வியாழன், 8 ஜனவரி, 2015

திரையுலக சாபம்

                           இப்பொழுதெல்லாம் திரைப்படம் பார்ப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டேன், தொலைக்காட்சியிலும் சரி திரையரங்கிலும் சரி. வெறும் பொழுதுபோக்குதான் திரைப்படங்கள்  என உருவாக்கப்பட்டிருக்கும் சூழலில் இப்படியான பொழுதுபோக்கு தேவையில்லையென்றே நினைக்கத் தோன்றுகிறது.

                            கவிஞர் ஒருவர் அவரது புத்தகத்தில் எழுதியிருப்பார், பொழுதுபோக்கு எனும் சொல்லையே தமிழிலிருந்தே உடைத்தெரிய வேண்டும், மாறாக பொழுதாக்கம் என்ற சொல்லை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, அவர் வேறுயாருமல்ல திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள்தான். பொழுதுபோக்கு படங்களுக்கு இவர் பாடல் எழுதினாலும் இந்தக் கூற்றிலிருக்கும் கருத்தை தவிர்க்க இயலாது.

                            இப்படியான திரைப்படங்களிலிருந்து விலகியிருக்க, பொழுதாக்கத்தை உறுதி செய்ய புத்தக வாசிப்பு பெரும் பங்களிக்கிறது. மேலும் இந்த காலத்தில் திரைப்படத்தின் விமர்சனங்கள் அநியாயத்திற்கு எழுதப்படுகின்றன அதுவே நமக்கு ஒரு முடிவையும் கொடுத்து விடுகிறது.

                            தங்கமீன்கள் வெளிவந்த பிறகு இயக்குனர் ராம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி ஒன்றை காண நேரிட்டது. பேட்டியின் இடையே ராம் கூறுவார் ''வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ஒரு முழுநீள காமெடிப்படம் என்றுதான் அனைவரும் புரிந்து வைத்திருக்கிரோம், ஆனால் அதில் காட்டப்படும் சாதிய அடையாளங்கள், சாதிக்காகவும் கௌரவத்துக்காகவும் தான் அடிக்க கூட விரும்பாத மகளை கொலை செய்து விட்டதாகக் கூறி ஊராரை நம்ப வைத்துவிட்டு, மகளையும் மருமகனையும் மறைமுகமாக வாழவைத்துக் கொண்டிருப்பார் அப்பா. இந்த படத்தை நாம் குறை சொல்ல முடியாது''.
                             நிச்சயமாக இப்படியான கோணத்தில் யோசிக்குமளவுக்கு வசனமோ காட்சிப் படுத்தலோ படத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நீங்களெல்லாம் என்ன நினைக்கிறீர்கள்?. அது காமெடிப்படந்தான. (நகைச்சுவை என்று கூட சொல்ல முடியாதுதான்) எனக்கு சினிமா அறிவெல்லாம் கிடையவே கிடையாது. மேலும் ராம் எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர்.

                              ஆனந்த விகடனில் சில வாரங்களுக்கு முன் கமல் அளித்த பேட்டியில், ''கம்பரும் இராமயணத்தை காப்பியடித்திருக்கிறார், சினிமாவில் காப்பியடித்தால் என்ன என்பதுபோலவும், கலைஞர்கள் கற்று கொள்ளும் வரையில் காப்பியடிக்கத்தான் செய்வார்கள், திறமை வந்ததும் திமிர் வந்துவிடும், பின் விட்டுவிடுவார்கள்'' எனக் கூறினார். ஏதோ ஜனநாயக உரிமைபோல பேசுகிறார். கமலின் பெரும்பாலான படங்களும் எனக்கு பிடித்தமானவை.

                              ஒரு நம்பிக்கையில் சென்ற வாரம் கயல் படம் பார்த்தேன், தொடக்கத்தில் வரும் வசனங்கள் படம் எதையோ ஆழமாக சொல்லப்போவதாக இருந்தது.. ஆனால் ப்ச்... காதல்தான் எனது கழுத்தை இறுக்கியது.
                              நாயகனையும் நாயகியையும் சபலத்தோடு ரசித்துக் கடப்பதுதான் தமிழ் ரசிக ரசிகைகளுக்கு திரையுலக சாபம்.......

                                

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


நல்லவிதமான அலசல்கள் நண்பரே.... அன்றிலிருந்து இன்றுவரை அரைத்த மாவைத்தேன் அரைக்கிறார்கள் இந்த சூட்சுமம் ரசிகன் என்ற அறியாமைகளுக்கு மட்டும் விளங்குவதில்லை நண்பா.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

தமிழ்சினிமாக்களை பற்றிய சிறப்பான அலசல்! தொடருங்கள்!