சனி, 12 ஆகஸ்ட், 2023

திருட்டுக் கும்பல்

சில மாதங்களுக்கு முன் ஊர் குளத்தில் குளிப்பதற்குச் சென்ற ஒரு காலையில் அங்கிருந்த இருவர் இணையத்தில் காணொளி பார்த்து அவ்வப்போது சம்பாதித்ததைப் பற்றி உரையாடினர். கடந்த மாதம் ஒரு நபர் புலனம் (வாட்சப்) வழியே தொடர்பு கொண்டு கூகுள் நிலப்படத்தில் தான் குறிப்பிடும் உணவகத்திற்கு மதிப்பீடு அளித்தால் பணம் கொடுப்பதாக வினவினார். எங்கோயிருக்கும் தெரியாத கடையை மதிப்பு செய்யத் தேவையில்லை என்று தொடர்பை துண்டித்தேன். இன்ஸ்டாகிராமில் பதிவுகளுக்கு விருப்பக்குறி இடுவதற்கு, பின்னூட்டம் இட மற்றும் பின் தொடரவும் பணம் கொடுப்பதாக நிறைய பேர் புலனத்தில் கேட்பது எரிச்சல். 

தொடர்ந்து ஓர் ஆண்டுக்கு இன்ஸ்டாகிராமில் எனது ஓவியங்களை பதிவிட்டு வந்தபோது "NFT" என்ற வணிகமுறையை பயன்படுத்தி ஓவியங்களை எண்ம வடிவிலேயே வாங்கிக் கொண்டு அதற்கு அதிகப்படியான அமெரிக்க டாலர்கள் கொடுப்பதாக அணுகுகிறார்கள், இம்மாதிரியான ஆட்கள் ஒரு குறிப்பிட்ட இணையதள முகவரியை பயன்படுத்துவதில்லை மாறாக அடிக்கடி தங்கள் இணையதளத்தின் பெயர்களை மாற்றி எவ்வளவு பேரிடம் பணம் பறிக்க முடியுமோ அவ்வளவு செய்கிறார்கள். ஓவியங்களை வாங்குவதற்கு முன்னூறு டாலர் தொகையை அவர்களுக்கு முதலில் செலுத்தக் கோருகிறார்கள். நம்பி ஏமாறுவதற்கு வாய்ப்பு அதிகம். ஒரே ஆள் வேறுவேறு இணையதளம் வழியாக என்னையும் சக ஓவியர் ஒருவரையும் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்பு கொண்டதைக் கவனித்தோம். சில நாட்களுக்குப் பிறகு அந்த ஆளின் பக்கத்தை தேடினால் காணாமல் போயிருக்கும்.

இதே போல் இன்ஸ்டாகிராமில் ஆடை விற்கும் இணையதளத்தை நம்பி பணம் செலுத்தி உடை வாங்கினார் தெரிந்த நண்பர், அவருக்கு அழகான பெட்டியில் கந்தல் துணிகளை அனுப்பியிருந்தது அந்த இணையத்திருட்டு கும்பல். திருப்பி அளிக்கலாம் எனத் தேடியபோது இணையதளம் காற்றில் கலந்துவிட்டது. அதே நண்பர் மற்றொரு நம்பிக்கையான இணையதளத்தில் கைக்கடிகாரம் வாங்கியபோது அவருக்கு கிடைத்தது ஓடாத மண்ணுக்குள் புதைத்து எடுத்தது போன்ற மட்டமான முள்ளில்லாத கடிகாரம், நம்பக்கூடிய விற்பனையாளர் தான் ஆனாலும் பொறுப்பாக பொருளை கையளிக்க வேண்டிய முகவர் செய்த திருட்டால் ஏற்பட்டது இந்நிகழ்வு, பின்  நிறுவனத்திடம் புகார் அளித்ததும் பணத்தை திருப்பிக் கொடுத்தனர். திருட்டாகட்டும் எதுவாகட்டும் காலத்திற்கேற்ப தன் வடிவத்தை மாற்றிக் கொள்கிறது.

இதையெல்லாம் தொழில் போலச் செய்வது வெட்கக் கேடாக இல்லையா, ஒருவேளை வரும் ஆண்டுகளில் இதற்கென சட்டம் இயற்றி அரசு இசைவு கொடுக்கவும் வாய்ப்புண்டு. மட்டைப் பந்தாட்டத்தில் சூதாட்டம் பற்றி இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை மாறி இன்று இணையவழி சூதாட்டம் செய்யும் நிறுவனத்தின் இலச்சினை இந்திய அணியின் சட்டையில் விளம்பரமாக இருப்பதைக் காண்கையில் எந்த ஊழலும் சட்டமாக மாற வாய்ப்புள்ளது.

இரண்டு நாட்கள் முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரேயொரு பதிவிடுவதன் மூலம் கோடிக்கு மேல் பணம் பெறும் விளையாட்டு வீரர்கள் நடிகர்கள் பற்றி வாசித்ததுமே வியப்பு மேலோங்கியது.

நிற்க....

'இன்ஸ்டாகிராம்' தமிழ் சொல் தேடியபோது படவரி என்று கண்ணில் பட்டது, எவ்வளவு ஒத்துப்போகும் என அறிந்துகொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: