பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் இடையிடையே அமைந்துள்ள சாலையோரத்தில் சதுப்புநிலத்தை பாதுகாப்போம் என்று சிறு சிறு பதாகைகள் காற்றில் அசைந்து கொண்டிருக்கிறது. நேற்று சதுப்புநிலத்தை பாதுகாக்க வேண்டுமென்று ஒரு கட்சியினர் சோழிங்கநல்லூரில் கூட்டம் நடத்தியதாக படச்செய்தியொன்று இன்றைய நாளிதளில் வந்திருந்தது.
யார் இதை காப்பாற்ற துணிவார்கள் என்றால் யாருமில்லை என்பதை முன் முடிவாகக் கொண்டுதான் தொடர்ந்து பேசமுடியும். மழை வந்தது வெள்ளமும் வந்தது, கருவேலமரம் ஆக்கிரமிப்பு செய்த ஆற்றுப்பகுதியையும் மனிதன் இயற்கைக்கு கட்டிய சமாதிகளையும் அடையாளம் காட்டியது. வெள்ளம் வடிந்த மூன்றாம் நாள் பத்திரிக்கையில் வீட்டுமனை விற்பனை புதிய கவர்ச்சி வாசகங்களோடு விளம்பரம் பேசின. எல்லாவற்றையும் பேசுகிறோம் நாள்தோறும் உண்ணும் உணவுபோல அதுவே மறுநாள் காலைக் கடனாக கரைந்தும் போகிறது.
சென்ற வாரம் ஒரு ஆவணப்படம் ஒன்று பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவின் தண்ணீர் சுரண்டலை விளக்கும் படம். இதில் நாம், அதாவது தமிழகம் எவ்விதத்தில் பாதிக்கப்படுகிறது என்பது சில நிமிடம் வந்து போகிறது. அமெரிக்கர்கள் பயன்படுத்தி குப்பையில் எரியும் ஞெகிழி தண்ணீர் புட்டியில் அறுபது சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்படாமல் அது கப்பல் மூலம் இந்தியாவின் தமிழகத்திலிருக்கும் சென்னைக்கு நீர்வளம் அளிக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் மீது திடக்கழிவு மேலாண்மை என்ற பெயரில் இங்கு ஆட்சி செய்த செய்யும், மற்றும் ஆட்சிக்காக போராடும் கட்சி மந்தைகளின் முழு உடன்பாட்டோடு கொட்டப்படுகிறது.
இதே அரசுகள்தான் கடல் உயிரி ஆராய்ச்சி கழகம் என்ற ஒன்றை சதுப்புநிலத்திற்கு சமாதி கட்டி கட்டியிருக்கின்றது. இவர்கள் எந்த உயிரை ஆராய்ந்து யாரை காப்பாற்றுவார்களோ தெரியவில்லை.
மத்திய கைலாசம் பகுதிவரை விரிந்து பரந்திருந்த சதுப்புநிலத்தை மெல்ல மெல்ல சிதைத்து நகரத்தை விரித்து வினை செய்தவர்கள் பாதுகாப்பது அவர்களைத்தான் அவர்களை மட்டும்தான். நாம் கட்டியெழுப்புவது கட்டிடமல்ல அது இயற்கையின் கல்லறை.
2 கருத்துகள்:
Super sir
நன்றி சார் :-)
கருத்துரையிடுக