ஞாயிறு, 25 அக்டோபர், 2015

சோழமண்டலம் கலைஞர்கள் கிராமம்

சென்னைக்கு வந்து நான்கு வருடங்களாகின்றது, சோழமண்டல கலைஞர்கள் கிராமம் என ஒன்று இருப்பதை இரண்டு வருடத்திற்கு முன் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் இணையதளத்தில் ஒரு கட்டுரையை வாசித்தபோதுதான் அறிந்துகொண்டேன். அப்போதிருந்து போகவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் போதெல்லாம் கூகிள் வரைபடத்தில் அதன் இருப்பிடத்தையும் திருவான்மியூரிலிருந்து எப்படி போவதென்றும் பார்த்துக்கொள்வேன். தாம்பரத்திலிருந்து எப்படி சென்றுவருவதென்று கடந்த இரண்டு வருடங்களாக பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த காத்திருப்பிற்கும் எதிர்பார்ப்பிற்கும் உகந்த நாளாக இன்று அமைந்துபோனதில் அகம் குளிர்ந்துபோனதென்னவோ உண்மை.

கலைஞர்கள் கிராமம் என்றதும் வீடு போன்ற குடில்களில் அல்லது கட்டிடங்களில் உள்ளவர்கள் படம் வரைந்து விற்பனைக்கு வைத்திருப்பார்கள். மேலும் அங்குள்ளவர்கள் எப்போதும் எதையேனும் வரைந்து கொண்டே இருப்பார்கள் என்றே ஒரு கற்பனை பிம்பம் உருவானது. பின்னர் இணையத்தில் தகவல் திரட்டும்போதுதான் பிரபல இந்திய ஓவியர்களின் வரைபடங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகம் என தெரிந்து கொண்டேன்.

கடந்த வாரம் உலக நவீன ஓவியங்களை பற்றி இணையத்தில் தேடிக்கொண்டிருக்கும் போது www.metmuseum.org என்ற இணையதளம் ஒன்று அகப்பட்டது. அனைத்துலக நாடுகளின் வரலாற்றுக்கு முந்தய, ஆரம்ப மற்றும் சமகால ஓவியங்களை பற்றிய பல அரிய தகவல்கள் கிடைக்கப்பெற்றன. முழுமையாக படிக்க முடியவில்லையென்றாலும், அது அவ்வளவு எளிதான செயலல்ல என்பதை மறுக்க இயலாது. இந்தியாவை பற்றி வாசிக்கும் போது, ஓவியங்களைப் பொறுத்தவரையில் ஒரு நீண்ட பாரம்பரியம் இல்லை என்று தெரிகிறது, பல படையெடுப்புகளை ஏற்றுக்கொண்டு வெவ்வேறு விதமாக இடிபாடுகளுக்கிடையில் வளர்ச்சி அடைந்திருக்கிறது . இதை வெங்கட் சாமிநாதனின் கலைவெளிப் பயணங்கள் கட்டுரை நூலில் தெளிவாக விளக்கியிருப்பார்.

ஒருவேளை வாசிக்கப்படாமல் இருக்கும் சிந்துச்சமவெளி எழுத்துக்கள் போல, இன்னும் கண்டறியப்படாத கற்சிற்பங்களும், பாறை ஓவியங்களும் எங்கேனும் புதைந்தோ அல்லது புதைக்கப்பட்டோ இருக்கலாம்.இந்த தளம் கண்டடந்த பின்னர்தான் சோழமண்டலம் செல்லவேண்டும் என்பதை உறுதி படுத்திக்கொண்டேன், சென்ற வாரமே சென்றிருக்க வேண்டியதுதான். அதற்கு முன் முகநூல் Chennai Weekend Artists (https://www.facebook.com/groups/ChennaiWeekendArtists/) குழுவைச் சார்ந்த ஓவியர் முரளி (https://www.facebook.com/events/478430492339182/) வரும் வாரத்தில் அவரது கலைப்படைப்புகளை Game Bigins என்ற பெயரில் கண்காட்சியாக வைக்கப்போவதாக அறிவிப்பு வந்தது, இவரோடு ஞாயிறன்று மொத்த குழுவினரும் அங்கே கூடுவதாகவும் தகவல் கிடைத்தது. ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்று நினைத்துக் கொண்டேன்.காலை 11.30 க்குள் இடத்தை அடந்துவிட்டேன். அருங்காட்சியகத்தில் சமகால ஒவியங்களில் சிலவற்றை பார்வையிட்டேன், இங்கே அதிக நேரம் செலவழிக்கவில்லை. Game Bigins பக்கம் படியேறிவிட்டேன். இரண்டே படிகள் தான் அதிகமில்லை.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பற்றி அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். சீறீப்பாயும் காளைகள்தான் இந்த கண்காட்சியின் நாயகர்கள், இவைகளை அடக்கும் மனிதர்கள் அற்புதமாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளார்கள்.

அரங்கத்தின் உள் வலதுபக்கம் சிறு சிறு சட்டகங்களில் சீறும் காளை பல கோணங்களில் வரையப்பட்டுள்ளது மிகவும் கவரும் தன்மையில் இருந்தன. இப்போது இடது பக்கத்திலிருந்து தொடங்கினேன். கரிக்கோல் மற்றும் நீர் வண்ணங்கள் கொண்டு வரையப்பட்ட படங்கள் அழகாக இருந்தாலும், அதற்கடுத்தாற்போல் இருந்த Acrylic on Canvas வகை ஒவியங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. இரண்டு மூன்று என எத்தனை முறை வேண்டுமானாலும் மிகவும் சேர்த்துக் கொள்ளுங்கள், அத்தனை அழகும் தினவும் கூடிய ஓவியங்கள்.

திமிரும் காளையின் முகம் அதன் இரு கொம்பிலும் அதை அடக்கும் வீரனின் கைகள் மற்றும் வலது தோள் மட்டும் தெரியும் விதத்தில் வரைந்திருப்பார். முழுவதும் பார்த்து முடித்தபின்னர் மீண்டுமொருமுறை இறுதியாக அதை மட்டும் பார்த்துவிட்டு இல்லை தொட்டுப்பார்த்துவிட்டு வந்தேன். அதற்கடுத்ததில் தினவுகொண்ட வீரனின் தோள்கள் மீது காளையின் முகம் இடது பக்கம் திரும்பியதுபோலிருந்த ஓவியமும் அட்டகாசமாக இருந்தது.

Mixed Media என்ற பிரிவில் சில படங்கள் காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. காளைகள் போட்டிக்கு முன்னர் வரிசையாக நிற்பது போன்றதொரு வரைபடம் ஊதா வண்ணத்தின் ஆதிக்கம் அதிகமிருந்து ஆர்வத்தை அதிகரித்தது. காளையின் ஒற்றைக்கண் மட்டும் வரைந்திருந்தது திடமான கவிதை. இந்த வகையிலிருந்த மற்ற படங்களும் மிகச்சிறப்பாக வரையப்பட்டிருந்தது. மனிதர் அதிகமாக உழைத்திருக்கிறார்.

மரத்தின் கிளைகள் மீது சிறுவர்கள் ஏறி நிற்பதும், அமர்ந்திருப்பதுமாக உள்ள ஓவியம் சில பசுமையான பழைய நினைவுகளை கிளரிவிட்டது.

காளையை அடக்குவது போன்ற கரிக்கோல் வரைபடங்கள் மிக அருமையான வடிவமைப்பு. காளைகள் துள்ளி குதிக்கும் போது காணும் திமிலை பார்த்துக்கொண்டே இருக்கலம்.

இறுதியாக எனது பெயரையும் அந்த குறிப்பேட்டில் எழுதிவைத்துவிட்டு வெளியில் வந்தேன். குழுவினர் அவர்களது காகிதங்களுக்கும் உயிர் கொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். எனக்கு ஒருவரின் ஓவியத்தை பார்த்தாலும் அது தொடக்கம் முதல் இறுதிவரை அவரது கோட்டின் அழுத்தங்களை பார்த்துவிட வேண்டுமென்று நினைத்தேன். அப்படி ஒருவர் சிக்கினார். பார்த்துக்கொண்டே இருந்தேன் படம் பிடிக்க மறந்துவிட்டேன். அதனால் அவர் வரைந்த அந்த கற்சிற்பத்தின் ஒளிப்படத்தை இணைத்துள்ளேன்.Pastel வகை ஓவியங்கள் வரைவதை முதல் முறையாக நேரில் பார்த்தேன், அவரின் பெயர் சங்கர் என்றறிந்தேன். அவரது காகிதமும் விரல்களும் வண்ணமாகி எழில் பெற்றதை அடிக்கடி அருகில் சென்று பார்த்துக்கொண்டேன். 


இடையிடையே மற்ற அன்பர்களை நோட்டமிட்டுக் கொண்டே இருந்தேன். நீர் வண்ணக்கலவையில் ஒரு நண்பர் கிராமத்தின் உள்பக்க பார்வையில் வரைந்திருந்த முகப்புத்தோற்றம் பச்சை வண்ணச்சிதறல்களில் மிளிர்ந்தது. இதே வகையில் இன்னும் இரண்டுபேர் வரைந்திருந்த ஓவியம் மிகச்சிறப்பாக இருந்தது. அதிலொருவர் ஊதா வண்ணங்களை உபயோகித்து முற்றிலும் வேறுபட்டதொரு சாயலை உருவாக்கியிருந்தார்.

அத்தனை பேரும் அவரவர் பங்களிப்பை கொடுத்து, இறுதியில் அதை விமர்சித்துக் கொள்கிறார்கள். மிக அழகான குழு. என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் எனக்கு அறிமுகமானதில் மிக மகிழ்ச்சியுடனே அங்கிருந்து கிளம்பினேன்.


நீங்களும் சென்று பார்த்து வாருங்கள் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.