புதன், 17 பிப்ரவரி, 2016

வரும் இரவு

இரவோடு இரவாய்
கரைந்துவிட எண்ணிய
இரவைக் கடந்து
கள்ளங்கபடமற்று சிரித்தது
இரவை வென்ற பகல்
என்னவென்றுரைத்த போது
வாவென்றது பகல்
எள்ளும் உருகும்
வெயிலில் - நான்
என் செய்வேனென்று வினவ
வரலாற்றுப் பிழையே
வாவென்றது - கண்டிப்போடு
விளையாட்டு என்றெண்ணி
வராது போனால்
என்செய்வாய் என்றேன்
வராது வராது
என்றும் பகல் வராது
வரும் இரவே
எமன் உனக்கென்றது பகல்
வெயில் தகித்துக் கொண்டிருந்தது.

வியாழன், 11 பிப்ரவரி, 2016

காடோடி வாசிப்பு

மழைக்காடு என்ற ஒரு வனச்சூழலின் இருப்பையே அறியாமல்தான் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக புத்தகத்தை வாசிக்கத்துவங்கினேன். காடுகள் காட்டுயிர்களைப் பற்றிய அடிப்படை புரிதல்களை ஏற்படுத்திக் கொள்வதோடு நிலைபெறாமல் உழன்றுகொண்டிருந்தவன் சதுப்புநிலம் வலசை பறவைகளைப் பற்றி அறிய தொடங்கினேன். அதன் நீட்சியாகத்தான் காடோடி வாசிப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


அறியாத விலங்குகள், பிரைமேட்கள், சறுக்கிகள், இருவாசிகள், காட்டின் இசை, கினபத்தங்கான், டுரியன், குருவிங் மர எண்ணெய், மூதாய் மரமான சிலாங்கன் பத்து இன்னும் பல உயிரிகளைப் பற்றிய அறிமுகம் செய்து அவை ஒவ்வொன்றாக உயிரிழப்பதையும் வலிக்கச் சொல்லும் எழுத்து காடோடி.
அதிகமாக வாசித்து விடவில்லை தான், இருப்பினும் இதுவரையிலான வாசிப்பிலிருந்து வேறுபட்ட எழுத்து நடை.


பாமாயில் நியாய விலைக்கடையில் கிடைக்குமளவிற்கு நமக்குள் ஊடுருவி விட்டது. இந்த எண்ணை உருவாக்கத்திற்காக அழிக்கப்பட்ட காடுகள் ஏதும் கணக்கிலுண்டா. நாம் அறியாமையில் இயற்கைக்கும் மனிதத்தன்மைக்கும்  எதிரானவற்றை ஏற்றுக்கொண்டு வாழப் பழகிவிட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை.


புதினத்தில் புதைந்திருக்கும் மனிதர்களை பற்றி அறிந்து கொள்ளத் துவங்கும் போது உள்ளத்தில் இனம்புரியா கிளர்ச்சியும் காடு பற்றிய அறிதலின் ஊடே சிலிர்த்தெழும் கற்பனையும் வாசிப்போரை காடோடியாக மாற்றி கதைசொல்லி போலவே வெட்டுப்பட்ட சிலாங்கன் பத்து மரத்தின் மடியில் கிடத்திவிடும் காடோடி வாசிப்பு.


செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

வழிப்பறி

திருநீர்மலை சாலையிலிருந்து அனகாபுத்தூர் நோக்கிப் பிரியும் பயன்பாட்டுச்சாலையில்  மகிழுந்து ஊர்ந்து கொண்டிருந்தது, சிறிது தொலைவிற்குப்பின் லாரி ஒன்று நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி வைத்திருப்பதை கவனிக்க முடிந்தது. நெடுஞ்சாலை நாங்கள் சென்றுகொண்டிருந்த சாலையிலிருந்து சற்று விலகி சிறிது உயரத்தில் இருக்கும். அந்தப் பகுதியிலிருந்து பெண் குரலொன்று அலறுகின்றது. ஓட்டுநர் "யாரோ செயின் அறுத்துட்டாங்க போல" எனக் கூறியவர் சற்று முன்னால் சென்றுவிட்ட வாகனத்தை பின் நகர்த்தினார். இறங்கினோம்.


அறுபது வயது மதிக்கத்தக்க அம்மா ஒருவர் நெடுஞ்சாலை ஓரத்து இரும்பு தடுப்புக் கம்பியை பலத்திற்காக பிடித்துக்கொண்டு கதறுகிறார் " என் நகையெல்லாம் அத்துட்டு போயிட்டான், பேக்கையும் தூக்கிட்டு போயிட்டான். எங்கள விட்ராதிங்க காப்பாத்துங்க ". ஆண் ஒருவர் ஓடி வந்து தன் காதைக் காண்பித்தபோது அதிர்ந்து போனோம். காப்பாற்றுங்கள் என்று அவர் கதறியதன் அர்த்தம் புரிந்தது.  அரிவாளால் வெட்டப்பட்டிருந்தது காது. இரத்தம் காதிலும் கழுத்திலும் வழிவதை சாலையில் செல்லும் வாகனத்தின் வெளிச்சத்தால் காணமுடிந்தது. வேறு எந்த விளக்கும் சாலையில் இல்லை.


நூற்றியெட்டுக்கு அழைத்து பேசும் பொழுது, வெட்டுப்பட்டவரும் அவரது கைபேசியிலிருந்து அவர்களுக்கு பேசினார். அந்த வலியிலும் தடுமாறிய நிலையிலும் பொறுமையாக பேசி அம்மாவுக்கு சமாதானம் கூறவும் தவறவில்லை.
அந்த அம்மா அழுதுகொண்டேயிருக்கிறார். "கோயிலுக்கு போயிட்டு வாரோங்க இப்பிடி பண்ணிட்டானே, ஒரே ஒரு ஆளுதான் பைக்ல வந்தான் முகமூடி போட்ருந்தான், நல்ல நேரம் காத்தோட போச்சிங்க" என்றவரை உயிர் பயம் கலங்கடித்திருந்தது.
நமது உயிர்பயம் சிலருக்கு முதலீடாக விளைகின்றது.


எதிர்த்திசையில் வந்த வாகனங்களை மறித்து அருகிலிருக்கும் காவல் சோதனை நிலையத்தில் தகவல் தெரிவிக்கக் கூறுகிறோம். நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் காவலர் இருவரை எங்கிருந்தோ அழைத்து வந்தார். எங்களை பார்த்த காவலர் ஒருவர் "வேடிக்க பாக்குறீங்க,  எதாவது உதவலாமே" என்று கத்தினார். "உங்களுக்கு தகவல் தெரிவிக்க ஆள் அனுப்பினோம், நூற்றியெட்டுக்கு போன் செய்தோம் வேறென்ன செய்ய முடியும்" என்று நாங்கள் கூறியதும் "சரி கிளம்புங்க நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்,  ட்ராபிக் ஆகிவிடும்" என்றார். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு இந்த சாலையில் நெரிசல் ஏற்படுமா என்ற கேள்வியோடு வாகனத்தில் ஏறினோம். வாகனம் குன்றத்தூர் எல்லையிலிருக்கும் காவல் சோதனைச் சாவடியை அடைந்தபோது அங்குள்ள காவலரிடம் தகவல் தெரிவித்தோம். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் கிளம்புங்கள் என்ற ரீதியில் பதிலுரைத்தார் காவலர் ஒருவர்.


வீட்டுக்கு வந்து படுத்த பின்னும் கதறல் ஒலி. ஒருவேளை அந்த அம்மாவின் இடத்தில் என் அன்னையோ அக்காவோ அண்ணனோ தம்பியோ நின்றிருந்தால் சாக்கடையையும் உயரத்தையும் கவனத்தில் கொள்ளாமல் எகிறி குதித்து அப்பக்கம் ஏறியிருப்பேனோ என்று நினைக்கையில் குற்றவுணர்ச்சியில் உறங்க எத்தனிக்கிறேன்.


சனி, 6 பிப்ரவரி, 2016

கரிக்கோல் கோடுகள் - 2

உள்ளங்கை உத்திரம்

இன்று
தலைதொடும் எங்கள் வீட்டின்
உத்திரம்
என் கைகளுக்கு
எட்டாதிருந்தபோது
அதையடையும் உவகை
நினைவில் எட்டிய பொழுதில்
உள்ளங்கை பரப்பி
மெல்லியதாக சிரித்தேன்

வியாழன், 4 பிப்ரவரி, 2016

இயற்கையின் கல்லறை

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் இடையிடையே அமைந்துள்ள சாலையோரத்தில் சதுப்புநிலத்தை பாதுகாப்போம் என்று சிறு சிறு பதாகைகள் காற்றில் அசைந்து கொண்டிருக்கிறது. நேற்று சதுப்புநிலத்தை பாதுகாக்க வேண்டுமென்று ஒரு கட்சியினர் சோழிங்கநல்லூரில் கூட்டம் நடத்தியதாக படச்செய்தியொன்று இன்றைய நாளிதளில் வந்திருந்தது.


யார் இதை காப்பாற்ற துணிவார்கள் என்றால் யாருமில்லை என்பதை முன் முடிவாகக் கொண்டுதான் தொடர்ந்து பேசமுடியும். மழை வந்தது வெள்ளமும் வந்தது, கருவேலமரம் ஆக்கிரமிப்பு செய்த ஆற்றுப்பகுதியையும் மனிதன் இயற்கைக்கு கட்டிய சமாதிகளையும் அடையாளம் காட்டியது. வெள்ளம் வடிந்த மூன்றாம் நாள் பத்திரிக்கையில் வீட்டுமனை விற்பனை புதிய கவர்ச்சி வாசகங்களோடு விளம்பரம் பேசின. எல்லாவற்றையும் பேசுகிறோம் நாள்தோறும் உண்ணும் உணவுபோல அதுவே மறுநாள் காலைக் கடனாக கரைந்தும் போகிறது.


சென்ற வாரம் ஒரு ஆவணப்படம் ஒன்று பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவின் தண்ணீர் சுரண்டலை விளக்கும் படம். இதில் நாம், அதாவது தமிழகம் எவ்விதத்தில் பாதிக்கப்படுகிறது என்பது சில நிமிடம் வந்து போகிறது. அமெரிக்கர்கள் பயன்படுத்தி குப்பையில் எரியும் ஞெகிழி தண்ணீர் புட்டியில் அறுபது சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்படாமல் அது கப்பல் மூலம் இந்தியாவின் தமிழகத்திலிருக்கும் சென்னைக்கு நீர்வளம் அளிக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் மீது திடக்கழிவு மேலாண்மை என்ற பெயரில் இங்கு ஆட்சி செய்த செய்யும், மற்றும் ஆட்சிக்காக போராடும் கட்சி மந்தைகளின் முழு உடன்பாட்டோடு கொட்டப்படுகிறது.


இதே அரசுகள்தான் கடல் உயிரி ஆராய்ச்சி கழகம் என்ற ஒன்றை சதுப்புநிலத்திற்கு சமாதி கட்டி கட்டியிருக்கின்றது. இவர்கள் எந்த உயிரை ஆராய்ந்து யாரை காப்பாற்றுவார்களோ தெரியவில்லை.


மத்திய கைலாசம் பகுதிவரை விரிந்து பரந்திருந்த சதுப்புநிலத்தை மெல்ல மெல்ல சிதைத்து நகரத்தை விரித்து வினை செய்தவர்கள்  பாதுகாப்பது அவர்களைத்தான் அவர்களை மட்டும்தான். நாம் கட்டியெழுப்புவது கட்டிடமல்ல அது இயற்கையின் கல்லறை.

தொலைதல்

அவர்கள் உதிர்த்த
வார்த்தைகளின்
வரலாறு தேடிய வேளையில்
உரையாடலின் வெளியே
தொலைந்து போனேன்

புதன், 3 பிப்ரவரி, 2016

கனவின் பரிமாணம்

பள்ளிப்பருவத்தில் கனவு வரும்போது ஒருதலைக் காதலிலோ நடிகையோ வந்து கிச்சுகிச்சு மூட்டி கிளர்ச்சியில் புரள வைப்பார்கள். மீண்டும் பள்ளிக்குச் சென்று பத்தாம் வகுப்பில் பாடம் கற்பதுபோல பரீட்சைக்கு செல்வதுபோல பள்ளி நினைவுகள், அலுவல் முடிந்த இரவின் கனவிலோ முறையற்ற ஞாயிற்றின் பகல் தூக்கத்திலோ வந்து குழப்பி விடும். 


அவ்வப்போது எழுத்துக்களும் எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும் கனவில் வந்து மீளமுடியா கனவில் ஆழ்த்துகிறார்கள். இதை கனவின் பரிமாணமாக கொள்வதா இல்லை அறிவின் பரிமாணமாக ஏற்பதா என என்னையே கேட்டபோது இது தகவலின் பரிமாணம் என்றது என் சிற்றறிவு. கனவு நாம் வாழும் சூழலில் சேகரிக்கும் தகவல் மற்றும் நினைவின் குழப்பமான தெளிவு.


இப்பொழுதெல்லாம் ஏதேனும் காலச்சூழலில் தேவையற்று செலவு செய்ய நேர்ந்தால், வாங்க விரும்பும் வாங்காத புத்தகங்கள் கண்முன் அடுக்கப்படுவதை தவிர்க்க இயலவில்லை.