கொண்டுவர பெயரனை தயார் செய்யும் கிழவரின் நிழலிலேயே கதை பயணம் செய்கிறது. காணும் இடங்களையெல்லாம் மிகையுணர்வோடு ரசிக்கச்செய்யாமல் குறிப்பிட்ட சில கதாப்பாத்திரங்களின் மனவோட்டத்தின் வழியிலேயே புதினம் பயணம் செய்கிறது.

o o o

தொண்ணூறுகளின் இளைஞன் கல்வி அதிகாரிகளின் மெத்தனத்திற்கு பலியாகுவதன் பின்னணியில் புனையப்பட்டிருக்கும் புதினம் மானுடப் பண்ணை.
பிராமணிய முதலாளி, பெரியாரிய, மார்க்ஸிய தோழர்களின் கருத்துக்களை தன் மண்டைக்குள் சண்டையிட அனுமதிப்பவன். இசங்களின் கொள்கைகள் சாமானியர்களின் முன்னால் செல்லுபடியாகாததை உள புலம்பல் வழி மனம் அரற்றுவதுதோடு அவ்வப்போது கல்லூரிக்கும் தொழில்நுட்பக் கழக அலுவலகத்துக்கும் அதிகாரிகளை அடிக்கும் வெறியுடன் சென்று ஆற்றாமையோடு வெளியேறுவதும் தொடர்கிறது.


பிராமணிய டாக்டர் வீட்டில் பாலூற்றும் சிறுவனுக்கு முன் வெளிப்படுத்தப்படும் தீண்டாமையுணர்வு, பெண்ணியக் கருத்துக்களை தன் தங்கையின் காதல் திருமணத்திற்கு பின்னர் உள்வாங்கிக்கொள்ளும் இவனின் தோழி என கருத்துக்களால் வெறுப்பின் வெற்றிடங்களை நிரப்பிக்கொண்டே திரிபவனுக்கு தான் தொழிநுட்பத்தேர்விற்காக பெறவேண்டிய சான்றிதழுக்காக இறுதிவரை படியேறுகிறான். முடிவில்லாமல் முடிகிறது இப்புதினம்.