வியாழன், 25 ஜூன், 2015

இரத்த வேட்டை

6:30 மணியை கடந்தும் சூரியன் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தது, நான் அருகம்புல்லுக்காக கண்களை சாலையோரம் அலையவிட்டு விட்டு நகர்ந்து கொண்டிருந்தேன். மனித விலங்கு நிலத்தை வேட்டையாடியதில் அருகம்புல்லும் அரிதாகிப் போனது கண்களுக்கு, ஆனாலும் சிறு நம்பிக்கை இருந்தது கிடைத்துவிடுமென்று.

வீல்…வீல்.. என்ற பன்றிகளின் சத்தம், அத்தனையும் குட்டிப் பன்றிகள். நான்கு நாய்கள் சாலையின் வலது பக்கத்திலிருந்து துரத்திக் கொண்டிருந்தன. இடது பக்கம் கோரைப்புல் தரை அதில் சின்னதாக ஒரு

புதன், 24 ஜூன், 2015

புதுமைப்பித்தன்

எழுத்தாளர், தமிழ்ச் சிறுகதையின் நாயகன் புதுமைப்பித்தன் அவர்களின் பிறந்தநாள் நாளை.

அவரை வாசித்த எனக்கு எழுதத் தோன்றியதை எழுதினேன், இன்று வரையத்தோன்றியது வரைந்து பார்த்தேன்.

புதன், 17 ஜூன், 2015

புதுமைப்பித்தனை நாடலாம்.

    புதுமைப்பித்தனின் சாமியாரும் குழந்தையும் சீடையும் என்ற சிறுகதைத் தொகுப்பு, விகடன் வெளியீட்டில் வந்தது. அவர் சிறுகதை எழுத ஆரம்பித்தால் ஒரே மூச்சில் எழுதி முடித்துவிடுவார் என்று படித்திருக்கிறேன். இந்த தொகுப்பில் துன்பக்கேணி எனும் அவரது சிறந்த கதையொன்று இருக்கிறது.

அவர் எனக்கு அறிமுகமானது துன்பக்கேணி கதைத் தலைப்பின் மூலம்தான், நான் கதைகள் வாசிக்க ஆரம்பித்த போது சுஜாத்தாவைத் தவிர வேறு எந்த எழுத்தாளரையும் அறிந்திராமல் இருந்தேன். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் ஆனவர்தான் புதுமைப்பித்தன்.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளத்தை முன்னிருத்துகிறது, திருநெல்வேலிக்காரர் எனத் தெரிந்தபிறகு கூடுதல் மகிழ்ச்சி.

துன்பக்கேணி என்ற வார்த்தை அல்லது தலைப்பு அறிமுகமானதிலிருந்து சரியாக ஒருவருடத்திற்கு பிறகுதான் அந்த கதையை அண்ணா நூலகத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அவரது எழுத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் , கதையின் ஆரம்பத்தில் கிராமத்தின் நில வர்ணணை அமையும்போது தடுமாற்றம் ஏற்பட்டது உண்மை. கதையின் போக்கு இலங்கையின் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குச்சென்ற தமிழக மக்களின் வாழ்வியல் துன்பங்களில் நகரும் போது ஏற்பட்ட வலியும், அவர்களின் மாறாத தொடரும் நிலையும்  மனதை பிசைந்தது.

கதை வாசிப்பின் இடை இடையே பரதேசி படக்காட்சிகள் ஒத்திருந்ததை உணரமுடிந்தது. படக்குழுவினர் இந்தக் கதையை வாசித்திருக்க கூடும்.

இரண்டாவது முறை வாசிக்கும் பொழுதில் அதிக சிக்கல் இல்லாமல் இருந்தாலும், இருந்தது. அவரது பெரும்பாலான கதைகளில் இதை உணரமுடிந்தது, என்னளவில்.

இன்று காஞ்சனை என்ற கதையை இரண்டாவது முறையாக வாசித்தேன், காஞ்சனை தொண்டையில் சிக்கிக் கொண்டிருக்கும் போதுதான் இதை எழுதினேன். அளவான கேலி, மன ஓட்டம், இருட்டில் தொலைந்துபோகத் துடிக்கும் மனதோடு, எழுத்தாளனின் பிழைப்புவாதம், தற்புகழ்ச்சி அத்தனையையும் பேசுகிறார். தன் மனைவி சோரம் போகிறாள் என்ற மனக்கஷ்டத்தை யாரிடம் சொல்வது என்ற ஏக்கம், மனைவியை காப்பாற்ற வெளிப்படுத்தும் மனோபாவம். இத்தோடு சரித்திர சாசனங்கள் என்ற ஆங்கிலப் புத்தகம் வாசிக்கும் போது திகில் ஏற்படுத்துகிறார்.

இந்த ஆம்பிளைகளே இப்படித்தான் என்று அவரது மனைவி கூறுவதற்கு, என்ன பதில் சொல்ல என்று முடிக்கிறார் கதையை.

கதையில் புதுமையை கற்றுக்கொள்ள புதுமைப்பித்தனை நாடலாம்.

இறப்பும் உயிர்ப்பும்

அவளின் அதிகாலைக் கனவில்
அவரோடு பேசியதாகக் கூறினாள்

எப்படிச் சொல்வேன்
என் நள்ளிரவுக் கனவிலேயே
அவர் இறந்துவிட்டதை

நன்றி    மலைகள்.காம்   ஜூலை 15

திங்கள், 15 ஜூன், 2015

பொறியியலில் எந்த படிப்பு சிறந்தது

பொறியியலில் எந்த படிப்பு சிறந்தது எனக் கேட்டாள், “எந்த படிப்பு என்பதை விட மூளையின் சிறப்பு முக்கியம்” என்று சொன்னதும் சிரித்தாள்.

சென்ற வாரம் உறவினர் ஒருவர் திருமணத்துக்காக கீழப்பாவூருக்கு (பிறந்து வளர்ந்த ஊர்) சென்றிருந்தேன், எதை எதையோ பேசிக் கொண்டிருந்தோம். இடையில் கல்வி பற்றி பேச்சி வந்தபோது எனது கட்டுரை ஒன்றை வாசிக்கக் கொடுத்தேன். இணையதளத்தை தேடிச்சென்று படிக்குமளவு நேரமில்லாத உழைப்பாளிகளை இப்படித்தான் வாசிக்க வைக்க வேண்டியிருக்கிறது. வாசித்துவிட்டு அதைப் பற்றி எதுவுமே கூறாமல். அவரது உறவினர் தன் மகனை பதினொன்றாம் வகுப்பு படிக்க வைக்க நாமக்கல் அனுப்ப இருப்பதாகவும், அதற்காக ஒன்றறை லட்சம் பணம் செலவழித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

எதற்காக நாமக்கல் என்றேன், “அவன டாக்டராக்க” என்றார். சிரித்தேன். அவர் புரிந்துகொண்டு “படிக்க பிள்ள எங்கருந்தாலும் படிக்கும் மாப்ள” என்றார். இது உண்மைதான் எங்கே படிப்பது என்ன படிப்பது என்பதை விட, நமது ஆர்வமும், சிந்தனையும்தான் ஒருசேர பயணப்பட வேண்டும். சரியாகச் சொல்லவேண்டும் என்றால் மருத்துவம் படித்து விட்டு, எதற்காக படித்தோமெனத் தெரியாமல் பிறருக்கு உதவவும் முடியாமல், தனக்கும் எந்த பயனும் இல்லாமல் பெயருக்கு பின்னால் மூன்று நான்கு ஆங்கில எழுத்துக்களை மட்டும் பொறித்துக்கொண்டு தேமே என்று இருக்கிறார்கள். பொறியியலில் மேற்ப்படிப்பையும் முடித்துவிட்டு கடன் அட்டையை வீடு வீடாகவும், அலுவலகம் அலுவலகமாகவும் கூவிக் கூவி விற்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனால் நாமக்கல்லில் படித்தால் என்ன நாராயணபுரத்தில் படித்தால் என்ன படிக்க புள்ள எங்க இருந்தாலும் படிக்கும்.

இலவசமாக கண்டமாய்ப் போகும் மின்சாதனப் பொருட்களை கொடுக்கும் அரசு, மக்களுக்கு நல்லறிவு புகட்டும் புத்தகங்களை கொடுக்கலாம். சீறமைக்கப்படாத கல்வி முறையையும், நூலகத்தை திருமண மண்டபமாக மாற்றத் துடிக்கும் அரசு இதைச்செய்யும் என்று நினைப்பது பாமரத்தனம்.

என் கதைக்கு வருவோம், நான் பொறியியல் பட்டயப் படிப்பில் சேர்வது மட்டும்தான் என் விருப்பமாக இருந்தது, மின்னணுவியல் படிப்பதெல்லாம் எனது குறிக்கோளல்ல. எதையாவது படிக்க வேண்டும் அதுவும் அந்தக் கல்லூரியிலேயே படிக்க வேண்டும், மூன்று வருடத்தில் வேலைக்கு செல்லவேண்டும் என்பது மட்டும்தான் எனது நோக்கமாக இருந்தது. இரண்டாம் வருடத்திலிருந்து மின்னணு ஆர்வம் தொற்றிக் கொண்டது நெசம்.

முதல் வருடத்தின் அந்த இயற்பியல் வகுப்பு ஆரம்பிக்கும் முதல் நொடிவரை மின்விசிறியிலிருந்து வருவது செயற்கையாக உருவாகிவரும் காற்று என்றுதான் என்னளவில் தெரியும். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் படித்தவன் என்பதையும் நான் இங்கே கூறவேண்டும். மின் விசிறி காற்றை குவியப்படுத்திக் கொடுக்கும் ஒரு சாதனம் என்பதைத் தவிர, வேறு எந்த மகத்தான சாதனையையும் செய்வதில்லை என்பதை புரிய வைத்தார் அவர். இதை புரியவேறு வைக்க வேண்டுமா என்று நீங்கள் கேட்டால், உங்களைவிட நான் மக்கு என புரிந்து கொள்ளவும். மின்னணுவியல் என்பது இயற்பியலின் சொற்பமான ஒரு பகுதி என இரண்டாம் வருடத்தில் நான் புரிந்துணர்ந்தபோதுதான், அறிவியலை அறியாமையிலேயே கற்றிருக்கிறேன் என வெட்கினேன். 

காலம் பொன் போன்றதென்றால் கல்வி கண் போன்றது.

சாதிக்க வேண்டும் சம்பாதிக்கவும் வேண்டுமென ஆர்வமிருப்பவர்கள் அறிவியல் படிப்பினை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

அம்மா உணவகத்தில் சாம்பார் சாதம் சாப்பிட வேண்டுமென்று ஆசையிருந்தால் அரசாங்கத்தின் மாமன் மச்சான்கள் திறந்து வைத்திருக்கும் பொறியியல் கல்லூரிகள் இருக்கிறது. 

நான் எங்க சோறு திங்கேன்னு கேக்கியளா .. வீட்லதான்…




வியாழன், 4 ஜூன், 2015

இந்த நொண்ணையின் பதில்

எனது நண்பன் ஒரு கேள்வி கேட்டுவிட்டு பதில் சொல்லுங்கடா நொண்ணைகளா எனக்கேட்டான். சரியெனப்பட்டதை   உணர்ச்சிவசத்தில் எழுதி அவனுக்கு அனுப்பிவிட்டேன்.

அடேய் புலிகேசி !! நானும் நீயும் ஏனைய நம் நண்பர்களும் இரண்டாம் வகுப்பிலிருந்து ஆங்கிலத்தில் எல்லாத்தையும் கற்று வந்து, இப்போது பேச முடியவில்லை, விக்குகிறது என்று விழி பிதுங்குவதற்கு காரணம் என்ன, ஆங்கிலத்தை அறிவாளி மொழியாக உன் மீதும் அப்படி நினைப்பவர்கள் மீதும் அவிழ்க்க முடியாத கயிறு போட்டு கட்டியிருக்கிறார்கள்.

