செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

ஒரு புத்தகத்திற்கு முன்

ஒரு புத்தகத்தினை வாசிக்கத்துவங்கும் முன் இதுவரை நூல் வாசம் ஏற்பட்ட விதத்தையும் அதற்கான ஏக்கங்களையும் பதிவு செய்துவிடுவது முறையாக இருக்குமென்று கருதுகிறேன்.
கீழப்பாவூர் வடக்குப்பேரூந்து நிறுத்தத்திலிருந்து மேற்குப்பக்கமாக குறும்பலாப்பேரி நோக்கி நீளும் சாலையின் வலது ஓரம் ஆர்.சி துவக்கப் பள்ளிக்கு முன்னதாகவே சிறியதா பெரியதா என கணிக்க அல்லது கூற இயலாத கட்டடம். அதற்குள் நுழைய உயரமான கோடுபோட்ட ஏட்டில் பென்சிலால் கையெழுத்திட்டு உள் சென்று கல்கியையும் கல்கண்டினையும் புரட்டியதாக நினைவு, அக்கா என்ன புத்தகம் எடுத்துக்கொண்டாள் என்பது நினைவில் இல்லை ஆனால் நிச்சயமாக ரமணிச்சந்திரன் வகை எழுத்துக்களாக இருக்குமென இப்போது எண்ணுகிறேன். அது "டவுசர்" அணிந்து சுற்றிய காலம்.

பின் குற்றாலம் சென்று திரும்புகையில் தென்காசி தபால்நிலைய நிறுத்தம் அருகே பழைய புத்தகக்கடையில் கண்மணி ராணிமுத்து நாவல் தொடர் என்றே நினைக்கிறேன், அவைகளை ஐந்துக்கு குறையாமல் அவள்கள் இருவரும் அள்ளிக்கொண்டுவருவதை கவனித்திருக்கிறேன்.

பெரியப்பா வீட்டில் அவள்களின் அலமாரியை துளாவினால் எஸ்.பி.பி பாடல் புத்தகங்கள் காணக்கிடைக்கும், இரண்டு மூன்று வரிகளுக்கு மேல் ராகம் வராமல் தூக்கியெறிந்துவிட்டு கோலியோ பம்பரமோ ஆட ஓடிவிடுவதுண்டு.
கீழப்பாவூர் காமராஜர் பூங்காவிற்கும் தினசரிச்சந்தைக்கும் நடுவே கிளை நூலகம் அமைந்தபோது உறுப்பினராக்கிக்கொண்டு சுபாவையும் ரமணிச்சந்திரனையும் வாசித்தது அவள்களின் பாதிப்பாகவே இருக்கவேண்டும். இதனை பொழுதுபோக்கு எழுத்து என வரையறை செய்யக்கூடும் இலக்கிய உலகில். அது அப்படித்தான் இருந்தது. பின் கபடி விளையாட்டு உடற்பயிற்சி சதுரங்க விளையாட்டு போட்டாஷாப் என சிறு இடைவெளிக்குப்பின் செயலூக்கத்திற்காக வாசித்தது இல்லை வாசிக்க முயற்சித்தது. இடைவெளியில் பள்ளிச்சிறுவனாக என்ன செய்துவிட முடியும். விளையாட்டுதான். கிரிக்கெட் கிறுக்கு.

வேலைக்குச்செல்லும் வரையிலும் சென்றபின்னும் புத்தகங்களை மறந்திருந்த காலம். நண்பன் பாலா ஹைதராபாத் பயணத்தின் போது பொன்னியின் செல்வன் கதையை விவரித்தபோது ஓர் அகத்தூண்டல், பின்னொருநாள் அந்நாவலின் மின்னூல் கிடைக்கவும் வாசிக்க கூறினான். மும்பை அலுவலகத்தில் அச்செடுக்க அச்சமில்லை என்பதனால் இரண்டு பாகத்தை புத்தக வடிவில் அச்செடுத்து, காலைக் கடனுக்குப்பின் கையிலெடுக்க மனம் ஒன்றிப்போயிருந்தது.

மாட்டுங்கா அரோரா திரையரங்கில் படம் பார்த்துவிட்டு மணீஸ்-ல் மதிய சாப்பாட்டை உள்ளே தள்ளிவிட்டு நடந்தால் கிரி டிரேடிங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களையும் டி.வி.டி-க்களையும் நோட்டமிட்டு விலையை பார்த்ததும் அங்கேயே வைத்துவிடுவதுண்டு, ஆனால் மற்றொரு நாள் சுஜாதாவின் "ஓடாதே" குறுநாவலை அவன் வாங்கியபோது சுஜாதாவின் அறிமுகம். எடுத்ததும் வாசித்து முடிக்குமளவு வேகம்.
                                    தொடரும்......

4 கருத்துகள்:

வலிப்போக்கன் சொன்னது…

ஒரு புத்தகத்திற்கு முன்----தொடருங்கள்....

Yarlpavanan சொன்னது…

அருமையான கருத்துகளை வரவேற்கிறேன்.

K. ASOKAN சொன்னது…

நன்றி அனைத்து நன்றாக இருக்கிறது

Unknown சொன்னது…

அருமை