செவ்வாய், 30 டிசம்பர், 2014

முதல்நாள் பலூனுக்காக

கிறிஸ்துமஸ் நாள்முதல்
உயிர்களை நிரப்பிக் கொண்டு
தொங்கலாய் கிடக்கும் பலூன்கள்
ஒவ்வொன்றாய் உயிர் துறக்கின்றது
இரண்டு நாட்கள் மீதத்தில்
அனைத்தும்...
பின் உயிர் பெறும்
முதல்நாள் பலூனுக்காக...

திங்கள், 17 நவம்பர், 2014

பேசுதலின் நிமித்தம்

பேசினோம்
பேசிக்கொண்டேயிருந்தோம்
எந்த தடையுமில்லைதான்
கொசுவைத்தவிர

என்னன்னவோ
பேசினோம்

அகமுமம்
புறமும்
நெடுநல்வாடையும்
ஏற்பாடும்
குரானும்
கீதையும்

நிலவொளியும்
மின்னொளியும்
நுரையீரல்
தின்னும் புகையும்

வேப்பமரக் காற்றும்
தென்னங்கீற்றின்
சலசலப்பும்

இளஞ்சூட்டு
குளம்பியும் தேனீரும்

இத்தோடு
முடியுமா என்றால்
இல்லைதான்

புதன், 12 நவம்பர், 2014

அலையும் உருவங்கள்

மழைப் பொழுதின்
காலை நேரப் பேரூந்தில்.
செய்தி தாளை புரட்டிக்கொண்டிருந்தவர்.
கற்பழிப்பு, கொலை, கொள்ளை,
கருப்பு பணம் இவற்றிற்கு
தன் காலத்தோடு ஒப்பிலக்கணம் எழுதிக்கொண்டிருந்தார்.
எனக்கும் அவருக்குமான காற்று வெளியில்.
நிறுத்தம் வந்ததும்
பேரூந்தின் படியில் நின்று திரும்பிய வேளை
அவரின் உருவத்திற்கு
எனது முகத்தை
பொருத்திப்பார்த்துக் கொண்டேன்
பாதம் தரைதொடும் சில நொடிகளில்....

வெள்ளி, 7 நவம்பர், 2014

நகரத்து காலை

முகில்கள் அற்ற தெளிவான வானில்
இதுகாறும் மறையா முழுநிலவு
அதையொட்டி சிறகு விரித்த கரும்புறா
வாகன இரைச்சலில் தேம்பி அழும் குளிர் தென்றல்
தெளிவற்ற மனநிலையில் போக்குவரத்து சமிக்ஞை
பிறந்த குழந்தையின் பிசுபிசுப்பு இவன் கைகளில்
முழுமைபெற காத்திருக்கும்  நகரத்து காலை

வியாழன், 6 நவம்பர், 2014

ஒவ்வொரு இரவும்

நிலநடுக்கம் போன்ற
கனவுகள் நிறைந்த இரவுகள்
மழைச் சாரல் சிதறும்
காலையை நிகழ்த்திவிடுகிறது
இனி
ஒவ்வொரு இரவும்
அப்படியே அமைந்து விடுவது
உறுதி செய்யப்பட்டால்
விடியலுக்கு அழகுதான்...

 
 

வெள்ளி, 31 அக்டோபர், 2014

நிலப்படமும் நண்பனும்

      



                                     ரவி தனது கைபேசியில் இணையத்தை முடுக்கிவிட்டு பேரூந்து நிறுத்தத்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தவன், வாகனங்கள் ஒலியெழுப்பிக் கொண்டு முன்னேற முடியாமல் வாகனநெரிசலில் இரைந்து கொண்டிருந்த கணத்தில் இடையில் புகுந்து சாலையின் எதிர்பக்கத்தை அடைந்திருந்தபோது கைபேசியின் வாட்சப் மென்பொருளில் நண்பர்கள் சில தகவல்களை பகிர்ந்திருந்தார்கள்.

         குறுஞ்செய்திகளை தன் இடது கை பெருவிரலால் விலக்கியவன், கூகுள் நிலப்படத்தை அழுத்தினான், அது இவன் நின்றுகொண்டிருப்பது வடபழனி நோக்கி செல்லும் ஆற்காடு சாலை என ஆங்கிலத்தில் காண்பித்ததோடு, அதனை அடையாளப்படுத்தும் விதமாக வான்நீல நிறத்தில் பளபளத்த அந்த பொட்டு வடிவம் குழலியின் நெற்றிப்பொட்டை நினைவுக்குள் அழைத்து வந்தது, ஒரு துளி கண்ணீரையும் விரயமாக்கியது.

        நிதானித்துக் கொண்டவன், நிலப்படத்தில் சென்று சேர வேண்டிய இடத்தில் புத்தகநிலையத்தின் பெயரை ஆங்கிலத்தில் எழுதியதும் இவன் நிற்கும் இடத்திலிருந்து மெல்லிய கருவண்ணத்தில் பாதையை அடையாளப் படுத்தியது.

        நிலப்படத்தை துண்டிக்காமல் கைபேசியை உள்ளங்கையில் கிடை பக்கமாக வைத்துக்கொண்டு சாலையில் தொடர்ந்து நடந்தான், வானநீலப் பொட்டும் நகர்ந்து கொண்டே வந்தது.
மழைமேகங்கள் நான்கு மணியை ஆறு மணி சாயலுக்கு மாற்றியிருந்த நேரம், சாலையோரத் தேநீர் கடையில் வாழைக்காய் கடலைமாவுடன் கொதிக்கும் எண்ணையில் புணர்ந்து கொண்டிருந்ததும் இவனுக்கு குழம்பியின் மேல் உவகை ஏற்பட்டது.

       தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தவன் பழக்கடையில் மாதுளம் பழங்களின் அடர்சிவப்பு விதைகளை பிரித்து நெகிழி கொள்கலனில் அடைத்து வைத்திருந்ததை கவனித்ததும். அந்த விதைகள் பற்களாக உருவங்கொண்டு ஓட்டமும் நடையுமாக செல்லும் நுகர்வோரை பார்த்துச் சிரித்து ஏளனம் செய்வதுபோல் இருந்தது இவனுக்கு.

      இப்போது நிலப்படத்தின் வானநீலப் பொட்டு சாலையின் வலதுபுறம் திரும்பும் தெருவின் முனையை அடைந்திருந்தது, இவனும் தான்.

      தெருவின் இடது பக்கத்தை பிடித்து நகரத்தொடங்கியவன், கைபேசியை தன் கால்சராயின் இடதுபையில் சொருகிக் கொண்டான்.வரும் சந்திப்பில் இடதுபுறம் திரும்பிய பின் முனிசாமி சாலையை அடையவேண்டுமென்பது நிலப்படத் தகவல்.

     இடதுபக்கம் திரும்பும் முன்னரே இவனுக்கு மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தது, சாலையில் இடதுபக்கம் திரும்பியதும் அமைந்திருந்த கடையில் பழச்சாறு, தேநீர், குழம்பி எல்லாம் கிடைக்கும் போல் தெரிந்தது. முட்டிக்கொண்டிருந்த மூத்திரம் கண்களை திருப்ப எதிர்புறத்தில் கட்டணக் கழிப்பிடத்தை கண்டதும் யப்பா என்று இருந்தது.

    காசு கொடுத்தாலும் மூக்கை பிடித்துக்கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும் என எண்ணிக் கொண்டான். மூச்சை விட்டும் விடாமலும் தவித்துக்கொண்டே சிறுநீரை வெளியேற்றினான். சிறுநீரகக் குப்பியின் நேர்மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள், எழுதியவனின் மன ஊனத்தை எள்ளி நகையாடிக் கொண்டிருந்தது இவனுக்கு கவிஞர் விக்ரமாதித்யனின்

"ஈனவும் தெரியாது
நக்கவும் தெரியாது
சில ஜென்மங்கள் இருப்பது
சொல்லமுடியுமா எதற்கென்று"


என்ற கவிதையை இந்த பொழுதில் ஞாபகப் படுத்தியது.

     மாலை நேரத்தில் குழம்பியால் கூடுதல் இன்பம் சேர்க்கப்படுவது தனி சுகம் தான், தேநீரோடு இந்த தன்மையை இவன் ஒருபோதும் உணர முடிந்ததில்லை.

     பழங்கள் மற்றும் மாச்சில் போத்தல்களுக்கு பின்னால் அமர்ந்திருந்தவரிடம் பத்து ரூபாயை கொடுத்து இரண்டு ரூபாய் சில்லறை வாங்கிக் கொண்டவன், நாவில் ஒட்டிக்கொண்ட குழம்பியின் திரைச் சுவையோடு சாலையில் நடை போட ஆரம்பித்தான். அடுத்த ஐந்து வினாடியில் முனுசாமி சாலையை அடைந்தவன், கைபேசியை உயிர்ப்பித்து புத்தக நிலையத்தின் இருப்பிடத்தை உறுதி செய்து கொண்டான். வானநீலப் பொட்டு இப்பொழுதும் இவனோடு நகர்ந்து வந்திருந்தது. வலதுபுறம் அமைந்திருந்த கட்டடத்தின் ஒரு முனையில் புத்தக நிலையத்தின் பெயர் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு மேல்தளம் செல்லும் அடையாளம் கண்டவன், தன் கைபேசியில் இணையத்தின் தொடர்பை துண்டித்து விட்டு மேல்தளத்திற்கு படியேறினான், வானநீலப் பொட்டு தன் இருப்பை சாலையோரமே நிறுத்திக்கொண்டது.






வியாழன், 30 அக்டோபர், 2014

கசியும் புகை

மஞ்சள் பற்களிடையே
கசியும் புகை..
நரம்பு நூலோடு
ஊசியின் கண்கள் தேடும்
விரல்கள்
அறுந்துபோன ஒற்றைக்கால்
செருப்பு
மீண்டும் உள்ளிழுக்கப்படும்
சுருட்டின் புகை...

செவ்வாய், 28 அக்டோபர், 2014

கற்கள்

கால்களுக்கிடையே
கடத்தி வந்த கற்களை
தொலைத்துவிடாமல் நகர்த்திவந்து
அந்த மரத்தின் தடித்த
வேர்களுக்கிடையே
சேகரிக்கும்
இந்த எறும்பின் நாளையை
நகர்த்தப்போவதென்னவோ
அந்த கற்கள்தான்........

வேடிக்கை

மழைத் துளிகள் நிரப்பிவிட்ட
சிறு குளத்தில்
தலைகீழ் ஆசனம் செய்யும்
இந்த தென்னைமரக் கீற்றுகளை
அந்தக் கதிரவன்
பார்த்துச் சிரித்திருப்பதை
காற்று அசையாமல்
வேடிக்கை பார்க்கிறது.....


--------------------------------------------------------------------------------------

பக்கத்து வீட்டு பூனை
அடுப்படி வந்ததும்
அடிக்கத் துணிந்தவள்
தான் வளர்த்த போது
உறவு கொண்டாடினாள் 


--------------------------------------------------------------------------------------

இப்படித்தான் இருக்கின்றன
பல் அடுக்குகள் போன்ற
பேரூந்தின் இருக்கைகளும்
காத்துக்கிடக்கின்றன
அந்த ஒருவருக்கான
ஞாயிற்று கிழமையில்
இந்த மழை நேரத்தில்
கொஞ்சம் அதிகமாகத்தான்

செவ்வாய், 14 அக்டோபர், 2014

கரிக்கோல்

இன்று ஒரு உருவத்திற்கு
வடிவம் கொடுத்தாக வேண்டிய
கட்டாயத்தில் அமர்ந்ததால்
எனது கரிக்கோலின் நுனி
சிதறி கிடக்கிறது
சிதறல்களை
ஒருங்கிணைத்த வேளை
சின்னஞ்சிறிய பல உருவங்கள்
தன்னைத் தானே
காட்சிப் படுத்தியதில்
எனது உருவமும்
இல்லாமல் இல்லை....

சனி, 4 அக்டோபர், 2014

இன்றும் ஒருநாள் அவ்வளவே

மஞ்சள்நீர் தெளிக்கப்பட்ட
கடையின் முன்வாசல்
நீரை உறுஞ்சும் காக்கை
அழைத்துக் கொண்டது
தன் உறவுளை
தென்னங்கீற்றில்
பரவிக் கிடக்கும்
சிகப்புமஞ்சள் சூரியனின்
கீற்றுகள்
அலைபேசியின் அழைப்பில்
அகச்சிணுங்கல்கள்
இவைகளுக்கிடையே
அழிக்கப்பட்ட குயில்களின்
கேட்காத ஓசைகள்
இன்றும்
உண்டியாக நெகிழிப்பைகளை
உண்ணும் இந்த மாடுகள்

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

என்ன செய்ய முடியும்..... இந்த நினைவுகளை..

என்ன செய்ய முடியும்..... இந்த நினைவுகளை..

பெயருக்குப் பின்
எழுத்தாகவோ எண்ணாகவோ
உருமாற்றிக் கொள்ள முடியும்..

நாட்குறிப்பில் எழுதி
பின்
அடையாளத்தோடு கிழித்தெறிய முடியும்..

கண் துஞ்சும் நேரம்
கனவுகள் செய்ய முடியும்..

தேவையற்ற மின்னஞ்சல் முகவரிக்கு
கடவுச் சொல்லாக்கி மறக்க முடியும்..

புனைக்கதைகளில் மாந்தராக்கி
நடமாட விட முடியும்..

கவிதையின் மென் வார்த்தைகளில்
நுழைத்திட முடியும்..

மதுப்புட்டியில் போடப்படும்
பனிக்கட்டியில்
உருக்கிவிட முடியும்...

காலையில் கண்புரை
கழுவும்  நீரில்
கரைத்து விட முடியும்...

கசங்கிய காகிதத்தில் நிரப்பி
குப்பையிலும் எரிந்துவிட முடியும்...

திங்கள், 1 செப்டம்பர், 2014

சுயநல வார்த்தைகள்

அகமகிழ்ந்து
நெகிழ்ச்சியிலிருக்கும் பொழுதில்
நிறைந்திருக்கும்
மதுக் கோப்பை
கோடை குற்றால அருவிபோல்
நெஞ்சப்பாறையில்
ஒழுகும் வேளையில்
மேலெழும்பும் சிலிர்ப்பான
சிரிப்பை தகர்த்தெழும்
வார்த்தைகள்
யாழ்பாணத்தில் புள்ளிவைத்து
நீளும் கோட்டில்
சரிந்துவிழும் அரசியல்
தலைகளுக்குப் பின்
கனடாவிற்கு நீண்டு ஆசுவாசமடைந்து
புலம் திரும்புகையில்
தான் தானாக மட்டுமே
இருப்பதை யெண்ணி
கதறியழுகிறது

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு

ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

                              https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRqSyEuCIdk_pDU55guK_dGnbK39l4WDpJVSoBMDwW_7N_NgL_RFhhugYDjgDqbOUw1FaoLJDiut1s4ADLFo_-tbRa6HWwMOIcS6jDHlLA2jiyzHNkanHceYklXPVr1IapC4WLKsg6SSHG/s1600/Untitled-3+copy.jpg

கவிதையாக எழுதி வடிக்க
ஓவியமுன்னை உற்றுகையில்
எழுதுகோலின் மைவழி இறங்க மறுத்த
வார்த்தைகள் உன் விரலிடுக்கில்
சிக்கிக்கொண்டு சந்தத்தோடு
ஏளனம் செய்ய இசைகிறாய்..

ஓரப் புன்னகையில் விழும்
கதுப்புக் குழியில் தேங்கிப்போனவனை
மலர்விழிப் பார்வையில்
மதியிழக்கச் செய்து
மல்லி மலரை முழுமதியுன்
கருங்குழல் சூட
கள்ள விழியால் கபடம் செய்கிறாய்..

விழியில் வீழ்ந்து தூரம்
நிற்க கடவாமல்
நெருங்க விழைந்தவனை
பூக்கள் நிறைந்த கூடையோடு
வாசல்புறம் அடிவைத்து
பாத மணிகளினோசையில்
பரிதவிக்கச் செய்கிறாய்..

இனிநான் விலகி நிற்க
  மறுக்குமுன் புன்முறுவலை..
அழைக்கும் விழிகளை ஏற்று
      மெய்யான ரகசியம் இனி என் விழிகளுக்கு...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விரும்பிய தலைப்பிற்கான கவிதை:

செயலற்ற வார்த்தைக் கூட்டம்

நீண்ட பட்டைச்சாலையில்
பாதம் பதிக்கும் முதல் சிறுபொழுதிலும்
சாலையின் உறவை முறிக்கும்
நான்காம் சிறுபொழுதிலுமென
சாலையோரம் மலங் கழிப்பவனாகவும்
பச்சை போத்தலில் நீராகாரம் உறிஞ்சுபவனாகவும்
ஊர்வாரியில் கிடக்கும்
ஆகாரப் பொட்டலம் திரட்டுபவனாகவும்
அலைந்து திரியும்
நெகிழிப் பையை கால் சட்டையாக அணிந்தவனுக்கு
கந்தலான மேல்சட்டை மட்டும்
எவரோ கொடுத்திருக்க வேண்டும்
இல்லை அவனே குப்பையிலிருந்து
உருவியிருக்க வேண்டும்
கடந்த ஒரு ஆண்டாய்
இந்த ஐந்து பர்லாங்கு தொலைவில்
திரிபவன்; சில நேரங்களில் மட்டும்
குன்றின் திசை நோக்கி
வேற்று மொழியில் கதைக்கிறான்
அந்த குமரனுக்கு இது புரிந்திருக்கவில்லை போல
இன்றும் அதே நெகிழிப்பையும்
போத்தலுமாக திரிபவனுக்கு
இந்த வார்த்தைக் கூட்டத்தாலும் 
எந்த பயனுமிருக்கப் போவதில்லை....

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தரராமசாமி

        

          ஒரு புளியமரத்தின் கதை எனும் நாவல் சுந்தரராமசாமி அவர்களால் எழுதப்பட்டது,நாவல் உலகில் இந்திய அளவில் நேரடியாக கீப்று மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் நூல்.

           புளியமரத்தை மையப்படுத்தி அதன் சுற்றில் ஏற்படும் வளர்ச்சியின் மாற்றங்களையும்   நடைபெரும் நிகழ்வுகளையும் அழகுடன் கூறிச்செல்கிறது,
நாவலில் வரும் தாமோதர ஆசானை அறிவுடன் ரசிக்க முடிந்தது  அவர் போன்ற கதை சொல்லியொருவர் நமக்கு கிடைக்கவில்லை எனும் ஆதங்கம் அவர் கதை சொல்லும் பொழுதிலெல்லாம் வந்து சென்றதை தவிர்க்க இயலவில்லை. அதேபோல் அவருக்கு பிரியமான யாழ்பாணம் சுருட்டு வெற்றிலை வாங்கிக்கொண்டு கதை கேட்க வரும் சிறுவர்களை வாசிக்கையில், எனது தாத்தாவுக்கு பீடியும் அஞ்ஞால் அலுப்பு மருந்தும் வாங்கிச்செல்வது நினைவில் வந்து போவதையும் தவிர்க்க முடியவில்லை.

           குளத்தின் மையத்தில் சிறு தீவுபோல காட்சிதரும் புளியமரம்
நிலத்திற்கு இடம்பெயர்ந்ததை ஆசான் கூறும் மகாராசாக் கதை மூலம் தெரிந்து கொள்ளமுடிந்தது. செல்லம்மாள் மரக்கிளையில் தூக்கிலிட்டுக் கொண்டது,மகாராசா கால்பந்து பார்த்து கண்ணீர் விட்ட கதையென
ஆசானின் ஒவ்வொரு கதையின் மூலம் புளியமரத்தின் மற்றும் புளிக்குளம் ஊரின் வரலாறையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

           நகரமயமாக்கலின் ஆரம்பமாக காத்தாடிமரங்கள் அளிக்கப்பட்டு பூங்கா உருவானதும், புளியமரத்தை சுற்றி கடைகள் கிளை விரித்ததும்,
சாதி மத வேறுபாட்டிலும், துரோகங்களிலும் அரசியல் காழ்புணர்ச்சியிலும் மௌனசாட்சியாய் நிற்கும் புளியமரத்தை மையங்கொண்டு மனிதர்கள் பிளவு படுவதை சுட்டிக்காட்டி இந்த நாவல் அற்புத இலக்கியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

           தமிழ் இலக்கியத்தின் மைல்கல் என கூறப்படும் இந்நாவல் வாசிப்பவர் மனத்தில் நிச்சயம் சிறுதாக்கத்தை ஏற்படுத்திவிடும்....

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

சேர்க்கையின் கவிதை

சற்று நீண்ட
பச்சைவண்ணச் இலைபெற்ற
அந்தச் செடியில்
மலர்ந்திருக்கும்
மஞ்சள் மலரின் பெயர்
எனக்குத் தெரிய வாய்ப்பில்லை
மாலை நேரத்தை
மேற்குதிசை மடிந்து சொல்லும்
அதன் சூல்களில்
சேர்க்கை செய்யும்
வௌ்ளை வண்ணத்துப்பூச்சொன்று
நொடிக்கொரு கவிதையொன்றை
பாடி படபடத்தது
தன் வௌ்ளைவண்ணச் சிறகை....

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

கேலிப் புன்னகை

யார் எறிந்திருப்பார்கள்
எறிந்தபின் இறந்ததா
இறந்தபின் எறியப்பட்டதா
கேள்விகளோடு ..
குப்பையில் வீழ்ந்து கிடந்த
நாய்க்குட்டியை
அள்ளிச் சாக்குப்பையில்
நிரைப்பவனின்
உதட்டோரப் புன்னகை
கேள்வியை மௌனித்து
கேலி செய்தது எறிந்தவனை...

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

மேகத்திரள்கள் வந்திருக்கின்றன

நண்பா
வானூர்தி நிலையத்தின்
கூரையிலிருந்து எட்டிப்பார்
மாலைச்சூரியன் கைபிடித்து
நாம் ரசித்து சிலாகிக்கும்
மேகத்திரள்கள் வந்திருக்கின்றன
உன்னை வழியனுப்ப
ஊர்தி உயரம் தொட்டதும்
கட்டளைக்குப் பின்
சாளரம் திறந்து
கண்களை மிதக்கவிட்டுப்பார்
உன் உறவுகளும் நட்புகளும்
வெண்திரளுருவமேற்று
பயணித்திருப்போம்
இனி வேறுபடும்
முழுநிலவு நாட்களின்
இரவுகள் நமது நினைவுகளை
சுமந்து திரியட்டும்

புதன், 6 ஆகஸ்ட், 2014

புதுப்பித்திருந்த பாதை

ஆலமரத்தின் இளம் விழுதுகளும்
சுற்றுச்சுவரின் சிகப்பு பூச்சும்
நெடுநாட்களுக்குப்பின்
தேங்கிக்கிடக்கும் மழை நீரும்
ஈன்றெடுத்த குட்டிகளோடு
நடை போகும் நாயும்
வேகம் தவிர்த்த என் நடையும்
பழைய பாதைகளை
இன்று புதுப்பித்திருந்தன...

சனி, 2 ஆகஸ்ட், 2014

இரு நிமிடமாவது

பயணிகள் நிழற்க்குடையில்
ஒதுங்கி யிருக்கும் போது
தன் கைத்தடியை
தொடையில் சாத்திவிட்டு
சிலரிடம்
கைகளை கூப்பி ஏதோ
கேட்டுக் கொண்டிருந்தார்
எனக்கு அவரது
மகனையோ மகளையோ
திட்டவேண்டும் போலிருந்தது
இருந்தும்
நான் என்ன நினைக்கிறேனென
அலைபேசியின் கண்ணாடியை
பார்த்தபோது
என்னை இரு நிமிடமாவது
அவரது மகனாக
இருக்க கூறி மறைந்தார்

வியாழன், 31 ஜூலை, 2014

மாறாத செய்திகளாய்

இன்றைய பொழுதுகளில்
செய்தித் தாள்கள் எளிதாக
புரட்டிக் கடந்து போகும் அளவில்
இல்லை..
மாறாத செய்திகளாய்
வன்புணர்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கும்
நாட்கள்
நெஞ்சில் விதைத்துப் போகும்
வலியும் வேதனையும்
அந்தப் பக்கங்களிலேயே
தேங்கிப் போய்விடுகின்றன...

இங்கு
மனித வாழ்வியல் அறம் மறந்து
குற்றவுணர்ச்சி அற்று
இக்காம மிருகங்கள்
வாழ முடிந்த நரகத்திலும்
கல்வி கற்ற மூடர்கள் மத்தியிலும்
வாடிய மொட்டுக்களுக்கும்
அதன் செடிகளுக்கும்
பதில்கள் என்றும்
கேள்விக்குறி போல் நிற்கும்
நம்
அறியாமையும் இயலாமையும் தான்..

செவ்வாய், 29 ஜூலை, 2014

கண்ணீர் மலர்கள்

இறந்தவனின்
கண்ணீர்த் துளிகளாய்
சிகப்பும் மஞ்சளும்
பச்சை யிலையுமாய்
சிதறிக் கிடந்த
மலர்கள்
ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தன
மிதித்துக் கடந்துபோன
நான்குகால் வாகனத்தின்
திசை நோக்கி .......

திங்கள், 28 ஜூலை, 2014

கிழியாத இலைச் சருகு

பிறந்த காலையில்
நகரும் பேரூந்து இருக்கையில்
அமர்ந்து நகருகையில்
காற்றில் தவழ்ந்து வந்து
மடியில் அமர்ந்து
தழுவி பின்
பாதணியில் சறுக்கி விழும்
கிழியாத
இலைச் சருகுக்கு
தழுவி விட
சக உறவுமில்லை
தான் தழுவிய மனிதமுமில்லை...

வெள்ளி, 25 ஜூலை, 2014

புலன்களை ஒட்டிப்பார்க்கிறேன்

ஒவ்வொரு
கதையும் கவிதையும்
வாசிக்கப்படும் பொழுதுகளில்
அதனதன் எழுத்துக்களுக்கு
ஏற்ற வடிவங் கொணர்ந்து
வேறு வேறு
உருவங்கள் வந்து
உருண்டோடும் மனதில்..
கடந்த
சில வாரங்களில்
வந்து போகும்
உருவத்தில் ஏனோ
காதும் கண்ணும்
மூக்கும் உதடும்
தொலைந்து போயிருந்ததால்..
சமயங்களில் புத்தகத்தின்
முகத்தை மூடிவிட்டு
உருவத்திற்கு அதன் புலன்களை
ஒட்டிப் பார்க்கும்
விருப்பில்
கரைந்து போகிறேன்...

செவ்வாய், 15 ஜூலை, 2014

தென்றலும் அன்னியமாகும்....

பெரும்பாலும் பாலைவனப் 
பயணமாகிப்போகும் ரயில் பயணத்திலிருந்து 
எடுத்து வைத்த முதல் அடியிலேயே
உடல் சிலிர்க்க செய்யும் சாரலையும் 
உள்ளிழுத்து நுரையீரல் தழுவும் 
தென்றலையும் நுகர்ந்து கொண்டே 
தென் பொதிகை மலை மீது 
பெருமையோடு கண்களை பரப்பினேன்...
அடுத்த இரண்டு நாளில் 
இந்த அனிச்சை செயல்கள் 
அன்னியமாகும் போது
கைவிரலால் நுரையீரலை 
சிறை பிடித்துக் கொண்டிருப்பேன் 
சிங்கார நகரத்திலே யெனும்
பின் மன ஓட்டங்களோடு....

ஞாயிறு, 13 ஜூலை, 2014

மறுமொழி

புலர்ந்த காலை பொழுதில்
புரியாத கால்களின் ஓட்டங்களுக்கிடையே
மூதாட்டி இவள்
காத்திருக்கிறாள் பேரூந்திற்கு..
மேகங்கள் பகலவனை மறைத்து
நிழல் பரப்பியிருந்த போது
அருகில்
அவளின் முதிர்ந்த கணவன்
கையிலிருந்த பூ மாலை
இவர்கள்
இழவு வீடு போகிறார்கள்
என்று அழுது கொண்டிருந்தது....
முழங்கால் சில்லு வலிக்க நிற்பவள்
கண்களை இறுக்கி
கைகளை கூப்பிய போது
மறுமொழியாய்
பகலவன் வெளிச்ச முகம்
பரப்பி மறைந்தான்....
ஈமக்கடனுக்கு போய்சேர
பேரூந்து கிடைக்கவேண்டுமென
இவள் வேண்டியிருக்க கூடும்...

புதன், 9 ஜூலை, 2014

இந்த இதழ்கள் இடம்பெயராதா.....

வாரம் தவறாது
வாசல் கொண்டுவரும் வார இதழின்
முகப்பிலும்
இன்னபிற பக்கங்களிலும்
முழுக் காலும்
இடையு முரித்த பெண்கள்
இடை குறுக்கி
கிறக்கும் கண்களும்
முறுவல் புன்னகையுமாய்
பெரும்பாலும் திரைப்பட மாதவிகள்தான்..

வாசிக்கும் வாசகனின்
கண்களிலும் மனத்திலும்
இச்சைகளை
கிளர்ந்தெளச் செய்கிறார்கள்....

பின்னொருநாள் அதே இதழின்
வேறு பதிப்பின்
பக்கங்களை புரட்டி
பாதி கடந்திருந்த போது..

சாகசபட்சிகளால் எழுதப்பட்ட
பெண்ணியக் கவிதையும்
கட்டுரையும்
ஏகத்துக்கும் எடுத்துரைக்கும்
இதோபதேசம்
அதே வாசகனின் மனத்தில்
என்ன சிந்தையை
வித்திட முடியும்....

ஒன்றிலிருந்து மற்றொன்றை
புறக்கணித்து தான்
வாசிக்கவோ நேர்படவோ
வேண்டும் என்றால்
இந்த கவிதையை
நீங்கள் நிராகரித்துவிடுங்கள்...
ஆம் !
அதே நேரம்
இந்த வார இதழ்கள்
என் போன்றோர் களால்
நிராகரிக்கப் பட்டிருக்கும்....

திங்கள், 7 ஜூலை, 2014

பிசுபிசுப்பு..


நகர்புறச் சுவர்களில் 
ஒட்டிவைத்து மறைக்கப்பட்ட 
சில முகங்கள் 
என்றாவது ஒருநாள் 
ஒட்டப்பட்ட புதியமுகங்களின் 
ஊடே 
எட்டிப்பார்க்கும் போது
வெளிப்படும் 
வினாக்களும் விடயங்களும்
குழந்தை சூப்பிய விரலின் 
பிசுபிசுப்பு போல் 
ஒட்டிக் கொள்கின்றன..

ஞாயிறு, 6 ஜூலை, 2014

தீக்குளிப்பு..




கடந்துபோகும் சாலையோரம் 
யாருக்காகவோ
எரிந்து கொண்டிருந்ததில் இருந்து 
வரும் 
கரும்புகையில் முகம் பார்க்கும் 
ஆவலெழுந்து விரைந்தபோது 
அணைந்திருந்தது 
எதற்காகவோ தீக்குளித்த 
கற்பூரம்..

ஞாயிறு, 29 ஜூன், 2014

இன்று ஒரு பெருத்த மழைநாள்.....



இன்று ஒரு பெருத்த மழைநாள்.....
விழித்துக் கொண்டிருந்த ஏரியை
விலைக்கு வாங்கி
அடிவானம் தோண்டி
வானம் பார்த்த கட்டிடம்
கால்கள் உடைந்து
கண நேரத்தில்
கரைந்து விழுந்தது....
ஏரியின் கண்ணீரும் பெருங்கோபமும்
இடியும் மின்னலுமென
பெய்த மழையில்
கட்டடம் மூடிய தன்
கண்களின் நீரை கசியவிட்டு
உள்ளிருப்போரை அழவிட்டது...
கரையிலிருக்கும் கடமை மறந்த
கட்சிக் காரர்களும்
கல்லா நிறைக்கும் கயவனும்
துணை போகும் அதிகாரியும்
அழப்போவதில்லை
இனி எப்போதும்...
ஆயிரம் கோடிகள் பெற்று கொடுத்த
அனுமதிப்பத்திரத்திற்கு இருக்கும்
குற்றவுணர்ச்சி இவர்களுக்கு
இருக்கப் போவதில்லை...
மக்கள் வரிப்பணத்தில்
அரசு கொடுக்கும்
இரண்டு லட்சத்தில்
இவர்கள் கரைந்து போய்விடுவார்கள்...
அழும் ஏரிகளுக்கும்
அழும் ஏழைகளுக்கும்
என்றும் பெருத்த மழைதான்
இடியுமின்னலும் சேர்ந்த.......

வியாழன், 26 ஜூன், 2014

அசரீரியின் குரல் ஒன்று...

எங்கோ ஒருநாள்...
அமர்ந்திருக்கும் அலுவலகத்திலோ
ஊர்ந்து போகும் நகரப்பேரூந்திலோ
அசதியில் கண்ணயரும்போது
அசரீரியின் குரல் ஒன்று
கேட்டு ம்ம் என்ற முனங்கலோடு
எழுந்து செவி திருகிய போதும்
கேட்கும் குரல் 
அப்பா வுடையதோ
அம்மா வுடையதோ
அன்புக்குரிய வருடையதோ
ஆகிப்போனால்
அகம் மகிழ்ந்து போகிறது..
எழுதி முடித்து
அயர்ந்த போது
அம்மாவின் குரல் கேட்கிறது...

புதன், 25 ஜூன், 2014

மூத்திர அரசியல்...

சுண்ணாம்புக் கலவையில்
வெள்ளைப் பூச்சு கண்டிருக்கும்
புதுச் சுவரில்
மூத்திரத்தால் பெயர் எழுதியவனுக்கு
வயக்காட்டில் அப்பன்
வரப்பு வெட்டியது
ஞாபகம் வந்திருக்க வேண்டும்..
நண்பர்களை அழைத்து
சுவரின் அருகாமையில்
பசுமை படர்த்தியிருக்கும் புல்லில்
அதே மூத்திரத்தால்
வரப்பு வைத்தான்...
மூவரில் எவர் மூத்திரத்திற்கு
ஆற்றல் அதிகமென சோதித்து
பார்க்கும் நேரம்
இந்த சிறுவனுக்கு
எந்த அரசியலும் தெரிந்திருக்கவில்லை.....

செவ்வாய், 24 ஜூன், 2014

கனவு எனப்படுவது...

இறந்து போன நாட்களும்
இன்றைய பொழுதுகளும்
நாளைய பொழுதுகளும்
சில நண்பர்களும்
சில பெண்களும்
எவ்வித முரணுமில்லாமல்
ஒரு கதைக்கான கோர்வையுடன்
கடந்து செல்வதுதான்
கனவு எனப்படுவது...

வெள்ளி, 20 ஜூன், 2014

நிலவில் நீர்..

காணாமல் போன
கதிரவனை நிலவொளியில்
தேடிக் கொண்டிருந்தன
நட்சத்திரங்கள்...
வெண்மேகத் திரள்கள்
உள்வாங்கிய நிலவொளியோடு
வானிலிருந்து பூமிக்கு
தொடர் படிக்கட்டுகளாக மாறியிருந்தன
தண்ணீர் போத்தலோடு
நடையிலிருந்தவன்
படியேறி நீரெடுக்க போனான்
நிலவுக்கு...

வியாழன், 19 ஜூன், 2014

நீச்சல்போடும் நினைவுகள்..

நினைவுகள்
நீச்சல் போடும் நித்திரையில்
கண்கள் பொங்க
பார்த்து ரசித்த முழு நிலவை
மீண்டும் பார்ப்பது போலொரு பரவசம்...

சிரித்திருக்கும் நட்சத்திரங்கள்
நிலவைப் பிரிந்து
எனைத் தொற்றிக் கொண்டதுபோன்ற
பெரு நிகழ்வு..

விந்தை நிகழ்ந்த போதும்
சிந்தை கலங்காமல்
ஒவ்வொன்றாகத் தொட்டுப்பார்த்து
புது உணர்சிகளை
புரிந்து கொண்ட வேளையது..

இருளின் ஒளியை 
இருளில்தானே ரசித்து
இளைப்பாற முடியுமென
கண்திறவாது
களிப்பிலிருந்தேன்...

சனி, 14 ஜூன், 2014

அறிமுகத்தில் அவள்களும் அவன்களும்

மெக்காலே கல்வி முறையில் 
அறிவியல் என்றும் வரலாறு என்றும் 
எழுதப்பட்ட புனைவுகளின் 
தொகுப்புகளைக் கடந்து 
எனது வாசிப்புக்கு 
வாழ்வியல் புனைக்கதைகளையும் 
உண்மைக் கதைகளையும் 
அறிமுகப்படுத்திய அவள்களும்...

எங்களின் முதல் ரயில் பயணத்தில் 
பொன்னியின் செல்வன் வழி 
கல்கியை புதியதாகவும் 
விகடனை வேறு கோணத்திலும் 
வரும் நாட்களில் சுஜாதாவையும் 
சிறு குறு நாவல்களையும் 
அறிமுகப்படுத்தி விட்டு 
இன்றும் இணையத்தின் வாயில்களை 
பகிர்ந்து கொள்ளும் அவனும்...

இந்திய ஆங்கில நாவல்களையும்
கவிதைகளையும் கதைகளையும்
என் பசியாற கொடுத்த 
இவனுமென.....
அவள்களும், இவன்களும்
என்றென்றும் நிறைந்து கிடக்கின்றனர் 
கண்மூடிக் கனவிலிருக்கும்
பொழுதுகளில்........

புதன், 11 ஜூன், 2014

புரட்டாசித் திங்கள்... ---- சிறுகதை

              
                     புரட்டாசி மாதத்தின் முதல் திங்கள் கிழமையின் காலை நேரம், சோம்பல் முறித்து கண் விழித்த சிவராவின் மூளையை ஏதோ நினைவுகள் குடைந்து வேறு சிந்தனைக்குள் புதைத்தது. சிவரா தான் பிறந்து வளர்ந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு வேலை செய்ய பயணப்பட்டு ஏழு ஆண்டுகளை கடந்து விட்டது.
                    இப்போது இவன் விழித்ததும் நினைவுகள் இவனை அழைத்துச் சென்றதும் அதே கிராமத்துக்குத் தான், இதே திங்களுடன் சேர்த்து மூன்று நாட்கள் நடைபெறும் ஊர்க்கோவில் திருவிழா இந்த வருடமும் நடைபெறாமல் போனதன் ஏக்கமே அவன் நினைவுகளுக்கு காரணம்.
இந்த மூன்று தினங்களும் உறவுகளுடனும், நண்பர்களுடனும் இவன் கொண்டாடி மகிழ்ந்த அந்த நாட்கள் திரும்பவும் வராதா என்ற ஏக்கம் வெகுவாக பாதித்திருந்தது.மனது திருவிழா நாளில் உழன்று போனதால், விரித்த பாயை சுருட்ட மனமில்லாமல் நினைவுகளின் பாதையிலேயே நடை போட்டான்.
                   அந்தி சாயும் அழகான திங்கள் மாலை, கதிரவனின் சிகப்புக் கதிர்கள் வீட்டின் ஒட்டுக் கண்ணாடி வழியே சிறிது வெளிச்சத்தை தூவியிருந்தது, வெளிச்சத்தில் உலாவிக்கொண்டிருக்கும் தூசிகளின் பாதைகளை தன் விரலால் விலக்கி விட்டுக் கொண்டே அம்மாவிடம் ஐந்து ரூபாய்க்காக அடம் பிடித்துக் கொண்டிருந்தான்.
                   "ரூவால்லாம் ராத்திரி ஒங்கப்பா வந்து தருவாரு, பேசாம காப்பிய குடிச்சிட்டு கிட" ன்னு அம்மா அதட்டி விட்டு சமையல் வேலையை தொடர்ந்தாள். கோபம் வந்தால் எப்பவும் போல பேசாம வீட்ட விட்டு வெளிநடப்பு செஞ்சான் சிவரா.
                    வீட்டுக்கு வெளியில வரவும் " ஏ என்ன சிவரா பள்ளிகூடத்துக்கு லீவுட்டுட்டான்ங்க போல இனிம மூணு நாளைக்கு உன்னைய கையில புடிக்க முடியதடே" மாரி அண்ணன் சொன்னதுக்கும் பதில் ஏதும் இல்லாமலே வீட்டைக் கடந்து போனான்.
                    திருவிழாவுக்கு வரும் விருந்தினரை கவனிக்க சமையலுக்கான மளிகை சாமான் வாங்க முருகண்ணன் கடையில நல்ல கூட்டம் இருந்தது. கடைக்கு எதிர்பக்கமா இருக்க நல்லம்ம பாட்டி வீட்டு வாசல்ல கீழயிருந்து மேலனிக்கி படர்ந்து நிக்கிற கொடி மரத்தில் விழும் சூரிய ஒளியை வெறுமையோட பார்த்தபடியே நகர்ந்தான்.
                   இவனது குடும்பம் வசிக்கும் தெருவின் முனையில் இருக்கும் புளியமரத் தோப்பில், திருவிழாவிற்காக வந்திருந்த கொடராட்டினத்தில் சிறுவர்கள் உற்சாகக் களிப்பில் வட்டமடித்தனர், அருகிலேயே சிறுவர்களுக்கு அவர்கள் பழகிய இடங்களையே வேறு கோணத்தில் காட்டும் உயரமான தொட்டில் ராட்டினம் அப்போதுதான் ஆட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்ததன் இடையே உரக்க ஒலிக்கும் அம்மன் பாடல்கள் இவனது செவிகளைத் திருகின.
                    வாகனங்கள் இறைந்து கிடக்கும் அம்மன் கோவில் மைதானம் இன்று பந்தலிட்டு வாழைமரத் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. புழுதியையும் வெக்கையையும் விரட்ட மண் தரையில் தண்ணீர் தெளித்து மைதானம் இரவுத் திருவிழாவுக்கு தயார் செய்யப் பட்டிருந்தது.
சாலையோரம் தேநீர் விடுதிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கான மிட்டாய் கடைகளாக மாறியிருந்தன.
                   வழக்கமான இடங்களின் அடையாளங்கள் சிறிது மாற்றம் கண்டதாலோ என்னவோ, இவனை அறியாமல் கடந்த வருடத் திருவிழா நாட்கள் நினைவில் வந்து போனது.
                   தினசரி நாட்களில் இவனும் நண்பர்களும் சேர்ந்து பழகிக் கிடக்கும் இடம் வந்தது, நண்பன் சுடலை இவனுக்கு முன்பே வந்து அமர்ந்திருந்தான், நண்பர்கள் ஏழு பேரும் வந்தவுடன் கோவில் கொடை பற்றியும் அதைக் கொண்டாடுவதையும் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தனர்.
இரவு திருவிழா நேரம் நெருங்கி வந்தபோது சோறு சாப்பிட்டு விட்டு 10 மணிக்கெல்லாம் திரும்பவும் கூடுவதாக உத்தேசம்.
                 முதல் நாள் இரவில் பொதுவாக மக்கள் கூட்டம் இரண்டாம் நாளை விட குறைவாக இருக்கும். இதனால் கரகாட்டமும் வெகு விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடும்.
                கோவில் திருவிழா என்றால் செவ்வாய் கிழமை காலை உணவு இட்லியாகத்தான் இருக்கும். ஏனைய நாள் இரவு உணவுகளை பார்க்கும் போது திருவிழா நாளில் பச்சை வாழை இலையில் பரிமாறப்படும் உணவில் கூட்டுப் பொறியல், அப்பளம், சாம்பார், ரசம் என்று ஒரே நேரத்தில் நாவிற்கு உருசி கொடுக்கும்.
                இரண்டாம் நாள் சாயுங்காலத்தில் அம்மன் சிலை செவ்வந்திப்பூகள், எலுமிச்சம்பழம் மாலையில் அலங்கரிக்கப்பட்டு தங்கப்பட்டுகள் அடுக்கப்பட்ட சப்பரத்தில் ஊர் வீதியில் பவனி வரும். சப்பர பவனிக்கு முன்னர் ஊர் மக்கள் வீட்டின் முன் மஞ்சள் நீர் தெளித்து, வண்ணக் கோலங்கள் வரைந்து ஒரு தெய்வீகத்தை அழைத்து வந்திருப்பார்கள்.
              ஆடி அசைந்து வரும் சப்பரம் சிவராவின் வீட்டின் முன் வந்ததும், அவனது அப்பாவும் அம்மாவும் சேர்ந்து கையிலிருக்கும் தாம்பூலத்தை பூசை செய்பவரிடம் கொடுப்பார்கள். தாம்பூலத்தில் கண் திறக்காத தேங்காய், வாழை பழம், வெத்தலை பாக்கு, பத்தி, சூடம் என பூசைக்குரிய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.
              சப்பரத்தை நேர்த்தியோடு நகர்த்திச் செல்ல முன்னாலும் பின்னாலும் சிறாரும் பெரியோரும் மூங்கில் கம்பின் இணைப்பு கொண்டு இழுத்துச் செல்வார்கள்.
             நேற்று கிடைக்காத ஐந்து ரூபாய்க்கு வருந்தியவனுக்கு. இன்று இருபது ரூபாய் அப்பா கொடுத்ததில் ஏகத்துக்கும் மகிழ்ந்து போயிருந்தான்.
இரண்டாம் நாள் இரவு, மைதானம் காணாமல் போய்விட்டதோ என்று கூட தோன்றும் புதிதாய் பார்ப்போருக்கு, மக்கள் கூட்டம் வெகுவாய் பரவியிருந்தது.
             கரகாட்டகாரியின் மீதுள்ள சபலம் பெருசுகளை திறந்த பொக்கை வாயும்,புதிய வேட்டி சகிதம்  அசைய விடாமல் வைத்திருக்கும். அதே நேரம் இளசுகளில் பெண்களும் ஆண்களும் மைதானத்தின் ஓரமுள்ள கிணற்றின் இருபுறமும் பெண்கள் அமர்ந்தும் ஆண்கள் நின்று கொண்டும் பலூனை பறக்க விட்டு, பார்வைக் காதலில் வழிவது கூச்சமின்றி அரங்கேறும். அது எப்படியோ எந்த திட்டமிடலுமில்லாமல் இந்த நிகழ்வுகள் அதன் போக்கில் நிகழ்ந்து விடுகின்றன.
              பெருவாரியான இளசுகள் கரகாட்டத்தில் செவி சாய்த்துக் கொண்டே மனதை தொலைக்க மனம் தேடிக்கொண்டே நகர்ந்து கொண்டு இருப்பார்கள்.
"ஏல சுடலை உன் ஆளப் பாத்தியாடே" சிவரா கேட்கும் போது,
சுடலை சொல்வான் " அவள அப்பன்காரன் வீட்டுக்குள்ள பூட்டி வச்சிருக்காம்ல"
"சரிடே விடு நாளைக்கு மதியக் கொடைக்கு வருவால்லா அப்போ பாத்துக்கலாம்" இது சிவரா.

               பின் நள்ளிரவில் பெண்கள் நேர்த்திக்கடனுக்காக செய்த மாவிளக்கு, முளைப்பாரியை வீட்டிலிருந்து மேளதாளம், வாணவேடிக்கைகளுடன் கோவிலுக்கு அழைத்து வருவார்கள்.      இந்த இருள் சூழ் இரவில் விளக்கின் மஞ்சள் ஒளியில் மனம் விரும்பும் அவளை பார்க்கும் போது சிவரா நிற்கும் இடத்தில தேங்கித்தான் போனான்.
               புதன் கிழமை மூன்றாம் நாள், வீட்டில் ஆட்டுக் கறி சமைத்து புசித்த பின் மதிய வேளை கடைசி நாள் திருவிழா நடைபெறும். பகல் திருவிழா என்பதனால் அதிகமான பொருள் விற்பன்னர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பார்கள். ஒருபுறம் கரகாட்டம் உச்சத்தில் இருக்கும் அதே நேரம், அம்மன் சன்னதி முன் முளைப்பாரி எடுத்த பெண்கள் குலவை சத்தத்துடன் கும்மிப்பாட்டு படித்து, மேளதாளம் மற்றும் இளசுகளின் ஆர்ப்பாட்டத்தோடு ஊரின் பெரிய குளத்திற்கு எடுத்துச் சென்று முளைப்பாரி கழுவும் நேர்த்திக்கடன் நிவர்த்தி செய்யப்படும். பெண்கள் சூடியிருக்கும் மல்லிகை மலர்களோடு முளைப்பாரி பூவையும் சூடியிருப்பது அவர்களை மேலும் அழகுறக் காட்டும்.
                திருவிழா முடிந்து மக்கள் வீடு திரும்பும் நேரம் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சின்ன கலவரம் இந்த வருடம் எதிர் பார்க்கா விதம் பெரிதாகிப்போகிறது.    இன்றைய இந்தக் கலவரத்தால் வரும் வருடங்களில் திருவிழா நடைபெறாமல் போய்விடும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
                நினைவுகளால் கலங்கிப்போன இந்த திங்களில் படுக்கையிலிருந்து எழ மனமின்றி தயக்கத்துடன் பணிக்குச் செல்ல தயாரான சிவரா, வெறுமையுடன் தனது இருசக்கர வாகனத்தை மிதித்து வசிக்கும் வீட்டிலிருந்து வெளியேறினான். இமை திறந்த கண்களில் ஏதோ நம்பிக்கை மட்டும் கலைந்து போகவில்லை இவனுக்கு..

ஞாயிறு, 8 ஜூன், 2014

நண்பன் ராமசாமிக்கும் அவர் மனையாளுக்கும் திருமண வாழ்த்துக்கள்...

நண்பன் ராமசாமியின் திருமணத்திற்கு நண்பர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்...












நட்பு பூக்கொண்டு நன்வாழ்த்து
மொழிய வந்தோம்
யாழின் இசையெல்லாம்
இசைந்து வரும் இன்னாளில்...

வானின் மேகங்களை குளிர்த்து
மழையாக்கும் பொதிகைமலைத் தென்றலது
மகிழ்வு கொடுக்கும் வாழ்கைக்கு
விண்மீன்கள் எல்லாம்
விழித்திருக்கும்
வாழ்வின் கனவுகளை
வெளிச்சமாக்கும் காரணமறிந்து...

வாழ்வின் யதார்த்தம் உணர்ந்து
இன்பங்கள் செழித்து
மேகத்துளிகளும் இளவெயிலும்
ஒருசேர நிகழ்த்தும்
வானவில் வருணம் போல்
வாழ்வை
வருணங்கள் கொண்டு
அள்ளியணைத்துக் கொள்ளுங்கள்..
---------------------------------------------------------------------

என்றென்றும் வாழ்த்துக்களுடன்.....

நலம் விரும்பும் நண்பர்கள்

வியாழன், 5 ஜூன், 2014

புத்தகமும் தொலைக்காட்சியும்...

நெடு நாட்களுக்குப் பின்
மத்திய அறையில்
அமர்ந்து
புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன்..
வரும் சிரிப்பை
இறந்து போன
தொலைக்காட்சியின் மீது
சிதறவிட்டு விட்டு.....

எடுத்து வைத்து
படித்த புத்தகத்தோடு நானும்
கைபேசியுடன் அவனும்...

என்னத்த இருக்கு
இந்த புத்தகத்துலயும்
கைபேசியிலுமென
திட்டத் தொடங்கினாள்
என் அம்மா....

சலங்கை யோசை..!

கால் சலங்கையில்
கவி எழுதும்
கன்னியே..
உன் எண்ணம்
என்னவோ!!
எண்ணமாக நானிருந்தால்
திண்ணமான
என் னுதட்டில்
சன்னமாக
முத்தமிட்டு செல்லாயோ..!

ஞாயிறு, 1 ஜூன், 2014

பாலைவனமாகும் உலகு..

காடுகளும் கழனிகளும்
அற்றுப் போயிருந்தன..
காற்றும் வீச மறுத்தது
மரங்கள் மரித்துப் போனதால்...

வயல் வெளிக்கு
ஒரு மணம்...

வாழை மரத் தோட்டத்திற்கு
ஒரு மணம்..

மலைகளுக்கு
ஒரு மணம்..

மழை சிந்திய மண்ணுக்கு
ஒரு மணம்..

மணங்களெல்லாம்
மரித்துப் போய் விட்டனவோ..

நடந்து போனால்
நாசி துளைக்கும்
கவிச்சி யில்லை ..

மிதிவண்டி மிதிக்கையில்
வேகம் கொடுக்கும்
நீண்ட பட்டைச் சாலைகளு மில்லை..

சூரியனை எதிரொளிக்கும்
சுடுமணல் மட்டு மிங்கே..

வான் நோக்கினால்
வெண்மேக மில்லை..
ஈசான மூலையில்
கரு மேகமுமில்லை...

சிந்தையில் நினைவுக ளிருக்க..
பார்வையில் இரண்டு
பகல் கொண்ட வெளிச்சம் மட்டும்..
இரவை கூட
இரவல் வாங்க வேண்டுமோ..!

வெள்ளி, 30 மே, 2014

பன்னாட்டு அலுவல் கலை இதுவோ..?

நடுநிசி நாய்களும் 
நன்றியுணர்ந்து அசந்திருக்கும் வேளை
காளைகளும் கன்னிகளும் 
களித்திருக்கும் நட்சத்திர விடுதியில் 
குடி ஆனவர்கள் மட்டுமே 
அனுமதிக்கப்படும் ஓர் அறை
உயர் அழுத்த சத்தத்தில் 
சிதைந்து கொண்டிருக்கும் 
செவிகளுக்கு மத்தியில் 
சிதைந்து போகும் 
சிலையிலிருந்து விழும் 
மக்கிப்போன மண் போல 
சிக்கனமாய் 
உடையை உதிர்த்துக் கொண்டே 
மையத்தை அடைந்தவளின் 
பின்னல் அவிழ்ந்த தலைமுடியில் 
எஞ்சியிருக்கும் பெண்மையும் 
கரைந்து கொண்டிருந்தது 
மது தந்த மயக்கத்தில் 
கிறங்கித் தவிக்கும் விழி கொண்டவளின் 
இடை மறித்து 
இதழ் சுவைத்தான்
களிப்பிலிருந்த கள்வன் ஒருத்தன்..

தொட்டவனை 
தொடுக்கும் அம்புப் பார்வை வீசும் 
புதுமைப் பெண்ணொருத்தி 
இருந்திருக்கவில்லை யெனும் 
ஆதங்கத் தோடு 
மனம்
ஊனமாக நின்றிருந்தேன்....

வியாழன், 29 மே, 2014

மழையின் உறவு...


மழையின் உறவு



அது ஒரு மழைநாள் 
மூன்று ஒன்பதுகள் 
நிகழ்ந்துவிட்ட போதும் 
முதல் மழையில் நனைந்ததில்லை.. 
விழும் அத்தனை துளிகளும் 
எனக்கென விழுமெனக்கூட 
நினைத்திருக்கிறேன்.. 
துளிகளுக்கு 
துணைகளின் தேவை இருப்பதில்லை 
தொடக்கத்தில் தனியாகவே 
விழுகின்றன.. 
இறுதியும் அப்படியே ஆகிப்போகிறது 
இடையில் வருவது 
இடையிலேயே போய்விடுகிறது...

புதன், 28 மே, 2014

சிதறிப்போகும் உருவங்கள்...!

நெடு நாட்களாக 
எதிர்பார்த்திருந்த பிற்பகல் வேளை 
கரு மேகங்களுக்கும் 
கருப்பை வெறுக்கும் வெண்மேகத்திற்கும் 
இடையே உருவங்களைத் தேடி 
தொலைந்து கொண்டிருந்தேன் 
இல்லை 
சிதறிப் போயிருந்தேன் 
பருவம் வந்த 
பசுவொன்று வெண்மேகத்திரளில் 
ஒளிந்து கொண்டிருந்தது... 
யார்மீதோ 
அதீத கோபத்தில் 
குதிரையொன்று கருமேக 
உருவத்தில் பாய்ச்சலுக்கு 
தயாரானது... 
இப்படி 
உருவங்களைத் தேடி கிறுக்கு 
பிடித்தவன் போல் 
கண்களை மேய விட்டிருக்கிறேன்.. 
சிந்திய தண்ணீரில் 
மானையும் மயிலையும் 
உள்ளங்கையில் 
குழைத்து வைத்த சீயக்காயில் 
மணல் மேட்டையும் 
பிய்ந்துபோன 
சுண்ணாம்பு பட்டைச் சுவரில் 
தெரியும் உருவத்தை 
நண்பனிடம் உரிமையோடு 
அடித்துக் கூறும்போதே 
நிறைந்து கொண்டிருக்கும் 
போத்தலில் வெண்குமிழ்கள் 
சேர்ந்து செதுக்கிவைத்த 
சிலைகளையும் சிலாகித்திருப்பேன்.. 
நித்திரையில் 
முகமறியா வரும் 
உருவத்தையும் நிசத்தில் 
தேடிக் கொண்டே 
மறைந்து போன 
முகங்களின் உருவத்தை 
மற்றொரு முகத்தில் 
தேடிக் கொண்டிருக்கிறேன்...

வியாழன், 8 மே, 2014

முழு நிலவு பார்க்க !!

முழு நிலவு பார்க்க
முழு நிலவு
நாளன்று அவளுக்கு
வாழ்த்து கூறவேண்டுமென
எண்ணியிருந்தேன்..
இன்று நிலவு பார்த்தபோதுதான்
தெரிந்தது
வாழ்த்துச் சொல்லும் நாள்
வந்ததென்று...

மலருக்கு அன்னியப்பட்டவள்
இன்று சிறு சிறு
நட்சத்திர மல்லிகைகளை
கோர்த்து உடுத்தியிருந்தாள்
அவள் கூந்தலுக்கு...

சிரிப்பினை
சிக்கனமாய் தந்துவருபவள்
இந்நாளில் மட்டும்
முன்வாசல் கோலம்போல்
வரைந்து விட்டு செல்கிறாள்
முழு நிலவு பார்க்க...

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

கடலோர நீரோடு ..


 கடலோர நீரோடு

எண்ணமும்
எழுத்துக்களும்
ஏங்கிக் கிடக்கும்
மாலை வெயில் நேரம்..

கடல் காற்று
சுற்றி வளைக்க
மீனும் கருவாடும்
நாசி துளைக்க...

பாதங்கள்
ஓவியம் வரைந்து
அழகாக்கியது
மணற்பரப்பை...

கால் கொண்டு
நீரழந்து
கடல் ஆழம்
பார்ப்போமென
நான் கூற...

நீரென்றால்
உவப்பில்லை யென
நீ கூறினாய்...

நீரென்றால்
உவப்பில்லையோ..

என் உதட்டின்
நீர் பதம் பட்டால்
என்ன மொழிவாய்
கேட்கிறேன்.

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

காமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ்..!

ஆப்பெரிக்க கண்டத்தில் உள்ள காமெரூன் பழங்குடி மக்கள் பேசிக்கொண்டு இருக்கிற மொழி தமிழ் என்று தெள்ளத் தெளிவாக

ஆய்வறிக்கையில் நிருபனமாகிவுள்ளது . இந்த ஆய்வறிக்கையை சமர்பித்த தமிழ் சிந்தனை பேரவையாளர் குழுமத்திற்கு நன்றி.

மேலும் அவர்கள் முயற்சிகளுக்கு துணை நிற்ப்போம் , பயன் பெறுவோம் .







நன்றி:http://www.tamilmantram.com/vb/showthread.php/31711-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88?p=578272#post578272


சில துளிகள்..


இறைவனை
நேசிக்க
நல்லநேரத்தை விட
விடுமுறை
நேரம்தான்
உகந்த தாகிப்போனது

----------------------------------------

கரு வண்ணத் தாளில்
மறைந்து போன வெள்ளை
எழுத்துகள் - மின்னல்


----------------------------------------

விழியும் ஒளியும்
மோதும் நேரம்
வரும் பொழுது
இரவாகிப் போனது....


---------------------------------------

தூக்கத்தை
தொலைத்த இரவுகள்..
பகலாக
இருப்பதில்லை...

---------------------------------------

நீ என்னுடன்
இருப்பதற்கே காரணம்
நானாக இருப்பின்..
வேறு காரணங்கள்
தேடி நான்
அலைய வேண்டுமா??

---------------------------------------

எண்ணம் கொண்டு
எழுத நினைத்தால்
யோசனை செய்யென
முகம் மூடுகிறது
எழுதுகோல்...!

--------------------------------------

இயல்பாய்
இம்சை தரும்
இனியவள்
இனிய
இரவுக் குறியவள்.
நித்திராதேவி....

--------------------------------------

இமைகளின்
இறுக்கம் தளர்த்து
இன்ன லற்ற
இனிய பொழுதில்
கனவுகளை
அணி சேர்த்து
பயணிப்போம்.

-------------------------------------

சிலேடை சத்தங்களில்
சில்லரை வாகனங்களுடே
சிக்கல் மனதுடன்
சில மணித்துளி பயணம்..

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

வளர்ச்சியின் மாற்றம்


முழு நிர்வாணம்
முகப்பில் வந்துவிடா
எண்ணம் கொண்டு
வந்து விட்ட
முக்கால் நிர்வாணத்தை
கிழித்துவிட்டு
வழி நடந்து போனால்..

