31-Jul-2015 தேதியுடன் வட்ட வழங்கல் அலுவலக முத்திரையிடப்பட்ட
பதிவுத்தாளில் குறிப்பிட்டிருந்த அலைபேசி எண்ணில் சரியாக 62-ஆம் நாள் தொடர்பு கொண்டபோது,
“இன்னும் ரெண்டு வாரத்துக்கு அப்புறம் பேசுங்க” என்று மேற்கொண்டு எந்த விளக்கமும் இல்லாமல்
இணைப்பை துண்டித்துவிட்டார் அந்த உயர்திரு அதிகாரி.
தமிழக
அரசின் இணையதளத்தில் குடும்ப அட்டைக்கான விண்ணப்பம் பதிவிறக்கும் போது, விண்ணப்பிப்பதற்கான
சில விதிமுறைகள் குறிப்பிலிருந்தது. அதில் ஒன்று 60 நாள் வரையில் அலுவலகத்தையோ அலுவலரையோ
தொடர்பு கொள்ள வேண்டாம், இந்த நாளுக்குள் அலுவலர் ஒருவர் முகவரி மட்டும் குடும்ப தகவல்
சேகரிக்க வருவார் அதன் மூலம் நம் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது என்பதை அறிந்துகொண்டு
அறுபது நாளுக்கு பிறகு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்பது விதி. அதன் படி அழைத்தபோது
தான் அதிகாரியின் பதில் மேற்சொன்னபடி அமைந்தது, இதில் வியப்பேதுமில்லை.
இரண்டு
வாரத்திற்கு பின்னர் அழைத்தேன், “எந்த ஏரியாங்க” என்றதும்.
“குன்றத்தூர்”
என்ற போது “குன்றத்தூர் ஆர்.ஐ ட்ட பேசுங்க” என்றார்.
இப்பொழுதாவது
வாய் திறந்தாரே என்றெண்ணிக்கொண்டு எண்ணை குறித்துக்கொண்டேன். உடனே இவரை தொடர்பு கொண்டபோது.
“ஹலோ
.. குன்றத்தூர் ஆர்.ஐ ங்களா”
“ஆங்”
“நான்
குன்றத்தூர்லயிருந்து பேசுறேன், குடும்ப அட்டைக்கு விண்ணப்பிச்சிருந்தேன்... எழுவது
நாளுக்கு மேல ஆகுது..” முடிக்குமுன்
“ஆங்
கொஞ்சம் நாள் ஆவுங்க… நேர்ல வாங்க பாக்கலாம்” என்றார்.
இரண்டு நாள் முன் காலையில் அவரை (ஆர்.ஐ) மீண்டும் அழைத்து அலுவலகம் வரலாமா என்பதை உறுதி செய்துகொண்டு
கிளம்பினேன்.
வட்ட
அலுவலகத்தை அடைந்தபோது 2:50 ஆகியிருந்தது. அலுவலகம் முழுக்க வெள்ளை வேட்டி சட்டையில்
மக்கள் கூட்டம். சிலரின் அலசலான வெள்ளை சட்டைப் பையில் ஜெயலலிதாவும், சிலரின் பையில்
ஸ்டாலினும் சிரித்துக் கொண்டிருந்தார்கள், கருணாவின் முகம் தேடினாலும் கிடக்கவில்லை.
வட்ட ஆட்சியர் அலுவலகம் என்ற பெரிய பலகையின் கீழ் சிறிய பலகையில் “லஞ்சம்
கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்” என எழுதப்படிருந்தது. எனக்கு சில வருடம் முன் தென்காசி அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த லஞ்சம் தொடர்புடைய நிகழ்வு நினைவில் வந்தது. பார்க்கலாம் ஆர்.ஐ என்ன சொல்கிறார்
என்ற நினைப்போடு நகர்ந்தேன்.
மேற்சொன்ன
தேதியில் எனது விண்ணப்பத்தை பெற்ற மனிதர் நின்றார், அவரிடம் காண்பித்தபோது. சில வினாடிகள் உற்றுப்பார்த்து பலத்த யோசனைக்கு பிறகு, கதவு வழியே உள்ளே எட்டிப்பார்த்தார் “ஆர்.ஐ
சாப்பிட போயிருக்கார் வந்ததும் பாருங்க” என்றார். சரிதான் என காத்திருந்தபோது அந்த
அறைக்கதவின் அருகில் செவ்வக வடிவிலான அட்டை பெட்டியொன்று பலதரப்பட்ட விண்ணப்பத்தாள்களை
நிரைத்துக்கொண்டிருந்தது. இவை வேலை முடிக்கப்பட்டதா நிராகரிக்கப்பட்டதா எனத்தெரியாமல்,
அருகிலிருக்கும் முகங்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.
அறைக்கு
உள்ளேயும் வெளியேயும் போவதும் வருவதுமாக ஒரு மூன்று பேர் திரிந்து கொண்டிருந்தார்கள்.
ஒருவரின் சட்டைப்பயில் ஸ்டாலின் சிரித்துக் கொண்டிருக்க மீதி இரண்டு பேரின் பையிலும்
சின்ன சின்ன குறிப்பேடுகள் இருந்தன. அவர்களின் செயல்கள் மூன்றாம் தர வேலை பார்க்கும்
ஆட்கள் எனக் காட்சிப்படுத்தியது. அரசியல்வாதி தோரணையில் இருந்த ஆள் வெளியே வரும்போது
அலைபேசியில் பேசிக்கொண்டே வருகிறார். யாருடைய குடும்ப அட்டை வழங்கலுக்காகவோ சிபாரிசுக்காக
வந்திருப்பார் போலத்தெரிந்தது பேச்சு.
அறை
வாசலின் வெளியே கனத்த மேசைக்குப்பின் கழுத்தில் கருப்புத்துண்டும், நெற்றியில் காலையில் வைத்த சந்தணப்பட்டை சகிதம் ஒருவர் முன்னால் நிற்கும் மக்களை பார்க்கும் போது
வெறுப்புடனும், அலுவலர் எவரேனும் வந்தால் “வணக்கம் சார்” என கையை உயர்த்துவதுமாக அமர்ந்திருந்தார்.
வயதான அம்மா ஒருவர் தாள் ஒன்றை நீட்டும் போது, “இரும்மா என்ன அவசரம் ஒனக்கு” எனக் கத்தினார்.
நானும் ஒவ்வொரு வாரமா வந்து போறேன் என்று அருகிலிருப்பவரிடம் முணுமுணுத்தார் அந்த அம்மா. பெரியவர்
ஒருவர் வெற்று காகிதம் ஒன்றோடு அந்த ஆளின் முன்னால் சென்று நிற்கவும் “ என்னய்யா வேணும்
ஒனக்கும்” என்று ஆத்திரம் கொட்ட அவனின் இரண்டு கைவிரல்களையும் மடக்கிக் ஆட்டிக்கொண்டு வெறிபிடித்தது போல “ இப்போ மால போட்ருக்கேன்.. இல்லனா..ம்ம்ம்” என்று கத்தினான். பெரியவர் “உங்க நம்பர்
எழுதுங்க” பொறுமையோடு கேட்டார். எழுதிக்கொடுத்துவிட்டு எழுந்து போய்விட்டான். அந்த
அம்மாவும் இன்னும் சிலரும் அவனுக்காக காத்திருந்தார்கள்.
ஒருவேளை
மாலை போடாமலிருந்தால் இவனால் என்ன செய்துவிட முடியும் என எனக்கு விளங்கவில்லை. யாருக்கு
இவர்கள் வேலை செய்கிறார்கள் மக்களின் தேவைகளை நேரத்தில் நிறைவேற்ற துப்பில்லை வீண்
ஆத்திரம் மட்டும் பொத்துக் கொண்டு வருகிறது. மக்களின் சாதுவான போக்கை இவர்களின் ஆற்றாமைக்கு
பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அறையின்
உள்ளே ஆர்.ஐ வந்திருந்தார், அப்படிச்சொல்வதை விட அவர் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார்
என்று கூறுவதுதான் உகந்ததாக இருக்கும். மூன்றரை மணிக்கெல்லாம் அலுவலகம் முடிந்துவிடும்
போல(!). பையை தோளில் மாட்டும் போது பதிவு ரசீதை காண்பித்தேன். பார்த்தவர் “ இப்போதான்
பன்னிரண்டு, பதிமூணே போகுது.. இன்னும் நாளாவும்” என்று கிளம்பினார். பின்னால் சென்று
“பன்னிரெண்டு, பதிமூணுன்னா.. வருடத்தையா சொல்ரீங்க”ன்னேன். “ஆம்” என்று சிரித்துக்
கொண்டே கிளம்பினார். அவர் எதற்காக சிரித்தாரோ அல்லது அது அர்த்தமற்ற வழக்கமான சிரிப்பாகக்
கூட இருக்கலாம். நானும் சிரித்தேன் இதை காலையில் தொடர்புகொண்டபோதே தெரிவித்திருக்கலாமே
என்று நினைத்துக் கொண்டு.
இவர்
கிளம்பினதும் வேறொருவரிடம் கேட்கலாம் என்று காத்திருந்து மீண்டும் உள்ளே போனால் “பதினாலு
இப்போதான் போகுது.. பதினாறுலதான் கிடைக்கு”மென்று கூறிக்கொண்டே பேனாவை எடுத்து என்னிடம்
ஏற்கனவேயுள்ள ஆர்.ஐ யின் தொடர்பு எண்ணை பதிவு ரசீதில் எழுதிக் கொடுத்தார்.
பேருந்தில்
வரும் வழியில் அங்கே நடந்த நிகழ்வுகளை அசை போட்டபோது என்ன தோன்றியதென்றால், விரைவாக
கிடைக்க என்ன செய்ய வேண்டுமென ஒருவேளை நான் கேட்டிருந்தால் அங்கு குறிப்பேட்டுடன் நடமாடிக்கொண்டிருந்த
இருவரில் ஒருவரை கை காட்டி கண்ணையும் காட்டியிருப்பார் அந்த ஆர்.ஐ, பன்னிரண்டிலிருந்து
பதினைந்திற்கு வர குறைந்தபட்சம் ஆயிரம் கேட்பார்கள் என்று நினைக்கிறேன். கொடுத்தால்
முடித்துத்தருவார்களாக இருக்கும். இல்லையென்றால் கட்சி மாவட்ட செயலாளர்களையோ அல்லது
குறைந்தபட்சம் வார்டு கவுன்சிலரையாவது உடன் அழைத்துவந்தாலும் வேலையை முடித்துத்தர வாய்ப்பிருக்கின்றது.
கவுன்சிலர் மட்டும் சும்மாவா வருவார், அவரென்ன இளிச்சவாயரா ஐநூறாவது தேற்றிவிட மாட்டாரா.
அந்த ஆர்.ஐ "நேர்ல வாங்க பாக்கலாம்"னு கூறியதை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லையோ.
2 கருத்துகள்:
வேலை நடக்கும் ஆனால் நாளாகும். :-)
நன்றி நண்பரே
கருத்துரையிடுக