வியாழன், 31 ஜூலை, 2014

மாறாத செய்திகளாய்

இன்றைய பொழுதுகளில்
செய்தித் தாள்கள் எளிதாக
புரட்டிக் கடந்து போகும் அளவில்
இல்லை..
மாறாத செய்திகளாய்
வன்புணர்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கும்
நாட்கள்
நெஞ்சில் விதைத்துப் போகும்
வலியும் வேதனையும்
அந்தப் பக்கங்களிலேயே
தேங்கிப் போய்விடுகின்றன...

இங்கு
மனித வாழ்வியல் அறம் மறந்து
குற்றவுணர்ச்சி அற்று
இக்காம மிருகங்கள்
வாழ முடிந்த நரகத்திலும்
கல்வி கற்ற மூடர்கள் மத்தியிலும்
வாடிய மொட்டுக்களுக்கும்
அதன் செடிகளுக்கும்
பதில்கள் என்றும்
கேள்விக்குறி போல் நிற்கும்
நம்
அறியாமையும் இயலாமையும் தான்..

செவ்வாய், 29 ஜூலை, 2014

கண்ணீர் மலர்கள்

இறந்தவனின்
கண்ணீர்த் துளிகளாய்
சிகப்பும் மஞ்சளும்
பச்சை யிலையுமாய்
சிதறிக் கிடந்த
மலர்கள்
ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தன
மிதித்துக் கடந்துபோன
நான்குகால் வாகனத்தின்
திசை நோக்கி .......

திங்கள், 28 ஜூலை, 2014

கிழியாத இலைச் சருகு

பிறந்த காலையில்
நகரும் பேரூந்து இருக்கையில்
அமர்ந்து நகருகையில்
காற்றில் தவழ்ந்து வந்து
மடியில் அமர்ந்து
தழுவி பின்
பாதணியில் சறுக்கி விழும்
கிழியாத
இலைச் சருகுக்கு
தழுவி விட
சக உறவுமில்லை
தான் தழுவிய மனிதமுமில்லை...

வெள்ளி, 25 ஜூலை, 2014

புலன்களை ஒட்டிப்பார்க்கிறேன்

ஒவ்வொரு
கதையும் கவிதையும்
வாசிக்கப்படும் பொழுதுகளில்
அதனதன் எழுத்துக்களுக்கு
ஏற்ற வடிவங் கொணர்ந்து
வேறு வேறு
உருவங்கள் வந்து
உருண்டோடும் மனதில்..
கடந்த
சில வாரங்களில்
வந்து போகும்
உருவத்தில் ஏனோ
காதும் கண்ணும்
மூக்கும் உதடும்
தொலைந்து போயிருந்ததால்..
சமயங்களில் புத்தகத்தின்
முகத்தை மூடிவிட்டு
உருவத்திற்கு அதன் புலன்களை
ஒட்டிப் பார்க்கும்
விருப்பில்
கரைந்து போகிறேன்...

செவ்வாய், 15 ஜூலை, 2014

தென்றலும் அன்னியமாகும்....

பெரும்பாலும் பாலைவனப் 
பயணமாகிப்போகும் ரயில் பயணத்திலிருந்து 
எடுத்து வைத்த முதல் அடியிலேயே
உடல் சிலிர்க்க செய்யும் சாரலையும் 
உள்ளிழுத்து நுரையீரல் தழுவும் 
தென்றலையும் நுகர்ந்து கொண்டே 
தென் பொதிகை மலை மீது 
பெருமையோடு கண்களை பரப்பினேன்...
அடுத்த இரண்டு நாளில் 
இந்த அனிச்சை செயல்கள் 
அன்னியமாகும் போது
கைவிரலால் நுரையீரலை 
சிறை பிடித்துக் கொண்டிருப்பேன் 
சிங்கார நகரத்திலே யெனும்
பின் மன ஓட்டங்களோடு....

ஞாயிறு, 13 ஜூலை, 2014

மறுமொழி

புலர்ந்த காலை பொழுதில்
புரியாத கால்களின் ஓட்டங்களுக்கிடையே
மூதாட்டி இவள்
காத்திருக்கிறாள் பேரூந்திற்கு..
மேகங்கள் பகலவனை மறைத்து
நிழல் பரப்பியிருந்த போது
அருகில்
அவளின் முதிர்ந்த கணவன்
கையிலிருந்த பூ மாலை
இவர்கள்
இழவு வீடு போகிறார்கள்
என்று அழுது கொண்டிருந்தது....
முழங்கால் சில்லு வலிக்க நிற்பவள்
கண்களை இறுக்கி
கைகளை கூப்பிய போது
மறுமொழியாய்
பகலவன் வெளிச்ச முகம்
பரப்பி மறைந்தான்....
ஈமக்கடனுக்கு போய்சேர
பேரூந்து கிடைக்கவேண்டுமென
இவள் வேண்டியிருக்க கூடும்...

புதன், 9 ஜூலை, 2014

இந்த இதழ்கள் இடம்பெயராதா.....

வாரம் தவறாது
வாசல் கொண்டுவரும் வார இதழின்
முகப்பிலும்
இன்னபிற பக்கங்களிலும்
முழுக் காலும்
இடையு முரித்த பெண்கள்
இடை குறுக்கி
கிறக்கும் கண்களும்
முறுவல் புன்னகையுமாய்
பெரும்பாலும் திரைப்பட மாதவிகள்தான்..

வாசிக்கும் வாசகனின்
கண்களிலும் மனத்திலும்
இச்சைகளை
கிளர்ந்தெளச் செய்கிறார்கள்....

பின்னொருநாள் அதே இதழின்
வேறு பதிப்பின்
பக்கங்களை புரட்டி
பாதி கடந்திருந்த போது..

சாகசபட்சிகளால் எழுதப்பட்ட
பெண்ணியக் கவிதையும்
கட்டுரையும்
ஏகத்துக்கும் எடுத்துரைக்கும்
இதோபதேசம்
அதே வாசகனின் மனத்தில்
என்ன சிந்தையை
வித்திட முடியும்....

ஒன்றிலிருந்து மற்றொன்றை
புறக்கணித்து தான்
வாசிக்கவோ நேர்படவோ
வேண்டும் என்றால்
இந்த கவிதையை
நீங்கள் நிராகரித்துவிடுங்கள்...
ஆம் !
அதே நேரம்
இந்த வார இதழ்கள்
என் போன்றோர் களால்
நிராகரிக்கப் பட்டிருக்கும்....

திங்கள், 7 ஜூலை, 2014

பிசுபிசுப்பு..


நகர்புறச் சுவர்களில் 
ஒட்டிவைத்து மறைக்கப்பட்ட 
சில முகங்கள் 
என்றாவது ஒருநாள் 
ஒட்டப்பட்ட புதியமுகங்களின் 
ஊடே 
எட்டிப்பார்க்கும் போது
வெளிப்படும் 
வினாக்களும் விடயங்களும்
குழந்தை சூப்பிய விரலின் 
பிசுபிசுப்பு போல் 
ஒட்டிக் கொள்கின்றன..

ஞாயிறு, 6 ஜூலை, 2014

தீக்குளிப்பு..




கடந்துபோகும் சாலையோரம் 
யாருக்காகவோ
எரிந்து கொண்டிருந்ததில் இருந்து 
வரும் 
கரும்புகையில் முகம் பார்க்கும் 
ஆவலெழுந்து விரைந்தபோது 
அணைந்திருந்தது 
எதற்காகவோ தீக்குளித்த 
கற்பூரம்..