சனி, 25 பிப்ரவரி, 2017

வன்முறையின் முகம்

2014-ல் தனி பிம்பமாக தன்னை முன்னிருத்தி மத்தியில் ஆட்சியை பிடித்து வாயால் வாள் சுழற்றும் மோடி எனும் பிம்பத்தின் விளைவால் ஏற்பட்ட சீரழிவினை வெளிப்படுத்தும் நூல் "சட்டப்படி நடந்த வன்முறைகள்".
2002 குஜராத்தில் இஸ்லாமியர்கள் படுகொலை சம்பவத்தின் சாட்சியாக உள்ளது இப்புத்தகம்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தினால் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகும் முதலமைச்சர் மோடி, அடுத்த மூன்று நாட்களில் தன்னை இம்மக்கள் வணங்குவார்கள் எனக்கூறியதோடு நிற்காமல் அடுத்த மூன்று நாளில் இஸ்லாமியர்களை அழித்தொழிக்கும் கலவரத்தினை தூண்டியிருக்கிறார், அதற்காக ரயிலில் எரிந்துபோன உடல்களை ஆங்காங்கே காட்சிக்கு வைத்து உணர்வுகளை வேட்டையாடியிருக்கிறார். இன்னும் பல உரையாடல்கள் சம்பவங்கள் வழக்குகளை பற்றிய தரவுகளை முன்வைக்கின்றது கலவர காலத்தில் காவல்துறை ஆட்சியராக இருந்த ஆர்.பி.ஸ்ரீகுமார் என்பவரால் எழுதப்பட்ட இந்நூல்.
நிலுவையிலிருக்கும் இரண்டாயிரம் வழக்குகளில் இரண்டில் தீர்ப்பு வந்தாலே மோடி அவ்வளவுதான் என நிறைவடையும் புத்தகம் எழுதப்பட்டது 2010-ல், அடுத்த நான்காண்டிலிருந்து தற்போது வரை பிரதமராக நமக்கு காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். என்ன மாதிரியான நீதித்துறையை கொண்டது நமது நாடு. சமீபத்தில் தீர்ப்பு வெளியான சொத்துக்குவிப்பு வழக்கிலும் நீதித்துறை நடந்துகொண்ட விதம் நம்பிக்கையை குலைப்பதாகவே உள்ளது. மீண்டும், என்ன மாதிரியான நீதித்துறையை கொண்டது நமது நாடு??

வீரபத்திரர் - ஓவியம்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

ஒரு புத்தகத்திற்கு முன்

ஒரு புத்தகத்தினை வாசிக்கத்துவங்கும் முன் இதுவரை நூல் வாசம் ஏற்பட்ட விதத்தையும் அதற்கான ஏக்கங்களையும் பதிவு செய்துவிடுவது முறையாக இருக்குமென்று கருதுகிறேன்.
கீழப்பாவூர் வடக்குப்பேரூந்து நிறுத்தத்திலிருந்து மேற்குப்பக்கமாக குறும்பலாப்பேரி நோக்கி நீளும் சாலையின் வலது ஓரம் ஆர்.சி துவக்கப் பள்ளிக்கு முன்னதாகவே சிறியதா பெரியதா என கணிக்க அல்லது கூற இயலாத கட்டடம். அதற்குள் நுழைய உயரமான கோடுபோட்ட ஏட்டில் பென்சிலால் கையெழுத்திட்டு உள் சென்று கல்கியையும் கல்கண்டினையும் புரட்டியதாக நினைவு, அக்கா என்ன புத்தகம் எடுத்துக்கொண்டாள் என்பது நினைவில் இல்லை ஆனால் நிச்சயமாக ரமணிச்சந்திரன் வகை எழுத்துக்களாக இருக்குமென இப்போது எண்ணுகிறேன். அது "டவுசர்" அணிந்து சுற்றிய காலம்.

பின் குற்றாலம் சென்று திரும்புகையில் தென்காசி தபால்நிலைய நிறுத்தம் அருகே பழைய புத்தகக்கடையில் கண்மணி ராணிமுத்து நாவல் தொடர் என்றே நினைக்கிறேன், அவைகளை ஐந்துக்கு குறையாமல் அவள்கள் இருவரும் அள்ளிக்கொண்டுவருவதை கவனித்திருக்கிறேன்.

பெரியப்பா வீட்டில் அவள்களின் அலமாரியை துளாவினால் எஸ்.பி.பி பாடல் புத்தகங்கள் காணக்கிடைக்கும், இரண்டு மூன்று வரிகளுக்கு மேல் ராகம் வராமல் தூக்கியெறிந்துவிட்டு கோலியோ பம்பரமோ ஆட ஓடிவிடுவதுண்டு.
கீழப்பாவூர் காமராஜர் பூங்காவிற்கும் தினசரிச்சந்தைக்கும் நடுவே கிளை நூலகம் அமைந்தபோது உறுப்பினராக்கிக்கொண்டு சுபாவையும் ரமணிச்சந்திரனையும் வாசித்தது அவள்களின் பாதிப்பாகவே இருக்கவேண்டும். இதனை பொழுதுபோக்கு எழுத்து என வரையறை செய்யக்கூடும் இலக்கிய உலகில். அது அப்படித்தான் இருந்தது. பின் கபடி விளையாட்டு உடற்பயிற்சி சதுரங்க விளையாட்டு போட்டாஷாப் என சிறு இடைவெளிக்குப்பின் செயலூக்கத்திற்காக வாசித்தது இல்லை வாசிக்க முயற்சித்தது. இடைவெளியில் பள்ளிச்சிறுவனாக என்ன செய்துவிட முடியும். விளையாட்டுதான். கிரிக்கெட் கிறுக்கு.

வேலைக்குச்செல்லும் வரையிலும் சென்றபின்னும் புத்தகங்களை மறந்திருந்த காலம். நண்பன் பாலா ஹைதராபாத் பயணத்தின் போது பொன்னியின் செல்வன் கதையை விவரித்தபோது ஓர் அகத்தூண்டல், பின்னொருநாள் அந்நாவலின் மின்னூல் கிடைக்கவும் வாசிக்க கூறினான். மும்பை அலுவலகத்தில் அச்செடுக்க அச்சமில்லை என்பதனால் இரண்டு பாகத்தை புத்தக வடிவில் அச்செடுத்து, காலைக் கடனுக்குப்பின் கையிலெடுக்க மனம் ஒன்றிப்போயிருந்தது.

மாட்டுங்கா அரோரா திரையரங்கில் படம் பார்த்துவிட்டு மணீஸ்-ல் மதிய சாப்பாட்டை உள்ளே தள்ளிவிட்டு நடந்தால் கிரி டிரேடிங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களையும் டி.வி.டி-க்களையும் நோட்டமிட்டு விலையை பார்த்ததும் அங்கேயே வைத்துவிடுவதுண்டு, ஆனால் மற்றொரு நாள் சுஜாதாவின் "ஓடாதே" குறுநாவலை அவன் வாங்கியபோது சுஜாதாவின் அறிமுகம். எடுத்ததும் வாசித்து முடிக்குமளவு வேகம்.
                                    தொடரும்......

திங்கள், 20 பிப்ரவரி, 2017

அரசியல்வாதிகளின் அந்தரங்கம்

நேற்றுவரை எதிர்த்தவர்கள் இன்று புகழுரைக்கிறார்கள், எது நல்லது எது கெட்டது என்பதெல்லாம் கரை சென்றுவிட்ட காலத்தில் குறைந்தபட்சம் என்ற சொல்லாடல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. குறைந்தபட்ச மக்கள் நலன், குறைந்தபட்ச பகுத்தறிவு இப்படி சிலபல உண்டு. இப்பொழுது அதுவும் இல்லை நேற்று ஏமாற்றியவன் இன்று ஏகநாயகன் ஆகிறான்.

அரசியல் பேசுவதென்றாலே அரசியல்வாதிகளைப்பற்றி பேசுவது என்றாகவே இருந்து வருகிறது. ஏனென்றால் மக்கள் நலன் என்பதை மக்களே ஏற்றுக்கொள்ளாத ஒரு முட்டாள் சமூகம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. எல்லாம் பணம் எல்லோரும் கொள்ளையர்கள் இங்கே யாரும் விதிவிலக்கல்ல. மக்கள் மக்களாக இல்லை கட்சியவாதியாக, பச்சோந்தியாக, போலியாக வாழ்கிறோமென்று பிழைப்புவாதத்தில் புரள்கிறோம்.

அரசியல் பேசுகிறோமென்று அரசியல்வாதிகளின் அந்தரங்கங்களை வார்த்தைகளால் தொட்டு உணர்சிகளை வெளிப்பபடுத்திக்  கொண்டிருக்கிறோம் இவைகளே வரலாறாகவும் எழுதப்படுகிறது.

நூறு செயற்கைக்கோள்களை இராக்கெட் மூலம் விண்ணில் விடுவதெல்லாம் சாதனையா? சாக்கடைகளை, முறையான வடிகால்களை உருவாக்குவதன் தேவையை, தாம் வாழும் நிலப்பரப்பில் நீராதாரத்தை பேணுவதற்கு சிந்திக்காத மூளை நிலாவுக்கும் செவ்வாய்க்கும் இயந்திரங்களை அனுப்பி அங்கொரு இயந்திரங்களின் குப்பைத்தொட்டியை உருவாக்க எத்தனிப்பது ஏன்?

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

கிழிப்போம்

எதையும்
செய்து கிழிக்க
இயலவில்லை
ஆதலால்
கிழித்துக்கொள்கிறோம்
சட்டையை

அதற்குப்பிறகு

வேகத்திற்குப் பின்
வேட்கை

அதற்குப்பிறகு
வெறுப்பே பிரதானம்.

புதன், 15 பிப்ரவரி, 2017

ஓவிய சந்தை

ஓவியங்களுக்கான இடம் திறந்தவெளியில் அமைந்திருப்பது பெருமகிழ்ச்சியை மனதிற்குள் உருவாக்கியிருக்கின்றது. மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவிற்கு இதற்குமுன் ஒருமுறை சென்றிருக்கிறேன் அது நேரத்தை போக்குவதற்கு, கடந்த ஞாயிறன்று பொழுது ஆக்கத்திற்காக செல்ல நேர்ந்தது. ஐம்பது ஓவியர்கள் தங்களது ஓவியங்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்திருந்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான சிறப்புகளை கரிக்கோல் கோடுகளாலும், நீர் வண்ணத்திலும், எண்ணெய் வண்ணங்களிலும், காகிதத்தை வெட்டி ஒட்டியும் வெளிப்படுத்தியிருந்தனர். அங்கே ஒன்பதாம் வகுப்பு சிறுவன் வரைந்திருந்த ஓவியங்கள் வெகுசிறப்பான தோற்றங்களை ஏற்படுத்தியது, பாராட்டிவிட்டு நகர்ந்தேன்.
ஓவிய நுணுக்கங்களை கண்டடைய வரைந்து பழகுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல கலைஞர்கள் வரையும் கோடுகளை, தீட்டும் வண்ணங்களை அவதானித்தல் நமக்குள் துளி மாற்றத்தையேனும் விளைவிக்கும். ஓவியர் மணவாளன் வரைந்த உருவப்படமாகட்டும், ஓவியர் ஜோதி வரைந்த நீர்வண்ண நிலப்படமாகட்டும் வரைதலுக்கான புரிதலை ஏற்படுத்த தவறவில்லை. ஓவிய சந்தை வெறுமனே வியாபாரக்களமாக மட்டுமில்லாமல் கற்றலுக்கான விதைகளைத் தூவும் பணி பாராட்டுதலுக்குரியது வாழ்த்துகள் ஓவிய நண்பர்களே.

சனி, 11 பிப்ரவரி, 2017

தண்ணீர் - அசோகமித்திரன்

பம்பு அடித்து தண்ணீர் பொங்கிவரும் வேளைக்கான மூச்சிரைப்புடனான காத்திருப்பை வாசிக்கும் போதே, சென்னை வந்தபின் இரண்டு வருடங்கள் நண்பர்களுடன் தங்கியிருந்த அறை வாசம்தான் நினைவில் வழிந்தோடியது. பொதுவாக புதினம் அல்லது சிறுகதைகளை வாசிக்க நேரும்போது முதல்பக்கத்தை முடித்து அடுத்தப்பக்கம் திருப்புவதற்குள் வாழ்வின் நினைவுகளை அடுக்கத்தொடங்கினால் அதைவிட சிறந்த படைப்பொன்று இருந்துவிட முடியுமா. சாவதானமாக எண்ணங்களை ஓடவிட்டுவிட்டு தொடர்ந்து வாசித்தல் பேரின்பம்.
ஜமுனாவுக்கும் சாயாவுக்குமான உறவு, நீரின்றி வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு பணிக்குச் செல்லும் சாயா ஹாஸ்டலுக்கு போய்விடப்போவதாகக் கூறுபவள் ஒருநாள் சென்றும் விடுகிறாள். சினிமா ஆசையில் பாஸ்கர்ராவிடமும் படத்தயாரிப்பாளர்களிடமும் உடலை காட்சிக்கு வைப்பவளாகவும் குழாயடியில் நீருக்கு காத்திருக்கையில் மனித உணர்ச்சிகளில் அதுவொன்று மட்டும் மேலோங்கிய கண்களை வெறுப்பவளாகவும், தங்கை சாயா இல்லாத வேளையை தனிமையை விரும்பாத தற்கொலை செய்யத்துணிபவளாகவும் புதினத்தில் முதன்மை காரணியாக வருகிறாள் ஜமுனா.


அதிகாரிகளின் அலட்சியங்களை காட்சிப்படுத்தும் உரையாடல்கள் அன்றும் இன்றும் மாறாத பிணக்குகள்.


டீச்சரம்மாவிடம் அழுது புலம்பும்பும் போது அவள் தன்கதையை ஜமுனாவிடம் கூறி ஆறுதல் மொழியும் இடம் பெண்களின் வாழ்வை எங்கனம் கேள்விக்குறியாக்கி விடுகிறது சமூகம் என்பதை மறுப்பதற்கில்லை, அதுவும் பிராமணப்பெண்கள். டீச்சரம்மாவின் கல்யாணக்கதை கேட்கையில் உள்ளம் பதறித்தான் போகிறது. ஒருமுறை ஜமுனா அவள் வீட்டிற்கு போகும்பொழுதில் அங்கிருக்கும் இருமல் கிழவரும் பொய்யாக உறங்கும் கிழவியும் அவளது மாமனார் மாமியாராகத்தான் எண்ணத்தோன்றியது, பின்னால் அவள் கதை கேட்கையில் ஏற்படும் அதிர்வு மனதை குலுக்குகிறது. பதினைந்து வயது குழந்தையை நாற்பத்தந்து வயது நரை கிழத்திற்கு மணம் முடித்தால்?


ஜமுனாவும் சாயாவும் அவர்கள் அம்மாவை காணச்செல்லும் போது அவர்களை வெளியே போ வெளியே போ என விரட்டும் பாட்டியான கிழவிக்கும் டீச்சரம்மா வீட்டில் ஜமுனாவை வெளியே போ வெளியே போ என விரட்டும் மாமியார் கிழவியாக்கும், "கடந்தவாரம் ஓவியச்சந்தை பார்க்கச்சென்ற போது மைலாப்பூர் நிறுத்தத்தில் சில நிமிடங்கள் காத்திருக்கவேண்டியிருந்தது. அப்போது அங்கிருந்த பாட்டியொன்று பொம்பளையளெல்லாம் இந்து தர்மத்தின் படிதான் வாழனும் இல்லைன்னா அதுங்கல்லாம் எதுக்கு வாழனும் என அருகிலிருப்பவரிடம் கத்திக்கொண்டிருந்தது. அவன் ஆமாம் வெட்டிப்புடணும் என்றான்." இம்மூன்று கிழமும் ஒத்துப்போக இடமிருப்பதாகவே தெரிகிறது. புதினம் என்பது வெறும் புனைவல்ல.

 மழைக்குப் பின் பம்பில் வரும் சாக்கடை நீரும், சேற்றில் சிக்கிக்கொண்ட காருடன் பாஸ்கர்ராவும், மூன்றுமாத கர்ப்பத்துடன் ஜமுனாவும் இப்புதினத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தாகம் குட்டிக்கதை