அதை அவிழ்ப்பதற்கு நீ முதலில் தமிழை உன் தாய் மொழியை தெளிவாக கற்று அறிய வேண்டும். உன் தாய் மொழியும் அதன் வரலாறும் உனக்கு அதன் மீதுள்ள தெளிவின்மையும்தான், நீ பிற மொழி  வாயிலாக கல்வி பயில வேண்டுமென நினைக்கச் செய்கிறது.

ஏன் ஆங்கிலம்? சஸ்கிருதம், பிரெஞ்ச், இத்தாலி , ஹிந்தி, உருது, இன்னும் ஏனைய இந்திய மொழிகளே நூற்று கணக்கில் இருக்கிறது அதுவெல்லாம் இல்லாமல் ஏன் ஆங்கிலத்தில் கொண்டு உன் நாக்கை (இந்த இடத்தில் ஒரு கெட்ட வார்த்தை எழுத நினைத்தேன் ஆனால் வேண்டாம் ) நனைக்கப் பார்க்கிறாய். ஏனென்றால் அது ஒரு உலக சந்தைக்கான மொழி, அதில் படித்தால் உன் மகனோ, மகளோ அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனத்தில் விலை போவார்கள். நீ இன்னும் பல லட்சங்கள் செலவழித்து உன் மகளுக்கு வரதட்சணை கொடுக்கவோ, அல்லது உன் மகனுக்கு வரதட்சணை வாங்கவோ முடியும்.

மேலும் முழுமையாக ஆங்கிலத்தில் கல்வி அறிவை புகட்டும் அளவுக்கு இங்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறாயா நண்பா?

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, நாம் அனைவரும் ஏழாம் வகுப்பு படிக்கும் போது ஒருவர்கூட பிழை இல்லாமல் ABCD கூறவில்லை, முதல் மதிப்பெண் மாணவியும் சரி, மாணவனும் சரி.

புத்தகங்களை மனப்பாடம் செய்து மாணவர்களையும் மனப்பாடம் செய்ய செய்து, அவர்களை ஒன்றும் தெரியாத நிலையில் தான் வெளியே அனுப்பி விடுவார்கள். அப்படியே உன் குழந்தை ஆங்கிலம் தெளிவாக பேசினாலும், அது இந்த நகரத்தில் பீ பி ஓ வேலை தான் பார்க்கும், விஞ்ஞானி ஆகாது ஏன் என்றால் நீ ஆக விடமாட்டாய், சம்பாதிக்க சொல்வாய் , வீடு கட்ட சொல்வாய், திருமணம் செய்யச் சொல்வாய், வரதட்சணை வாங்க சொல்வாய், அவன் மகனையும் ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கச் சொல்வாய்..

முதலில் மொழி என்பது தகவலை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு ஊடகம் என்பதை புரிந்து கொள். அது உனக்கு அறிவைக் கொடுக்காது, அது சார்ந்து நீதான் அறிவை கற்றுக் கொள்ளவேண்டும்.

உனக்கும் எனக்கும் கல்வி கொடுத்திருக்கிறார்கள், நாம் முதல் தலை முறை, நமக்கானது அவ்வளவு தான்.  நீ கற்றுக் கொள் எது சரி எது தவறென்பதை, இனி உனக்கு தெரிந்ததையும் அறிந்ததையும் நீ தான் உன் குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

இல்லை ஆங்கிலத்தில்தான் படிக்கச் சொல்வேன், அதுதான் உன் விருப்பம் என்றால்.

விவாதிக்க தயார் .... இன்னும் பேசுவோம் தெளிவு பெறுவோம் மொழிக்கும் அறிவுக்குமான இடைவெளியை...

போதுமா நண்பா இந்த நொண்ணையின் பதில்....