சனி, 27 அக்டோபர், 2018

விஜய் பிச்சுமணியின் செதுக்கோவியங்கள்


கடந்த பத்து நாட்களாக இதோ அதோவென இன்று தான் வாய்த்தது விஜய் பிச்சுமணியின் ஒவியங்களைக் காணும் நாள். இணையத்தில் அவரது ஒவியங்களை பார்த்திருந்தாலும் நேரில் அவை எழுப்பிய உணர்வுகள் பிரம்மிக்கத் தக்கதாக இருந்தது. கண்ணாடிக் கதவுகளுக்கு வெளியில் இருந்த “Share Auto” ஒவியம் அழகையும் நகைப்பையும் ஒருசேர அனுபவிக்கச் செய்தது, குறிப்பாக பகிர்ந்தூர்தியில் இருந்த பெண், ஆண் மற்றும் ஓட்டுனரின் கண்கள். உள் நுழைந்ததும் முதலில் “The Guard” என தலைப்பிடப்பட்ட ஒவியம் பார்க்கக் கிடைத்தது, அது ஓர் மரச் செதுக்கு ஒவியத்தை காகிதத்தில் அச்செடுக்கப்பட்ட படம். அதன் கருப்பு வெள்ளைச் செதுக்கு கீற்றுகள் நகர விடாமல் உள்ளிழுத்துக்  கொண்டது.

அச்சுப் பிரதி ஓவியங்கள் பால்யத்தின் நினைவுகளை கிளர்த்தி விட்டன. தலையிலிருக்கும் எண்ணையை அளி ரப்பரில் தேய்த்தெடுத்து புத்தகத்திலுள்ள எழுத்துக்களிலோ படங்களிலோ ஒற்றி எடுத்தால் ஒட்டிக்கொண்டு வரும். அதன் தொடர்ச்சியோ இதுவென எண்ணத்தோன்றியது. இதை எப்படிச் செதுக்கி அச்சு செய்திருப்பார் என்ற அறிதல் நோக்கில் மனம் உழன்று கொண்டிருந்தது, அதுபற்றி உரையாட வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது, ஆனால் நான் சென்ற வேளையில் ஓவியர் இல்லை.

ஓவிய வடிவங்களும் மொழி வடிவங்களும் ஒன்றுக்கொன்று பிணைந்திருப்பதாகவே தோன்றுகிறது. சில ஓவியங்கள் சிறுகதையோடும், நாவலோடும் கவிதை மொழியோடும் ஒன்றிப் போகும். அப்படியான ஓவியங்களை படைக்கும் சாத்தியங்கள் விஜயின் படைப்புகளில் ஒளிர்கிறது. காகத்தின் இத்தனை அசைவுகளை வேகத்தை பண்புகளை மரச் செதுக்கில் வேட்டையாடியிருப்பது ஆச்சரியத்தையும் பிரம்மிப்பையும் கொடுக்கிறது. நிலப்பகுதியை காக்கா பார்வை பார்த்திருப்பதிலிருக்கும் அடர்த்தியான கோடுகள் வியப்பில் ஆழ்த்துகின்றது, அதன் அச்சு ஓவியம் மட்டுமே காட்சியிலிருந்தது ஏமாற்றமளித்தது. காடு பறவைகள் விலங்குகள் கொஞ்சம் மனிதர்கள் என ஓர் காட்டின் கவிகைப் பரப்பில் பார்வையையும் நிலப்பரப்பில் கால்களையும் ஊன்றிக்கொண்டு வனத்துக்குள் சென்று வந்த உற்சாகம்.

கருத்துகள் இல்லை: