வரை கோடுகளை பயணத்தின் வழியெங்கும் கண்டு விழுங்கிட....
வியாழன், 3 செப்டம்பர், 2026
சனி, 29 ஆகஸ்ட், 2026
சிறார் கதை - தமிழ் இந்து
எனது பட்டம் பற்றிய சிறார் கதையினை தமிழ் இந்துவின் மாயா பஜார் பகுதிக்கு அனுப்பியிருந்தேன். சில மாற்றங்களுடன் கதை வெளியாகி இருக்கிறது. கற்றலின் மகிழ்ச்சி...
சனி, 15 ஆகஸ்ட், 2026
நற்கீறல் - ஐம்பத்தி இரண்டு
நற்கீறல் ஐம்பத்தி இரண்டாவது வாரத்தை நேற்று சென்னை பாண்டி பசாரில் மனித முகம் வரையும் பயிற்சியுடன் நிறைவு செய்தோம். இந்த ஒராண்டுப் பயணத்தில் வெளிப்புறத்திற்கு சென்று வரைவதற்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம், வேறுவேறு அளவிலான தூவல் கோட்டோவியங்களில் மரம், நிலப்பரப்பு, கோயில் எனத் தொடர்ந்து வரையும் பொழுதில் கற்றுக் கொண்டவை ஏராளம். ஒவ்வொரு இலையும் கிளையும் நிலமும் வரையும் கோடுகளும் வெவ்வேறு தன்மையுடையவை அவை கொடுத்த இன்பம் அதனினும் மேலானது.
திங்கள், 10 ஆகஸ்ட், 2026
சாவுச் சங்கு
"என்னப்பா ஒழுங்கா ஊத முடியுமா"
"இன்னும் பன்னெண்டு மணி ஆவலடே..முடியுமா"
"எங்க ஊர்ல மணியடிச்சா போதும்னுட்டாங்க"
"சங்கு ஊதும் போது ஒருத்தேன் அந்த எடத்துலயே குளோசு"
"தம் கெட்டணும்லா, முடியாது ப்பா, அடைச்சிக்கிடும்"
"இன்னும் ஒருதரம் ஊதேன்..ஆளுவ வந்து சேரணும்லா"
"இனும செல்லுல போட்டுக்கிட வேண்டியதாங்"
"அதுலாங் ஊதுத மாதி வராதுலா"
"மத்தியானம் நேரமா வந்துரு.. பெறவு நீ பாட்டுக்கு ஊத்திக்கிடாத"
"என்னெ இன்னைக்கி ஒண்ணும் அம்புடல போலுக்கு"
"அர அடிச்சிட்டுத்தான் நிப்பான், இல்லனா வேல நடக்குமாங்கும்"
ஏற்றமும் இறக்கமுமாக குரல்கள் ஏனோதானோவென்று வந்து கொண்டிருந்தது ப்ப்ப்ப்ப்ப்....... ப்ப்ப்ப்ப்ப்...........ப்ப்ப்ப
ப்ப்ப்ப்ப்ப்....... ப்ப்ப்ப்ப்ப்...........ப்ப்ப்ப
ப்ப்ப்ப்ப்ப்....... ப்ப்ப்ப்ப்ப்...........ப்ப்ப்ப
என்ற சங்கொலிக்கு இடையிடையே.
ஒலிப்பு முடிந்ததும் தானொரு திரைப்படத்திற்காக சங்கு ஊதிய கதையை பிய்த்துப் பிய்த்து சாவு வேலைக்கிடையே சொல்லிக்கொண்டிருந்தார் முருகன்.
திங்கள், 3 ஆகஸ்ட், 2026
நற்கீறல் 50
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாங்கள் நற்கீறல் நிகழ்விற்காக வெளிப்புறத்திற்குச் சென்று வரைந்து வருகிறோம். இந்த வாரம் வழக்கம் போல ஒரு இடத்திற்குச் சென்று வரைவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்த நிகழ்வை ஒரு பயணமாகவே மாற்ற நினைத்தோம். அதற்காகக் குன்றத்தூரில் இருந்து கிளம்பி திருப்பெரும்புதூர் சாலை வழியாக சோமங்கலம் அடைந்து, அங்கிருந்து படப்பை நோக்கி செல்லும் வழியெங்கும் கிராமங்களில் உள்ள வீடுகள், கோயில்கள், நிலப்பரப்பு, மரங்கள், குளங்கள், மாடுகள் என அனைத்தையும் பார்த்து வரைந்து பழகினோம்.
இவை அனைத்தையும் ஒரே நாளில் எப்படி வரைந்து முடித்துவிட்டு வர முடியும் என்று வினா எழலாம். ஆனால் ஒரு படம் வரைவதற்கு ஒரு நிமிடத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நாங்கள் முடிவு செய்தோம். ஒரு நிமிடத்திற்குள் எந்த அளவுக்கு வேகத்துடன் கோடுகளைக் கீறுகிறோம் என்பதில் கவனம் குவித்தோம். இந்த கோட்டோவியங்கள் எல்லாம் என்னுடைய எளிய கிறுக்கல்கள். இவை முழுமையடையாமல் இருக்கலாம், ஆனால் இக்கோடுகளின் வீச்சும் எங்களது மனநிலையும் உணர்வோடு ஒன்றிப் போன நொடிகள் அடுத்த பயணத்திற்கான உந்துதலை தந்திருக்கின்றது.
ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026
அந்த vibe
ஒருநாள் நாங்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு மதியம் மூன்று மணிக்குச் சென்று படியேறினோம். மாலை நான்கு மணிக்குத்தான் நடை திறப்பார்கள் என்று சடைமுடியுடன் இருந்த கிருஷ்ண பக்தர் ஆங்கிலத்தில் "4' O clock" என்று சொல்லி விட்டு அவரது துணிப் பைக்குகள் எதையோ துழாவினார். வெளியில் வந்து அங்கிருந்த வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து உரையாடினோம். "இந்த இடம் "vibe" ஆக இருக்கிறது" என்றார் எங்களில் ஒருவர். உடனிருந்தவர்களில் இருவர் ஆமாம் என்பது போன்றே தலையசைத்தனர். எனக்குப் பொதுவாக பிடித்தது பிடிக்காதது பற்றி யாராவது கேள்வி எழுப்பினால் மனம் ஒருவித குழப்பத்தில் ஆழ்ந்துவிடும். அத்தாடு இப்படி ஒருவர் தன் மனதிற்கு பிடித்த இடமாக இருப்பதை மேற்சொன்ன சொல்லால் உணர்த்த முன்வருகிறார் என்றதும் திக்கென்றிருந்தது.
மற்றொரு நாள் வேறொரு இடத்தில் நாங்கள் கூடுகையில் (எந்த இடத்தில் என இப்போது நினைவில் இல்லை ஆனால் இதுவும் ஒரு கோவில்) அவரே சொல்கிறார் " இஸ்கானுக்குப் பிறகு இந்த இடம் தான் 'vibe' ஆக இருக்கிறது" என்று. வரையும் கோடுகளைத் தவிர்த்து அங்கும் இங்கும் எந்தப் புறக்காரணியும் எனது அகத்தைத் தீண்டவில்லை. உண்மையில் புறக் காரணங்களால் நம் அகம் தூண்டப்படுமா என்றால் ஆமாம் என்றே சொல்லலாம். அங்கே எல்.ஆர்.ஈஸ்வரி பாடல் ஒலித்திருந்தால் கொஞ்சம் தலையும் கை காலும் உதறல் எடுத்திருக்கும். அந்த 'vibe'.
