சனி, 3 ஜூன், 2017

பாகீரதியின் மதியம் - வாசிப்பு

கடந்த சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கி வந்ததிலிருந்து தினமும் புத்தக அலமாரியை திறக்கும் பொழுதெல்லாம் இந்த புத்தகத்தை எப்படி வாசிக்கப்போகிறோம் என்ற பேரச்சம் மனதில் உருண்டோடும் அதற்கு அதன் தடித்த உருவமே காரணம். அதிலிருந்து சில வாரங்களுக்குப்பின் ஒரு பின்மதியத்தின் புழுக்கம் அடங்காத வேளையில் (முந்தைய இரவுதான் யோசனை எழுந்தது இப்புத்தகத்தை முதல் பக்கத்திலிருந்து வாசிக்கத் துவங்கக்கூடாதென்று) புரட்டியபோது சிக்கியவொரு பக்கத்திலிருந்து தொடங்கினேன், எதிர்பாராதவிதமாக பாகீரதி வாசுதேவனின் நண்பனிடம் ஜெமினியின் மூன்று ஓவியங்களையும் அதன் வண்ணங்களையும் பற்றிய விவரணைகளை அடுக்கும் காட்சி வாசிக்கக்கிடைத்தது.

வெகுநாட்களுக்குப் பிறகே அதனை முதலிலிருந்தே வாசித்துவிடுவது என்ற முடிவுக்கு வந்து தொடங்கி இன்று முடிக்கும்வரை வேறொரு புத்தகத்தை (பத்திரிக்கைகள் தவிர்த்து) கையிலெடுக்கவில்லை. காரணம் கனவு, அதற்குள் மிதக்கும் காட்சிகள். என்மகளும் இப்பொழுது அத்தையென்ற சொல்லை அழுத்தமாக உச்சரிக்கத்தொடங்கியிருப்பதனால் அட்டைப்பட ஓவியப்பெண் அவளுக்கு அத்தையாகிவிட்டாள் (அப்பழுக்கற்ற அம்முகம் வாஞ்சையோடு வாசிக்க அழைப்பதுபோன்றதொரு தொனி), படத்தை தொடுவதும் அப்பாவை பார்ப்பதும் மெல்லச்சிரித்து "அத்த" என்பதும்.

புதினத்துக்குள் வரலாறும் சமூகநீதிக்கான விவாதங்களும் வாசிப்பிற்கான தூண்டுதலும் ஓவியத்திற்கான பரந்த வெளியும் மிதந்து கொண்டிருக்கிறது.

துரையின் அறைக்குள்ளிருக்கும் ஓவியநூல்களை வாசிக்க ஜெமினிக்கு அனுமதி கிடைத்தபோது ஏற்பட்ட கிளுகிளுப்பு , ஓவியம் பற்றி பாகீரதி அவளின் மனவோட்டத்திற்கேற்ப வெவ்வேறு தருணங்களில் விவரணைகள் செய்வதெல்லாம் கிளர்த்திவிட்டிருக்கும் எண்ணவோட்டங்களை எப்படி விவரிப்பதெனத் தெரியவில்லை.

பாகீரதியை கதைசொல்லி எங்கே செல்ல அனுமதித்திருக்கிறாரென்று தெரியவில்லை ஆனால் ஜெமினியின் சித்திரங்கள் மதுரையில் ஒட்டடை விழுந்த பூட்டிய அவளின் வீட்டினுள்தான் இருக்கிறது.

1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…

பகிர்வுக்கு நன்றி
வாசிப்பு அனுபவத்தையும் விவரிக்கலாமே...