பொதுவாக பதிமூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக (கல்விக்காக) மட்டும் பயன்படுத்தும் (Android) திறன்பேசிகளில் வலையொளிக்கு (YouTube) இசைவு இல்லை. அதற்கு மேல் வயதுடையவர்களின் திறன்பேசியில் இதனை பயன்படுத்த இயலும். மற்ற சமூக வலைதளங்களில் அப்படி வயது வரம்பு ஏதும் இருப்பதில்லை என்றே நினைக்கிறேன். மற்றபடி குழந்தைகளுக்கென்று "YouTube Kids" என்ற செயலியை வயது குறிப்பிட்டு அதற்கேற்ற காணொளிகளைப் பார்க்க இயலும். குழந்தைகளை வைத்து குப்பைக் காணொளிகளை உருவாக்கும் பல பெற்றோருடைய சிந்தனைக் கழிவுகளும் அக்காணொளிகளில் குழந்தைகள் இருக்கும் ஒரே காரணத்திற்காக இந்தச் செயலியிலும் நிரம்பத் தொடங்கியிருப்பது அயற்சி.
இதெல்லாம் இருக்கட்டும், மேற்சொன்ன வெளிநாட்டு உள்நாட்டுத் தடைகள் என்பது எவ்வளவு தூரம் உண்மையாகச் செயல்படும்.
ஒரு கைக்குழந்தையுடன் திரையரங்கிற்கு வரும் தாய் படத்திற்கு இடையில் அழும் குழந்தையின் முன் திறன்பேசியை இயக்கி திரை விரிக்கிறாள் கண்ணீர் துடைத்துவிடுகிறது இவ்வாறு பலதரப்பட்ட சூழல்கள் இருக்கிறது அவை ஒவ்வொன்றையும் நாமறிவோம் அரசின் விதி இதனை எப்படித் தடுக்கும் என்பதை கொஞ்சம் சிந்தித்தால் பெரும்பான்மை பெற்றோர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர். அதனால் நம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு மிக முக்கியம்.
இது எந்த அளவிற்கு நடைமுறைக்கு ஏற்றது என்று தெரியவில்லை. ஆனாலும் இப்படியொன்று நிகழ்ந்தால் எப்படியிருக்கும், முகத்தின் அமைப்பை உள்வாங்கிக் கொண்டு திறந்துகொள்ளும் திறனை இப்போது சந்தையில் உள்ள பேசிகள் பெற்றிருப்பதால் குழந்தைகள் முகம் திரையை பார்க்கிறதென்றால் உடனடியாக அந்த செயலியோ திரையோ தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும் வகையில் மென்பொருள் நிரலினை உருவாக்கலாமல்லவா?
இல்லையென்றால் குழந்தைகளுக்காகவும் நமக்காகவும் திரை விலக்கி நடக்கத் தொடங்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக