செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

என்னதோ சுயமாம்

மெழுகுவத்திச் சுடரில் விரல் நீட்டியோ, எச்சில் விழுங்குகையில் தடைநிற்கும் தொண்டை வலியினை நீக்க விறகடுப்பு கங்கலில் துப்புவதற்கு எத்தனிக்கையிலோ உணரும் வெக்கையின் தீவிரத்தால்தான் தீயின் சுடுநிலையை உணர்ந்தறிகிறோம். தீ சுடும் என யார் கூறினாலும் சுயமான சோதனைக்குப் பின்னர்தான் மனமும் உடலும் அதை உறுதியோடு ஏற்றுக்கொண்டு ஓர் பாதுகாப்பான அல்லது பதட்டமான நிலையினை ஏற்றுக்கொள்கிறது. எதிர்பாராத நேரம் பகுத்தறிதலுக்கு முன்னால் சுயம் நிச்சயமாக வெளிப்படும். இந்த வெளிப்படுத்துதலை அவரவர் சுயத்தை சிலர் ரசிக்கிறோம் வேறுசிலர் வெறுக்கிறோம்.

இந்த சுயம் எவ்வளவு உண்மையானது? சுயம் ஒரு போலி வாதம். சிறு குழந்தை தான் வளரும் சூழலைப் பொறுத்தே தனது சுயத்தை உடலிலும் மனதிலும் பூசிக்கொள்கின்றது. வாழத்துவங்குகிறது. சுயம் கல்வியால் பகுத்தறியப்படுகிறது. சுய சாயத்தின் மீது கொஞ்சம் அறிவார்ந்த சாயம் கலக்கிறது. இரண்டாமவதின் சுயம் நீர்த்துப்போனால் சுயம் அப்பட்டமாக ஆட்டம் போடும். அதற்கு வீடு காடு மேடு எதுவும் தெரியாது.

கல்விக்குப்பின் மேலும் மேலும் பூசிக்கொள்ளும் திடமான சாயம் வாசிப்பு. இது வெற்றுக்கதையாக உடலிலும் மனத்திலும் சிதறிப்போகாமல் மொழியாக, இலக்கியமாக, அறிவியலாக, மனிதக்கூறாக விரவிக்கிடக்கிறது. புது வண்ணம் பாய்ச்சுகிறது. சுயத்தை தோற்கடிக்காமல் அதை மிளிரச்செய்கிறது. போலியான சுயம் உண்மை நிலைக்கு கடத்தப்படுகிறது.

வாசிப்பு அவ்வளவு எளிதாக சுயத்தை வென்று நிற்பதில்லை, பாதைகள் சீரமைத்து திசைகாட்டியோடு பயணம் அமைவதுமல்ல. எதுவுமில்லாமல் திசைமாற்றி, குழப்பி, தெளிவு நிலைக்கு அடையவேண்டிய மார்க்கத்திற்கு இழுத்துச்செல்லும் வளமான காடு.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

அதனாலென்ன

நாங்கள் சிரிக்கவில்லை
அழுகையும் அறியாதவர்கள்
அதனாலென்ன
சிலரால் முடியுமென்றால்
சிலரால் முடியாது

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

கி.ராஜநாராயணன்

ஒவ்வொரு பக்கங்களும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தது, கரிசல்காட்டு கடுதாசிகள் வாசிக்கும் பொழுதில். வேறுவேறு கதைகள் நம்பிக்கைகளை பகடி செய்யும் கதைகள்.

கோபல்ல கிராமத்து மக்கள் என்ற புதினம் வாசித்தபோது அறிந்த தகவல்கள் ஏராளம்.  எல்லாம் சுதந்திரத்திற்கு முன்னான காலகட்டம். காந்தி சுதந்திரம் கிடைத்ததும் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என மும்முறை கூறியதாக சொல்லி முடியும் புதினத்தில் தேயிலைத்தண்ணீர் அறிமுகம் அதுவரையில் நீர்தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த சமூகம், தே.தண்ணீருக்கு மாறியதன் பின்னால் இருந்த வியாபார தந்திரம். பேருந்து அறிமுகம். இரண்டாம் உலகப்போர் பற்றிய காட்சிகள் என ஒன்றிலிருந்து மற்றொன்று நழுவிப்போகாத புனைவு.

எண்பதுகளில் கி.ராஜநாராயணன் எழுதிய கதவு சிறுகதை தொகுப்பு வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதைப்பற்றி எழுத வேண்டுமென்ற எண்ணமிருக்கிறது. இன்று இந்து தமிழில் கி.ரா வுக்கு கனடா தமிழ் இலக்கியத்தோட்ட அமைப்பு இலக்கிய சாதனை விருது வழங்கிய தகவல் வெளியாகியிருந்தது. மகிழ்ச்சி.

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

அசோகமித்திரனோடு

ஒவ்வொருத்தருக்கும் ஒரு சூழல் தேர்வு அதற்கேற்ற மொழியமைவு ஏற்பட்டு அற்புதத்தை நிகழ்த்திவிடுகின்றது. அசோகமித்திரனின் பறவைவேட்டை சிறுகதை தொகுப்பு. எண்பதுகளில் எழுதி இளமை மாறாமல் கதை சொல்லிக்கொண்டிருந்தது. இன்றோடு முடிந்துவிட்டதென்று இருக்கக்கூடாதென ஒரு பேராசை. அலுவலகத்தின் பொழுதில் "இனி கதைகள் வாசிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்" என சபதமெடுத்தாலும், வீடு சேர்ந்ததும் வார விடுமுறையிலும் வாசிப்பின்றி நொடி நகராது விழி பிதுங்கும் அதம நிலை.

எளவ செத்த நேரம் ஒதுக்கித்தான் வச்சா என்ன என்ற பேச்சுகளைக் கடந்து சிரித்துக்கொண்டே வாசிக்க மட்டுமே முடியும். வாசித்தால் தான் இதற்கெல்லாம் சிரிக்க முடியுமோ?!.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

நீர்வண்ணத்திலோர் முயற்சி

இப்படி வரைந்துப்பார்பதில் கொள்ளை பிரியம். இது செங்கோட்டை தொடர்வண்டி நிலையத்தின் மேற்குப்பகுதி, பொதிகை வண்டி நிற்கும் தடம். மேற்குமலைத்தொடர்ச்சியின் எழிலும் அதன் கீழ்புறம் செழித்து நிற்கும் காடும் கழனியும் நிறைந்த தோற்றம்.

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

எதற்கோ எப்படியோ

மதியிடம் கேட்டிருந்தேன் இரண்டு கிராம் அளவில் சிறுவர்கள் அணிந்துகொள்ளும் மோதிரம் ஒன்று வாங்கிவர முடியுமா என்று. இதுவரையில் நகை வாங்க போனதில்லை எனக்கு எப்படித் தெரியுமென்று சொன்னபிறகு மீண்டும் கேட்டால் சரிவராது என்ற எண்ணத்தில்தான், இரண்டுபேரும் சேர்ந்து போகலாம் என்று கூறியிருந்தேன். 

எனக்குள் மிகப்பெரிய தயக்கம். புதிதாக ஒரு பொருளை தான்  அதுவரை தனியே சென்று வாங்கியிராத ஒன்றை விலைபேசி வாங்குவதற்கு ஏற்படக்கூடிய கூச்சம், அச்சம் எல்லாம். மேலும் நகைக்கடைகள் காட்டும் பிரம்மாண்டத்தின் மீதான, நகைகளின் மீதான பேரச்சம். திங்கள் கிழமை மாலையில் மூக்கொழுகிக்கொண்டும் உடல் அசதியும் அந்த நாளை தள்ளிப்போட்டது. வியாழன் வரை காலம் இருக்கிறது என்ற எண்ணம் செவ்வாய்க்கிழமையையும் தள்ளிப்போட வைத்தது. மீண்டும் மதியை அழைப்பதில் இருக்கும் சங்கடம் மற்றும் முதன் முதல் நகைக்கடைக்கு போவதற்கு முன் ஏற்படும் குழப்பநிலையே உண்மையான காரணமாக இருக்கக்கூடும்.

புதன்கிழமையை விட்டால் வியாழனும் ஓடிப்போக வாய்ப்புண்டு என்பதனால் தனியாகவே கடைக்கு பிரவேசம் செய்ய முடிவு. மாலையில் வேலை முடிந்ததும் பாதிவழியில் பல்லாவரத்தில் இறங்கி வாங்கிவிடலாம் என்ற நினைப்பில் வந்தபோது, திருநீர்மலை சாலை முகப்பிலேயே இறங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. நடக்கத்துவங்கினேன் வலதுபக்கம் பிரதான சாலை இடது பக்கத்தில் பற்பல கடைகளின் அணிவகுப்பு.  நிச்சயமாக அங்கு நகைக்கடை கிடையாதென்பது உறுதி. பழைய இரும்புக்கடை, டூவீலர் மெக்கானிக், பலசரக்குக்கடை. இடையில் ஓரிடத்தில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள். இதற்குமுன் அவ்விடம் எதை சுமந்து கொண்டிருந்தது என்பதை நினைவின் அடியாழத்திலிருந்து கொணர்வது இயலாத காரியம்.

பல்லாவரம் - குன்றத்தூர் சாலை. இங்கு சில நகைக்கடைகளுண்டு. ஒரு கடையை தேர்வுசெய்து உள்நுழைந்ததும் மிதமாக குளிர்சேர்ந்த காற்று வியர்வையை ஒழித்துவைத்தது. அச்சப்பட தேவையற்ற மிகப்பெரியதுமல்லாத சிறியதுமல்லாத நடுத்தரக்கடை. இடதுபக்கம் சில பெண்கள் சில பெண்களுக்கு வெள்ளிப்பொருட்கள் விற்பனை செய்யும் முயற்சியில். வலதுபக்கம் கல்லாவிலிருந்த முகங்களை பார்த்தேன், என் வருகை அவர்களுக்கு வியப்பையோ விருப்பத்தையோ ஏற்படுத்த எவ்வித காரண காரியமும் இல்லாததால் அமைதியாக அமர்ந்திருந்தனர். ஒருமுறை கடையை சுற்றிப்பார்த்தேன் நீலம் பாய்ந்த சேலைகளில் வரிசையாக பெண்கள் நகைகளை விற்பனை செய்ய பணியில் இருந்தனர். நடுவில் இரு ஆண்கள் சட்டையை இடையில் சொருகி சப்பாத்து அணிந்து கைகளை கட்டிக்கொண்டு நின்றனர். ஏன் அப்படி என்று அவர்களை கேட்கவோ இல்லை எதையாவது புனைந்து கொள்ளவோ விருப்பமில்லை.

சபாரி அணிந்த பெரிய மனிதர் ஒருவர் வந்து வணக்கம் வைத்தார். கைக்கூப்பி மோதிரம் வேண்டும் என்றதும், ஒருபெண்ணைக் காட்டி "அங்கே போங்க" என்றார்.

ஐந்தடி உயரமும் சற்று குண்டான உடல்வாகு கொண்ட இருபத்தைந்து மதிக்கத்தக்க பெண். "எத்தனை க்ராம்" என்று கேட்டாள். "இரண்டு இல்லன்னா மூணு க்ராமுல வேணும்" என்றேன்.

பெரிய மோதிரமாக காண்பித்து "மூன்றரை க்ராம்" என்றாள். "சின்னப்பையனுக்கு போடுவதற்கு" என்றதும். இரண்டு கிராமுக்குள்தான் சின்னதான மோதிரம் கிடைக்கும் என்பதாக கூறி என்னை உற்று பார்த்தாள். கண்ணாடிப்பெட்டிக்குள் இருக்கும் பலவகைப்பட்ட கணையாழிகளை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தபோது, "இதப்பாருங்கு இரண்டரை க்ராம்ல கிடைச்சிருச்சி" என்று எடையில் போட்டுக் காண்பித்தாள். அது உண்மையிலேயே தங்கம்தானா இல்லை வேறேதும் உலோகத்தை அப்படிச்சொல்லி விற்கிறார்களா. இதை எப்படி சோதனை செய்வதென்பது மனக்கேள்விகளாக மட்டும் ஒலித்தபோது. நான் அந்த மோதிரத்தை வாங்குவதாக உறுதியளித்துவிட்டேன்.

இப்பொழுது எனது அடையாள அட்டை, வங்கி பற்று அட்டை என்னிடமிருந்து வாங்கப்படன. மேலும் இரண்டு பெண்கள் அருகில் வந்ததும் "வாரச்சீட்டு, மாதச்சீட்டு போடுங்க சார் பிரயோஜனமா இருக்கும்" என்றாள் முதல் பெண். கண் இமைகளுக்கு அழகாக மை தீட்டியிருந்தாள் எனக்கு பைக்குள்ளிருக்கும் பேனாவை எடுத்து அவள் கண்களை வரைந்துவிடவேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது. கருப்பான பெண். முகத்திலிட்ட பூச்சுகளின் திட்டு அவ்வறையின் சிபிஎல் வெளிச்சத்தில் சிலிர்ப்பை உயிர்ப்பித்தது. இரண்டொரு நொடிகளுக்குப்பின் அவள் கண்ணாடிச்சட்டத்தின் பக்கமாக திரும்பி  எதையோ முணுமுணுத்தாள். இரண்டாமவளின் குரல் மீண்டும் சந்தாக்களை அறிமுகம் செய்தது. இம்முறை பதிலளித்தேன் வேண்டாமென்று, கூடவே சொன்னேன் இதற்கு பிறகு எப்போ நகை வாங்குவேனென்று எனக்கே தெரியாதென்று. "இப்போ வாங்கிட்டீங்கல்ல இனி வாங்குவீங்க சார்" என்று முதலாமவள் சொன்னாள். அவளை மீண்டும் பார்த்தேன். பார்க்க மட்டுமே செய்தேன்.

மோதிரம் சின்னதொரு ஞெகிழிப்பெட்டியிலிருந்து சற்று குண்டான அந்த பெண்ணால் வெளியில் காண்பித்து பின் பூட்டப்பட்டது. எனது அட்டைகளையும், மோதிரப்பையையும், பல் தெரியா அப்பெண்ணின் வலிந்த சிரிப்பையும் எடுத்து வெளியில் வந்தேன். ஒழிக்கப்பட்ட வியர்வை ஊற்றிக்கொட்டியது.

வீடுவந்ததும் "மொதமொதலா நகைக்கடைக்கு பேட்டு வந்துட்டிய" என்றாள் சித்ரா. "ம்" என்று, மெல்ல கண் அயர்ந்தேன் கட்டிலில், கோடுகள் தீட்டிய கண்கள் என்றேன் மெல்லியதாய். என் விரலிடுக்கில் பென்சிலொன்று நடுங்கிக்கொண்டிருக்கும் உணர்வு.