கிழிந்து
கையில் சிக்கிய
காகிதமோ கசங்கி
புழுங்கியது...
வளர்ச்சியின் மாற்றத்தில்
மறைக்கப்பட்ட
குப்பை தொட்டியால்.......

புகைப்படக் காரி ...!


முகம் மறைத்து
முக மெடுக்கும்
மென் விழியே
விட்டு விலகி நின்றே
மதி முகம் திறப்பாயோ..!!

புதன், 16 ஏப்ரல், 2014

சிவந்த வதனம் ...

கடற்க் கரையின்
மணற் பரப்பில்
குவித்து வைத்த மணலில்
சரியாக ஓர் அடி
இடை வெளியில்

வியாழன், 10 ஏப்ரல், 2014

அழிப்பது அழிவுக்காகத்தான்.. - சிறுகதை

எம் ஏ ஆர் கன்ஸ்ட்ரக்சன் என தங்க நிறத்தால் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் அந்த சொகுசு நான்கு சக்கர வாகனத்தின் முன் நெற்றியில் ஒட்டப்பட்டிருந்தது. அந்த வாகனம் வருவதை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிந்தது அது புதிதாக வாங்கப்பட்டது என்றும் அதை ஒட்டி வருபவர் முறையான பயிற்சி பெறாதவர் எனவும் தெரிகிறது. வாகனம் அருகே வர வர சற்று உள்நோக்கும் போது பின் இருக்கையில் இரு சிறார்கள், ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் மேலும் முன் இருக்கையிலும் ஒரு பெண் குழந்தை, இவர்கள் தன் அப்பா வாங்கியிருக்கும் புது வாகனத்தில் அமர்ந்து மகிழ்ச்சியை துள்ளலுடன் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

கோடை விடுமுறையில் ஒருநாள்....!!


ஊதா மை நிரப்பி
தேர்வுத் தாள் பார்த்த
எழுது கோலில்...
வாழைக் கரை பிழிந்தளந்து
நண்பனின் சட்டையில்
நட் பெழுதி வைக்கும் நாள்

வியாழன், 3 ஏப்ரல், 2014

செங்கதிர்ச் சூரியனே ..!!



கருமேக வண்ணக்
கோப்பை யிலிருந்து
எழுச்சிபெறும்
செங்கதிர்ச் செல்வனே !!

உடல் பரவும்
உற்சாக முடன்
ஒளி தந்து
விழி காப்பாய்
பகலவனே..!!


                                                                             -------ஜெ.பாண்டியன்

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

ரெட்டை வால் குருவியே...!!



ரெட்டை வால் குருவியே
ரெக்கை விரித்து வந்துவிடு !!

உயர வட்ட மிடும் பருந்துவே
உன் வட்டம் வந்தால் சொல்லிவிடு !!

தென்னை மரக் கிளைகளே
கூடு கட்டி வாழ்ந்தால் சொல்லிவிடு !!

மா மரத்து இழைகளே
கனி பறிக்க வந்தால் கூறிவிடு !!

ரெட்டை வால் குருவியே
ரெக்கை விரித்து வந்துவிடு !!



                                                                             -------ஜெ.பாண்டியன்

வியாழன், 27 மார்ச், 2014

விளக்கொளியில் மஞ்சள் நிலா ..!!

ஆலமரக் கோவிலின்
முடிக்கப் படாத சுவரின்
சாளரத்தின்
ஓரமாய் ஒட்டி
ஒளிந் திருந்தேன்

வரிசையில்
அடுக்கி வைத்திருந்த
அகல் விளக்குகள்
ஆலமரக் காற்றில்
அங்கலாய்த் தன..

சனங்களின்
சலசலப்பை அழுந்திய
சருகை யுடையின்
சன்னமான ஒலி
செவி வழி விழுந்ததும்
சீராக்கினேன் பார்வையை ..

பச்சை நிறம்
கீழுடுத்தி
பாலாடை வண்ண
மேலாடை யில்
பச்சை மலர் உதிரிகள்
தூவப் பட்டிருந்தது...

விளக்கின்
சிவப்பு மஞ்ச லொளியில்
மறைந்து
வெள்ளி நிலா முகத்தில்
மஞ்சள் முலாம் பூச
எத்தனித்தேன்..!!

                                                                             -------ஜெ.பாண்டியன்

செவ்வாய், 25 மார்ச், 2014

கூட்டுப் பெருச்சாளிகள் வருகிறது.....

கூட்டுப் பேச்சில்
கை நிறைய தேர்ந்ததினால்.
வாக்கு கேட்டு வருவான்.


வன்ம மது நெஞ்சி லிருக்கும்
புன் சிரிப்பு உதட்டி லிருக்கும்
பொன்னுருக பேசி வருவான்..

 

வாக்கு போடும் பாமரனே..
வார்த்தை கேட்டு
வாய் பிளவாதிரு !!

 

காவி கரையில்
வந்தி டுவான்..
கதர் உடையிலும்
வந்தி டுவான்..
தொப்பி யணிந்தும்
வந்தி டுவான்..

 

தானைத் தலைவ னென்பான்..
ஈழத் தாயென்பான்
வரலாற்றுப் பிழையுடனே
வாக்கு கேட்ட வந்திடுவான் ..

 

தமிழ் நலமே
தன் னலமென்பான்..
நாளை
தமிழ் நிலமே
தன் னிலமென்பான்..

 

திராவிடம்
தேசிய மென்பான்..
அணி சேர்ந்து நிற்ப்பான்..
அறிவின்றி பேசுவான்..

 

விழித்திரு
வாக்காளனே..
விதைகள் போடுவது
நீதானே..!! 

 

                                                                             -------ஜெ.பாண்டியன்

      

வியாழன், 20 மார்ச், 2014

அன்னையின் மடியில் !!


கண் விழித் திருக்கவில்லை
உணர்வு உயிர் பெற்றிருப்பதால்
உணர முடிகிறது இருளை ..!

அப்பாவின் தொடு வுணர்வின்
அதிர்வால் அரவணைப்பு
அழகான இருள் சூழலில் ..!

உரத்த குரல் கேட்கிறது
அதன் மொழி அறியேன்
யார் குரல் அறியேன்
பெண் குரலோ
ஆண் குரலோ அறியேன்..!

அம்மா உன் குரலாகத் தானிருக்கும்
பாசப் புரிதல்
இதோ
இங்கிருந்து தொடக்கம் கண்டது!!

வலிக்க மிதித்ததால்
வலி தாங்காது குர லெடுத்தாய்..
கடல் அலையும் அமைதிபூண்டது
உன் குரல் கேட்டு..!!

மன்னித்து விடம்மா
பாசத்தின்
முதல் மன்னிப்பின் தொடக்கம்...!

இப்பொழுதும்
விழி விழித்திருக்க வில்லை
இருந்தும்
இருள் சற்று விலகிய
ஓர் வெளிச்சம் ..!

உள்ளுணர்வு பிதற்றுகிறது ..
எப்படி இருக்கும்
என் விழி காணும்
முதல் வெளிச்சம்..!

அம்மா !!

உன் விழி கொண்டு
காண்பேன் உனையே .!

உன் மூச்சை கடன் பெறுவேன்
உன் உயிராக நான் வாழவே..!

உனக்காக உண்பேன்
உன்னை காக்கவே..!

உன் விரல் பிடித்து
அழைத்துச் செல்வேன்
உன் விரல் கொண்டே..!

உன் புலம் கொண்டு
இருப்பேன்
உனக்கு பலமாய் .!
அன்னையே ..!

எனை ஈன்றவளே..!!


                                                                             -------ஜெ.பாண்டியன்

செவ்வாய், 18 மார்ச், 2014

சிநேகிதனின் சிலாகிப்பு ..!

கையில் எறும்பு
ஊர்ந்து போகிறது
அது எங்கே
சென்று கொண்டிருக்கிறதோ !

பால்ய பருவத்தில்
எறும்பை கண்டதும்
ஓங்கி மிதித்துச்
சாவடிப்பேன் இல்லையேல்
ஓலமிட்டு ஓட்டமெடுப்பேன் ..!

இன்றோ ..
கையில் ஊர்ந்து போகும்
எறும்பின் சுறுசுறுப்பை
குறுகுறுக்கும் உணர்வுடன்
ரசிக்கு மளவுக்கு
தேர்ந்து விட்டேன் ..!!

பட்டு விடும் தருணம்
கொண்ட மலர்ச் செடிக்கு
நீர் கிடைத்த ஒரு
சிலாகிப்பு போல்
இந்த எறும்பு ஊர்தலில் எனக்கும் !!

                                                                             -------ஜெ.பாண்டியன்

வியாழன், 13 மார்ச், 2014

மலடு மண்டப் போகும் மாநிலம்

வந்துவிட்டது அந்த நாள்
ஆம் ! வந்தே விட்டது ..

அருங் காட்சியகத்தில்
வில்லையும் வாளையும்
வீரத்தையும் கேடையத்தையும்
பார்த்து மெய் சிலிர்க்கும்
நாம் ..!

நாளை நம் சந்ததிக்கு
இக்கலை பொருளுடன்
விட்டு பூட்டிப் போகும்
அரிய பொருள்
என்ன வாயிருக்கும் ?

நாம் உண்டு களிக்கும்
நெல் மணிகள் தான்
ஆம் !!
நெல்மணிகள் தான்..

பாரதத்தின் பாட்டன் தொழில்
அது வேண்டாம்
பாடை யேற்றுங்களென
அறைகூவல் விடுத்தாயிற்று
மந்த ம(த்)தி யரசு!!

மிஞ்சியிருக்கும் வயல்வெளியும்
மீத்தேனுக்கும் நிலக்கரிக்கும்
முந்தி விரிக்க போகிறது..
பரதேசம் போக ஏற்பு கொள்
பாரதத்தின் தயவு கொண்டு....

வேதனை மட்டும் கொண்டு
வேடமிட்டு வாழ்ந்திடுவோம்
வேறென்ன செய்திடலாம் ??

போராடி பார்க்கலாமா..
போராடியவ ரெல்லாம்
போராளியல்ல தீவிரவதியாம் ...

வெற்றி மட்டும் இயைந்திடுமா..
இத்திரு நன்னாட்டிலே !!
வேறென்ன செய்யலாம் ?

ஆங்!!
அதிநுட்பக் கைபேசி கொண்டு
வெட்டித் தள்ளலாம்
பச்சைப் புல்வெளியையும்
நெற்ப் பயிரையும்
சம்பாவையும் கம்பையும்
உளுந்தையும் எள்ளையும்
சோளத்தையும் கரும்பையும்
வாழையையும்
நிலத்தடி நீரூற்றையும்
புகைப் படமாய்..!!

புதைத்து விடலாம்
முகநூலிலும்
இன்ன பிற தளங்களிலும் ..
ஆம் ! புதைத்தே விடுங்கள் ..

இது தானே நாமும்
அரசும் சாசனமும்
விரும்பி ஏற்கும்
அறப் போராட்டம் ..

வரும் சந்ததிக் கென
ஓடி ஓடி
உழைத் திருப்போம்
களைத் திருப்போம்
பசித் திருப்போம்
உண்ண
உணவிருக் குமா ?!

                                                                             -------ஜெ.பாண்டியன்

செவ்வாய், 11 மார்ச், 2014

உண்மை காதலுக்காக !!


என் முன்னே
அமர்ந்தி ருப்பவளே
கேள் !

என் முன் கதைகளை
உன் முன்னே கூறுபோட
வரவில்லை ..
கூர்மையுடன் கொஞ்சம்
ஓர்மையுடனும்
கேள் !

என் பின் கதையின்
ஆத்மாவை குருவெளி யீடு
செய்ய
அவதானித் திருக்கிறேன் !!

நான்
கொண்ட நினைவுகளையும்
கண்ட கனவுகளையும்
இட்டுப் பரப்புவேன் உன் மடியிலே !
தொட்டுப் பார்ப்பேன் உன் இதயத்தையே !

உயிர் வலிக்க வலிக்க
இருதயம் துடி துடிக்க
காதலித்தது மில்லை
காதலியாலோ, காதலாலோ
கைவிடப் பட்டது மில்லை ..!

கட்டியணைக்க வேண்டாம்
கவிதை படித்துச் சொல் போதும் ..

வியர்வைக் காதல் கழுவும்
ஆற்றுநீர் மணம் வேண்டாம் ..

கிணற்றி லூரும் நன்னீர்
நற்பேறில்
காதல் நுகர்வோம்
களித்திருப்போம் !!!


                                                                             -------ஜெ.பாண்டியன்

வாழுங்கள் பல்லாண்டு


வாழுங்கள் வளமுடன் இதமாக பல்லாண்டு !

வாழ்த்த பலநண்பர் வருவர் பூக்கொண்டு !!

வானவில் நிற ஒற்றுமை உங்களுக்குண்டு !

வான் சிறப்பாம் வள்ளுவனின் மாரியுமுண்டு !!

வாடாமலர் சூடியநின் வாழ்வில்மாறா மணமுண்டு !

வாசமுடன் வீசும்தென்றல் தரிசனம் நிதமுண்டு !!

வாழுங்கள் வாழ்வை புது அர்த்தங்கொண்டு !

விண்ணும் மண்ணும் முத்தமிடும் நிகழ்வுண்டு !!

வயிறார அன்புடன் ஊட்டும் அன்னமுண்டு !

வாழ்வியல் அறத்தில் வள்ளுவன் துணைகொண்டு !!

வாழிய பல்லாண்டு ! வாழ்க்கை துணைகொண்டு !! !

                                                                             -------ஜெ.பாண்டியன்

திங்கள், 10 மார்ச், 2014

புத்தக வெளிச்சம் !!


புத்தக வெளிச்சம்

மனக் கலவரத்தின்
இருளுக் குள்ளிருந்த
எனக்குள் ..!
பகலவனாய்
வெளிச்சம் பரப்பியது
நான் வாசித்த
புத்தகங்கள்..!!

                      --------ஜெ.பாண்டியன்

சனி, 8 மார்ச், 2014

மரமே ஓ மரமே !!


மரமே ஓ மரமே
வேர்களில் உதிரம் பரப்பி
பூக்களை கனிக ளாக்கும் மரமே!!

காய்க்கும் கனிகளை
உணவில் மருந்தாக்கும் மரமே!!

வான் தரும் மழைத்துளி
கொண்டே நின் இழை
தழை செழித்திடும் மரமே !!

உன் னுயிர் துறந்து
என் னுயிர் காக்கும் மரமே!!

என் னுயிர் மடிந்தாலும்
உன்னுயிர் பிரியா
வரம் வெண்டுவனென் மரமே!!

                            -------------------- ஜெ.பாண்டியன்

செவ்வாய், 4 மார்ச், 2014

எச்சில் பகல்கள் ..!!



உண்டு உறங்க வசிப்பிட மில்லை
........ஊட்டி மகிழ உறவு யில்லை
காசு தேடியே தூசியில் நடந்தால்
........காறி உமிழும் கலகர்கள் இங்கே
பிச்சை பாத்திரம் ஏந்திய இவருக்கு
........பிச்சை போட மனங்க ளில்லை
எச்சி லிலை தேடும் இவர்க்கு
........எச்ச மாய் போனநா டெதற்க்கு
காய்ந்து போன வயிறு கேக்கும்
........காலுணவுக் காகத்தானே காத்தி ருப்பு ...

                                                               -------------------- ஜெ.பாண்டியன்

திங்கள், 3 மார்ச், 2014

காதலுக்கு ஊடல் அழகு..!


கடலும் பொழுதும் வானும் அமைதிகாக்க
...கருமேகம் போர்வை போர்த்திஇருளை வசமாக்க
கண் பார்த்துதான் நானும் பேசுகிறேன்
......கருவிழி கொண்டு கடத்துகிறாய் என்னை
ஆதவனும் ஆர்பரித்து செங்கதிர் வீசமுனைகிறான்
.....அல்லியுன் ஒழுங்குதோற்ற மதை பார்த்தே ..
செங்கதிர் வண்டாய் தேன்கன்னம் மொய்ப்பதை
.....சினம் கொண்டே இனிமையாய் சிலாகித்தேன் .

                                                                           ------ஜெ.பாண்டியன்

சேதியும் மானிடமும்



நாளொரும் சேதியாய்
ஞாயிறும் திங்களும்
இன்ன பிற தினங்களும் ...
வெட்டும் குத்தும்
களவும் கற்பும்
கள்வரும் காதலும்
அரசியலும் பொய்யும்
காவலும் கதையும்
போலியும் ஆட்டமும்
வணிகமும் விளம்பரமும்
தாங்கியே நாளும்
பொழுதும் விடியும்
செய்தித் தாளுடன்

மாற்றுவோறு மில்லை
மாறுவோறு மில்லை
வையத்திலே
நலமும் அறமும்
வழி நடப்பாரு மில்லை
என் நாடே
தாய் திரு நாடே..!!

                                                                                      ------ஜெ.பாண்டியன்

புதன், 26 பிப்ரவரி, 2014

வெல்க பாரதம் ..!!

நம் மீனவர்கள் கடலில்
சுடப் படுவதை கண்டுகொள்ளாத நாடு

இந்து-முஸ்லிமை விவாதத்துக்குள்
வைத்து அரசியல் செய்யும் நாடு

தமிழர்கள் மனதில் மெல்ல
கரைந்து கொண்டிருக்கும் நாடு

நீரும் நிலமும் கூட்டு நிறுவனங்களுக்கு
தாரைவார்த்த உயர்திரு நாடு !!!
இவ் விந்திய நாடு !!!!

வாழ்க பாரத நிலப் பிரபுக்களும்
இந்திய மேட்டுக்குடி மேன்மக்களும் !!!! 

மொழி இலக்கணம் வளர்ப்போம்..!!



அடக்கம் அது
நம்மை அடக்கம்
செய்து விடும்
நிலை கொண்டிருக்கிறோம்...?

மாற்றான் மொழி
மண்டிக் கிடக்கும்
மூளையை
மரபுக் கவிதை கொண்டு
மீட்டெடுப்போம்..!!

தமிழன்னையை போற்றி
இனிமையாய் இலக்கணம்
படைப்போம்...
வளர்ந்து ஓங்குக தமிழ்..!!

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

மௌன மொழி வேறு அல்ல ?!!


சுற்றிச் சுழலும் மாந்தர்களின் கண்கள்
சுருங்கியே குவிந்தன நடந்து வரும்..!?

நான்கு சிறார் அவர்கள் புறம்
நானும் விழியைக் குவித்தேன் சிறார்மீதே ?...

மௌன மொழி தெரித்தது வாசகமாக
மெல்லிய விரல்கள் தாளம் இசைத்தன..!!

கண்களும் இமைகளும் நடன மாட
கலவரமின்றி கருத்தரங்கு அரங் கேறியது...

வேடமிட்ட கண்களால்; மலர்ச்சி பெறும்
வேற்றுமை யிலா மலரின் தேனுக்கு...

வஞ்சகம் புரிந்திடாதீரும்; நா இழந்த
வல்லவரிடம் சிறுமை முகம் படராதீரும்...!

மண்ணில் வேண்டு வென கிட்டிய
மாந்தர்களே மாசு மன மாந்தர்களே!!

--------ஜெ.பாண்டியன்

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

பதுங்கிய சொல்கள்

என்னுள் பதுங்கிக்
கிடக்கும் சொல்களை
எழுத்தாக்கம் செய்யும் பொது
உணர்சிகள் பேனாவையும்
விசைப் பலகையையும்
விழுங்கி விடுகின்றன..!!


----ஜெ.பாண்டியன்

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பூங்காவின் காலை பொழுதில் சில நொடிகள்

முன் காலையில்
தூவிய மழைத்துளிகள்
காலைப் பொழுதை
அழகாக்கி யிருந்தது...!

அமிழ்தம் தவழ்ந்த
மணற் பள்ளங்கள்
சிறு குட்டையாக
உருவகப் பெற்று
அழகியலை
தோற்றுவித்திருந்தன..!

சுற்றிலும் தொந்தி கணவான்கள்
தீராது உண்டு களித்ததை
தீங்காகக் கருதி
வருடும் மெல்லிசையுடன்
நடை பழகினர் !!

முதிர் குழந்தைகள்
மூச்சுப் பயிற்சியிலும்,
அடங்கா இரைச்சலுமாய்,
பேசுவதை விரும்பியே
நடையுடன் காலத்தை
வென்று கொண்டிருந்தனர்..!

ஆதவனின் புறங் கண்டு
மலரும் நகரத்து
மொட்டு போல்
சொற்பமாய் மலர்ந்திருந்தனர்
காதலர்கள்..!