திருநீர்மலை சாலையிலிருந்து அனகாபுத்தூர் நோக்கிப் பிரியும் பயன்பாட்டுச்சாலையில் மகிழுந்து ஊர்ந்து கொண்டிருந்தது, சிறிது தொலைவிற்குப்பின் லாரி ஒன்று நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி வைத்திருப்பதை கவனிக்க முடிந்தது. நெடுஞ்சாலை நாங்கள் சென்றுகொண்டிருந்த சாலையிலிருந்து சற்று விலகி சிறிது உயரத்தில் இருக்கும். அந்தப் பகுதியிலிருந்து பெண் குரலொன்று அலறுகின்றது. ஓட்டுநர் "யாரோ செயின் அறுத்துட்டாங்க போல" எனக் கூறியவர் சற்று முன்னால் சென்றுவிட்ட வாகனத்தை பின் நகர்த்தினார். இறங்கினோம்.
அறுபது வயது மதிக்கத்தக்க அம்மா ஒருவர் நெடுஞ்சாலை ஓரத்து இரும்பு தடுப்புக் கம்பியை பலத்திற்காக பிடித்துக்கொண்டு கதறுகிறார் " என் நகையெல்லாம் அத்துட்டு போயிட்டான், பேக்கையும் தூக்கிட்டு போயிட்டான். எங்கள விட்ராதிங்க காப்பாத்துங்க ". ஆண் ஒருவர் ஓடி வந்து தன் காதைக் காண்பித்தபோது அதிர்ந்து போனோம். காப்பாற்றுங்கள் என்று அவர் கதறியதன் அர்த்தம் புரிந்தது. அரிவாளால் வெட்டப்பட்டிருந்தது காது. இரத்தம் காதிலும் கழுத்திலும் வழிவதை சாலையில் செல்லும் வாகனத்தின் வெளிச்சத்தால் காணமுடிந்தது. வேறு எந்த விளக்கும் சாலையில் இல்லை.
நூற்றியெட்டுக்கு அழைத்து பேசும் பொழுது, வெட்டுப்பட்டவரும் அவரது கைபேசியிலிருந்து அவர்களுக்கு பேசினார். அந்த வலியிலும் தடுமாறிய நிலையிலும் பொறுமையாக பேசி அம்மாவுக்கு சமாதானம் கூறவும் தவறவில்லை.
அந்த அம்மா அழுதுகொண்டேயிருக்கிறார். "கோயிலுக்கு போயிட்டு வாரோங்க இப்பிடி பண்ணிட்டானே, ஒரே ஒரு ஆளுதான் பைக்ல வந்தான் முகமூடி போட்ருந்தான், நல்ல நேரம் காத்தோட போச்சிங்க" என்றவரை உயிர் பயம் கலங்கடித்திருந்தது.
நமது உயிர்பயம் சிலருக்கு முதலீடாக விளைகின்றது.
எதிர்த்திசையில் வந்த வாகனங்களை மறித்து அருகிலிருக்கும் காவல் சோதனை நிலையத்தில் தகவல் தெரிவிக்கக் கூறுகிறோம். நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் காவலர் இருவரை எங்கிருந்தோ அழைத்து வந்தார். எங்களை பார்த்த காவலர் ஒருவர் "வேடிக்க பாக்குறீங்க, எதாவது உதவலாமே" என்று கத்தினார். "உங்களுக்கு தகவல் தெரிவிக்க ஆள் அனுப்பினோம், நூற்றியெட்டுக்கு போன் செய்தோம் வேறென்ன செய்ய முடியும்" என்று நாங்கள் கூறியதும் "சரி கிளம்புங்க நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், ட்ராபிக் ஆகிவிடும்" என்றார். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு இந்த சாலையில் நெரிசல் ஏற்படுமா என்ற கேள்வியோடு வாகனத்தில் ஏறினோம். வாகனம் குன்றத்தூர் எல்லையிலிருக்கும் காவல் சோதனைச் சாவடியை அடைந்தபோது அங்குள்ள காவலரிடம் தகவல் தெரிவித்தோம். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் கிளம்புங்கள் என்ற ரீதியில் பதிலுரைத்தார் காவலர் ஒருவர்.
வீட்டுக்கு வந்து படுத்த பின்னும் கதறல் ஒலி. ஒருவேளை அந்த அம்மாவின் இடத்தில் என் அன்னையோ அக்காவோ அண்ணனோ தம்பியோ நின்றிருந்தால் சாக்கடையையும் உயரத்தையும் கவனத்தில் கொள்ளாமல் எகிறி குதித்து அப்பக்கம் ஏறியிருப்பேனோ என்று நினைக்கையில் குற்றவுணர்ச்சியில் உறங்க எத்தனிக்கிறேன்.
1 கருத்து:
வேதனையான விஷயம்தான்... சில நேரங்களில் இப்படி வர வேண்டிய சூழலும் இருக்கிறதே...
அவர்களுக்கு நல்லது நடக்கட்டும்.
கருத்துரையிடுக