வியாழன், 27 மார்ச், 2014

விளக்கொளியில் மஞ்சள் நிலா ..!!

ஆலமரக் கோவிலின்
முடிக்கப் படாத சுவரின்
சாளரத்தின்
ஓரமாய் ஒட்டி
ஒளிந் திருந்தேன்

வரிசையில்
அடுக்கி வைத்திருந்த
அகல் விளக்குகள்
ஆலமரக் காற்றில்
அங்கலாய்த் தன..

சனங்களின்
சலசலப்பை அழுந்திய
சருகை யுடையின்
சன்னமான ஒலி
செவி வழி விழுந்ததும்
சீராக்கினேன் பார்வையை ..

பச்சை நிறம்
கீழுடுத்தி
பாலாடை வண்ண
மேலாடை யில்
பச்சை மலர் உதிரிகள்
தூவப் பட்டிருந்தது...

விளக்கின்
சிவப்பு மஞ்ச லொளியில்
மறைந்து
வெள்ளி நிலா முகத்தில்
மஞ்சள் முலாம் பூச
எத்தனித்தேன்..!!

                                                                             -------ஜெ.பாண்டியன்

செவ்வாய், 25 மார்ச், 2014

கூட்டுப் பெருச்சாளிகள் வருகிறது.....

கூட்டுப் பேச்சில்
கை நிறைய தேர்ந்ததினால்.
வாக்கு கேட்டு வருவான்.


வன்ம மது நெஞ்சி லிருக்கும்
புன் சிரிப்பு உதட்டி லிருக்கும்
பொன்னுருக பேசி வருவான்..

 

வாக்கு போடும் பாமரனே..
வார்த்தை கேட்டு
வாய் பிளவாதிரு !!

 

காவி கரையில்
வந்தி டுவான்..
கதர் உடையிலும்
வந்தி டுவான்..
தொப்பி யணிந்தும்
வந்தி டுவான்..

 

தானைத் தலைவ னென்பான்..
ஈழத் தாயென்பான்
வரலாற்றுப் பிழையுடனே
வாக்கு கேட்ட வந்திடுவான் ..

 

தமிழ் நலமே
தன் னலமென்பான்..
நாளை
தமிழ் நிலமே
தன் னிலமென்பான்..

 

திராவிடம்
தேசிய மென்பான்..
அணி சேர்ந்து நிற்ப்பான்..
அறிவின்றி பேசுவான்..

 

விழித்திரு
வாக்காளனே..
விதைகள் போடுவது
நீதானே..!! 

 

                                                                             -------ஜெ.பாண்டியன்

      

வியாழன், 20 மார்ச், 2014

அன்னையின் மடியில் !!


கண் விழித் திருக்கவில்லை
உணர்வு உயிர் பெற்றிருப்பதால்
உணர முடிகிறது இருளை ..!

அப்பாவின் தொடு வுணர்வின்
அதிர்வால் அரவணைப்பு
அழகான இருள் சூழலில் ..!

உரத்த குரல் கேட்கிறது
அதன் மொழி அறியேன்
யார் குரல் அறியேன்
பெண் குரலோ
ஆண் குரலோ அறியேன்..!

அம்மா உன் குரலாகத் தானிருக்கும்
பாசப் புரிதல்
இதோ
இங்கிருந்து தொடக்கம் கண்டது!!

வலிக்க மிதித்ததால்
வலி தாங்காது குர லெடுத்தாய்..
கடல் அலையும் அமைதிபூண்டது
உன் குரல் கேட்டு..!!

மன்னித்து விடம்மா
பாசத்தின்
முதல் மன்னிப்பின் தொடக்கம்...!

இப்பொழுதும்
விழி விழித்திருக்க வில்லை
இருந்தும்
இருள் சற்று விலகிய
ஓர் வெளிச்சம் ..!

உள்ளுணர்வு பிதற்றுகிறது ..
எப்படி இருக்கும்
என் விழி காணும்
முதல் வெளிச்சம்..!

அம்மா !!

உன் விழி கொண்டு
காண்பேன் உனையே .!

உன் மூச்சை கடன் பெறுவேன்
உன் உயிராக நான் வாழவே..!

உனக்காக உண்பேன்
உன்னை காக்கவே..!

உன் விரல் பிடித்து
அழைத்துச் செல்வேன்
உன் விரல் கொண்டே..!

உன் புலம் கொண்டு
இருப்பேன்
உனக்கு பலமாய் .!
அன்னையே ..!

எனை ஈன்றவளே..!!


                                                                             -------ஜெ.பாண்டியன்

செவ்வாய், 18 மார்ச், 2014

சிநேகிதனின் சிலாகிப்பு ..!

கையில் எறும்பு
ஊர்ந்து போகிறது
அது எங்கே
சென்று கொண்டிருக்கிறதோ !

பால்ய பருவத்தில்
எறும்பை கண்டதும்
ஓங்கி மிதித்துச்
சாவடிப்பேன் இல்லையேல்
ஓலமிட்டு ஓட்டமெடுப்பேன் ..!

இன்றோ ..
கையில் ஊர்ந்து போகும்
எறும்பின் சுறுசுறுப்பை
குறுகுறுக்கும் உணர்வுடன்
ரசிக்கு மளவுக்கு
தேர்ந்து விட்டேன் ..!!

பட்டு விடும் தருணம்
கொண்ட மலர்ச் செடிக்கு
நீர் கிடைத்த ஒரு
சிலாகிப்பு போல்
இந்த எறும்பு ஊர்தலில் எனக்கும் !!

                                                                             -------ஜெ.பாண்டியன்

வியாழன், 13 மார்ச், 2014

மலடு மண்டப் போகும் மாநிலம்

வந்துவிட்டது அந்த நாள்
ஆம் ! வந்தே விட்டது ..

அருங் காட்சியகத்தில்
வில்லையும் வாளையும்
வீரத்தையும் கேடையத்தையும்
பார்த்து மெய் சிலிர்க்கும்
நாம் ..!

நாளை நம் சந்ததிக்கு
இக்கலை பொருளுடன்
விட்டு பூட்டிப் போகும்
அரிய பொருள்
என்ன வாயிருக்கும் ?

நாம் உண்டு களிக்கும்
நெல் மணிகள் தான்
ஆம் !!
நெல்மணிகள் தான்..

பாரதத்தின் பாட்டன் தொழில்
அது வேண்டாம்
பாடை யேற்றுங்களென
அறைகூவல் விடுத்தாயிற்று
மந்த ம(த்)தி யரசு!!

மிஞ்சியிருக்கும் வயல்வெளியும்
மீத்தேனுக்கும் நிலக்கரிக்கும்
முந்தி விரிக்க போகிறது..
பரதேசம் போக ஏற்பு கொள்
பாரதத்தின் தயவு கொண்டு....

வேதனை மட்டும் கொண்டு
வேடமிட்டு வாழ்ந்திடுவோம்
வேறென்ன செய்திடலாம் ??

போராடி பார்க்கலாமா..
போராடியவ ரெல்லாம்
போராளியல்ல தீவிரவதியாம் ...

வெற்றி மட்டும் இயைந்திடுமா..
இத்திரு நன்னாட்டிலே !!
வேறென்ன செய்யலாம் ?

ஆங்!!
அதிநுட்பக் கைபேசி கொண்டு
வெட்டித் தள்ளலாம்
பச்சைப் புல்வெளியையும்
நெற்ப் பயிரையும்
சம்பாவையும் கம்பையும்
உளுந்தையும் எள்ளையும்
சோளத்தையும் கரும்பையும்
வாழையையும்
நிலத்தடி நீரூற்றையும்
புகைப் படமாய்..!!

புதைத்து விடலாம்
முகநூலிலும்
இன்ன பிற தளங்களிலும் ..
ஆம் ! புதைத்தே விடுங்கள் ..

இது தானே நாமும்
அரசும் சாசனமும்
விரும்பி ஏற்கும்
அறப் போராட்டம் ..

வரும் சந்ததிக் கென
ஓடி ஓடி
உழைத் திருப்போம்
களைத் திருப்போம்
பசித் திருப்போம்
உண்ண
உணவிருக் குமா ?!

                                                                             -------ஜெ.பாண்டியன்

செவ்வாய், 11 மார்ச், 2014

உண்மை காதலுக்காக !!


என் முன்னே
அமர்ந்தி ருப்பவளே
கேள் !

என் முன் கதைகளை
உன் முன்னே கூறுபோட
வரவில்லை ..
கூர்மையுடன் கொஞ்சம்
ஓர்மையுடனும்
கேள் !

என் பின் கதையின்
ஆத்மாவை குருவெளி யீடு
செய்ய
அவதானித் திருக்கிறேன் !!

நான்
கொண்ட நினைவுகளையும்
கண்ட கனவுகளையும்
இட்டுப் பரப்புவேன் உன் மடியிலே !
தொட்டுப் பார்ப்பேன் உன் இதயத்தையே !

உயிர் வலிக்க வலிக்க
இருதயம் துடி துடிக்க
காதலித்தது மில்லை
காதலியாலோ, காதலாலோ
கைவிடப் பட்டது மில்லை ..!

கட்டியணைக்க வேண்டாம்
கவிதை படித்துச் சொல் போதும் ..

வியர்வைக் காதல் கழுவும்
ஆற்றுநீர் மணம் வேண்டாம் ..

கிணற்றி லூரும் நன்னீர்
நற்பேறில்
காதல் நுகர்வோம்
களித்திருப்போம் !!!


                                                                             -------ஜெ.பாண்டியன்

வாழுங்கள் பல்லாண்டு


வாழுங்கள் வளமுடன் இதமாக பல்லாண்டு !

வாழ்த்த பலநண்பர் வருவர் பூக்கொண்டு !!

வானவில் நிற ஒற்றுமை உங்களுக்குண்டு !

வான் சிறப்பாம் வள்ளுவனின் மாரியுமுண்டு !!

வாடாமலர் சூடியநின் வாழ்வில்மாறா மணமுண்டு !

வாசமுடன் வீசும்தென்றல் தரிசனம் நிதமுண்டு !!

வாழுங்கள் வாழ்வை புது அர்த்தங்கொண்டு !

விண்ணும் மண்ணும் முத்தமிடும் நிகழ்வுண்டு !!

வயிறார அன்புடன் ஊட்டும் அன்னமுண்டு !

வாழ்வியல் அறத்தில் வள்ளுவன் துணைகொண்டு !!

வாழிய பல்லாண்டு ! வாழ்க்கை துணைகொண்டு !! !

                                                                             -------ஜெ.பாண்டியன்

திங்கள், 10 மார்ச், 2014

புத்தக வெளிச்சம் !!


புத்தக வெளிச்சம்

மனக் கலவரத்தின்
இருளுக் குள்ளிருந்த
எனக்குள் ..!
பகலவனாய்
வெளிச்சம் பரப்பியது
நான் வாசித்த
புத்தகங்கள்..!!

                      --------ஜெ.பாண்டியன்

சனி, 8 மார்ச், 2014

மரமே ஓ மரமே !!


மரமே ஓ மரமே
வேர்களில் உதிரம் பரப்பி
பூக்களை கனிக ளாக்கும் மரமே!!

காய்க்கும் கனிகளை
உணவில் மருந்தாக்கும் மரமே!!

வான் தரும் மழைத்துளி
கொண்டே நின் இழை
தழை செழித்திடும் மரமே !!

உன் னுயிர் துறந்து
என் னுயிர் காக்கும் மரமே!!

என் னுயிர் மடிந்தாலும்
உன்னுயிர் பிரியா
வரம் வெண்டுவனென் மரமே!!

                            -------------------- ஜெ.பாண்டியன்

செவ்வாய், 4 மார்ச், 2014

எச்சில் பகல்கள் ..!!உண்டு உறங்க வசிப்பிட மில்லை
........ஊட்டி மகிழ உறவு யில்லை
காசு தேடியே தூசியில் நடந்தால்
........காறி உமிழும் கலகர்கள் இங்கே
பிச்சை பாத்திரம் ஏந்திய இவருக்கு
........பிச்சை போட மனங்க ளில்லை
எச்சி லிலை தேடும் இவர்க்கு
........எச்ச மாய் போனநா டெதற்க்கு
காய்ந்து போன வயிறு கேக்கும்
........காலுணவுக் காகத்தானே காத்தி ருப்பு ...

                                                               -------------------- ஜெ.பாண்டியன்

திங்கள், 3 மார்ச், 2014

காதலுக்கு ஊடல் அழகு..!


கடலும் பொழுதும் வானும் அமைதிகாக்க
...கருமேகம் போர்வை போர்த்திஇருளை வசமாக்க
கண் பார்த்துதான் நானும் பேசுகிறேன்
......கருவிழி கொண்டு கடத்துகிறாய் என்னை
ஆதவனும் ஆர்பரித்து செங்கதிர் வீசமுனைகிறான்
.....அல்லியுன் ஒழுங்குதோற்ற மதை பார்த்தே ..
செங்கதிர் வண்டாய் தேன்கன்னம் மொய்ப்பதை
.....சினம் கொண்டே இனிமையாய் சிலாகித்தேன் .

                                                                           ------ஜெ.பாண்டியன்

சேதியும் மானிடமும்நாளொரும் சேதியாய்
ஞாயிறும் திங்களும்
இன்ன பிற தினங்களும் ...
வெட்டும் குத்தும்
களவும் கற்பும்
கள்வரும் காதலும்
அரசியலும் பொய்யும்
காவலும் கதையும்
போலியும் ஆட்டமும்
வணிகமும் விளம்பரமும்
தாங்கியே நாளும்
பொழுதும் விடியும்
செய்தித் தாளுடன்

மாற்றுவோறு மில்லை
மாறுவோறு மில்லை
வையத்திலே
நலமும் அறமும்
வழி நடப்பாரு மில்லை
என் நாடே
தாய் திரு நாடே..!!

                                                                                      ------ஜெ.பாண்டியன்