வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு ஐந்து இயலோடு

 இன்று இயல் (இளைய மகள்) பள்ளிக்குச் செல்லாததால் தானும் வரைவேன் என தூவலை (பேனா என்று சொன்னால், இல்லப்பா இது தூவல் என்பாள் தமிழில்) எடுத்துக் கொண்டாள், உருவப்படம் ஒன்றை தினந்தோறும் வரைவது போல தொடங்கினேன், அவளும் அதையே வரைவேன் என ஒவ்வொரு கோடாக என்னோடு வந்தாள்.

அவளுக்கு அது சோர்வை தந்தவுடன், எனக்கு பிடித்ததாக வரையலாம்பா என்றவளிடம் நாய் குட்டி வரையலாம் என்று ஒரு பஞ்சு போல் இருந்த குட்டியை தேர்வு செய்து, தொடங்கினோம், என்னப்பா உனக்கு வரையவே தெரியல, என்னைய பாரு அழகா வரஞ்சிருக்கேன் என்று சிரித்தாள். படம் பார்த்து வரைய வேண்டாம் என முடிவு செய்து வலது பக்கமிருக்கும் இரு சின்ன உருவங்கள் அவள் கண்களை மூடிக் கொண்டு வரைந்தவை. இன்னொரு படம் இருவரும் கண்களை மூடி வரையலாமா என்று கேட்டதும் குதூகலமானாள்.


அடுத்த பக்கத்தில் முதலில் அவளும் பின் நானும் கண்களை மூடி வரைந்து பார்த்தோம். அவள் வரைந்ததன் பக்கம் பெயர் எழுதச் சொன்னதும் இயல் என எழுதிய பின் நான் வரைந்ததன் மேல் என்னுடைய பெயரையும் அவளே "பா" வுக்கு துணைக் கால் உண்டாப்பா என ஒவ்வொரு எழுத்தையும் கேட்டு எழுதினாள்.




கருத்துகள் இல்லை: