வெள்ளி, 24 ஜனவரி, 2020

நட்சத்திரவாசிகள் - வாசிப்பனுபவம்

கார்த்திக்-ன் டொரினா, நட்சத்திரவாசிகள் இரண்டுமே இந்த ஆண்டு சென்னை புத்தகக்காட்சியில் வாங்கினேன். எனக்கென்னவோ நாவலை முதலில் வாசிக்கலாம் என்றே எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது, அப்படித்தான் பொங்கல் விடுமுறைக்கு கையோடு அழைத்துச்சென்றேன் நட்சத்திரவாசிகளை. விடுமுறையில் தொடர்ச்சியாக வாசிக்க இயலாததால் அதற்குப் பிறகான மூன்று நாட்களின் சில மணிநேரங்களை எடுத்துக்கொண்டு வாசித்து முடித்தேன்.

மிக இயல்பாக ராமசுப்பு அறிமுகமாகிறார், கற்பனைக்கு எல்லை உண்டா என்றெல்லாம் வியாக்கியானம் செய்ய விரும்பவில்லை, ஆள் புகவியலாத இடத்துக்குள் எப்படி அந்த "ஸ்விகி" வண்டிக்காரன் புகுந்து போயிருப்பான் என வாசிப்பில் ஒரு நிமிடம் அப்புகவியலாத இடத்துக்குள் சென்று மீண்டு, புனைவிலும் ஒரு நியாயம் வேண்டாமா என்றெண்ணிக் கடந்தால். தகவல் தொழில்நுட்பத் துறை சாராதவர்களை அதிகம் குழப்பாமல் அதன் அக புற உலகினை வெளிப்படுத்தக்கூடிய எழுத்து, அத்தோடு சில வார்த்தைகளுக்கான விளக்கங்களை கொடுத்திருப்பது புரியாமையை தவிர்க்க ஏதுவாக உள்ளது. பேப்பர் போடுதல் என்ற சொல்லைக் கண்டதும் கூடுதலாக சில தடவைகள் அதை வாசித்துப் பார்த்தேன், இந்த "போடு" எனும் சொல்லை தமிழன் வாயில் இத்தனை அழுத்தமாக பதித்தது எது என்ற கேள்வியை எனக்குள் அடிக்கடி கேட்டுக்கொள்வதுண்டு, இப்படி ஒரு சில சொற்கள் மட்டும் அன்றாடத்தில் தவிர்க்க இயலாமல் பிறவார்த்தையோடு ஒட்டாக பயன்படுத்துவது நமது சொல் வறட்சி என்றே கருத வேண்டியிருக்கிறது. "கோபாலும்" "சி"யும் என எழுதியிருக்கும் வார்த்தைகளுக்கு சிறு விளக்கம் கொடுத்திருக்கலாம், இந்த மென்பொருள் பற்றி அறியாதவர்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு, கோபாலை மனிதர் என நினைத்து வாசித்துவிட்டேன் முதலில், பின் சிரித்து மீண்டேன்.

பொதுவாக அலுவலகங்களில் காவலாளிகளாக இருப்பவர்களின் உலகம் பெரும் வியப்புகளைக் கொண்டவை, அவர்களின் வேலை நேரம் மற்றும் பணிச் சூழல் அலுப்பையும் மனச் சிதைவையும் தரக்கூடியவையாகவே இருக்கும், அப்படியான ஓர் மனிதரிலிருந்து கதையை தொடங்கியதே இப்புதினத்திற்கு சிறப்பை அளிக்கிறது. அலுவலகத்திற்குள் நுழைந்ததும் முதலில் பார்வையில் விழுவது அவர்களின் கண்களே. இவர்களின் உலகுக்குள் அதிகம் பயணிக்காமல் ஒரு முக்கிய நிகழ்வோடும் அறிமுகத்தோடும் ராமசுப்புவின் கனத்த பொழுதை முடித்துக்கொண்டு மற்றவர்களின் உரையாடல்களுக்குள் நெருடலின்றி நம்மை அழைத்துப்போகிறது கதையின் பாங்கு.

ஆர்.கே மற்றும் அர்ச்சனா இடையிலான உரையாடல் நுனிப்புல் மேய்ச்சலாக அவர்களின் மேல்நிலையிலும் கீழ்நிலையிலும் பணி செய்பவர்களை விமர்சனம் செய்து கொண்டு, அவளின் டிவோர்சியா என்ற ஒற்றை வார்த்தை அவர்களது பேச்சினை மடை மாற்றி உணர்வுப்பூர்வமானதாக்கி, குடும்ப வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் காரணிகளை மீரா நித்திலனின் உறவு வழியே நமக்குள் கடத்திவிடுகிறார் கதைசொல்லி கார்த்திக். நாவல் தொடர்கதை போல இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதனால் அத்தியாயத்திற்கு அத்தியாயம் காட்சியும் மனிதர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள், ஆனாலும் இவற்றிற்கிடையேயுள்ள தொடர்பில் எவ்வித குழப்பமுமின்றி எல்லா தரப்பு மனிதர்களையும் கதைக்குள் இழுத்துவர விரும்புவது போல புரிந்துகொண்டு தொடர்ந்து வாசிக்கலாம். அப்படித்தான் பள்ளி முடித்த கையோடு உதவித்தொகையோடும் பட்ட மேற்படிப்போடும் வேலையில் சேரும் விமலும் ராக்கேஷும் கதைக்குள் வருகிறார்கள், இவர்கள் புனைவின் போக்கில் என்னவாக மாறி நிற்பார்கள் என எண்ணிக் கனக்கிறது மனம். ஆனால் இவர்கள் கதையில் வெறும் குறியீடுகளாக மாறி நிற்பதாகப் படுகிறது. நாவலின் போக்கில் இவர்களின் தோற்றம் கல்வி மற்றும் மொழி சார்ந்த சமகாலத்தின் கோட்பாடுகளை  கேள்விக்குட்படுத்தி ஒதுங்கி நிற்கிறது.

நவீனம் அல்லது தொழில்நுட்பம் ஏற்படுத்தியிருக்கும் அவசர வாழ்க்கை முறைக்கு மிக முக்கியமான பங்களிப்பது செல்பேசியும் அதன் அழைப்புகளும், இவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கம் மனச்சிதைவை உண்டாக்கும் வல்லமை கொண்டவை, இச்சிக்கலை மிக சாதுர்யமாக தன் வாக்கியத்தில் உருமாற்றியிருப்பது வாசிப்பை உயிர்ப்புடன் நகர்த்துகிறது. "மனது வகுப்பில் தங்கவில்லை. வராத நேரத்தில் வந்த அழைப்பு. சீட்டுக்கட்டு விளையாட்டில் தேர்ந்தவனின் கைகளிலிருந்து பறக்கும் சீட்டுக்களைப் போல அவன் மனம் அந்தச் சிறுகணத்தில் வாழ்வில் சாத்தியமாகக்கூடிய அத்தனை துயரங்களையும் காட்சி காட்சியாக உருவி வீசியது" என்பதில் இக்காலகட்டத்தின் அதிர்வுக்குள்ளாக்கும் உளச்சிக்கலை காட்சிப் படுத்தியிருப்பது வெகு இயல்பாக நம்மை கதைக்குள் இழுத்துப் போகிறது.

இப்பணி சார்ந்த உட்கட்டமைப்புகளை, அதன் ஒவ்வொரு நிலையிலும் செயல்புரியக்கூடிய மனிதர்களைப் பற்றிய அவதானிப்பும் பண்புகளும் மிக இயல்பாக கூறப்பட்டிருப்பது அவர்களின் வாழ்வை புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது. நேர மேலாண்மையில் இத்தொழிலில் பணி செய்வோரில் எவ்வளவு பேர் பின் தங்குகிறார்கள் என்பதை குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது மிகவும் கவனத்திற்குரியது, குறிப்பாக வேலையை ஒதுக்கிவிட்டு விளையாடுவதும், சமூக வலைதளங்களில்  பொழுதை கழிப்பதும் அல்லது வேலைகளுக்கிடையிலேயே (அப்படியும் ஆட்களுண்டு, ஒருவேளை காதில் பாடலோ வசனமோ ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டுமென மரபின் வழி, காடு கழனியில் வேலை செய்த நாட்டுப்புற மக்களின் பாடலிலும் பேச்சிலுமிருந்து நமக்குள் கடத்தப்பட்டிருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது) செல்பேசியில் படம் பார்ப்பதும், பாடல் கேட்பதும்,  இயல்பாக மாறியிருக்கிறது, ஒரு நாளில் எத்தனை முறை நமது விரல்கள் செல்பேசியை தடவிக் கொடுக்கின்றன என எண்ணிப் பார்த்தால் இது விளங்க வாய்ப்பிருக்கிறது. இதுவொரு பொது நோயாகவும் மாறியிருப்பது வருந்தத்தக்கது.

ஒருவன் எவ்வளவு திறமையுடன் வேலை செய்தாலும் அதை பிறர் கண்பட குறிப்பாக மேலாளர்கள் கண்ணுக்கு காட்சிக்குட்படுத்த வேண்டியிருப்பதன் மேனாமினிக்கித்தனம், பணியில் போலிகளை உருவாக்கும் வல்லமை கொண்டதாகப் படுகிறது. நிறுவனத் தலைமையிடம் தனது பணி முன்னேற்றத்தையும், தன் மதிப்பிடுதலிலும் அதன் வழி வழங்கப்படும் நிதி அதிகரிப்பையும் பற்றி எவ்வளவு கேள்விகளை தலைமையின் முன் வைத்தாலும் அதற்கு உரியது போன்ற விளக்கத்தை மட்டும் பதிலாக அவர்கள் எடுத்துரைப்பதை அறிந்த நித்திலனுக்கு இருக்கும் மனநிலையை பெரும்பாலானோரிடத்தில் உருவாக்கி வைத்திருப்பதில் பெருநிறுவனங்கள் வெற்றியடைந்திருக்கின்றன என்றே கருத வேண்டியிருக்கிறது. பார்கவி போன்றோர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்படும் பொழுது அவளிடமிருந்து வெளிப்படும் ஆத்திரம் ஒவ்வொருவரிடத்திலும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அழுந்திக் கிடக்கும், சிலர் சாஜூவைப் போல கணக்கிடல்கள் மூலம் ஆத்திரங்களை ஆரப்போடுவதுண்டு. அதே பொழுதில் அந்நிறுவனங்கள் பணியாளர்களுக்காக சில திட்டமிடல்களைச் செய்கிறார்கள், அதை சரிவர பயன்படுத்தி குறிப்பிட்ட வெற்றியை அடையவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஆங்கில மொழித்திறன் வகுப்புகள், இதர தொழில்நுட்பம் சார்ந்த தகுதி மேம்பாட்டுக்குரிய பயிற்சிகள்.

சத்தியமூர்த்தியின் பழைய அலுவலகத்திலிருந்த பிள்ளையார் தற்போது சாய்பாபாவாக மாறியிருப்பதை பகடி செய்திருப்பது போன்ற சில காட்சிகளை நுட்பமாக அணுகவேண்டியிருக்கிறது. அதற்கிடையே "அவளால் வேலையை விட முடியவில்லை. குழந்தையை டே-கேரில் விட முடிந்தது" என்பது சினிமாத்தனமான வாசகமாக இருந்தாலும் அவ்வளவு எளிதாக கடந்து விட இயலாத இக்காலத்தின் மாற்றம். டீக்கடை பையனிடம் சிட்டையில் தான் கடனாக வாங்கிய பணத்தினை சாஜூ குறித்துக்கொள்ளச் சொல்லும் பொழுதில் "ஐ.டி வேலைய விட்டுட்டு பிரியாணி விக்கிறோம்" எனச் சொல்லி அலுவலகத்திற்கு முன் பிரியாணி விற்ற இருவர் நினைவில் வந்தார்கள். மணியின் கடை அரசாங்கத்தால் இடித்து நொறுக்கப்படுகிறது, காலம் யாரையும் ஓரிடத்தில் நிரந்தரமாக்கி அழகு பார்க்க எண்ணுவதில்லை மாறாக அது தன் நீண்ட தும்பிக்கையால் எல்லோரையும் அசைத்துப் பார்க்கிறது.

இத்துறைசார் மக்களுக்கு "ஆன்சைட்" (வெளிநாடு) செல்லும் கனவு தவிர்க்க இயலாமல் ஒட்டிக்கொள்வது, அதன் மாயத்தோற்றத்தை, மாற்றமற்ற ஒற்றைச் சுழல் தன்மையினை விவேக்கின் உரையாடல்கள் வழி மிக யதார்த்தமாக புனைந்திருக்கிறார் கார்த்திக். எல்லோரும் ஏதோவொரு நிர்பந்தம் காரணமாகவே இத்துறையில் நீடித்திருப்பதாகத் தோற்றமளிப்பது போல ஓர் பிம்பம், அது உண்மைதானா? அதேநேரத்தில் அர்ப்பணிப்போடு வேலை செய்பவர்களை அரவணைக்கத் தவறுகிறதோ பெருநிறுவனங்களின் வேலைப் பண்பாடு, விவாதத்திற்குரியதாக தெரிகிறது. எத்தனை பயிற்சிகள் எடுத்தாலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல், இனி நீ தேவையில்லை என உமிழ்ந்துவிடும் சாத்தியக்கூறுகள் இங்கே அதிகம். இந்த பரமபத விளையாட்டில் சிக்காத ஆளேயில்லை என்பதை  தெளிவாக உணர்த்தியிருக்கிறார் நாவலாசிரியர். பிச்சைமணிக்கு இவர்களின் மீதிருக்கும் பார்வை அல்லது கருத்து எவ்வளவு உண்மையும் கரிசனமும் கொண்டதாக உள்ளது.

நாவலின் வடிவத்தை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார் கார்த்திக், உதாரணத்திற்கு,  முப்பத்தியாறாவது அத்தியாயத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பிச்சைமணியோடு இரண்டாவது அத்தியாயத்தை முடிச்சிட்டிருப்பது. கடைசி அத்தியாயம் வாசிக்கும் பொழுதில் அது நம்மை முதல் அத்தியாயத்திற்கு அழைத்துச் செல்வதில் இருக்கும் சுழற்சி.

வாழ்வின் நிலையற்ற தன்மையின் காட்சிப் பொருளாகி நிற்கும் அத்தனை மனிதர்களும், இறுதியில் கனத்த அழுத்தத்தை மனிதில் இருத்துகிறார்கள்.




கருத்துகள் இல்லை: