வியாழன், 1 அக்டோபர், 2015

விகடனுக்கு ஒரு திறந்த மடல்

ஜூனியர் விகடனில் பெரியோர்களே தாய்மார்களே என்ற தொடர் கட்டுரையை ப.திருமாவேலன் எழுதி வருகிறார். இது ஒலிப்பதிவாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது, சில பதிவுகளை நண்பர்கள் குழு வழியே வாட்சப் பகிர்தல் மூலம் கேட்டிருக்கிறேன்.
இந்த வாரத்திற்கான புத்தகத்தில் தமிழர்களின் வரலாற்று தொன்மங்களை பற்றி பேசியிருக்கிறார். தமிழக வரலாற்று நூல்கள் மூலம் நாமறிந்த அல்லது அறிந்திருக்க வேண்டிய இலக்கிய மேற்கோள்களையும் கூடுதல் தகவலாக, மதுரை கீழடியில் தென்னந்தோப்பின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் செங்கற்களாலான நம் முன்னோர்கள் வாழ்ந்த கட்டிடம் பற்றியும் எழுதியிருக்கிறார்.
தமிழ், தமிழினம் என்று பேசுபவரெல்லாம் குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது இயக்கம் சார்ந்தவன் என்ற எண்ணம் தமிழ் மக்களிடையே இருந்து வருவதிலும், மேலும் கீழடியில் கண்டடைந்த நம் தொன்மத்தைப் பற்றி தமிழக அரசு எந்த நிலைப்பாடுமற்று உறங்குவதைக் காண்பதிலும் அறச்சீற்றம் தெரிகிறது.
பல மாநிலங்களில் இந்தியும் ஆங்கிலமும் , ரோமன் எண்களும் இல்லா பேருந்துகளும் ரயில் நிலையங்களையும் கூறினார் அதில் மகராஷ்டிராவையும் சேர்த்திருக்கலாம்.
இப்படியொரு கட்டுரை வெகுஐனப் பத்திரிக்கையான விகடனில் வந்திருப்பது மகிழ்ச்சி. ஆனாலும் இதை வாசித்து முடித்ததும் விகடனின் டைம்பாஸ் என்ற இருட்டு மூத்திரச் சந்து நினைவில் வருகிறது. இப்படி என்போல் எண்ணுவோர் எத்தனையோ அறியேன்.
ஒருபக்கம் இதோபதேசங்கள் செய்துவிட்டு மறுபக்கம் வக்கிரபுத்தியைக் காட்டுவது வெறும் பணம் புரட்டும் பத்திரிக்கை வாதமாகத்தான் தெரிகிறது. தமிழ்சினிமா கதாநாயகன் போன்றவர்கள் நீங்கள். அது உண்மையும் கூட. நீங்கள் இத்தனைகாலம் எழுதியும் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல், கொசுக்கடியில் தூங்கும் தமிழனை சுகமாக சொரிந்து விடும் உங்கள் நரித் தந்திரம் நாங்கள் அறிவோம்.

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

பதில் நன்று நண்பரே....

பெயரில்லா சொன்னது…

ஆதங்கம் புரிகிறது.