ஞாயிறு, 26 ஜூலை, 2026
செயற்கை நுண்ணறிவின் பிழைகள்
சிலபல கடைகளின் முகப்புகள் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி உருவாக்கிய விளம்பரப் படங்களால் நிரம்பியிருக்கிறது. அனைத்துத் துறையினரும் தங்களது தேவைக்காக இந்த வழிமுறையைப் பின்பற்ற தொடங்கிவிட்டனர் செய்தி பத்திரிக்கைத் துறை உட்பட. இணைய வழி பத்திரிக்கை அல்லது பத்திரிக்கை போல் நடிப்பவர்களை விட்டுவிடலாம். உண்மைகளை உரக்கச் சொல்வோம் என முழங்கி வீட்டுக்கு வீடு வந்துசேரும் செய்தித்தாள்கள் இந்த வகை படங்களை பயன்படுத்தும் போது கவனிக்கத் தவறும் பிழைகளை எப்படி ஏற்றுக் கொள்வது. எழுத்துப்பிழை திருத்துநர் போல் செயற்கை நுண்ணறிவு படங்களின் பிழைகளையும் திருத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். உதாரணப்படம் கீழே. தமிழ்நாட்டு அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்..
சனி, 18 ஜூலை, 2026
வாசிப்பின் இடையிடையே
சில ஆண்டுகளுக்கு முன்பு "பாகீரதியின் மதியம்" என்ற புனைவு நூலை வாசிக்கும் பொழுதில் தான் ஓவியர் ஆதிமூலம் பற்றியும் அவரது காந்தி ஓவியங்கள், மிதக்கும் வண்ணங்கள் போன்ற படைப்புகளையும் பற்றி அறிந்து அவ்வோவியங்களைத் தேடுகையில் கோட்டோவியங்களில் காந்தியின் உருவங்களையும் ஆங்கிலேய இந்தியாவின் அரசர்கள் ஓவியங்களில் முகம் இழந்து உடை, நகை போன்ற அணிகலன்களை மட்டுமே சுமந்த உருவப்படங்களைக் கண்டு ஏன் இப்படி வரையப்பட்டிருக்கிறது என்ற ஐயத்தில் உலாவந்தபோது அவர்களின் அடிமைத்தனத்தை காட்சிப்படுத்தவே இத்தகைய வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் என்று தெரிந்தது. எப்படி தெரிந்தது என்பது நினைவில் இல்லை. சில நாட்கள் முன்னதாக ஓவியர் சந்ரூ கூறிய கருத்தில் கூட இந்த வகை படைப்புகளுக்கு ஓவியர்கள் கொடுக்கும் விளக்கங்களை நக்கலடித்திருப்பார். இப்போது காந்தியின் சுயசரிதை வாசிப்பினிடையே மூன்றாவது பாகத்திலுள்ள பதினாறாவது அத்தியாயத்தில் மகாராசாக்கள் பெண்களைப் போல ஆடை அலங்காரங்களை வெறுப்புடன் தங்களுக்கு விருப்பம் இல்லாமலே அணிந்து தர்பாருக்கு வருவதும் அதனை அடிமைத்தனத்தின் குறியீடாக அவர்கள் எண்ணுவதையும் பதிவு செய்திருக்கிறார். ஓவியர் ஆதிமூலம் அவரது மகாராசாக்கள் ஓவியத்திற்கான மூலச் சிந்தனையை காந்தியிடம் இருந்தே பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
*
ஒளிப்பதிவு பற்றி அறியக்கூடிய அரிய தகவல்களையும் நுட்பங்களையும் எளிய மொழியில் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் இந்துவில் சி.ஜே ராஜ்குமார் எழுதி வரும் தொடரில் இன்று ஒப்பனையும் ஒளிப்பதிவும் எவ்விடத்தில் இணைந்து சிறப்புற பணியாற்றி சிறந்த படைப்புகளை உருவாக்க இயலும் என்பதற்குரிய நுட்பங்களை விவரித்திருப்பது தொடர்ந்த தேடலுக்கு உரமூட்டுவதாக இருக்கிறது எப்படி ஓவியத்தில் ஒளிநிழல் பிரித்து படைப்பை உண்மை நிலைக்கு நெருக்கமாக உருக்கொண்டு வருகிறோமோ அதே போலவே ஒளிப்பதிவிலும் ஒளியின் தன்மை மற்றும் ஒப்பனையின் தன்மை இரண்டும் இணைந்து எவ்வகையில் திரைக்கதைக்கு உயிரோட்டம் கொடுக்கிறது என்பது கலைகள் ஒன்றுக்கொன்று பிணைந்து வாழ்வை காட்சிப்படுத்தும் அழகியல். ஓவியம் பற்றிய தேடலுக்கும் இந்த வாசிப்பு உந்துதலை ஏற்படுத்துகிறது.
செவ்வாய், 7 ஜூலை, 2026
அக்கா குருவி 33
ஒரு படுக்கைக் கோடு
அதன் மையத்திலிருந்து செங்குத்தாக
ஒன்று
இதன் மையத்தில்
வலப்புறமிருந்தொரு படுக்கை
படுக்கையின் வலது ஓரம்
செவ்வகம்
(செவ்வகம் என்றால் சதுரம் எனக் கொள்க)
இடது ஓரத்திலிருந்து
கீழ் நோக்கி செங்குத்தாகவும்
அதன் அடிப்பகுதியையும்
முதலில் கிழித்த
செங்குத்தின் அடிப்பகுதியையும்
கட்டிப்போடும் படுக்கைக் கோடு
வரைந்து பார்ப்போம்
புதன், 24 ஜூன், 2026
அண்ணா நூற்றாண்டு நூலகம் யாருக்கானது
சில மாதங்களுக்கு முன் ஒருநாள் காலை நேரம் அலுவலகக் கூடலுக்காகக் கிளம்பினேன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கடந்துதான் மைலாப்பூர் செல்ல வேண்டும் என்பதால் சில ஓவியப் பக்கங்களை புரட்டலாம் என்று படியேறினேன். இருக்க இடம் இல்லாத அளவு மனிதத் தலைகள் எங்கும் பரவியிருந்தது "என்னடாயிது நுண்கலை பற்றி வாசிக்க இவ்வளவு பேரு இருக்காங்களா" என்று என்னை நானே கேட்டுக் கொண்டு ஒரு ஓரமாக தரையில் அமர்ந்து கோட்டோவியங்களில் ஆழ்ந்தேன்.
கடந்த சனிக்கிழமை Cybersecurity பற்றி வாசிக்க வேண்டுமென மூன்றாவது தளத்திற்குச் சென்றேன். அங்கங்கே இருக்கைகள் மீதம் இருந்தது. இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன் எதிரே இருந்த இருவர் மடிக்கணினியும் குறிப்பேடுகளும் வைத்து படிப்பது போல் இருந்தது. வலது பக்கத்தில் இருந்த இருக்கைகளில் ஒரு ஆணும் பெண்ணும் வந்து சிறு சலசலப்போடு அமர்ந்தார்கள். குறிப்பேட்டில் எழுதி இருப்பதை வைத்துக் கொண்டு மெல்லிய அந்தரங்கக் குரலில் அந்த ஆண் பெண்ணுக்கு ஏதோ பாடம் சொல்லிக் கொடுக்கிறான். (கொடுக்கிறான் என்று எழுதினால் கொடுக்கிறார் என்று தானாக சரிசெய்கிறது தட்டச்சு). பெரும்பான்மையானவர்கள் எவரும் அங்கிருந்த புத்தகங்களை எடுத்து வாசிப்பவர்களாகத் தெரியவில்லை. யாருக்கானது நூலகம் என்ற கேள்வி ஒலித்துக் கொண்டே இருந்தது.
ஞாயிறு, 14 ஜூன், 2026
வழியில்
ஏரி மீன் சாப்பிட்டு நாட்கள் ஓடிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணி இருந்தால் பக்கத்தில் இருக்கும் கடையில் ஆட்டுக் கறி வாங்கி வீட்டில் சமைப்பது வழக்கம். விடுமுறை என்றால் மனம் தொலைவு நாடும் குறிப்பாக மீன். நேற்று எண்ணத்தில் அசைவம் பற்றிக் கொண்டதும் "சிலேபி" மீனின் உருவம் கோடுகளாக உருண்டு திரண்டது.
செம்பரம்பாக்கம் ஏரி அருகில் உள்ள சந்தையில் விறால், கட்லாகெண்ட, சிலேபி, வவ்வால் ஆகியவைதான் பெரும்பாலும் கிடைக்கும். மூன்று கிலோ சிலேபி வாங்கிவிட்டு திரும்பிவரும் போது வாத்துக்கறி கடை அருகே கண்ணாடிக்குள் கண்கள் மட்டும் தெரியும்படி துணி கட்டியப் பெண்மணி கை நீட்டினாள் ஏனோ பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா அம்மையார் உளக்காட்சியில் வந்து போனாள்.
வெளிவட்டச்சாலையைக் கடந்து குன்றத்தூர் பாதையில் வரும் போது "பெயர் என்ன" என்றாள்
"பாண்டியன். நீங்க எங்க இறங்கணும்"
"பல்லாவரம் போகணும் குன்றத்தூர் பஸ்டாண்ல எறங்கணும், மாசத்துக்கு ஒருமுறை இங்கவந்து மீன் வேங்கிட்டு போவேன், மத்திமீன் வேணும்னா காசிமேட்டுக்கு போயிருவேன். ஐஸ்ல வச்ச மீன் சாப்புட முடியாது. இதுன்னா மசாலா தக்காளி எல்லாம் போட்டு மண்பானைல கொழம்பு வச்சிட்டம்னா நாலு நாளைக்குச் சாப்புடலாம் ஒண்ணும் ஆவாது அதனால 66 புடிச்சி இங்கவந்துட்டு 86D புடிச்சி சந்தைல எறங்கிருவேன். உங்கள மாதிரி யாராவது வந்தா உதவி கேப்பேன். சின்னப் பசங்க யாரும் நிக்க மாட்டாங்கா, அதுவுமில்லாம அவங்க போற வேகத்துக்கு. இல்லனா ஆட்டோவுக்கு பத்து ரூபாய் குடுத்து வந்துருவேன்"
இடையிடையே நான் தலையசைத்துக் கொண்டிருந்தேன்.
"நான் மணிகண்டன் நகர் போறேன் அங்க எறக்கிவிடட்டுமா"
"அது எங்கயிருக்கு"
"பல்லாவரம் போற வழிலதான்"
"உங்களுக்கு தொந்தரவு இல்லன்னா அங்கேயே எறக்கிவிடுங்க"
"மத்தி மீன் காசிமேட்டுல எவ்வளவுக்கு தாராங்க"
"அது ஒவ்வொரு நாளும் மாறும், அங்க கூறுதான் வப்பாங்க கிலோக் கணக்கு கெடையாது. செல நேரம் கூறு எரணூறு அம்மாவாச நாள்னா நெறைய பேரு வேங்கமாட்டாங்க அதனால மூணு கூறு எரணூறுன்னு கெடைக்கும்."
இவங்களை 66 பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடலாமா வேண்டாமா என்று நினைக்கையில் அந்நிறுத்தத்தை கடந்து கொண்டிருந்தோம்.
"உங்க பேர ஏன் கேட்டேன்னு தெரியுமா"
தலையை புரியாதது போல ஆட்டினேன்.
"காலைல அப்புறம் சாய்ங்காலம் ப்ரேயர் பண்ணுவேன் அந்த நாள்ல உதவி செய்தவங்களுக்கு எல்லாம் சேர்த்து அதனாலதான் பேர் கேட்டேன். இத நான் சின்னப்புள்ளயில இருந்து செய்யிறேன்"
அவங்க சாய்ங்காலம்னு சொன்னாங்களா இல்ல ஈவ்னிங்னு சொன்னாங்களான்னு இப்போ குழப்பமாக இருக்கிறது.
ஓ அப்படியா நல்லது நல்லது என்று சொல்லலாமா என எண்ணும் போதே இவங்களை மேத்தா நகரில் இறக்கிவிடலாம் என முடிவு செய்துவிட்டேன்.
