வியாழன், 8 அக்டோபர், 2015

சுந்தர ராமசாமி - கற்றலின் வழி

ஒருகதையோ, கவிதையோ, கட்டுரையோ வாசித்தால் அதன் கருத்துகளை உள்வாங்கிக் கொள்ளுமளவிற்கு, அந்த எழுத்துக்களை வார்த்தைகளின் பயன்பாட்டை, அளவுகளை எளிதாக உள்வாங்க இன்னும் கற்றறியவில்லை. அது தவறு என்றும் சொல்லிவிட முடியாது  தீவிர வாசிப்பின் இரண்டு வருடங்கள் வெகுவான எழுத்தாளர்களின் எழுத்துக்களை என்னிடம் அழைத்துவந்திருக்கிறது. ஒன்றிலிருந்து இன்னொன்று அதிலிருந்து மற்றொன்று என இடைவிடாமல் தொடரும் பயணங்கள்  எவரின் எழுத்தையும் முழுமையாக கற்றுணராமல் வைத்திருந்தாலும், எழுத்துகள் என்னிடம் என்ன பேச முயற்சி செய்கிறது என்பதை புரிந்து கொண்டு வாசிக்க முடிகிறது.


இறந்த காலம் பெற்ற உயிர் என்ற கட்டுரை நூல் சுந்தர ராமசாமி அவர்கள் எழுதியது. இவரின் புளியமரத்தின் கதை, ஜே.ஜே சில குறிப்புகள் மற்றும் இந்த கட்டுரைத் தொகுதியையும் வாசித்திருக்கிறேன். ஜே.ஜே வை வாசிக்கும் போது எழுத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் கருத்துகளை புரிந்துகொள்ள சில இல்லை பல வரிகளை மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டியிருந்தது. விழுமியங்கள் நிறைந்து கிடக்கும் வரிகளின் ஓட்டம் சற்று வேகமாகத்தானிருந்தது. ஒரே எழுத்தாளரின் மூன்று நூல்கள் வாசித்தது இவருடையது மட்டுமே, இது திட்டமிட்டு வாசித்ததுமில்லை கையில் கிடைத்ததை வாசித்தது. புளியமரத்தின் கதை வாசிப்பதற்காக அண்ணா நூலகம் நோக்கி ஞாயிறு தோறும் ஒடியது நினைவில் வருகிறது.(கையில் கிடைத்தபின் ஓடிவர வைத்தது.) எதையெதையோ வாசிக்க வேண்டும் எல்லாமும் அறிய வேண்டுமென நினைத்தாலும். எல்லாமும் சாத்தியமாவதில்லை. அதுதான் உண்மை.

இவரது தமிழகத்தில் கல்வி என்ற நூலை வாசிக்கவேண்டும்.

ஆர்ப்பாட்டமில்லாமல் சகோதரனாக நண்பனாக அரவணைத்துச் செல்லும் இவரது எழுத்துக்கள் கற்றுக்கொடுப்பவை அளவீடுகள் அற்றது. இதைத்தவிர எதுவும் சொல்லத்தெரியவில்லை.


கற்றது கையளவு கல்லாதது உலகளவு.... பொய்யாக மாற்றம் காணமுடியாத உண்மை இது.

கருத்துகள் இல்லை: