சனி, 17 அக்டோபர், 2015

மாலைப்பொழுதின் நிறம் - சிறுகதை

கவிதைத் தொகுப்பின் மூன்றாவது கவிதையை வாசிக்கும் போது புத்தகம் மெல்லிய நடுக்கத்திலிருந்தது கைகளின் உதவியோடு. இதேபோலத்தான் முகநூலின் பதிவுகளை வாசித்தும் வாசிக்காமலும் கடந்து போகும் போது ஒரு படபடப்பு ஏற்படும். ஏன் ஏற்படுகிறது, வாசிப்பு என்பது இல்லாமல் நேரத்தை விரயமாக்கிக்கொண்டு நகர்ந்து போவதனால். கவிதை வாசிக்கப்படுகிறதே பிறகு ஏன் நடுக்கம்? கவிதை என்பது மனஓட்டங்களால் கட்டி இறுக்கப்பட்ட எதுவோ ஒன்று, எதுவிமில்லாமல் இருப்பவனிடம்  வெயிலை முற்றிலும் இழந்துவிட்ட மாலைப்பொழுதின் நிறம் ஏற்படுத்தும் படபடப்பு. இனி இப்படி இருப்பது தவிர்க்கமுடியாத சிலவற்றை ஏற்கும் சூழலை உருவாக்குமென்ற எண்ணம் எழுந்ததால். வெளியே கிளம்பத் தயாரானேன்.

யாரும் வீட்டில் இல்லை, அவள் இருந்திருந்தால் எதையாவது கேட்டுக் கொண்டேயிருப்பாள். இல்லாமலிருக்கும் போதும் கேட்பாள் அலைபேசி வழியாக “ நான் இல்லன்னொண்ணே சந்தோசமா யிருக்கியளோ “. எப்போதும் இது தவறாமல் ஒலிக்கும். வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே வந்தேன். சிமெண்ட் தரையெங்கும் மணல் வழக்கத்திற்கு அதிகமாகவே சேர்ந்திருந்தது. இதற்கும் அவள் இல்லாததற்கும் நிச்சயம் தொடர்பு உண்டு.

தெருவில் இறங்கி நடக்கும் போது மேற்கே திரும்பிப் பார்த்தால், வானம் கொஞ்சம் செம்பழுப்பு பூசிக்கொண்டிருக்கும். ஏதாவதொரு மிருகத்தின் சாயல் தெரியும் பெரும்பாலும் குதிரை, இன்று வாயைப் பிளக்கும் நாய் போன்றதொரு உருவம். நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை எது என்று. மழை பெய்தால் சிறு சிறு குளங்களில் வானம் அழகு காட்டும். இன்று மழையில்லை வெறும் பள்ளங்கள். வெறுமை அல்லது தெருவின் உடற்புண். தார் கொண்டு அழகு பூசாத முகம் என்று கூட சொல்லலாம். தேசப்பிதாவின் பெயர் கொண்டதாலோ என்னவோ தார் பூசிவிட அலுவலர்களும் அரசியல்வாதிகளும் பெருத்த யோசனையில் இருப்பது போலவே தெரிகிறது. பெயரை மாற்றுவதற்கு ஒரு மனுவைக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன். சாத்தியமா எனத் தெரியவில்லை. தார் பூசினால் மழைக்காலத்தில் சாலையெங்கும் ஜனநாயகம் பல்லிளிக்கும் என்பது மட்டும் தெரியும்.

எனக்குத் தெரியும் அவன் கடை வாசலில் இருப்பான் என்று, இருந்தான். புன்முறுவல் செய்தேன். எப்பொழுதும் தலையாட்டிச் சிரிப்பான், இன்று பார்க்காததுபோல் பார்த்து புன்முறுவல்தான் செய்தான். சிரிப்பை எதிர்பார்க்கவில்லைதான், ஆனால் அவனின் மாற்றத்திற்கு சமாதானம் கொள்ளுமளவு காரணமுண்டு. இந்த மாதம் முடிதிருத்த வேறு கடைக்குச் சென்றேன். எல்லாம் ஒன்றுதான் இவன் கத்தியில் கவனம் இல்லாதவன், இன்னொருவனுக்கு சீப்பில். கத்திக்கு சீப்பு தேவலை என்பது என் எண்ணம். மேலும் சில நேர்மையான காரணமும் உண்டு.

எல்லாமே கிடைக்கும் இவரது கடையில் நான் கேட்பதைத் தவிர, அதனால் பால் மட்டும் வாங்கச் செல்வதுண்டு. விரல்கள் இல்லாத கைகளின் உதவியோடு பாலை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து தருவார். சக்கரை வியாதிக்காரர் என நினைத்துக் கொள்வேன். இப்போது கால்களிலும் கட்டு போட்டிருக்கிறார். “அங்க போயி எதும் வாங்காத“ என்பாள். அவளுக்குத் தெரியும் தனக்கும் வயது போகுமென்று, இருந்தாலும் சொல்வாள். மனிதன் இப்படித்தான் சிந்திப்பான். காரணத்தை ஆழ்ந்து யோசனை செய்யத் தெரியாமல் புறத்தோற்றத்தில் மயங்குவான் இல்லையென்றால் பயப்படுவான். அது அவனைத் தற்காலிக வெற்றியில் களித்திருக்க உதவி செய்யுமேத் தவிர வேறொன்றுமில்லை என்ற பிரக்ஞை கிடையாது. இவளும் அப்படித்தான். இவரும் அப்படித்தான் பிறர் பற்றிய உணர்வற்றவர்கள். இந்த சமூகக் கட்டமைப்பே அப்படிப்பட்டதுதானே.

வீட்டுக்குள்ளிருக்கும் போது இருண்டது போல் காட்சியளித்த வானம், இப்போது சற்று வெளிச்சமாகத் தெரிகிறது. கண் இருட்டிற்கு மட்டுமல்ல வெளிச்சத்திற்கும் பழக்கப்பட வேண்டும் போலப் புரிகிறது.

கவலைப்படுவதற்கு வேண்டுமானால் தினமும் இருபது நிமிடம் செலவழித்துக்கொள் என்று எங்கேயோ வாசித்தது நினைவில் வரும்போது திடலை நெருங்கி இருந்தேன். மனதைத் தொலைப்பது எப்படி என்றொரு கேள்வி?. கேள்வியோடு அருகிலிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன், வெயிலும் அங்கே ஓய்வில் இருந்ததை உணர முடிந்தது. அரைமணி நேரம் தாங்காதா உனது பின்பக்கம் எனும் துணைக்கேள்வி வேறு.

தலைக்குமேல் கொடூரமான பழகிப்போனதொரு பெருத்த சத்தத்தோடு, உண்மையிலேயே விமானமொன்று பறக்கத்தான் செய்தது. மனதைத் தொலைக்கும் கேள்வியை அதில் ஏற்றி விட்டுவிட்டு பார்த்துக் கொண்டிருந்தேன், அதன் வேகத்தைப் பொருத்து அதன் அளவு குறைந்தது போலவே தன் போலியான நிறத்தை விடுத்து பொதுவான நிறத்தை பூசிக்கொண்டு துகள் அளவுக்கு சிறுத்தது. அதற்குமேல் இல்லாமல் போனது. அது தொலைந்து போனது என்றுதான் என்னால் சொல்லமுடியும்,
அருகில் அலோபதி, சித்தா என்று விவாதிக்கும் வயோதிகக் குரல்கள் இரண்டு புலனுக்கு எட்டியது. டாக்டருக்கு தொண்ணூத்தி ரெண்டு வயசு பத்மஸ்ரீ அவார்டு வாங்கியிருக்கார் என்று தொலைக்காட்சி விளம்பரம் போல் ஒருவர் பேச இன்னொருவர் கேட்டுக் கொண்டிருந்தார். மீண்டும் வானைப் பார்த்தேன், தொலைந்து விட்டதே என்று நினைக்கும் போது பின்பக்கம் சுட்டது எழுந்துவிட்டேன்.

http://malaigal.com/?p=7402


நன்றி 
மலைகள்.காம்

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாசிக்கிறேன்... வாழ்த்துக்கள்.