திங்கள், 29 ஏப்ரல், 2024

பிசிறு சிறுகதை வாசிப்பு

கதைகள் வாசிக்கத் தொடங்கிய நாட்களில் எழுதுவதற்கான எண்ணவோட்டங்கள் அதிகமாக ஆர்ப்பரிக்கும் என்னென்னவோ நினைவுகள் வந்து நெஞ்சில் வட்டமடித்துப் போட்டியிடும் ஆனால் எழுதுவதற்கு அமர்ந்தால் சில வரிகளுக்குள் வலிந்து திணிக்கத் தொடங்குவது போலத் தோன்றும்.

இதற்கு முன் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பினை முழுமையாக வாசித்திருந்தாலும் இன்று பிசிறு கதையை வாசிக்கையில் புதிதாக வாசிப்பது போன்ற எண்ண மாயம். 

மேற்சொன்ன கதைக்கான எண்ணவோட்டங்களில் ஒன்று பாடல் பற்றிய உரையாடல்கள். அப்பாவின் கடையில் மாலை நேரத்தில் வியாபாரிகள் கூடும் போது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் பற்றி பேசிப்பேசி நீளும் சொற்கள் அதை இசையமைத்தவர் படத்தின் பெயர் வெளிவந்த ஆண்டு எனத் தொடங்கி மற்றொரு வரியைச் சொல்லி அடுத்த பாடலுக்குத் தாவுவார்கள். யப்பப்பா என்றுச் சொல்லி நாக்கு பல்லில் அழுந்த க்க...க்க..ஒலியெழுப்பி கையையும் காலில் ஒரு தட்டுத் தட்டிக் கொள்வார் ஏ.என் மாமா..

பிசிறு கதை அந்த ஓட்டத்தில் இருந்தது இன்பத்தை ஏந்தியது மனதில்..

கதையிலிருந்து:
"ஆனையறுகுப் புதர்களின் ஓரம் எருமைகள் உருண்டு புரண்டு வெயிலுக்கு இதமாக சேற்றுப் பூச்சுமானம் செய்து கொண்டிருந்தன" என்று கதையின் தொடக்கத்தில் எழுதியிருக்கிறார். ஆனையறுகு எனக்குப் புதிதாக இருந்தது தேடிப் பார்த்தால் அறுகம்புல்லில் பலவகையிருப்பதையும் அறுகம்புல் தேடியலைந்த நாளொன்றும் நினைவில் தவழ்ந்தது.

அப்புறம் "ஆணியைப் பற்றுக்குறடால் பிடுங்கி விட்டு, மறுபடி குருத்தில் படாமல் அறைந்து மறுபக்கம் மடக்கினார்" என்றொரு வரி, ஆணியைப் பிடுங்கும் பற்றுக்குறடு என்ற சொல் எத்தனை அழகானது!!

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

தாள் கோப்பைக் குழம்பி

தூரத்துச் செம்பழுப்பு
கால் முட்டியில் அமிழ்ந்திருக்கும் 
கை
தொண்டையிலூறும் 
தாள் கோப்பைக் குழம்பி 
கண்ணாடிக்குள் மிதக்கும் 
எதிரெதிர் கண்கள் 
S7-க்காக S6-க்குள்
வந்த பயணி 

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

We call it சேனைக்கிழங்கு

ஒரு மதியம் இறைச்சல்களுக்கு மத்தியில் வெள்ளை நிறம் வழிந்தோடும் அலுவலகச் சிற்றுண்டியகத்தில் மேசைக்கு இருபுறமும் நாங்கள் ஏழு பேர் உணவருந்திக் கொண்டிருந்தோம். ஒருவர் ஆந்திரத்தைச் சேர்ந்தவர் ஒருவர் மலையாள வாடைத் துளியுமில்லாத மலையாளி. அன்றைக்கு உணவோடு பொறித்த சேனைக்கிழங்கும் இருந்தது, எல்லோரும் பகிர்ந்துண்ண நடுவே வைத்ததும் ஆந்திரத்தவர் கேட்டார் "வாட் இஸ் திஸ், பனானா?" 
"நோ... நாட் பனானா, ஐ டோண்ட் நோவ் த நேம் இன் இங்லீஷ்... வீ கால் ட் சேனைக்கிழங்கு" என்று சொல்லவும், இதமாக உப்பும் காரமும் தொண்டைக்குள் ஊறியதும் புன்னகைக்க ஏதுவாக இருந்தது.

"We call it சேனைக்கிழங்கு" என்று சொன்னதும் நம் தமிழ் அன்பர்களுக்குச் சிரிப்பு மேலிட்டது, இந்த மொழிக் கலப்பு அவர்களை ஏதோ செய்திருக்கிறது. சிரித்துக் கொண்டேன், But ஆனால் என்றுரையாடும் அவர்களை என்னச் சொல்ல முடியும்.

ஆந்திர நண்பர் தனக்கும் எல்லா காய்கறிகள் பெயரும் ஆங்கிலத்தில் தெரிவதில்லை என்றார் பெருந்தன்மையோடு. ஆமாம் உண்மைதான் என்று ஆமோதிக்கும் போது மலையாள நண்பர் "Elephant foot" என்று வரும் என்றார். 

உணவு வேளை இனிதே கலைந்தது!!

திங்கள், 15 ஏப்ரல், 2024

வடியத் தொடங்கியது

கிளியின் சொல்லில்
கிளியில்லை 
எங்கிருந்து வந்ததென்று 
திசை பார்க்கத் தோதற்ற நொடியில் 
இன்னொன்று இணைய
விருட்டென்று சாய்ந்து பறந்தன

தென்னை போல் 
ஓலை பெற்ற மரத்தின் 
குருத்தோலை நுனியிலிருந்து
வானம் வடியத் தொடங்கியது 


புதன், 10 ஏப்ரல், 2024

கனவு

நேற்றொரு தகவல்

இதற்கு முன்னொரு முறை
தோன்றிய பிறகு

பயணத்திற்காக காத்திருந்த 
முகம் மாறிப்போயிருந்த 
தாடைக்குக் கீழ் துளிர்விட்ட மயிரோடு 

காட்சியிலிருந்து அகன்றது அறியாமல்
அவளிடமிருந்து விடைபெறுதல்


ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

மாயம்

சில ஓவியங்கள் பார்வையாளனின் கவனத்தை ஈர்த்ததும் திசை திருப்பிப் போக விடாமல் அதனுள் பயணிக்க வைக்கும். 
பாதையா அடுக்குமாடியின் சிதைந்த படிக்கட்டுகளா என்ற எண்ண ஓட்டத்திற்கு அப்பால் அங்கங்கே முட்டி நிற்கும் சுவர்களைக் கண்டு வழி தேடித் திரியும் கண்கள் சில வண்ணங்களில் களித்து நெருடல் காணாத கோடுகளில் சறுக்கி பாதாளத்தில் விழுந்து பின் சிதைவுற்ற சொற்கள் சிலவற்றைக் கொறிக்கிறது.

ஓவியர் அமல் மோகன் வரைந்த இந்த ஓவியம் முகநூலில் அவரது பக்கத்தில் காணக்கிடைத்ததும் அது மீட்டிய ஒலிகளுக்கு வெகு நேரம் செவி சாய்த்திருந்தேன், கவிதை வாசிப்புப் போலிருந்தது.