செவ்வாய், 19 ஏப்ரல், 2016

நாஞ்சில் நாடனோடு ஓர் அறிமுகம்

வாசிப்பையும் வாசிப்பதையும் பற்றி பேசப்பேச ஆற்று மணற்பரப்பில் முழங்கை அளவு ஆழத்தில் நீர் சொரிவது போல உள்ளத்தில் உணர்வுகள் தீண்டப்படுகின்றது. கதைகளை வாசிக்கும் முன்னரே ஒரு சில எழுத்தாளர்களை பற்றி அவர்களின் பேட்டி வாயிலாக அறிந்து கொண்டதுண்டு இந்தவகையில் அறிமுகமான ஆளுமை நாஞ்சில் நாடன். இவருடைய எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கிய போது அவருக்குள் எழுபதுகளில் அடித்த பம்பாய் காற்று இரண்டாயிரத்தின் துவக்கத்தில் என் மீதடித்த மும்பைக் காற்றினை எந்த முன்னறிவிப்புமின்றி மீண்டும் மீண்டும் வீசச் செய்கிறது.
மிதவை என்றொரு புதினம். மும்பையின் மின்சாரத் தொடர்வண்டியின் இருக்கையில் அமர்த்தியும் ஆள் குறைந்த இரவில் அதன் வாயில் கம்பில் கைபிடித்து காற்றோடு முட்டிக்கொண்டு செய்யும் பயணத்தையும், நெருக்கித்தள்ளும் மனிதர்களையும், தொடர்வண்டி தளவாடங்களையும் மறுமுறை எனக்குள் நானே இந்த எழுத்துக்கள் கொண்டு எழுதிக்கொள்ள வரைந்துகொள்ள இயன்றது.


மழை வெள்ளத்தில் கரைந்து போகாமல் நனைந்து மிதந்த நூல்களில் மிதவை மிகவுவப்பானது. இன்றும் பூஞ்சை மணக்க என்னோடு இருக்கிறது ஊழிக்காலத்தின் வாடை போல.


உயிர் எழுத்து வெளியிட்டிருக்கும் இவரது சிறுகதை தொகுப்பு வாசித்துக் கொண்டிருக்கிறேன்.


எல்லோரும் ஒரே வாழ்க்கையைத்தான் வாழ்கின்றோம் இல்லை வாழ்ந்து தொலைக்கின்றோம். இது எவ்வளவு அப்பட்டமான உண்மை. 

சனி, 9 ஏப்ரல், 2016

மயான காண்டம் - வாசிப்பு

சிறுகதையோ, புதினமோ எழுதும் எழுத்தாளனின் பெயரைக்கேட்டால் அல்லது கண்டால் கதையின் பாத்திரமும் அதிலுள்ள சிறு பகுதியேனும் நினைவில் வழிந்தோடும். லஷ்மி சரவணக்குமார் பெயர் வந்தால் குதிரை பந்தயக்காரனுக்கும் குதிரைக்குமான உறவைச் சொல்லும் கதை ஓர் அடையாளமாக முன்வந்து முதுகு சிலுத்து நிற்கும். இனி மயான காண்டம் கதை தொடர்ச்சியாக வந்து அகம் குடைவதை மறுக்க இயலாது.


மயான காண்டம் சிறுகதை தொகுப்பில் விகடனில் வாசித்த குதிரை பந்தயக்காரன் கதையும் சேர்ந்திருக்கிறது. ஒரு துண்டு வானம்.


திரையுலகம், நாடக மேடை கலைஞர்கள் பற்றிய கதைகளை நிரப்பிக்கொண்டிருக்கிறது உயிர்மை வெளியீட்டில் வந்திருக்கும் இப்புத்தகம். வள்ளி திருமணம் என்ற கதையில் நாடக மேடைக்கு பின்பக்கமாய் நிகழும் அவசரக் கலவிகளின் காதலையும் வள்ளித்திருமண நாடகத்தையும் ஓர் நேர்கோட்டில் இணைத்து சீரழிந்திருக்கும் கலையையும் மக்களின் ரசனையையும் துகிலுரிக்கிறார்.


மயான காண்டம் கதை அரிச்சந்திர நாடகத்தில் அக்கதாபாத்திரத்தை நிகழ்த்திக்காட்டும் நாயகன் அரிச்சந்திரனாகவே தன்னையுணர்ந்து பொருள் துறந்து காசியின் தெருக்களில் முட்டித்திரிந்து பிணம் எரிப்பவனாக மாற்றம் காண்பதை நிகழ்த்திக் காட்டுகிறது.


ஓரிரு காதல்கதைகள்.
Fake என்றொரு கதை திரையுலகத்தில் இயக்குனர் அவதாரமெடுக்கும் ஒருவனின் மனம் புகழுக்குப்பின்னால் கிளைதாவும் உண்மையை அல்லது பொய்யை சித்தரித்துள்ளது. "விளைவுகளை ஏற்படுத்தாத எந்தவொரு கலைப்படைப்பும் அடிப்படையில் தனக்குள் போலித்தனத்தையே அதிகமும் கொண்டதாகவே உள்ளது " என்ற வாசகத்துடன் தொடங்குகிறது இக்கதை.
ஒரு அவசர கடிதம் கதை திரையுலகிலிருப்பவனின் பொருளாதார இயலாமையை விவரணை செய்கிறது. உதவி இயக்குனராகயிருக்கும் இவரிடம் இருந்து ஆக்கமான திரைக்கதை ஒன்றை எதிர்பார்க்கும் எண்ணங்களை விரித்து காட்சிப்படுத்துகிறது இவரின் கதைகள்.