சத்தியசரண்
வழக்கறிஞர் படிப்பை முடித்துவிட்டு, அதில் நாட்டமில்லாமல் வேறு வேலை தேடி கல்கத்தாவில்
அலைபவன், துர்கா பூசையின் போது தன் கல்லூரி நண்பனை சந்திக்கிறான். கல்கத்தாவில் ஒரு
ஜமீனின் மகனான அவன் தன் ஜமீனுக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் (ஜமீன் என்ற பெயரில்
காட்டை குத்தகைக்கு விட்டு பணம் பார்த்திருக்கிறார்கள் நிலச்சுவான்தார்கள்) அலுவல்கள்
கவனித்துக்கொள்ள திறமையான ஆள் வேண்டும், அந்த வேலைக்கு இவன் தகுதியாக இருப்பான் எனக்கூறி
பணியில் அமர்த்துகிறான்.
இதுநாள்
வரை கல்கத்தாவின் நகர் பகுதியில் தங்குமிடத்திற்கும் உணவுக்கும் அலைந்து திரிந்தவனுக்கு
ஒரு வேலை கிடத்துவிட்டது.. பூர்ணியா எனப்படும் அந்த காட்டுக்குள் வந்து சேர்கிறான்.
அங்குள்ள மக்களோடு பழகுவதில் சற்று சிரமம் கொள்கிறான், அவர்கள் பேசும் மொழி அவர்களின்
வாழ்வுமுறை இவனுக்கு நகர் வாழ்விலிருந்து முற்றிலும் புதிதாக இருப்பதை உணர்கிறான்.
இந்த அலுவலுக்கு தான் ஏற்றவன் அல்ல, திரும்பி கல்கத்தா செல்வதே சரியெனப்படுகிறது. நிலவு
பொழியும் இரவும் காட்டுமலர்களும் அவனை கவர்ந்துவிடவும், அங்குள்ள மனிதர்களின் அப்பளுக்கற்ற
பாசம் மற்றும் அவர்களது எதிர்பார்ப்பினமையற்ற வாழ்வும் ஈர்த்து விடுகிறது. வாழத்துவங்குகின்றான்.
இயற்கையோடு
வாழத்தொடங்கியபின்னும் இலக்கிய ஆர்வம் கொண்ட அவனுக்கு புத்தகம் இல்லாமல் இருப்பது நகரத்து
வாழ்வையும் புத்தகங்களுடனான வாழ்வையும் அவ்வப்போது அசை போட வைக்கின்றது.
காட்டை
பற்றி சத்தியசரண் வர்ணிக்கும் இடங்களெல்லாம் ரசனைக்குரியனவாக இருந்தாலும், அங்குள்ள
மலர்களையும் பறவைகளையும், காட்டு மலர்கள் அழகாகயிருந்தன, காட்டு பறவைகள் அழகாக இருந்தன
என மலர் மற்றும் பறவைகள் பற்றிய மேலதிக தகவல் இல்லாமல், குறைந்த பட்சம் பெயர் கூட இல்லாது
வர்ணித்திருப்பது அவ்வளவு இயல்பாக இல்லை. பலாச மலர், தாதுப மலர் போன்ற சில பெயர்கள்
அங்கங்கே எழுதபட்டிருக்கிறது.
தமிழில் மொழிபெயர்த்த நூல் என்பதாலோ என்னவோ மொழி நடையில் சோர்வு தட்டுவது
போலுள்ளது, எனக்குத்தான் இப்படியிருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஆரண்யம் புத்தகத்தை
நூலகத்தில் இதற்கு முன் பார்த்திருக்கிறேன் ஆனால் சாதாரணமாக கடந்து போனது ஏற்கமுடியாததாக
உள்ளது இப்போது. இந்த முறை தேர்ந்தெடுக்க காரணம் கடந்தநாளன்று பார்க்கத்தவறிய இதன்
அட்டைப்படம் தான்.
காடுகளில்
வாழ்ந்த மனிதர்களை மைய்யப்படுத்தி எழுதப்பட்ட வங்க மொழியில் "ஆரண்யக்"காக வெளிவந்த புதினம்,
அங்குள்ள மனிதர்களை எடுத்தியம்பும் விதம் பாராட்டுதலுக்குறியது. காட்டுக்குள் வாழ்பவர்களானாலும்
மனிதர்களுக்குள் சாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் இருக்கத்தான் செய்கின்றன.
சந்திக்கும்
மனிதர்களையும், பயணம் போகும் காடுகள் பற்றியும், காட்டின் இரவு, பறவைகள், மிருகங்கள், கோடைகால தீ விபத்து,
குளிர்கால நடுக்கம் என ஒரு நகரத்து மனிதனின் பார்வையில் காடுகளையும் அதன் உயிர்களையும்
எழுத்து வடிவமாக மாற்றப்பட்ட புதினம் ஆரண்யம். 1937-1939 காலத்தில் விபூதிபூஷண் பந்தோபாத்யாய
என்பவரால் எழுதப்பட்டது. தமிழில் 2001 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. பதேர் பாஞ்சாலி
திரைப்படமாக உருவெடுக்குமுன் புதினமாக இவரால் எழுதப்பட்டதே.
2 கருத்துகள்:
வணக்கம்
மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல ரசனையுடன் சென்றது
கருத்துரையிடுக