சனி, 11 ஏப்ரல், 2020

கொரோனா காலம்


கடந்த வருடம் சனவரியில் வாங்கிய ஏ3 அளவிலான 50 பக்கங்களைக் கொண்ட ஒவிய ஏட்டினை போன வாரம்தான் முழுவதுமாக பயன்படுத்தி முடித்தேன். எவ்வளவு குறைவாக வரைந்திருக்கிறேன் என எண்ணிக் கொண்டிருகிறேன். சென்ற வாரம் வாட்சப்-ல் ஒவியம் வரைய நண்பர்களை அவர்களது படங்களை அனுப்பக் கோரியும் முதல் ஐந்து படங்கள் கரிக்கோல் ஓவியமாக்கப்படும் என்ற நிலைத்தகவல் ஒன்றை பதிவிட்டேன், அதன் படி முதல் ஐந்து படங்களை வரைந்து ஏட்டினை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டேன்.

மார்ச் மாதம் அவசரப் பயணமாக ஊருக்குச் செல்கையில் புதிதாக வாங்கிய ஏ4 அளவும் 50-பக்கங்களும் கொண்ட ஏட்டினை தொடர்வண்டியிலிருந்த சில முகங்களை கோடுகளால் கிறுக்கினேன். இதோ பாதி புத்தகத்தினை கிறுக்கித் தள்ளிவிட்டேன் இவை சொற்பமே ஆனாலும் என்னைப் பொறுத்தவரையில் சிறப்பானதும் கூட, ஊரடங்கு முடியுமுன் முடிவுக்கு வந்துவிடும் என்று நினைக்கிறேன், அப்படியாகிவிட்டால் நீர்வண்ண ஓவியம் வரையும் காகிதங்களையும் தூரிகைகளையும் கையிலெடுக்க வேண்டியதுதான், ஆனால் அது அத்தனை எளிதல்ல இரு சிறு பெண்களை வைத்துக்கொண்டு, வண்ணங்கள் அவர்களை ஈர்த்துவிடும்.

பேரமைதியில் வாசிக்க ஏதுவான சூழலை காலையில் ஏற்படுத்திக் கொண்டு குழந்தைகளின் விடியலுக்கு முன் சில பக்கங்களை வாசித்துவிட முடியும், அப்படிச் சில நூல்களை இந்த நாட்களில் வாசித்து முடித்திருக்கிறேன். கடந்த வருடம் என்ன என்ன வாசித்தேன் என எந்த பட்டியலும் வரிசைப் படுத்தவில்லை ஆனால் இந்த வருடம் அப்படியில்லாமல் கொஞ்சம் தீவிரமாகவே தலைப்புகளை “GOODREADS” உதவியோடு வரிசை படுத்தி வருகிறேன், எனக்கென்னவோ இந்த வருடம் புனைவுகளை நோக்கியே மனம் நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது, என்னை சுய பரிசோதனை செய்ய ஏற்ற காலமாக இந்த வருடத்தை பயன்படுத்திக் கொள்ள விழைகிறேன். இத்தோடு அமேசான் கிண்டில் செயலி வழியாகவும் சில நூல்களை வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். முன்னெப்போதும் இல்லாத அளவு தமிழ் எழுத்தாளர்கள் தங்களது புத்தகங்களை இலவசமாக பதிவிறக்க அனுமதியளிக்கிறார்கள் அல்லது இப்பொழுதுதான் எனது கண்களுக்கு அகப்பட்டிருக்கிறது, எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் இதற்கு முழுமுதற் காரணம் என அவரது முகநூல் பதிவுகளால் அறிய முடிகிறது.

எழுத்தாளர் செல்வேந்திரன் எழுதியிருக்கும் வாசிப்பது எப்படி என்ற புத்தகத்தை நேற்று தொடங்கி இன்று நியாவிலைக் கடையில் பொருட்கள் வாங்க தனிமனித இடைவெளி விட்டு நின்று கொண்டிருக்கையில் இப்புத்தகத்தின் பெரும் பகுதியை கிண்டிலில் வாசித்து விட்டேன், மாலையில் குழந்தைகள் மச்சிக்கு சென்று விளையாடும் நேரத்தில் மீதமிருந்த பக்கங்களையும் முடித்துவிட்டேன், இன்னும் நிறைய புத்தகங்களை கிண்டில் நூலகத்தில் பதிவிறக்கியும் விட்டேன். இனி வாசிக்கும் பசியோடு இருப்பதைத் தவிர வேறென்ன.