பன்னிரண்டாம் வகுப்பு தொடங்கிய மூன்றாம் நாள் வகுப்பறைக்குள் எங்கள் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் ஒரு கையில் கொத்துச்சாவியும் கம்பும் மறு கையில் சில கோப்புகளுடனும் வந்து நின்றார், பேரமைதி.
கோப்பினை விரித்து "எவம்ல அது" என்று குரல் தெறிக்க இருவரின் பெயரை உச்சரிக்கவும் அம்மாணவர் இருவரும் எழுந்து நின்றார்கள். "ரெண்டுவேரையுந் தவிர மத்த எல்லா பயலும் ஒண்ணு ரெண்டு பாடத்துல ஃபெயிலாயிருக்கிய, ஆனாலும் பன்னெண்டாப்புக்கு தள்ளிருக்கோம், ஒழுங்கா படிக்க வழியப் பாருங்கல" என்றபடி ஒவ்வொரு பெயராக வாசித்து நாங்கள் எந்தெந்த பாடத்தில் தோல்வியுற்றோம் என விவரித்து தனித்தனி எச்சரிப்புகளோடு அந்நாள் தொடங்கியது. பின் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரும்பாலானோர் தேர்வு பெற்றது அதன் கிளைக் கதை.
இன்று ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்ற செய்தியைக் கண்டதும் எண்ணங்கள் இந்நிகழ்வையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தன பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அறிவித்த நாட்களைப் போல. மேலும் வீட்டிற்கு வரும் செய்தித் தாள் நான் வாசிப்பதற்கு முன் கிழிபடுவது வழக்கம் இன்றைய தாள் கிழிந்திருந்த விதம் எண்ணங்களை மேலும் ஊடறுத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக