அரூப ஓவியங்களின் வெளிப்பாடு பெரும் அயர்ச்சியை அளிப்பவையாகவே இருந்து வருகிறது. ஆனாலும் அதனை அனுபவமாக மாற்றிக்கொள்ள குறைந்தபட்ச முயற்சி தேவையிருக்கின்றது. இருவருடங்களுக்கு முன்பு சென்னை வாரயிறுதி ஓவியர்களின் கண்காட்சியை காண்பதற்காக சென்றிருந்த பொழுதில் எதிர்பாராத விதமாக ஓர் படைப்புருவாக்கத்தை நேரிடையாக பார்க்க வாய்ப்பு அமைந்தது. வண்ணங்களை பிதுக்கி கித்தானில் தேய்த்துவிட்டு தூரிகையால் நிறமாற்றங்களை உருவாக்கிக் கொண்டே வந்தவரின் அப்படைப்புச் செதுக்கலை கண்ட எனக்கு, அதுவோர் இயற்கை காட்சியாக உருவம் கொள்ளும் என்ற எண்ணம் மேலெழுந்தது, ஆர்வம் அதிகரித்தது வண்ணப் பயன்பாட்டை பார்த்த கண்களுக்கு.
ஓவியம் தீட்டுதல் முற்றுபெற்றது இறுதியாக ஓர் சிவப்புப் பட்டையை நீவி விட்டதன் பின், ஆம் தன் விரல்களால் ஓவியர் விஸ்வம் அவ்வண்ணத்தை இடது பக்கமாக நீவி விட்டார். அங்கே அமர்ந்திருந்த மற்றொரு ஓவியரை அவ்வோவியம் பற்றி பேச அழைத்தனர் அவர் அப்படைப்பை ஒரு மாய நிகழ்வு என்று கூறி பேசத் தொடங்கினார். எனக்கு அதுவொரு இயற்கையின் வடிவமென்றே புலப்பட்டது. அதற்குப் பின் அரூப ஓவியங்களை காண நேர்கையில் அதன் உருவாக்கத்தை மனதிலேற்றும் முயற்சியால் ரசிக்க பழகுகிறேன், ஓரளவு வரையத் தெரிந்த என்னால் படைப்பு உருவாக்க பார்வையிலேயே பார்த்து லயிக்க முடிகிறது. ஆனால் அதன் இறுதி வெளிப்பாடு இன்றும் அயர்ச்சியளிப்பதாகவே உள்ளது. அருபம் என்பதை ஓர் தொடர் நிகழ்வு நடைபெறவேண்டிய வெளி என்றே நினைவில் அழுந்தப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். முடிவற்றது.
வீட்டிலிருந்து இரு தெருக்கள் கடந்து வெட்டவெளியில் பூங்கா அமைப்பு போன்ற சிமெண்ட் பலகைகள் இரண்டு கொண்ட இடம், அங்கு அமர்ந்து வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது. வடக்கு நோக்கியமர்ந்தால் நிலவெளி தெற்கு பக்கமிருக்கும் சாலையை விட பார்வைக்கு தோதானதும் இதமானதும் கூட. கண்ணின் கிடைமட்ட பார்வை அளவிலிருந்து பார்வையை நீட்டும் முன் சட்டமொன்றை கற்பனையில் உருக்கொண்டு வந்து நோக்கினால் செம்மண் நிறத்தில் மிதக்கும் சிவப்பும் சிவப்பு கலந்த வெண்மையும் அதனை சுற்றிலும் சிதறலாய் பரந்து கிடக்கும் பச்சையும் கொஞ்சம் மஞ்சள் கலந்த பச்சையும் ஒட்டிக் கொண்டிருக்கும். சட்டத்தின் மேல் பக்கத்தில் வெண்பச்சை திரண்டு நிற்க அதன் கீழ் கவியும் இருள் பச்சை, கோடுகளாய் கீழிறங்கும் இருளில் மங்கிய பழுப்பு நிறம்.
சட்டத்தின் உருவை விலக்கினேன், பெருவெளியொன்றை உள்ளிழுத்துக் கொண்டது அந்நிலம், அத்தொடர் நிகழ்வை இயற்கை நிகழ்த்தத் தொடங்கியது.