வியாழன், 11 ஜூன், 2026
வாசிப்பினிடையே
கலை என்பது கலைத்து வைப்பதன் சுருங்கியச் சொல் வடிவாக இருக்கலாம் என்றே அடிக்கடி எண்ணத்தில் ஓடுகிறது. இந்தச் சொல்லின் வேர் அல்லது பெயர் காரணம் என்ன என்றொரு அகத் தேடல்.
க்+அலை என இச்சொல்லை பிரிக்கலாமா அதற்கு இலக்கணம் இடம் தருமா என்று தெரியவில்லை ஆனால் அலை என்பது அலைந்து கொண்டே இருப்பதன் சுருக்கமா அப்படியென்றால் கடல் அலை எப்போதும் இங்கும் அங்கும் அலைந்து அலைந்து திரிவதால் ஒருவேளை அதற்கு அலை என்று பெயர் வந்திருக்குமோ. இருக்கட்டும்.
க் என்ற ஒலிப்புக்கு ஏதேனும் பொருள் இருக்குமா உயிர் பெற்ற எழுத்துக்குத்தானே பொருள் உருவாக முடியும். நான் நினைப்பது சரிதானா. அலையும் மனம் கலைக்கானதாக பொருந்தி கலை என்ற சொல்லாகவும் உருமாறியிருக்குமோ. தெரியவில்லை செத்தேங் கொழப்பமாத்தாயிருக்கு.
* * *
காந்தியின் சத்திய சோதனை வாங்கி சில ஆண்டுகள் இருக்கும். அப்போது தொடங்கி சில பக்கங்களுக்கு மேல் தொடர ஆர்வமில்லாமல் வைத்துவிட்டு இந்த கோடையில் மீண்டும் முயன்று தொடர்கிறது வாசிப்பு. தன்னைப் பற்றிய நிலைப்பாடுகளை அப்பட்டமாக பல இடங்களில் முன்வைக்கும் காந்தியின் எழுத்துப் பிடித்திருக்கிறது. பயத்துடன் கூடிய தனது போராட்ட குணத்தை லண்டனிலும் தென்ஆப்பிரிக்காவிலும் வெளிப்படுத்துபவர் ஒவ்வொரு நிகழ்விலிருந்தும் அவரது நிலைப்பாடுகளை மதிப்பீடு செய்து அடுத்தடுத்து பயணிப்பதில் அவரது தேடலின் பிடிமானம் உணரப்படுகிறது. தனக்கு நேரமில்லாத காரணத்தால் கற்க இயலாத தென்மாநில மொழியைப் பேசும் மக்கள் தான் பேசும் மொழியைக் கற்றுக் கொண்டு தன்னோடு உரையாட வேண்டும் என நினைக்கும் இடத்தில் இருந்து இன்றும் தொடரும் இந்தித் திணிப்பின் அடி வேரைப் புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் தனது பயணத்தின் இடையே தமிழ் கற்கும் வாசிப்பை மேற்கொள்கிறார். மீண்டும் தென் ஆப்பிரிக்காவில் என்ன வகையிலான போராட்டம் தொடரும் என்று எதிர்நோக்குகிறேன்.
* * *
வெள்ளி, 29 மே, 2026
வரைவும் செயற்கை நுண்ணறிவும்
சின்னச் சின்ன படங்களில் ஒரு கதை சொன்னால் எப்படி இருக்குமென நினைத்து சிறு சிறு கட்டங்களில் வரைந்து பார்த்தது முதல் படம்.
இந்த படங்களைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி மீள் உருவாக்கம் செய்தால் எப்படி வரும் என எண்ணியதன் விளைவு இரண்டாவது படம். கதை பற்றிய எந்த விளக்கமும் அளிக்காததால் அதனுடைய புரிதலிலேயே கதையோட்டத்தை தீர்மானித்து முடிந்திருக்கிறது.
திங்கள், 25 மே, 2026
சனி, 23 மே, 2026
வெள்ளி, 22 மே, 2026
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





