அரூப ஓவியங்களை அணுகுவதில் சில மனத்தடையுண்டு, களைத்துபோகும் கண்களும் மனமும் அவற்றை வெற்றுக்கோடுகளாகவும் வண்ணங்களாகவும் ஒதுக்கிவிட்டு தத்ரூபத்துக்குள் பதுங்கிக்கொள்ளும். சமீபத்தில் சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்திற்கு நண்பன் தங்கராசாவுடன் சென்றபோது பணிக்கரின் ஓவியங்களோடு பிற படைப்பாளிகளின் ஓவியங்களையும் காண வாய்த்தது. பணிக்கரின் ஓவியமொன்றில் வரையப்பட்டிருந்த குறியீடுகளை கண்ட நாங்கள் இதற்கொவ்வொன்றுக்கும் ஓர் விளக்கமுள்ளவை என்ற ரீதியில் கடந்துபோனோம். அவ்வோவியம் பற்றிய கட்டுரையொன்றை வாசித்தபோது அக்குறியீடுகள் மரபின் தொடர்ச்சியாகவும் மொழியின் ஆதியெழுத்தாகவும் அறியக் கிடைத்தது. இப்படி யாரேனும் எழுதிக்கொண்டிருக்கும் தேவை தமிழுலகத்துத்தின் முக்கிய தேவை.
எதாவதொரு உருவம் எங்கு சென்றாலும் பின்தொடர்வது போன்றதொரு மாயவிளைவு மனதளவில் அல்லது கண்ணளவில் தோன்றிக்கொண்டேயிருக்கும். தினமும், இல்லை... எப்பவாவது உடற்பயிற்சி செய்யும் பொழுதில் சுவரை நோக்கி நின்றுகொண்டு இயங்குவது வழக்கம். சுவற்றின் பளபளப்பை மீறி துருத்திக்கொண்டு நிற்கும் பொடிப்பொடி மண்கற்கள் புள்ளிகளாக மாறியும் சிறுசிறு வெடிப்புகள் கோடுகளாக உருவகம் கொண்டு வெளிப்படுத்தும் அல்லது உணரவைக்கும் சித்திரங்களை கண்ணால் வரைந்துகொண்டேயிருக்கலாம். இப்படி பல தருணங்கள். அலுவலக கழிப்பறையில் சிறுநீர்கழிக்கையில் அந்த "Tiles" பார்த்தால் அதில் நீளும் குழையும் வண்ணங்கள். சிதைந்துபோன சாலைகளை நிற்கும் பேருந்தின் சாளரம் வழி சந்தித்தல். வண்ணப்பூச்சிகள் உதிர்ந்துபோன பேருந்து இருக்கை, வீட்டுச்சுவர், மேம்பாலச்சுவர், பழங்கோவிலில் சிற்பம் தவிர்த்த கற்தூண் புள்ளிகள் கலவிக்குப்பின்னான போர்வையின் சுருக்குகள், மட்டையால் வெள்ளையடிக்கப்பட்ட சுவரில் ஒட்டிக்கொண்டிருக்கும் அதன் துரும்புகள் என நம்மோடு அருகிலிருப்பவை இவையே மேற்சொன்ன மாயவிளைவு. இதுதான் அரூபங்களின் கிடக்கையா? இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
அரூபம் மட்டுமே நவீனமா? நிச்சயமாக இருக்காது என்றே முன்னகர்வோம்.
தற்போது வெகுநாளாக வாசித்துக்கொண்டேயிருக்கும் "பாகீரதியின் மதியம்" புதினத்தின் பல பகுதிகளில் ஓவியங்களையும் வண்ணங்களையும் பற்றி சிந்திக்கும் முறையினை விவாதிக்கும் அனுபவம் நிறைந்திருக்கிறது. இதைப்பற்றி வேறொரு பதிவில் எழுதுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக