வெள்ளி, 30 மே, 2014

பன்னாட்டு அலுவல் கலை இதுவோ..?

நடுநிசி நாய்களும் 
நன்றியுணர்ந்து அசந்திருக்கும் வேளை
காளைகளும் கன்னிகளும் 
களித்திருக்கும் நட்சத்திர விடுதியில் 
குடி ஆனவர்கள் மட்டுமே 
அனுமதிக்கப்படும் ஓர் அறை
உயர் அழுத்த சத்தத்தில் 
சிதைந்து கொண்டிருக்கும் 
செவிகளுக்கு மத்தியில் 
சிதைந்து போகும் 
சிலையிலிருந்து விழும் 
மக்கிப்போன மண் போல 
சிக்கனமாய் 
உடையை உதிர்த்துக் கொண்டே 
மையத்தை அடைந்தவளின் 
பின்னல் அவிழ்ந்த தலைமுடியில் 
எஞ்சியிருக்கும் பெண்மையும் 
கரைந்து கொண்டிருந்தது 
மது தந்த மயக்கத்தில் 
கிறங்கித் தவிக்கும் விழி கொண்டவளின் 
இடை மறித்து 
இதழ் சுவைத்தான்
களிப்பிலிருந்த கள்வன் ஒருத்தன்..

தொட்டவனை 
தொடுக்கும் அம்புப் பார்வை வீசும் 
புதுமைப் பெண்ணொருத்தி 
இருந்திருக்கவில்லை யெனும் 
ஆதங்கத் தோடு 
மனம்
ஊனமாக நின்றிருந்தேன்....

வியாழன், 29 மே, 2014

மழையின் உறவு...


மழையின் உறவு



அது ஒரு மழைநாள் 
மூன்று ஒன்பதுகள் 
நிகழ்ந்துவிட்ட போதும் 
முதல் மழையில் நனைந்ததில்லை.. 
விழும் அத்தனை துளிகளும் 
எனக்கென விழுமெனக்கூட 
நினைத்திருக்கிறேன்.. 
துளிகளுக்கு 
துணைகளின் தேவை இருப்பதில்லை 
தொடக்கத்தில் தனியாகவே 
விழுகின்றன.. 
இறுதியும் அப்படியே ஆகிப்போகிறது 
இடையில் வருவது 
இடையிலேயே போய்விடுகிறது...

புதன், 28 மே, 2014

சிதறிப்போகும் உருவங்கள்...!

நெடு நாட்களாக 
எதிர்பார்த்திருந்த பிற்பகல் வேளை 
கரு மேகங்களுக்கும் 
கருப்பை வெறுக்கும் வெண்மேகத்திற்கும் 
இடையே உருவங்களைத் தேடி 
தொலைந்து கொண்டிருந்தேன் 
இல்லை 
சிதறிப் போயிருந்தேன் 
பருவம் வந்த 
பசுவொன்று வெண்மேகத்திரளில் 
ஒளிந்து கொண்டிருந்தது... 
யார்மீதோ 
அதீத கோபத்தில் 
குதிரையொன்று கருமேக 
உருவத்தில் பாய்ச்சலுக்கு 
தயாரானது... 
இப்படி 
உருவங்களைத் தேடி கிறுக்கு 
பிடித்தவன் போல் 
கண்களை மேய விட்டிருக்கிறேன்.. 
சிந்திய தண்ணீரில் 
மானையும் மயிலையும் 
உள்ளங்கையில் 
குழைத்து வைத்த சீயக்காயில் 
மணல் மேட்டையும் 
பிய்ந்துபோன 
சுண்ணாம்பு பட்டைச் சுவரில் 
தெரியும் உருவத்தை 
நண்பனிடம் உரிமையோடு 
அடித்துக் கூறும்போதே 
நிறைந்து கொண்டிருக்கும் 
போத்தலில் வெண்குமிழ்கள் 
சேர்ந்து செதுக்கிவைத்த 
சிலைகளையும் சிலாகித்திருப்பேன்.. 
நித்திரையில் 
முகமறியா வரும் 
உருவத்தையும் நிசத்தில் 
தேடிக் கொண்டே 
மறைந்து போன 
முகங்களின் உருவத்தை 
மற்றொரு முகத்தில் 
தேடிக் கொண்டிருக்கிறேன்...

வியாழன், 8 மே, 2014

முழு நிலவு பார்க்க !!

முழு நிலவு பார்க்க
முழு நிலவு
நாளன்று அவளுக்கு
வாழ்த்து கூறவேண்டுமென
எண்ணியிருந்தேன்..
இன்று நிலவு பார்த்தபோதுதான்
தெரிந்தது
வாழ்த்துச் சொல்லும் நாள்
வந்ததென்று...

மலருக்கு அன்னியப்பட்டவள்
இன்று சிறு சிறு
நட்சத்திர மல்லிகைகளை
கோர்த்து உடுத்தியிருந்தாள்
அவள் கூந்தலுக்கு...

சிரிப்பினை
சிக்கனமாய் தந்துவருபவள்
இந்நாளில் மட்டும்
முன்வாசல் கோலம்போல்
வரைந்து விட்டு செல்கிறாள்
முழு நிலவு பார்க்க...